என்னென்னவோ
பேச எண்ணும் என் உதடுகள்
வெறும் "உம்ம்ம்ம்" மட்டும்
கொட்டுகின்றனவே
ஏன் என்றாள் முதல் நாள்

நன்றாக
உளறத் தொடங்கிவிட்டேன்
என்ன செய்வது உன் தலைவிதி
கேட்டுத்தான் ஆகவேண்டும்
என்றாள் அடுத்த நாள்

மூன்றாம் நாள் பற்றி
யாரும் எதுவும் கேட்காதீர்கள்
தயவுசெய்து
நெஞ்ச மரக்கிளைகளிலெல்லாம்
சினேகக் கிளிகளின்
கீச்சுக்கீச்சுகள்

விரும்பினால்
இப்படியா
இடைவெளியே இன்றி
விரும்பும் இந்த இதயம்

நானே அறியாப் பொழுதொன்றில்
என் உயிருக்குள்
உன் உயிரிழைகளால்
கோட்டை கட்டிக்கொண்டவளே

காட்டாற்றில்
இழுத்துக்கொண்டு போகும்
சிறு படகைப்போல
தரிகெட்டு ஓடிக்கொண்டிருக்கிறது
உன் பின்னால் என் நெஞ்சு

இதுவரை
உன் கண்களைத்தான்
பார்த்துக்கொண்டே இருந்தேன்

இப்போது
நான் பலகீனமாய்
ஆகிக் கொண்டிருக்கிறேன்
என்று
புரிந்துகொள்கிறேன்

நீயும்
புரிந்து கொள்கிறாய்
காத்திருந்தவளைப் போல

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
உணர்வுகளை விழிவானில்
முழு நிலவாய் நிறுத்தும்
கலையறிந்தவள் நீ

ஒவ்வொரு சொல்லிலும்
உன் எதிர்பார்ப்பைப்
படம் பிடித்துக்காட்டும்
கைதேர்ந்த புகைப்படக்காரி

நெற்றி.. நாசி...
விழி... இதழ்...
செவி... சிற்றிடை...
என்று
ஒன்றுவிடாமல் என்முன்
ரகசியப் போர்விமானங்களாய்ச்
சீறிக்கொண்டு வருகின்றன

உன் அபிநய மொழிகளைப்
புரிந்துகொண்ட நெஞ்சுதான்
உன் பஞ்சுமெத்தையாகிறது

பெண்ணின் விருப்பங்கள்
தெளிவாய் வெளிப்படும்போதுதான்
உறவு முகில்
உற்சாக மழை பொழிகிறது
வாழ்க்கை சுவாரசியமாகிறது

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
எந்த
யுத்தத்தை வேண்டுமானாலும்
நிறுத்திவிடலாம் - ஆனால்
அத்தனைச் சமாதானப் புறாக்களையும்
சப்பியே சாப்பிட்டுவிடும்
நம் முத்த யுத்தத்தை மட்டும்
நிறுத்தவே முடியாது
உன்
நெருப்பை
என்
உயிர்த் திரியில்
ஏற்றிய
உணர்வுத் தீபம்
நீ

மனக் காற்றில்
எத்தனை ஆடினாலும்
என்
திரிவிட்டு விலகாத
தீஞ்சுடர்
நீ
எந்த இக்கட்டில்
நீ எங்கு ஓடினாலும்
குட்டியையும்
பையில் இட்டுக்கொண்டு
ஓடும்
கங்காருவைப்போல
என் சகலத்தையும்
வாரி அள்ளிக்கொண்டு
நீ ஓடுகிறாய்

நில்
நான் தான்
நீயாகவே இருக்கிறேனே?

என் சிறகினில்
இறகாக வேண்டும் என்ற
உன் சிறகினில்
நான் இறகானேன்
என் சிறகினில் நீ இறகானாய்

இருவரும்
உயரே உயரே எழுந்து
தளமறியாமல்
சேர்ந்தே பறந்தோம்

நீ உன் உணர்வு மூச்சால்
பறக்கும் உயரமும்
நான் என் உயிர் மூச்சால்
பறக்கும் உயரமும்
ஒரே தளத்தில்
சஞ்சரிப்பதைக் கண்டு
ஒருவருக்குள் ஒருவர்
மீண்டும் மீண்டும்
விழுகிறோம்

வாழ்வின் புள்ளியே கோலமே


உன்
சாலையில் நடக்கிறேன்
உன்
குழிகளில் விழுகிறேன்

நீ தரும்
கண்ணீரைக் கொட்டுகிறேன்
ஒருநாள்
மூச்சழிந்து முடியப்போகிறேன்

கதறியே அழுதாலும்
நீயே அல்லாது
வேறு எவராலும் எதற்கும்
தீர்வு சொல்ல இயலாது

காலமே காலமே
வாழ்வின்
புள்ளியே கோலமே
உன் குரலவிழ்க்கும் சொல்மொட்டுகள்
என் இதயத்தை இழுத்துவைத்து
இச்சுக்களிடம் பூக்கள்

