15

கண்ணுக்குக் கனவு வேண்டாமா
கனவுக்குச் சிறகு வேண்டாமா
சிறகுக்குக் கவிதை வேண்டாமா
கவிதைக்கு நான் வேண்டாமா
அன்பே நீ எனக்கு வேண்டாமா

நிலவுக்கு முகம் வேண்டாமா
முகத்துக்கு இதழ் வேண்டாமா
இதழுக்கு முத்தம் வேண்டாமா
முத்தத்துக்கு நான் வேண்டாமா
அன்பே நீ எனக்கு வேண்டாமா


உயிருக்கு இளமை வேண்டாமா
இளமைக்குச் சுகம் வேண்டாமா
சுகத்துக்குத் தழுவல் வேண்டாமா
தழுவலுக்கு நான் வேண்டாமா
அன்பே நீ எனக்கு வேண்டாமா

ரசனைக்கு உணர்வு வேண்டாமா
உணர்வுக்கு உள்ளம் வேண்டாமா
உள்ளத்துக்குக் காதல் வேண்டாமா
காதலுக்கு நான் வேண்டாமா
அன்பே நீ எனக்கு வேண்டாமா

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
14

உயிரின் இருப்பிடம்
உதடுகளில் இடமாற்றம்
முத்தம்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

 
நமக்கு எவ்வளவு
நேசத்துக்குரியவர் என்றாலும்
ஊழல் வழக்கில் சிக்கி
நிரூபிக்கப்பட்டுவிட்டால்
படுபாவி என்று எரித்துக்
கொண்டாடத்தான் வேண்டும்


அம்மாவாய்
இருந்தால் என்ன
ஐயாவாய்
இருந்தால் என்ன

மக்கள் சொத்து
நாடு நலம்பெற
ஒப்படைக்கப்படும்போது

அந்த நம்பிக்கைக்கு
ஒரு பைசா
கலங்கம் விளைவித்தாலும்
அது
சுண்டெலியாய் இருந்தாலும்
பெருச்சாளியாய் இருந்தாலும்
பொறியில் அடைக்கத்தானே வேண்டும்

நாடு வேண்டுமா
நாசம் வேண்டுமா

இனியாவது
முடிவு செய்ய வேண்டாமா?
நெருப்பில் விழுந்தாலும்...

காதலைத் தொட்டாயிற்று
கல்யாணமும் முடித்தாயிற்று

இனியென்ன?

இதோ இதோ
இந்த வாழ்க்கையின்
இனிப்பான அடுத்த கட்டம்

ஆம்
பெற்றெடுத்துக் 
கொஞ்சுவது

அந்தப் பிஞ்சுகளின்
சின்னச் சின்ன ஆசைகளை
நிறைவேற்றி நிறைவேற்றி
நிறையாமல் வெறி கொள்வது

வாழ்க்கையின்
சர்க்கரைக் காலம்

வர்ணங்களுக்குள்
விழிகள் விழுந்து
நீச்சலடிக்கும் காலம்

உயிரையும்
உவப்போடு வழங்க
உரங்கொண்ட
சாதிப்புக் காலம்

அடடா
அந்தப் பிஞ்சுகள்
வளரவே கூடாது

வளர்ந்துவிட்டால்?

சட்டுச் சட்டென்று 
அவர்களும்
பெற்றெடுத்துப் பெற்றெடுத்து
பரிதவித்து நடுங்கும் கரங்களில்
பனி ரோசாக்கள் பத்துப்பதினாறை
கொட்டித் தந்துவிட வேண்டும்

பிஞ்சுகளின் பிஞ்சுகளும்
இந்த மரத்தில்தான்
ஊஞ்சல் கட்டி ஆட வேண்டும் 

ஊஞ்சலாட
வழியற்ற மரங்கள்
உடைந்து நொறுங்கி
நெருப்பில் விழுந்தாலும்
வேகாமல்லவா கிடந்துழலும்

அன்புடன் புகாரி
கடவுள்
இல்லை என்று சொல்வதும்
மதங்கள்
இல்லை என்று சொல்வதும்
சாதிகள்
இல்லை என்று சொல்வதும்
அவற்றை
இல்லை என்று
சொல்வதற்காக அல்ல

