இருபத்திநாலு மணி நேரத்தில்
இருநூற்றி நாற்பது வினோதங்கள்

எதையும்
தப்பாமல் செய்யும் நானேதான்
தம்பிக்குத் தபால் எழுதி
தாசில்தாருக்கு அனுப்பிவைத்தேன்

அலுவலகத்தில் சுறுசுறுப்பாய்
ஏதேதோ செய்தேன்
அது எதுவுமே என் நிறுவனத்திற்குத்
தேவையே இல்லை

கணினியின் சாளரங்களில்
காட்டுப் பூனைகள் பல
பதுங்கிக் கிடப்பதுபோல்
என் விரல்களுக்குள் சிக்காமல்
மின்னெலி
துள்ளிக்கொண்டே இருந்தது

நலமா என்று கேட்டு
என் மின்னஞ்சல் பெட்டிவிழுந்த
அத்தனை நட்பு மடல்களையும்
கன்னாபின்னாவென்று வைதுவைத்து
பதில் பொத்தானை அழுத்திவைத்தேன்

மதிய உணவிற்கு 'ஹாட் டாக்' வாங்கி
இரண்டாவது கடியாக
என் கட்டை விரலைக்
கடித்து முடித்தேன்
கூடவே ’ஹாட் டாக்’ என்றால்
சுடுநாய் என்று
தூய தமிழில்
மொழிபெயர்த்து மகிழ்ந்தேன்

ஐந்தாவது தளத்தில் ஏறவேண்டிய
கோ-ட்ரான்சிட் ரயிலுக்காக
மூன்றாவது தளதில்
மூன்று மணி நேரமாய்
நின்றுகொண்டிருந்தேன்

கவிதை நூல் ஒன்றைப் பிரித்து
முதல் வரியை மட்டும்
முந்நூறுதரம் வாசித்தேன்

என் சீறுந்தில் அமர்ந்து
(அதாங்க ’என் காரில் அமர்ந்து’)
சாவியிடாமலேயே உந்து விசையை
(உந்துவிசை புரிந்திருக்குமே)
அழுத்திக்கொண்டிருந்தேன்

என் பெயரை
யாரோ கூவிக் கூவி அழைக்க
செத்துப் போன எவனையோ
அழைக்கிறார்களே என்று
விடுவிடுவென்று வீடுவந்து சேர்ந்தேன்

அன்பே
இதுபோல் என்னால்
இனியொருநாளை
கைகால்களில்
சங்கிலி பூட்டிக்கொள்ளாமல்
கடத்த முடியாது

செல்வழி
நீ என் செவியில்
சொல்லின்றி கிசுகிசுத்ததைச்
சத்தமாய் நீயே சொல்லிவிடு
நம் சத்தியத் தமிழால்


காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
சிறகுகள் இருந்தும்

சிறகுகள் இருந்தும் பறக்காத பறவை
தனக்கே தனக்கான சிறை

கனவுகள் இருந்தும் கனியாத கண்கள்
சந்தோசம் விலக்கிடும் திரை

இயல்புகள் மறுத்து ஏங்கும் உள்ளம்
வளர்ந்தும் வளராத குறை

உணர்வுகள் இருந்தும் வாழாத உயிர்கள்
மயான நெருப்புக்கே இரை
நிகழும் வாழ்க்கையாக

தெய்வம் கல்லாகும்
கல் தெய்வமாகும்
ஒரு கால வெள்ளத்தில்

மறந்தது துளிர்க்கும்
துளிர்த்தது மறக்கும்
ஒரு கால வெள்ளத்தில்

தர்மம் அதர்மமாகும்
அதர்மம் தர்மமாகும்
ஒரு கால வெள்ளத்தில்

மரணச் சங்கடங்கள்
உயிரோடு நிரந்தரம்
ஆனபின்
நியாய தர்மங்கள்
குப்பை மேடுகள்

சட்டதிட்டங்கள்
சாம்பல்
பொட்டலங்கள்

யாரிடம் இருக்கின்றன
நளிந்த இதயம் வருடும்
தோகை விரல்கள்

மாற்று நினைவு பொருத்த
எந்த விஞ்ஞானத்துக்கு
வக்கு இருக்கிறது

மன உயிர் பிரிந்தபின்
உடல் உயிர்
ஒட்டி இருப்பதல்லவா
நரகம்

அன்றாடம்
உறவுகள் பொய்களாக
தேவைகளே நிஜங்களாக
அடடா... அதுவே
நிகழும் வாழ்க்கையாக
மரணத்தைத் தேடிய ஒரு தெரு முனையில்