மூர்ச்சையான மனதின் முகத்தில்
சலக்கென்று விழும் பன்னீர்த் துளிகள்

திமுதிமுவென பற்றியெரியும் நெஞ்சில்
பனிப்பூ பூக்கவைகும் வித்தைகள்

கைகளைச் சிறகுகளாக்கி
மேலெழுந்து திரியச்செய்யும் மந்திரங்கள்

போதுமென்று முற்றுப்புள்ளி
வைக்க முடியாத தொடர்கதைகள்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
பக்தி
காதலின் குழந்தை

பக்தி முத்திப்போனாலும்
காதல் முத்திப் போனாலும்
அவன் கிறுக்கு

தெய்வ தரிசனம் கேட்கும்
பக்தனின் ஏக்கத்திற்காவது
ஓர் எல்லையுண்டு

தேவதை தரிசனம் கேட்கும்
கிறுக்கனின் ஏக்கத்திற்கு
எல்லை ஏது

பொதுவில் குடும்பம் என்பது நான்கு வகை

1.தாத்தா பாட்டி அப்பா அம்மா சித்தப்பா பெரியப்பா பேரன் பேத்தி மாமா மச்சான் என்று ஒருவர் பாக்கியில்லாமல் ஒரே வீட்டில் ஒன்றாக வாழும் கூட்டுக் குடும்பம். இது இப்போதும் சில இந்தியக் குடும்பங்களில் உண்டு. சண்டைகள் குறைவில்லாமல் நடக்கும். எவரும் தனித்துவம் கொண்டு வாழ்வது மிகக்கடினம்.

2. அப்பா, அம்மா, கணவன், மனைவி, பிள்ளைகள் என்ற கூட்டுக் குடும்பம். தம்பிகளும் அக்கா தங்கைகளும் தனிக்குடித்தனம் சென்றுவிடுவார்கள். இது இந்தியாவில் பரவாலாக உள்ள கூட்டுக் குடும்ப நிலை இப்போது. இதில் சேமிப்பு அதிகம். அன்பு பாசம் அதிகம். உறவு நலம் அதிகம்.

3. கணவன், மனைவி, திருமணமாகாத பிள்ளைகளைக் கொண்ட குடும்பம். இது உலக அளவில் பிரசித்தம். எங்கும் காணக்கிடைக்கும் அமெரிக்காவையும் சேர்த்து. பெற்றோர் முதியோர் இல்லத்துக்குச் சென்றுவிடவேண்டும். பெற்றோரை தனித்துவிடும் அவலம் தவிர மற்றதெல்லாம் நலம்தான்.

4. ஆணும் பெண்ணும் தனியானவர்கள். Singles. ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வார்கள் திருமணம் செய்துகொள்ள மாட்டார்கள். பிள்ளைகள் தொல்லைகள் என்று தவிர்ப்பார்கள். பந்தம் இல்லை சொந்தம் இல்லை. ஒவ்வொருவரும் தனித்தனியானவர்கள். எந்தப் பொறுப்பும் இல்லை எந்த இழப்பும் இல்லை.

இதில் எந்த வகைக்கு உங்கள் வாக்கு? ஏன்?

காதலில்லாத கடமை என்பது வெறுமையேயன்றி வேறில்லை

வெறும் கடமை தருவது வெறுமையான இயந்திர வாழ்க்கை.

ஒரு நகலெடுக்கும் (Photo Copy) இயந்திரம் தன் கடமையைச் செய்வதற்கும் மனிதருக்கும் என்ன வித்தியாசம்?

மனிதர்கள் ரோபாட்டுகள் அல்ல!

காதல் மிகச் சாதாரணமானவனைக்கூட சாதிக்கும் சக்தியாய உயர்த்தும்.

எதற்குமே லாயக்கற்றவனைக்கூட கடமை வீரனாக்குவது அவன் கொண்ட காதல்தான்.

வறுமையாலும், உறவுகள் கீறிவிடுவதாலும், தோல்விகளாலும் தற்கொலைகள் உண்டு.

காதலில் தற்கொலை செய்துகொள்பவர்கள் காதலித்துவிட்டோம் எனவே தற்கொலை செய்துகொள்கிறோம் என்று தற்கொலை செய்வதில்லை.

காதல் என்றால் என்னவென்றே தெரியாத காட்டுமிராண்டிகள் அவர்களை வாழவே விடாமல் முழு சக்தியையும் பயன்படுத்தி சாகடிப்பதால்தான் சாகிறார்கள்.

ஆனாலும் தற்கொலை கூடாது. அதற்குப்பதில் சாகும் வரை அவர்களை எதிர்த்துப் போராடலாம்.

காதல் என்றதும் முகம் சுழிப்பவர்கள் ஆழ்ந்து சிந்திக்கத் தெரியாதவர்கள்.

ஏனெனில் இந்தப் பிரபஞ்சமே காதலில்தான் இயங்குகிறது. ஆகாயத்திலும் எல்லாமே ஈர்ப்புதான். அந்த ஈர்ப்புகள் அழிந்துவிட்டால் ஒன்றுமே இல்லை.