மூடநம்பிக்கைகள் கூடாது
என்று சொல்வதற்காக
காட்டுமிராண்டித்தனம் கூடாது
என்று சொல்வதற்காக
வன்முறை கூடாது
என்று சொல்வதற்காக
தீண்டாமை கூடாது
என்று சொல்வதற்காக

வேரையே அறுக்கச் சொல்வது
விளைவதெல்லாம்
விசமாக இருப்பதால் மட்டும்தான்


13

நீ
குழைந்த
வார்த்தைகளை
நான்
எப்படிக் கொண்டாடுவேன்
என்றே தெரியவில்லை

உதிர்த்த
நீ
மறந்துபோவாயோ
தெரியாது

ஏற்ற நானோ
தொலைந்தே போனேன்

தொலைந்தேன் என்றதும்
சுயம் தொலைத்தேனோ
என்று மருளாதே

நான் நானாக மீண்டேன்
வரமாக

ஈரமற்ற
வெளிகளிலிருந்து
மழை அவிழும் சோலைக்குள்
இந்தக் கவிவண்டை மீட்டுத்தந்த
உன் வார்த்தைப் பூக்களைப்
பாராட்டுகிறேன்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
இரத்தவழி என்றில்லை

ஆதரவைத்
தேடித் தவிக்கும் கோடுகளும்

அன்பைத்
தேடித் தவிக்கும் கோடுகளும்

சந்திக்கும்
தற்செயல் புள்ளிகள்தாம்

உறவெனும்
அற்புத ஆரத்திற்கான
அத்திவார முத்துக்கள்

ஓர் உறவு
உயிர் போகும்வரைக்கும்
நிலைத்திருக்க வேண்டுமென்று
அவசியமில்லை

ஆனால்
இருக்கும்வரை
இறக்கும்வரைக்கான
சுக நினைவுகளைத் தருவதாய்
இருக்க வேண்டும்




12

உதடுகளின் ஈரத்தில்
உயிர்களின் சுவாலை
உன் முத்தம்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
11

முகிலுக்கும் பரிதிக்கும்
வானவில் பிறக்கும் அதிசயம்போல்
மௌனத்தால்
மெலிதாகக் கிசுகிசுப்பாள்
நெகிழ்வான பெண்

பிரபஞ்ச வெளிகளில்
பிளக்கப்படாத அணுக்களின் பேரடர்வாய்
மௌனத்தால்
மௌனமாகவே இருப்பாள்
விருப்பில்லாப் பெண்

பெண்ணின் மௌனம்
பிழையில்லாச் சம்மதமென்று
எவன் சொன்னது

அது
சுயநலச் சூட்டில் கொதித்து
பெண்ணை
வசதியாய் வளைக்கும்
அபிலாசையில்
மூர்க்கர்கள் சொல்வது

புன்னகையே புதிராய்
விழிவீச்சே கேள்வியாய்
நாணமே நழுவுதலாய்
விளையாடுமே பெண்ணுள்ளம்

இவையாவும் அவளின்
ஆசீர்வதிக்கப்பட்ட இயல்புகளல்லவா

அவகாசம் கேட்கும் விண்ணப்பங்களாய்ச்
சட்டுச் சட்டென்று மொட்டாகும்
பெண்ணின் மௌனப் பூக்கள்

சரியான சாவிதேடி
அவள் அவளை
அவளாகவே திறக்கும்வரை
அவசரப்படுத்தாமல்
அமைதி காப்பதே ஆணுக்கழகு

மௌனம் கலைத்து அவள் உனக்குச்
சம்மதமகுடம் சூட்டியபின்னும்
இன்னொரு மௌனத்தை
உடுத்திக்கொண்டுவிட்டால்

அடடா
அது நிகழ்ந்தே விட்டது
ஆம்
உன் நம்பிக்கை மரம்மீது
கூர் கோடரி ஒன்று
உறுதி செய்யப்பட்டுவிட்டது