மரணத்துக்கு
அவனிடம் பசியில்லை
மரணம் மீதோ
அடங்காப் பசி அவனுக்கு

ருசியில்லாப் பண்டம்
அவனை
மரணம் மறுதலிக்கிறது

தெருத் தெருவாய்
அலைந்தாலும்
தரிப்பிடமில்லா வாகனம்

உயர உயரப் பறந்தாலும்
உறையும் கூடில்லாப்
பறவை

அவனை
மென்று மென்று பார்த்து
இடம்பாதி வலம்பாதியாய்த்
துப்பிவிட்டுப்
பறந்துபோயிற்று அவனது
மரணம்

மிச்ச எலும்புகளைப்
பொறுக்கி எடுத்துப்
புதைத்துப் பார்த்தான்

கிழிந்த தசைத்
தொங்கல்களை
நெருப்புக் கூட்டி
எரித்துப் பார்த்தான்

விடைதரா விருந்தாளியாய்
வேதனை மட்டுமே
அவனிடம் தங்கிக் கொண்டது

வேறொரு புண்ணிய உடல்தேடி
எங்கோ அலைந்துகொண்டிருக்குமோ
அவனுக்கே அவனுக்கான
மரணமும் கூட என்று அவன்
அலைந்து திரிந்தான்

திரிந்த தெருக்களின்
வசந்த முனை ஒன்றில்
அவன் எதைச் சந்தித்தான்
என்று எவராவது சொல்லுங்கள்

ஏனேனில்
மரணம் தேடிக் கிடந்தவன்
பலம் கொண்டமட்டும்
தன் சகல சாட்டைகளாலும்
விரட்டியடித்துக் கொண்டிருக்கிறான்
அவனது மரணத்தை இன்று
கவிதைகள் நிரம்பிய
நிலவுக்குள்

வீசும்
அலைகளின் மீது

இமைத் துடுப்புகள்
அசைத்து

விழிப்படகுகள்
நீந்த

தனித்த தீவுகளுக்குள்
ஒதுங்கி

சிலிர்ப்புச்
சிறகசைத்து

இளைப்பாறுகின்றன
நெஞ்சக் குஞ்சுகள்

அன்புடன் புகாரி
20121223

உன் கண்ணீரை
என் கைகளில் ஏந்திக்கொள்கிறேன்

உன் கனவுகள்
நிறைவேறும் வழி சொல்கிறேன்

உன் துயரங்கள்
கரைந்துபோகும் உறவுதருகிறேன்

உன் இதயத்தில்
இருந்துகொண்டு நீயாகிறேன்

உன் தோல்விகளைச்
சுமக்கின்ற தோளாகிறேன்

உன் வெற்றிகளைக்
கொண்டாடும் பூக்களாகிறேன்

உன் குழந்தை மனச்
செயல்களை ரசித்துக்கொள்கிறேன்

உன் திறமை தேடிப்
பாராட்டி உன் வானமாகிறேன்

உன் உணர்வோடு
உணர்வாகும் நிலையாகிறேன்

உன் உயிரோடு
உயிர் கோக்கும் உயிராகிறேன்

ஆகையினால் என் அன்பே...

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
சந்தனப் பேழைகள் சிந்தினவோ

சவுதியின் வரண்ட பாலையிலிருந்து விடுப்பில் ஊர்வந்தேன். வந்தவன் காடம்பாறையின் மலைக்காடுகளில் முதன் முறையாக வாசம் செய்தேன். அந்த ஈர நாட்களில் எழுதியதே இந்தச் சந்தக்கவிதை


சந்தனப் பேழைகள் சிந்தினவோ
           சாயங்காலமாய்ப் பூத்ததுவோ
சிந்தையில் மணக்கும் அவ்வேளைதனில்
           சீட்டியடித்து நான் புறப்பட்டேன்

தந்தங்கள் இல்லா யானைகளாய்
           தரிசனம் தந்தன மாமலைகள்
சிந்துகள் பாடியே அருவிமகள்
           சித்திரம்போல் மண் மடிவீழ்ந்தாள்