ஒரு வாழ்க்கை வெற்றிகரமாய் அமைவதற்கு காதலும் கடமையும் மிக முக்கியம்.

ஓர் உயிர் மண்ணில் வந்து விழுகிறது என்றால் அது காதலின் பரிசாகத்தான்.

கடமை என்பது காரியம் செய்வது. காதல் என்பது ஈடுபாடு கொள்வது. ஈடுபாடு இல்லாத காரியம் நரகத்துக்குச் சமம்.

ஊரில் செக்குமாடுகளை உருவாக்குவார்கள்.

வாழவேண்டிய காளைகளைக் காயடித்து, செக்கில் கட்டி நாளெல்லாம் அதை சுற்றிச் சுற்றி நடக்க வைத்து அதன் கடமையைச் செய்ய வைப்பார்கள்.

அதைவிட ஒரு உயிர் வதை இருக்க முடியுமா?

அதுதான் காதல் இல்லாமல் கடமையைச் செய்ய வைக்கும் கொடுமை.

காதல் வேண்டாம் கடமைதான் வேண்டும் என்பவர்கள் கல்யாணம் செய்துகொள்ளாமல் வாழ வேண்டும். அன்னைத் தெரிசாவைப்போல் நேரடியாய் சேவைக்கு வந்துவிடவேண்டும். திருமணம் என்று செய்துகொண்டு தன் துணையிடம் காதல் காட்டாமல் துணையைக் கொடுமைப்படுத்தி சாகடிக்கக் கூடாது.

கடமை கடமை என்று சொல்லும்போது முதல் கடமையே தன் துணையைக் காதலிப்பதுதான் என்பதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.

அன்னை தெரிசா கூட தான் செய்யும் சேவையைக் காதலித்தார். உலகில் உள்ள அத்தனை உயிர்களையும் காதலித்தார். அவர் போன்றவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே.

எந்த ஒரு விசயத்துக்கும் முன்னுதாரணம் எடுக்க வேண்டும் என்றால் அதை பெரும்பாலானவர்களின் வாழ்க்கையிலிருந்து எடுக்க வேண்டும்.

ஆறு கால்களோடு ஒரு ஆடு பிறந்திருக்கிறதே எனவே ஆட்டுக்கு ஆறு கால் என்று சொல்லக்கூடாது.

ஒருவன் சட்டைப்போடாமல் அலுவலகம் வருகிறான். கேட்டால் எங்கள் தேசப்பிதாவே சட்டை போடவில்லை என்று அவன் சொன்னால் அவன் பைத்தியக்காரன்.

காதலே வேண்டாம் கடமை மட்டும் போதும் என்று சொல்பவர்களைப் பார்த்தால் எனக்கு ஆச்சரியமாய் இருக்கிறது.

ஆனால் காதல் வேண்டும் என்று சொல்லும் யாருமே காதல் மட்டும்தான் வேண்டும் கடமை வேண்டாம் என்று சொல்வதே இல்லை.

வாழ்க்கை என்பது இருவர் இணைவது என்பதிலிருந்துதான் உருவாகிறது. அந்த இருவரைக்கொண்டுதான் பின் பல்லாயிரம் உறவுகள், உரிமைகள், வாழ்க்கைகள்.

தாய் என்பவள் காதலின் காரணமாகத்தான் பிள்ளை பெற்றுக்கொள்கிறாள்.

ஒரு சாதாரண பெண்ணைத் தாயாய் உயர்த்துவதும் காதல்தான்.

எனக்குக் காதல் வேண்டாம், மருத்துவமனையில் போய் ஒரு ஊசி போட்டுக்கொண்டு பிள்ளை பெற்றுக்கொள்கிறேன். ஏனெனில் பிள்ளைகளுக்கு நான் என் கடமையைச் செய்ய விரும்புகிறேன். கணவனும் வேண்டாம் காதலும் வேண்டாம் என்று கூறும் பெண்கள் இருக்கலாம் தான். ஆனால் அவர்களைப் பெண்கள் என்று எப்படி ஏற்றுக்கொள்வது?

முதலில் கடமை கடமை என்று பேசுபவர்கள் காதலை மிகவும் தவறாகவே புரிந்துகொண்டிருக்கிறார்கள்.

காதல் என்றால் ஏதோ கனவுலகில் மிதந்துகொண்டிருப்பதுபோலவும், வேறு எந்த வேலையுமே செய்யாமல் கடலோரங்களில் பாட்டுப்பாடிக்கொண்டு திரிவுபோலவும் கற்பனை செய்துகொள்கிறார்கள்.

காதல் என்று ஒன்று வந்துவிட்டாலே பொறுப்புணர்ச்சிகள் அதிகமாக வந்துவிடும்.

ஒரு குடும்பத்தலைவன் தன் மனைவியைக் காதலிக்காவிட்டால், ஏன் நான் உழைத்துக்கொட்டணும் என்று கடமையைச் செய்யாமல் அப்படியே இமயமலையை நோக்கிப் போய்விடுவான். திரும்பி வரவே மாட்டான்.