விடை பெற்றுக்கொள்
விரைந்து வேற்றிடம் பார்
வெதும்பிச் சாகாதே

பெண்ணின்
விருப்பத்தின் திருப்பத்தை
வாழ்த்திப் பாட
வாயற்றுப் போனாலும்
அவள்
வாழும் வழிவிட்டுப்போ

இன்னொரு பெண்மனம்
உனக்காக எங்கோ
மௌனம் கலைக்கக்
காத்திருக்கிறது

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
சிட்டுக் குருவியின்
சிறகுகள் தொட்டேன்

கைக்குள் அள்ளி
காற்றுக்கும் நோகாமல்
அப்ப்ப்படியே பொத்திக்கொள்ள
உள்மனப் பிஞ்சு உடைந்து தவித்தது

குவிந்து குவிந்தே பீறிட்ட இதழ்கள்
முத்த ராகங்களைச மூச்சழிய இசைக்க
மொத்த நரம்புகளிலும்
முரசுகொட்டித் துடித்தன

பஞ்சு பஞ்சுப் பரிசங்களில்
பறிகொடுத்த நெஞ்சக்குழி
இறகின் முடிக்கூட்டில்
இமை மூடிய கிறக்கவிழி

தத்திய குருவியின்
பொன்னழகில் லயித்திருந்தேன்
பொத்திய மறுநிமிடம்
பறந்தே போனது

எப்படி மறந்தேன்
இப்போது அறிந்தேன்
சிட்டுக்குருவியின்
சிறகினைத் தொட்டால்...

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
10

இந்தக் காலையும்
உன் நினைவுகளோடுதான்
எழுகிறேன்

இன்று உன்னைச்
சந்திக்க மாட்டோமா
என்ற ஏக்கம்
என்னைத் தேநீராய் எடுத்து
தன் நெருப்பு உதடுகளால்
உறிஞ்சுகிறது

நாளெல்லாம்
பொழுதெல்லாம்
உன்னோடு
ஆயிரம் ஆயிரம்
கதைகள் பேசவேண்டும்
என்ற தவிப்பு
வார்த்தைகளைக் குவித்து
அதனுள்
என்னைக் கவ்விக்கொண்டு
மூடிக்கொள்கிறது

நான்
இருந்துகொண்டே
இல்லாமல் போகிறேன்

நான் இல்லாமல்
போகும் பொழுதெல்லாம்
புரிந்துகொள்கிறேன்

உன்னிடம்தான்
ஓடிவந்திருப்பேன் என்று

நான்
இருக்கும் பொழுதுகளை
கிளறிப் பார்க்கிறேன்

நீ எங்கே
என்ற தேடலைத் தவிர
அதில்
வேறொன்றும் இல்லை

நான் உன்னை
நினைத்துக் கொண்டிருக்கிறேன்

உன்னை
நினைத்துக்கொண்டிருப்பதற்காகவே
நான் இருக்கிறேன்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
09

என்
இதயச் சுடுகாட்டில்
உன்
நினைவுச் சடலங்களைப்
புதைக்க
பிஞ்சு விரல்களுடன்
சென்றேன்

முட்கள் கிடந்தன

*

இரும்புக் கம்பிகளுடன்
சென்றேன்

இரத்தம் கசிந்தது

*

வெப்பக் கண்ணீருடன்
சென்றேன்

புதைந்து கொண்டன

*

ஆனால்
என்
பிரியமானவளே

வினாடி இமைகள்
நிமிசக்கண்
தழுவும்முன்
செத்த சடலங்கள்
சிலிர்த்துக் கொண்டன

பிசாசுகளாய்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
08

உன் சோலையில்
என் கிளிகள் சிறகடிக்கின்றன

உன் சங்கினில்
என் காற்று இசைக்கின்றது

உன் குளத்தினில்
என் மீன்கள் குதிக்கின்றன

உன் வானத்தில்
என் நட்சத்திரங்கள் மினுக்குகின்றன

உன் பஞ்சினில்
என் நெருப்பு பத்திக்கொள்கிறது

நீயோ
ஏதுமறியாதவள் போல்
என்னிடம்
பொய்யாய்க் காட்டித் திரிகிறாய்

போதுமடீ
என் பொல்லாதவளே

காலமும் காதலும்
சேர்ந்திருந்தால்தான்
அதன் பெயர்
பிரபஞ்சம்

வா வா
வாழ்வோம்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
07

மாரெடுத்து
மழலைக்கு ஊட்டிவிடும்
தாய்ப் பாசம்

உயிரெடுத்து
உயிருக்குள் ஊட்டிவிடும்
காதல் பாசம்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்