வந்தனம் பாடிய வண்டுகளோ
           வந்த என் வரவை ஆதரிக்க
எந்தவோர்ப் பூவினில் ராசவண்டு
           எத்துணை சுகங்கள் அள்ளிடுமோ

அந்த நற்பூவின் மனதினைப்போல்
           ஆனந்தமாய் நான் நன்றியென்றேன்
வந்ததும் கண்களைத் தேனமுதாய்
           வருடியப் பசுமைகள் வாழ்கவென்றேன்

துள்ளித் துள்ளியோர் மான்கன்று
            தூரத்தில் ஓடிய அழகு சொர்க்கம்
அள்ளித் தெளித்தச் சந்தனமாய்
            அங்கோர் அழகுப் பூந்தோட்டம்

சொல்லிச் சிரித்திடக் குரங்குகளோ
            சொடுக்கிடும் பொழுதில் என் பழந்திருடி
தள்ளி நின்றவோர் நெடுமரத்தின்
            தனிந்த கிளையினிற் தாவினவே

சில்லென வீசியக் குளிர்வாடை
            சிலிர்த்திட வைத்தது என்னுயிரை
நில்லெனக் கூவிட வேண்டும் வண்ணம்
            நிலைத்துப் பொழிந்தது பனித்தூரல்

உள்ளமோ மகிழ்வின் உச்சியிலே
            உடலோ ஆடிட வாடையிலே
இல்லை இச்சுகத்துக்கு ஈடுயிணை
            இடிபடும் பட்டிணத் தெருக்களிலே

மன்மத அம்புகள் எய்தவண்ணம்
            மாலையும் இரவாய் மாறிவர
வண்ண நிலவோ மலைமுகட்டில்
            வந்து வனப்பாய் நின்றிருந்தாள்

இன்று ஏன் புதிதாய் அம்புலிக்கு
            இல்லாப் பொலிவு வந்ததென்றே
கண்ணிமை அசைக்க நான்மறந்து
            கண்ணுக்குள் ஏந்திக் களிப்படைந்தேன்

கண்களை மூடிட கிடைத்ததங்கே
            கனவினில் வருகிற தனியில்லம்
எண்ணும் போதே மனம் சிலிர்க்கும்
            இரவின் தனிமையில் என் வீட்டின்

முன்னும் பின்னும் ஏதேதோ
            முரட்டுக் காலடிச் சத்தங்கள்
கண்களைச் சுருக்கி சன்னல்வழி
            கண்டேன் ஓரிரு கரடிகளை

மெல்லப் புலர்ந்ததும் அதிகாலை
            மேனியிற் புதியதோர் மினுமினுப்பு
வெள்ளை வெள்ளையாய்ப் புகைபோலே
            முல்லையில் நெய்த குடில்வனப்பில்

பள்ளியறை என முகிலினங்கள்
            படுத்து உறங்கின மலைமுகட்டில்
அள்ள அள்ள அவ்வழகெல்லாம்
            அடிமனம் வரைக்கும் பாய்ந்தனவே

மெள்ளத் துள்ளிநான் ஆடியோடி
            மிதந்தேன் அருவியின் மடியினிலே
சொல்லி முடியாச் சுகங்கோடி
            சொர்க்க வெளியில் எனைத்தள்ளி

இல்லை இல்லை நான் திரும்பவில்லை
            எனக்கிம் மலையே யாவுமென
சொல்லி விடடா ஊருக்கென
            சொல்லின சுகங்கள் சுகங்களெங்கும்
என்றும் நீ வரமாட்டாய்...

எல்லாமும் ஆனதுபோல்
          இம்மண்ணில் பூத்த பின்னர்
முள்ளில் கால் நோகுதென்றே
          முனகித்தான் பயனேது

சொல்லில் தினம் புண்ணாகிச்
          சுரக்கும் விழி ஏனெதற்கு
உள்ளத்தில் உருக்கொள்ளும்
         ஒப்பாரி தந்ததெது

ஒன்றுபோல வயிறுமனசு
         உடலென்ற பெருந்தொடரோ
என்றென்றும் இயம்புகின்ற
         ஒற்றைச்சொல் பசியன்றோ

வன்மையாக வாட்டுமிந்த
         வளர்பசிக்கு நசிந்துபோக
மண்ணில் நீ மலர்ந்ததென்ன
         எவரிடத்தோ யாசித்தா