பாசம் அன்பு நேசம் நட்பு என்பதெல்லாமே ஒரு வகையான காதல்கள்தான். உள்ளங்களுக்கு இடையில் உருவாகும் ஈடுபாடுதான் காதல்.

உனக்காக நான் எதையும் செய்வேன் என்று ஒரு பெண் ஏன் கூறப்போகிறாள்? அதைச் சொல்வதற்கான தேவை என்ன என்று பார்க்க வேண்டும். அவளுக்குப் பிடித்திருக்கிறது. இந்தப் பிடித்திருக்கிறது என்ற சமாச்சாரம்தான் காதல்.

ஈடுபாடு இல்லாமல் எதைத்தான் ஒருவரால் தொடர்ந்து செய்யமுடியும்?

வேக வைத்த கறியை அப்படியே உண்பதற்கும். ருசியோடு சமைத்து உண்பதற்கும் வித்தியாசமில்லையா? இரண்டிலும் உடலுக்குத் தேவையான சத்து கிடைக்கத்தான் போகிறது. ஆனால் எதை ஒருவன் விரும்புவான்.  
காதல் என்பது ருசியோடு பார்த்துப் பார்த்துச் சமைப்பதைப் போன்றது.

உடனே வம்படியாய், ஹோட்டலில் சரக்குமாஸ்டர் ருசியோடு சமைத்துத் தருகிறானே அது காதலா என்று கேட்கக் கூடாது. அந்த சரக்குமாஸ்டர் அங்கே தன் கடமையைச் செய்வதற்குப் பின்னால் சரக்குமாஸ்டரின் காதல் குடும்பம் இருக்கிறது.

காதல் என்பது அன்பு, பாசம், நேசம், நட்பு, உறவு, ஈர்ப்பு, பிடித்தம், விருப்பம், சுவாரசியம், கலை, இலக்கியம், நிம்மதி, பாதுகாத்தல், அக்கறை என்பவை போன்றவற்றால் ஆனது

கடமை என்பது சேவை, பொருள் ஈட்டுதல், செய்ய வேண்டுவன, கொடுக்க வேண்டியன என்பவற்றைச் செயல் படுத்துவ்து.

இந்த இரண்டும் சேர்ந்தால்தானே வாழ்க்கை.

இன்னொன்று காதல் என்றால் அது என்னவோ வாலிப்பப்பருவத்தில் குத்துப்பாட்டு போட்டு ஆடுவது என்பதுபோல் நினைத்திருக்கிறார்கள் சிலர்.

ஒரு தொண்ணூறு வயது தம்பதியருக்கு இடையில் இருக்கும் காதலைப் பார்க்க வேண்டும். அதை எல்லாம் அனுபவைக்க ஆயுள் வேண்டும். பார்க்கும் போதே பரவசப்படும் காதல் அது.

உங்களுக்குக் காதல் இல்லாவிட்டால் ஏன் இன்னொரு உயிரையும் கடமையே என்று கட்டிக்கொண்டு சாகும்வரை அவர்களையும் சாகடிக்க வேண்டும்?

கிரந்த எழுத்துக்களை எடுத்தெறிய வேண்டுமா?

1. 1400 வருடங்களுக்கும் மேலாக தமிழன் இந்த கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்துகிறான்.

2. தொல்காப்பியத்தில் இல்லை என்ற வாதம் சரியாகாது. அது சுமார் 2000 வருடம் பழமையானது.

3. அதுமட்டுமல்ல, தொல்காப்பியத்தில் ஃ ஆய்தத்தை முதல் எழுத்தாகக் கொண்டு எழுதவேண்டும் என்று சொல்லப்படவில்லை. இங்கே இவர்கள் வசதிக்காக இலக்கணத்தை மாற்றுவார்களாம். கிரந்தம் என்றால் மட்டும் மிகப்பழைய இலக்கணம் வந்துவிடுமாம். வேடிக்கை இல்லையா?

4. அதுமட்டுமல்ல, இந்த குறிகள் இட்டு எழுதுவது எந்த இலக்கண நூலில் இருக்கிறது என்று கேளுங்கள். அதை மட்டும் புதுசா கொண்டுவரேன்னுவாங்க. 1400 வருடம் மக்களால் புழங்கப்படுவதை நீக்கவேண்டுமாம். இவங்க புதுசா குறிகள் இட்டுத் தருவதை தமிழர்கள் அப்படியே ஏற்க வேண்டுமாம்.

5. க்ரியா தற்காலத் தமிழ் அகராதி, கிரந்த எழுத்துக்களைத் தன் அகராதியில் ஏற்றுக்கொண்டு அர்த்தம் எழுதியுள்ளது. க்ரியா என்று தன் அகராதிக்குப் பெயரிட்டு தொல்காப்பியத்தை உடைத்துவிட்டது. அது சாதாரணமாகவர்களால் உருவான அகராதி அல்ல. மொழி அறிஞர்களாய் உயர் பதவி வகிப்பவர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

6. தமிழில் ஏராளமான வடசொற்கள் புழக்கத்தில் உள்ளன. அவற்றை எந்த அளவுக்குத் தமிழ்ப் படுத்த முடியுமோ அந்த அளவுக்குத் தமிழன் தமிழ்ப்படுத்திவிட்டான். வெறும் அயலக பெயர்களிலும், அறிவியல் சொற்கள் சிலவற்றிக்கும்தான் கிரந்தம் பயன்படுகிறது.