நான் முதன் முதலில் ’போட்டோ ஸ்டுடியோ’வுக்குச் சென்று எடுத்துக்கொண்ட புகைப்படம் இதுதான்.

கல்லூரி முடித்ததும் என்னை ஜெர்மனிக்க்குப் பொட்டலம் கட்ட உறவினர் ஒருவர் முயன்றார். அதற்கு ‘பாஸ்போர்ட்’ எடுக்க எடுத்த படம் இது.


பத்திரிகையில் வெளியான முதல் கவிதையல்ல இது. அது அலிபாபா என்ற இதழில் வெளியானது. அக்கவிதையும் இன்று என்னிடம் இல்லை. இது ஞானபாரதி வலம்புரிஜான் அவர்கள் ஆசிரியரா இருந்த தாய் இதழில் ஆசிரியர் பக்கத்தில் வெளியானது. நான் அப்போது சவுதியில் இருக்கிறேன். இந்தப் படம் என்னைக் கவர்ந்தது. படத்தில் ஏதேனும் விசேடமாய்க் காண்கிறீர்களா என்று சொல்லுங்கள்


இப்ப நான் இப்படி நின்றால் தலை பூமியில் புதைந்துவிடும்.

படிக்கின்ற காலங்களில் எங்கள் ஊர் ஏரிக்குச் சென்று புற்களில் அமர்ந்து படித்துமுடித்துவிட்டுத்தான் வீட்டுக்கு வருவேன்.

அப்போது துபாய் கேமராவோடு என் நண்பன் அங்கே வந்தான். ஒரு போஸ் கொடு புகைப்படம் எடுக்கிறேன் என்றான்.

கொடுத்த போஸ் இதுதான் ‘;-)


இது நான் ஏறிய முதல் மேடை. இது எனக்கு முதல் புகைப்படமும் கூட

முதல் மேடையே கவிதை மேடைதான். இதில் நான் வாசிக்கும் கவிதை என்னிடம் இல்லை. தொலைந்துபோய்விட்டது.

யாரோ ஒரு புகைப்படக்காரர் என்னைப் புகைப்படம் எடுத்து உங்களுக்கு வேண்டுமா என்று கேட்டார். மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

என் சிறுவயது புகைப்படங்களைக் காணவேண்டும் என்று எனக்கு மிகவும் ஆசை. ஆனால் எவருமே எடுத்து வைக்கவில்லை. இந்த மூஞ்சிக்கெல்லாம் புகைப்படம் கிடையாது என்று விட்டுவிட்டார்கள்

கவிதைகள் தின வாழ்த்துக்கள்


911, செப்டம்பர் 11 பாரதியின் நினைவு நாள். அன்றுதான் அந்த உச்சி வானம் உடைந்து விழுந்தது.

பாரதி நினைவு நாளுக்கு நான் கவிதை எழுதவில்லை, ஒரு காவியமே படைத்திருக்கிறேன்.

அந்தக் காவியம் பல்லாயிரம் வரிகளைக் கொண்டதல்ல, இரண்டே இரண்டு வரிகளையே கொண்டது.

ஆனால் அந்த இரு வரிகளும் உங்கள் இதயங்களில் விழுந்ததும், ஈராயிரம் வரிகளாய்ப் பல்கிப் பெறுக வேண்டும். அதுவே என் ஆசை.