கல்தாண்டி கடல்தாண்டி
         காற்றெனவே பறந்தாலும்
எல்லைக்கு அப்பாலும்
        இருளன்றி வேறேது

இல்லையொளி எங்குமென
         எண்ணிமட்டும் ஓயாதே
உள்ளத்தில் தேடிப்பார்
        உள்ளேதான் ஒளியுண்டு

பெண்ணுக்குள் உதயமாகும்
        பிறப்புக்கள் விபத்துக்கள்
மண்ணுக்குள் அமைதிதரும்
        மரணங்கள் பாக்கியங்கள்

இன்னும்கேள் இவையிரண்டின்
        இடைவந்த வாழ்க்கையோ
உண்மையல்ல உண்மையல்ல
        உடைதரித்தப் பொய்வனப்பே

உண்மையெங்கே என்றுநீயும்
        ஓயாமல் தேடித்தினம்
உன்நாட்கள் செலவழிய
        உண்டாகும் மாற்றமோ

என்றைக்கோ தேடிநின்ற  
         எவரெவரின் சுவடுகளில்
இன்றைக்கும் உன்பாதம்
         உருவாக்கும் புதுச்சுவடே

உண்மைதான் புத்துயிரே
          உன்பாதம் மட்டுமல்ல
பெண்ணுக்குள் புதையுண்டு
         பிறந்தபெருங் கூட்டத்தின்

வன்மையான பாதங்கள்
         வான்தொட்டுத் தேடிநின்று
மண்தந்த அழைப்பேற்று
         மரணத்தில் நிறுத்தினதாம்

என்மனதிற் பட்டதைநான்
         என்றென்றும் சொல்லிவைப்பேன்
இன்றும்நான் சொல்லுகின்றேன்
         இசைவாயோ மாட்டாய் நீ

உன்நாட்கள் முடியும்வரை
         உலகலாவித் தேடிநிற்பாய்
உன்னைமட்டும் விட்டொழித்து
         உறங்கிடுமோ பசியின் விசை

என்சொல்லும் கேளாமல்
         எங்கெங்கோ தேடிநிற்பாய்
உண்மைதனைக் கண்டறிந்தால்
         உடன்வந்து கூறிவிடு

உன்னைநான் எதிர்பார்த்து 
         உயிர்பிரியும் வரையிருப்பேன்
என்னறிவு உரைப்பதுவோ
         என்றும் நீ வரமாட்டாய்
அஞ்சோன் அஞ்சு 

அஞ்சாத சிங்கம்போல்
அஞ்சுபத்திப் பாடவந்தேன்
அய்யாவும் அம்மாவும்
அக்கறையாக் கேப்பியளா
கொஞ்சம் அக்கறையாக் கேப்பியளா

நஞ்சோடு நாகந்தான்
அஞ்சுதலை விரிச்சாக்கா
நடுநடுங்கிப் போவியளா
குலைநடுங்கிச் சாவியளா
சும்மா குலைநடுங்கிச் சாவியளா

பஞ்சநதிப் பாஞ்சோடும்
பஞ்சாப்ப பாத்தியளா
பஞ்சாப்பு வரப்புக்கும்
பக்கத்துல நிப்பியளா
அய்யா பக்கத்துல நிப்பியளா

அஞ்சுவிரல் இல்லாம
கையுமொரு கைதானா
அஞ்சுபுலன் இல்லாம
உசுருமொரு உசுர்தானா
அய்யா உசுருமொரு உசுர்தானா

சொகமுன்னா என்னான்னு
அளந்துத்தான் பாத்தியளா
சொர்க்கத்தை அளப்பதுக்கும்
அஞ்சேதான் வேணுமுங்க
அய்யா அஞ்சேதான் வேணுமுங்க

மகராசந் தங்கிவர
மாளிகையா விடுதிங்க
மாளிகையின் சொகத்துக்கு
நச்சத்திரம் அஞ்சுங்க
அய்யா நச்சத்திரம் அஞ்சுங்க

அஞ்சுமணிக் காலையிலும்
அஞ்சுமணி மாலையிலும்
ஆகாயத் திரையெல்லாம்
அழகுன்னா அழகுங்க
அய்யா அழகுன்னா அழகுங்க