7. இந்த நான்கு எழுத்தைத் தவிர F க்கு ஒரு எழுத்துவேண்டும் என்று சிலர் போராடியபோது. ஃ ஆய்தம் பயன்படுத்தி ஃபாரின் என்று எழுதலாம் என்று புதிய எழுத்துக்களைத் தடுத்து நிறித்திவிட்டோம்.

8. இன்றைய பத்திரிகைகள் முழுவதிலும் கிரந்தத்தின் பயன்பாட்டைப் பாருங்கள். 1% கூட இருக்க்காது. பிறகு ஏன் அலறவேண்டும். புதுசா தான் முனைந்து குறிகளைக் கொண்டுவந்தேன் என்ற பெயருக்காகப் பேசுவதுபோல எனக்குப் படுகிறது.

9. இன்னும் ஆயிரம் மடல்கள் இட்டாலும் கிரந்த எழுத்துக்களை அழிக்க முடியாது. இன்றைய கவிஞர்கள் அப்துல் ரகுமான், மு.மேத்தா, வைரமுத்து, சிற்பி எல்லாம் கிரந்தம் பயன்படுத்துகிறார்கள். கவிஞர்களே பயன்படுத்துகிறார்கள் எனால் அதுவே ஒரு பெரிய அங்கீகாரம்.

10. பாரதி கிரந்தம் கொண்டு நிறைய கட்டுரைகள் எழுதியுள்ளான். வடச்சொல் கொண்டு கவிதை எழுதி இருக்கிறான். கிரந்த எழுத்துக்களைப் பல்லவி சரணம் என்று ஓசைகளில் பயன்படுத்தி இருக்கிறான்.

11. இந்த 1400 வருடங்களில் ஏகப்பட்ட நூல்கள், கிரந்த எழுத்துக்களைக் கொண்டு அமைந்துள்ளன. வாக்காளர் பட்டியல்வரை கிரந்தம் பயன்படுத்தப்படுகிறது. இன்று வாழும் தமிழரிஞர்களுள் தொல்காப்பிய உரை எழுதியவர் கலைஞர் தன் மகன் பெயரை ஸ்டாலின் என்றுதான் எழுதுகிறார்.

12. பெரியார் புது எழுத்துக்களை அறிமுகம் செய்த போது அது எந்த இலக்கண நூலிலும் இல்லை. ஆனால் உலகமே ஏற்றுக்கொண்டது.

13. அந்தக் காலம் என்றாலாவது கிரந்தம் தவிர்த்து எழுத முயற்சிக்கலாம். இதுவோ உலகமே சுண்டைக்காயாய்ச் சுருங்கிய காலம். தமிழன் சர்வதேச சபையில் நிற்கிறான். அவனைப் போய் ”சார்ச் புழ்சு” என்று எழுதச் சொன்னால் சிரிக்க மாட்டான். சார்ச் புழ்சு என்றால் என்ன வென்று கேட்காதீர்கள். ஜார்ஜ் புஷ். இப்படி விடுகதை போட்டுக்கொண்டிருந்தால் தமிழில் நவீன நூல்கள் வளர்வதெப்படி?

14. இந்த கிரந்தம் என்ற நாலு எழுத்துக்களையே சுமையாகக் கருதும் இவர்கள், க வில் நாலு, சா வில் நாலு, ப வில் நாலு என்று ஒவ்வொரு எழுத்துக்கும் நான்கு குறிகளைக் கொண்டுவந்து, அல்ஜிப்ரா சூத்திரமாக தமிழ் எழுத்துக்களை ஆக்க முயல்கிறார்கள். ஏற்கனவே தமிழ் எழுத்துக்களைக் கஷ்டப்பட்டு படித்துவரும் தமிழன் இந்தக் குறிகளுக்குள் சிக்கிச் சீரழியவா?

15. எல்லாவற்றுக்கும்மேலாக குறிகள் இடுவதற்கான எந்தத் தேவையும் இல்லாமல் பல நூற்றாண்டுகளாக தமிழன் அழகாக தமிழில் தான் நினைத்ததை எழுதி மகிழ்ச்சியாகத்தானே இருக்கிறான்?

16. அதே சமயம் அகராதியில் மட்டும் உச்சரிப்பு வித்தியாசம் காட்டுவதற்காக, குறிகளை உருவாக்கட்டும். ஆங்கில உச்சரிப்புக்குப் பயன்படுத்துவதைப் போல பயன்படுத்தட்டும். அதில் பிரச்சினை இல்லை

நாளைய குடும்பம் - ஓர் அமெரிக்க வாழ்வுக் காட்சி


1. 16 லிருந்து 18 வயதுக்கும் ஆணும் பெண்ணும் வீட்டைவிட்டு வெளியேறுகிறார்கள்.