இதோ அந்த இருவரிக் காவியம் உங்களுக்காக:


கவிராசன் காவியம்


செல்லம்மாள் சேலை கேட்டாள்
பாரதி நூல் கொடுத்தான்

பாட்டுக்குப் பொன்னாடை
பாடைக்குப் பதினாலேபேர்
அன்பின் அஞ்சலி
*
புலரும் அதிகாலைப்
பொழுதுகளை முத்திக்கொண்டு
செய்தித் தாள்களுக்குள்
செல்லவியலா தூரமெலாம்
சென்று கடந்தவர்
அவரே செய்தியானதையும்
இன்று வாசிப்பாரா
*
சற்றும் அயராமல்
சதா உழைத்தவர் அமரர் குதா
பணி ஓய்வு பெற்றாரென்று
பத்தாண்டு முன்பே சொன்னார்கள்
அது பச்சைப் பொய்
இதோ இன்றுதான்
தீரா நித்திரைக்குள்
திரும்பா பயணத்தில்
விரும்பா ஓய்வினைப் பெறுகிறார்
*
ஒப்பந்தப் பணிகளுக்கு
ஒப்புதல் தரும் பணி செய்தும்
நிர்பந்தக் காலங்களிலும்
நீளாக் கரத்தோடு நிமிர்ந்து நின்ற
அரசு அதிகாரி
ஆம்
அறந்தாங்கியில் பிறந்தவர்
அறந்தாங்கியே வாழ்ந்தார்
*
காய்த்துக் குழுங்கிய குதா மரத்தில்
கல்லெறிந்தோர் சிலர்
சொல்லெறிந்தோர் சிலர்
கண்ணெறிந்தோர் பலர்
ஆயினும் எவர்க்கும்
காயங்களை எறிந்ததே இல்லை
கனிகளையே சொரிந்தது
அந்த அதிசயக் குதா மரம்
*
அழகில் இவர்
ஆறடி எம்ஜியார்
கட்டுடல் கொண்ட
எட்டடுக்கு மாளிகை
உதயக் கதிர்களால்
உருவான நிறம்
பணிவுகளில் அருவி நீர்
பந்தங்களில் ஈர நிலம்
உழைப்பினில் புயல் காற்று
பொறுப்பினில் அணையா நெருப்பு
அன்பினில் விரிகின்ற வானம்
இப்படியே
அடுக்கிக்கொண்டே போகலாம்தான்
ஆனால்
ஒற்றைச் சொல்லில் சொல்ல
தேடுகிறேன்
எண்ணக் கிடங்குகளில்
கிடைத்ததும்
சொல்லப் போவதில்லை
சொல்லாமல்
புரிந்துபோகும் சொல்லைச்
சொல்லியா புரியவைக்க முடியும்
*
கம்மங்காட்டின் கந்தகச் சூட்டில்
வறுமை தீய்த்த கரித்துண்டுக் கூட்டில்
விளைந்தது இந்த வைரம்
தானே வெடித்து
தானே வளர்ந்து
தானே நிமிர்ந்து
தானே தளைத்து
தன்னோடு ஒட்டிய
தகரங்களுக்கும்
தங்கமுலாம் பூசிய
பொற்கனிப் பயிர்
*
முதன்முதலில் கண்டபோது
கடைநிலை ஊழியர்போல்
பணிவோடு நின்றார்
மகளைக் கட்டிமுடித்து
அவர் பணியாற்றிய
காடம்பாறைக்குச் சென்றேன்
அசந்தே போனேன்
ஊரே கூடி நின்று
மன்னர் வந்ததுபோல்
மரியாதை தந்தார்கள்
*
காடம்பாறை அணை கட்டி
மின்சாரம் எடுத்தவர்
கடப்பாரை உடற்கட்டில்
பாலாடை மனங் கொண்டவர்
*
அந்த
மனம் போலவே
பெற்றெடுத்த மக்களுக்கு
மன்னர்களின் பெயர் சூட்டினார்
மகளை ராணி என்றே அழைத்தார்
மகன்களிரண்டு
மகளொன்று என்று
பிள்ளைகள் மூன்றை
நிறைவாய்ப் பெற்றெடுத்தார்
இருந்தும்
மூன்றாவதாயும்
பெண்ணே பிறந்துவிட்ட வீட்டிலிருந்து
பிஞ்சு தேவதையை
இரண்டாம் மகளாய்த் தத்தெடுத்தார்
தத்தெடுத்த மலரை
பெத்தெடுத்த பூக்களைவிட
பொத்திப் பொத்தி வளர்த்தார்
வாழ்நாளெல்லாம் எவரும்
பொன்னும் பொருளுமாய்
வாரியே இறைத்தாலும்
இந்தக் கொடைக்கு
ஈடாகுமா
*
பத்து வயதில்
பறிகொடுத்தேன்
பதினைந்து வருடம் கழித்து
இவரிடம்தான் கண்டெடுத்தேன்
தந்தையின் நேசத்தை
தந்தவரைத்
தொலைத்துவிட்டேன்
படுக்கை நாளில்
பக்கத்தில் அமரும்
பாக்கியம் பெறா பாவியானேன்
நம்பினேன்
இரும்புத் தேகமல்லவா
ஈராண்டேனும் இருப்பாரென்று
நம்பிக்கையைத் தீய்த்தழித்த
மரணத்தை என்செய்வேன்
*
கண்விட்டுப் பிரியும்
கண்ணின் மணிகள் கோத்து
மண்விட்டுப் பிரிந்த
மாமனாருக்கு என் அஞ்சலி
*
சாவே சாவே சாவாய் சாவா 