2. எங்கேயாவது அறை எடுத்து காம சூத்திராவின் சந்துபொந்துகளிலெல்லாம் சிந்து பாடுகிறார்கள்

3. சில பெண்கள் வயிறு தள்ளிவிடுகிறார்கள் பலர் தப்பித்துக்கொள்கிறார்கள். வயிறு தள்ளியவர்களின் குழந்தைக்கு அரசும் தள்ளவைத்த பையனும் பொறுப்பு. குழந்தையின் 14 முதல் 16 வயதுவரை பையன் பெண்ணுக்குப் பணம் தரவேண்டும். பெண்ணும் மாட்டிக்கொள்கிறாள் ஆணும் மாட்டிக்கொள்கிறான்.

3. பள்ளிக்கூட படிப்பும் முடிவடையாத நிலையில் வால்மார்ட் போன்ற பெருங்கடைகளில் வேலை செய்கிறார்கள். பியர் குடிக்க வழியில்லாமல் சாலை முக்குகளில் நின்று காலணா காலணா என்று பிச்சை எடுக்கிறார்கள்.

4. கல்லூரிப் படிப்பிற்கு வட்டியில்லா காலவரையில்லா கடன் தருகிறேன் என்கிறது அரசு. ஆனால் அதைக் கேட்கும் நிலையில் அவர்கள் இல்லை. வாழ்க்கை பலரோடும் படுக்கையில் விழித்திருக்கிறது

5. இப்படியே ஒரு 30 வ்யதாகிவிடுகிறது. பின் மெதுவாக உணர்கிறார்கள். அரசு தரும் சலுகைகளை ஏற்றுக்கொண்டு சிலர் மட்டும் கல்லூரிக்குள் நுழைகிறார்கள். வேலையும் படிப்புமாய் அது பல வருடங்கள் முதியோர் கல்வியாய் ஓடுகிறது

6. 40 வயது ஆகிறது. படுக்கையறை காலியாகக் கிடக்கிறது. எல்லா பறவைகளும் ஓடிவிடுகின்றன. அதே போல காய்ந்துகிடக்கும் இன்னொருவரை கல்யாணம் செய்துகொள்கிறார்கள்.

7. பலருக்குக் குழதைகள் கிடையாது. சிலருக்குக் குழந்தைகள் பிறக்கின்றன. பிறக்கும் குழந்தைகளை அரசு தரும் பணம் கொண்டு வளர்க்கிறார்கள். பள்ளிக்கூடும் இலவசம். குழந்தைகள் 16 முதல் 18 வயது ஆவதற்குள் வீட்டைவிட்டு அடித்துத் துறத்திவிடுகிறார்கள்.

8. மனிதார்கள் தனித்தனியே தீவுகளாகவே காலமெல்லாம் வாழ்கிறார்கள். எந்த ஒட்டும் எந்த உறவும் இல்லை. சந்திப்போரிடம் பொய்யாய் ஒரு ஹாய் ஹலோ அவ்வளவுதான்.

9. சேமிப்பு கிடையாது, எனவே நாட்டின் பொருளாதாரத்துக்கு இவர்களால் ஒரு பிரயோசனமும் இல்லை. நாடு வெளிநாட்டில் அணுகுண்டு வித்து சம்பாதிக்கிறது. ஆயில் மொண்டு வாழ்கிறது.

10. 35 வயதுக்குள் பலரும் மனநோயாளியாகிறார்கள் ஆண்மை குறைவடைகிறார்கள் என்று புள்ளிவிபரம் கூறுகிறது.
பல்லாயிரம் வெட்டுக்கிளிகள்
தத்தித் துள்ளும் நெஞ்சோடு
தேடிப் பிடித்த திருப்தியும்
நம்மோடு உள் நுழைய
எப்போதும் இல்லாத
சாகாக் காதல் வாசனையால்
குப்பென்று பூத்தது அந்த உணவகம்

ஓடிவந்த பணியாளிடம்
கேளடி எதுவாகினும் என்றே கூறி
உன் கழுத்துக்குள் புதைந்தேன்

வரவழைத்த உணவைத்தான்
உண்டேனா அல்லது
உன் தீம்பலா வாயசைவுக்கேற்ப
பட்டு வார்த்தைகள் இட்டு
குட்டிக் கவிதைகள் பலநூறு
வடித்தேனா என்று இன்றும் அறியாமல்
ஏதோ மாயத்தில் சிக்கிக்கிடக்கிறேன்
நீ
வந்ததும்
ஆளரவமற்றுக்கிடந்த
என் வீதிகளில்
புயலடிக்கத் தொடங்கியது

என்
காய்ந்த
மரப்பட்டைகளும்
பூக்களாய் மாறி
பல வண்ணங்களில்
குலுங்கிச் சிலிர்த்தன

நீ
சென்றுவிட்டாய்

புயல்
ஓய்ந்துபோய்விட்டது

ஆனால்
தீச்சுனாமியல்லவா
வந்துவிட்டது

என் உயிர் வேர்கள்
அத்தனையும்
கருகிச் செத்துவிட்டன

நீ ஏன் வந்தாய்?

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
அய்யய்யோ என்று
அதிசயிக்கும்
ஐந்து மில்லி இடையழகி

பொய்யல்ல என்று
திரண்டிருக்கும்
பஞ்சு மிட்டாய் மாரழகி

மெய்யல்ல என்று
பொய்யுரைக்கும்
டிஜிட்டல் கண்ணழகி

செய்வதேது என்று
கலங்கடிக்கும்
செல்லுலாய்ட் பேரழகி
கொள் அல்லால் கொல்
கொள்ளாது கொல்வாயோ
அன்றி கொண்டு கொல்வாயோ

கொல் அல்லால் கொள்
கொல்லாது கொள்வாயோ
அன்றி கொன்று கொள்வாயோ

கொல் கொள் இரண்டும்
காதலில் ஒன்றெனச் சொல்
குடையின்றி
மஞ்சம் வந்தால்
இதுதான் நிலை
வியர்வை மழை
இருக்கும் வரை இருக்கிறேன்

இருக்கும் வரை இருக்கிறேன்
இறக்கும் போது இறக்கிறேன்

இருப்பதுதான் இறப்பது
இறப்பதுதான் இருப்பது

இருப்பும் இல்லை இறப்பும் இல்லை
இடை நிலைதான் வாழ்க்கை

இருப்பதற்கும் இறப்பதற்கும்
இடையில் ஏதும் இல்லை

இடையில் வரும் எதுவுமிங்கு
இருப்பதற்காய் இல்லை

துடிப்பிருக்கும் வரையிலும்
தவிப்பிருக்கும் நெஞ்சினில்

உயிர் இருக்கும் வரையிலும்
துயர் இருக்கும் நாட்களில்

இருப்பவன்தான் இறந்தவன்
இறந்தவன்தான் இருப்பவன்

இருவரையும் கோத்துவைத்து
இருப்பதுதான் வாடிக்கை

இருக்கும் வரை இருக்கிறேன்
இறக்கும் போது இறக்கிறேன்

இருப்பதுதான் இறப்பது
இறப்பதுதான் இருப்பது

இருப்பும் இல்லை இறப்பும் இல்லை
இடை நிலைதான் வாழ்க்கை

கண்ணீர் மரம்


நானோர்
கண்ணீர் மரம்

என் கண் கிளைகளின்
கண்ணீர் இலைகளில் ஓடிவன
வெறும் நார் நரம்புகளல்ல
கவிதை நரம்புகள்

ஆகையினாலேயே
என் வாழ்க்கைப் பயண நிமிடங்கள்
இலையுதிர் காலங்களாய் மட்டுமே
சித்தரிக்கப்பட்டிருக்கின்றன

என் ஞாபக முடிச்சுகள்
அவ்வப்போது அவிழ்க்கப்பட்டு
கண் நதிகளில் வெப்பக் கண்ணீராய்ப்
பிரவாகமெடுக்கும்

மனமேகங்கள்
அடிக்கடி ஏமாற்ற மரண அடிகளால்
கறுத்துக் கறுத்து
கண்ணீர்க் கடுமழை பொழியும்

என் கற்பனை வசந்தங்களின்
தீவிர நினைவுகள்
தாமே விதைத்துக் கொண்டு
உப்புப் பூக்களைக்
கண் காம்புகளிலிருந்து
கன்ன மாடத்தில் கணக்கின்றி உதிர்க்கும்

என் கண்புறாக்கள்
கனவுகளை அடைகாத்துக்
கண்ணீர்க் குஞ்சுகளைப்
பொரித்துக் கொண்டே இருக்கும்

ஆம்...
நானோர் கண்ணீர் மரம்!

என் கண் கிளைகளின்
கண்ணீர் இலைகளில் ஓடிவன
வெறும் நார் நரம்புகளல்ல
கவிதை நரம்புகள்

ஆனால்
இன்றெலாம்
இந்தக் கண்ணீர் மரம்
வாழ்க்கையை வளைக்கக் கற்றுக்கொண்டது

சிந்த வேண்டியது கண்ணீரையல்ல
பழுப்பேரிய இலைகளையும்
காம்பில் முதிர்ந்த கனிகளையும்தான்
என்று கண்டுகொண்டது

எந்தக் கோடரிக்கும் பிளந்து கொள்ளாமல்
வைரம்பாய்ந்து விம்மி நிற்கிறது

நம்பிக்கை விழுதுகளை
உலகெங்கும் பரப்பி
நிழல் தந்து நலம்பாடும்
நற்கவிதை செய்கிறது
செந்தாமரையே செந்தாமரையே
நீ நிற்பதோ ஒற்றைக் காலில்
அதையும் ஏன்
சேற்றில் செருகி இருக்கிறாய்
ஆசைகளுக்குள் செருகிக் கிடக்கும்
மனித மனங்களைப் போல