சொல்ல வேண்டியவற்றைச்
சொல்லும்முன்
இழுத்துச் செல்வது
அநாகரிகமில்லையா

காணவிரும்பியதைக்
காணும்முன்
கண்ணடைத்துச் செல்வது
கொடுமையில்லையா

சொல்லிவிட்டுச் செல்ல
நெஞ்சற்றவன் மனிதன் என்றா
இத்தனைக் கேவலமாய்
நடத்துகிறாய்

எந்த ஒரு
பண்புமே இல்லா
மூர்க்கமே முட்டாளே
மரணமே

மாண்ட மறுநொடியே
உன்னைக் கண்டுபிடித்து
மண்டை பிளக்க முடிந்தால்
அதைச் செய்யா உயிர்
ஒன்றும் இரா

மகா கேடுகெட்ட
மனிதப் பிறவிகூட
உன்னைக் காட்டிலும்
மிக உயர் பண்புகளைப்
பெற்றிருப்பான்

சாவே சாவே
சாவாய் சாவே
கையறு நிலை

ஆறுதலே
சொல்ல முடியா இடத்தில்
எப்படித்தான் நிற்கிறேன்
என்னதான் பேசுகிறேன்

என்ன பேசி
எதைத் தந்துவிடுவேன்


அச்சமாய்
அவமானமாய்
ஆத்திரமாய்
வக்கற்ற கொதிப்பில்
விழிகுத்திய நிலையில்

சாவுக்குமுன்
ஏமாந்து
தோற்று
துவண்டு
வெதும்பி நிற்கும்
நிலை ஒன்றுதான்
உச்சத்திலும் உச்சமான
ஒரே
கையறு நிலையோ...

நெடுபுலம் பெயர்ந்தவனிடம்...

இந்நொடி சூடாய் இருந்த
ரத்தத்திலிருந்தும்
சதையிலிருந்தும்
என்னதான் பிரிந்தது

பிரிந்தது
பிரிந்தேதான் போனதா
அல்லது
என்னைக் காணவும்
கண்டங்கள் தாண்டி
என்னருகே வந்து

காற்றென நிற்கிறதா
 

எப்படி அறிவேன்
நான்
யாரிடம் கேட்பேன்
கொடுமிருகம்

எள்ளளவும்
கருணையற்ற
எறும்பின் கழிவளவும்
அன்பற்ற
மரியாதையே
தெரியாத
மன்னிக்கவே
முடியாத
கொடுமிருகம்
அகால மரணம்




சாவே
இல்லாதது
சாவு


இறைவன் இல்லை

இறைவன் இல்லை
அன்பும் கருணையுமே இறைவன்

இப்படி யார் சொல்லி இருப்பார்கள்? தெரியுமா உங்களுக்கு? சொன்னால் நம்பமாட்டீர்கள். இஸ்லாம் என்னும் மார்க்கம்தான் இப்படிச் சொல்கிறது

”லா-இலாஹ இல்லல்லாஹ்” என்பது முதல் கலிமா என்று சொல்லப்படும் இஸ்லாத்தின் மார்க்க வாசகங்களுள் முதலாமானது.