அப்படிச் சிரிக்காதே
வண்டுகள் உன்னைத்
தொடுவதற்கு முன்னரே
போதை தாளாமல் துவண்டு விழுகின்றன

குங்குமம்
இட்டுக் கொள்ளடி என்றால்...
ஏனதில் குளித்து விட்டு வந்து
நிற்கிறாய்

இந்தக் குளம்
உன்னைப் பிரதிபலிக்கவே
இப்படி நிச்சலனக் கோலம் பூண்டு
நீண்டு கிடக்கிறது
குனிந்து பாரடி
அதிலுன் காந்தமுகத்தை

வேண்டாம் வேண்டாம்
உன்னோடு அழகுப் போட்டியில்
கலந்து கொள்ள நெடுநேரமாய் அங்கே
காத்துக் கிடக்கிறாள் நீலி நிலா

நீ குனிவதை
தலைகுனிவு என்று அவள்
தவறாக எண்ணிவிடக் கூடாதல்லவா
காதல் அறுவடை

என்னதான் காரணம் சொன்னாலும் சரி
அறுவடை என்றாலே
நடுமுள் சில்லிட்டுத்தான் போகிறது

பச்சைப் பயிர்களின்
இச்சை ரத்தம் பீறிட்டுச் சிதற
சிலிர்த்துச் செழித்து வளர்ந்துவிட்ட
செம்மைப் பயிரின் கழுத்தில்
கண்ணில்லாக் கரம்பதித்துக் கொத்தாக அள்ளி
இதயக் குறுக்கில் குறிவைத்து
அறுக்கும் கொடுமையல்லவா அது

அதுவும்
தான் ஆசை ஆசையாய்
வளர்ந்தெடுத்த பயிரை
அக்கறை அக்கறையாய்
நீரூற்றிப் பெருக்கிய பயிரை
கனவுகள் நிறைத்து உயிரோடு ஒட்டி
அரவணைத்த பயிரை

இதய வாசனை தலைகீழாய் மாறி வழிய
நரம்புகளில் அவலநெடி
மூச்சுமுட்டி வீச

அப்பப்பா அறுவடை என்பது
அடிமடி இடியைப்போல் கொடுமையேதான்

அறுக்க அறுக்க சிற்சில பயிர்களோ
அறுபடுவதே இல்லை
வலுக்கட்டாயமாய் அறுத்தெறிந்துவிட்டுத்
திரும்பும்போதே முன்னைவிடப்
பன்மடங்காய் வளர்ந்து நிற்கும்

மன வேர்களை விழுங்கி நிற்கும் இவை
நம் உயிர் இழைகளால் பின்னப்பட்ட
உயர் ரகப் பயிர்கள்
மகா துயர்மிகு பயிர்கள்
ஞானத்தங்கமே

இறுதியாய்ப்
பிச்சை கேட்ட பாத்திரத்திலும்
புளிச்சென்று எச்சில்

மிச்ச மீதி நம்பிக்கையும்
மரணப்பசிப் பெருங்குடலில்
இறுதி ஊர்வலம்

ஆயிரங்காலப்பயிர் செழித்துக்கிடந்த
உள் முற்றத்திலிருந்து ஓடிவந்த
நாக்கு நாய் துரத்திக் கடிக்க
இரத்தக் கசிவுகளோடு
தனிமை மண்டிக்கிடக்கும் புதரில் விழுந்து
புதிராகிப் போனது இதயம்

உச்சி முதல் உள்ளங்கால் வரை
புதுத்தோல் போர்த்திக்கொண்டு
தனக்குள் செத்து
பின் தானே உயிர்த்து
மீண்டும் மனிதர்களைக் காணும் பீதி
உயிரை மிதித்தாலும்
இம்முறை அர்த்தம் புரிந்த
முதல் அழுகையோடுதான்
வெளிக்காற்றுக்குள் வீசியெறியப்பட்டது
இதயம் தன் துடிப்புகளோடு

நிரந்தரம் அற்றதென்றாலும்
வயிறும் மனமும்
வீதிகளில் நிறைகிறது இப்போது

நிச்சயமாகிப்போன
பிச்சையுமில்லாப் பிழைப்பில்
நிரந்தரமாகிப்போன நிரந்தரமற்ற
அன்னதானங்கள் என்ன
குறைந்தா போயிற்று

சொந்தக் கதவானாலும்
பத்துகோடிப் பூட்டுகள் இரக்கமற்று
இறுக்கமாகத் தொங்கினால்
மனம்மாறி ஓர் நாள் திறந்து வரக்கூட
இந்த ஜென்மம் போதுமா

காத்திருக்காக் கட்டற்ற உணர்வுகளுக்குள்
கைதாகிக் கிடக்கும் வாழ்க்கை
என்றும் விடுதலையாகப் போவதில்லை
என்பதே படைப்பிலக்கணம்
என்பதனாலேயே...

மறுக்கும் இடத்தில்
மன்றாடுவதல்ல
வாழ்க்கை
கொடுக்கும் இடத்தில்
கொண்டாடுவதுதான்

அன்புடன் புகாரி
20010000