லா என்றால் இல்லை
இலாஹ என்றால் இறைவன்
இல் என்றால் மட்டும்/ஆனால்/தவிர
அல்லாஹ் என்றால்...

அல்லாஹ் என்றால்?

அதற்கான பொருள் குர்-ஆனில் முதல் வரியிலேயே தரப்பட்டுள்ளது

”பிஸ்மில்லாஹ் இர்ரஹ்மான் நிர்ரஹீம்”

பிஸ்மில்லாஹ் என்றால் அல்லாஹ்வின் பெயரால்
ரஹ்மானி என்றால் அளவில்லா அன்புடையோன்
ரஹீமி என்றால் நிகரில்லா கருணையுடையோன்

அதாவது இறைவன் என்றால் ”அளவற்ற கருணை நிகரற்ற அன்பு”



 
06

உன்
உள்ளம் தொட்ட
விரல்கள்
அப்படியே
ஈரமாய் இருக்கின்றன

கோடி சூரியன்கள்  வந்து
சுட்டெரித்தாலும்
அது
காய்ந்துவிடப் போவதே
இல்லை செல்லம்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
05

என்னைப் பார்த்து
அசைகிறது
என்னை நினைத்து
எரிகிறது
அருகில் சென்றால்
சுடுகிறது

அதன் வேரில் நிரம்பும் எண்ணெய்
என்னைப் பற்றிய நினைவுகள்

அதன் திரியில் எரியும் தீபம்
என் மீதான காதல்

அதைச் சூழ்ந்து உணவாகும் காற்று
என் மீதான கனவுகள்

அது வீசும் ஒளியில்
 எனக்கான ஏக்கம்
 வெளிச்சமாய் இருக்கிறது

 அது ஆடும் நடனத்தில்
 எனக்கான கண்ணீர்
 சிதறித் தெறிக்கிறது
என்னைப் பார்த்து
அசைகிறது
என்னை நினைத்து
எரிகிறது
அருகில் சென்றால்
சுடுகிறது

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
04

மிருகங்களால் ஆனது
மனது

உள்ளுக்குள்ளேயே
ஒன்றையொன்று கொன்று திண்ணும்
பசி கொண்டவைகளால் ஆனது
மனது

காதல் காம்பில்
கண்ணீர்ப் பால் பொழிய
மிருகங்கள் செத்து
வண்ணத்து பூச்சிகள் பறக்கின்றன

மனித இனத்தையே
தேன் பூக்களாக்கி
வாழ்க்கையை ருசிக்கின்றன

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
* * * *

எதிர்ப்பார்ப்பு
ஏமாற்றம் தந்தாலும்
உறவு நிலைக்கும்
அது
தாய்ப்பாசம்

எதிர்பார்ப்பு
ஏமாற்றம் தரும்போது
வழியற்று வெதும்பும்
பின் மீண்டும்
எதிர்பார்க்கத் தொடங்கும்
அது பக்தி

தாய்ப்பாசத்தாலும்
பக்தியினாலும்
ஆனதடீ
என் காதல்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
* * * *

நாவில்
உன் பெயரணிந்தேன்
என் சுவைகளெல்லாம்
மாறிப்போச்சு

விழியில்
உன் நினைவணிந்தேன்
என் கனவுகளெல்லாம்
பிரபஞ்சமாய் விரிஞ்சுபோச்சு

உயிரில்
உன் உணர்வணிந்தேன்
என் கவிதைகளெல்லாம்
எனை அள்ளிக்கொண்டு
இணைய வெளியெங்கும்
பரந்துபோச்சு

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
* * * *

என்
கண்களுக்கு
வெளியில் ததும்பும்
என் கண்ணீர்
நீ

என்
மரணத்தின் முன்பே
அசலான நானாய்
மரித்தெழுந்த
என் உயிர்
நீ

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்