அஞ்சருவி பாத்தியளா
அம்புட்டுந் தேனுங்க
அழுக்கோடு நெஞ்சத்தை
அலசித்தான் போகுங்க
சும்மா அலசித்தான் போகுங்க

அஞ்சுக்கே எந்திரிச்சா
ஆயுளுக்கே தெம்புங்க
அஞ்சுமணிக் காத்துக்கு
அம்புட்டும் பூக்குங்க
அய்யா அம்புட்டும் பூக்குங்க

அஞ்சுமணி ஆனாக்கா
அலுவலகம் விட்டாச்சு
அஞ்சுநாளு போனாக்கா
அந்தவாரம் முடிச்சாச்சு
சோரா அந்தவாரம் முடிச்சாச்சு

அஞ்சேதான் பருவமுங்க
அவனியிலே பெண்ணுக்கு
ஆரம்பம் கொழந்தைபின்
சிறுமியாயாகி சிறகடிப்பாள்
சின்னச் சிறுமியாய்ச் சிறகடிப்பாள்

நெஞ்சத்தைப் பஞ்சாக்கும்
கன்னியவள் மனைவியாகி
நெறமாசங் கொண்டாடி
தாயாகி நெறஞ்சிடுவாள்
அருமைத் தாயாகி நெறஞ்சிடுவாள்

அஞ்சு அறைப் பெட்டித்தான்
அடுக்களைக்கு பொக்கிசங்க
அஞ்சில்லாச் சாப்பாட்டில்
அடுப்புக்கும் வெறுப்புங்க
அய்யா அடுப்புக்கும் வெறுப்புங்க

அஞ்சுப்பொன் சிறப்புங்க
அஞ்சுப்பால் அறிவீங்க
அஞ்சுபெரும் காவியங்கள்
அழகுதமிழ் சொல்லுங்க
அய்யா அழகுதமிழ் சொல்லுங்க

அஞ்சுக்கே வளையாட்டி
அம்பதுக்கும் வளையாது
அஞ்சோடு சேராட்டி
பாடந்தான் ஏறாது
பள்ளிப் பாடந்தான் ஏறாது

அய்யெட்டு ஆனாத்தான்
அமைதிக்கே வருவீங்க
அதுவரைக்கும் ஆடாத
ஆளுந்தான் ஏதுங்க
அய்யா ஆளுந்தான் ஏதுங்க

அஞ்சேதான் பூதங்கள்
அந்நாளில் சொன்னாங்க
அஞ்சுக்குள் அடங்கித்தான்
அத்தனையும் சுத்துதுங்க
அய்யா அத்தனையும் சுத்துதுங்க

அஞ்சாம மேடையில
ஆனவரைச் சொல்லிப்புட்டேன்
அய்யாவே அம்மாவே
அசரடிங்க கையத்தட்டி
சும்மா அசரடிங்க கையத்தட்டி

(மார்ச் 2002)
சந்தவசந்த கவிதைக் குழுமத்தில் ஆளுக்கு ஓர் எண் கொடுத்து கவிதை எழுதச் சொன்னார்கள். எனக்கு வந்தது ஐந்து. நானும் எழுதினேன். அது ஒரு காலம். இதையும் கவிதைக் கணக்கில் சேர்த்துக்கொள்ளுங்கள், தப்பில்லை!

துப்பாக்கி எடுத்துவிட்டான்


துப்பாக்கி எடுத்துவிட்டான் - இந்தியன்
துப்பாக்கி எடுத்துவிட்டான்

சுதந்திரம் இழந்து
புழுவாய்ப் பூச்சியாய்
அடிமையாய்க் கிடந்த நாட்களில்கூட
அகிம்சையைத்தான் கையில் எடுத்தான் - இந்தியன்
அகிம்சையைத்தான் கையில் எடுத்தான்

இன்றோ
துப்பாக்கி எடுத்துவிட்டான் - இந்தியன்
துப்பாக்கி எடுத்துவிட்டான்

அண்ணல் காந்தியின் அகிம்சா வேதங்களை
நொறுக்கிப் புதைத்து புதைத்த இடத்தில்
நெடுமரங்களே வளர்த்து விட்டான்
இந்தியன்
ஆனால்...
அமிதாப் அங்கேயும்
அஜித்குமார் இங்கேயும்
அரிதாரம் பூசிக்கொண்டு
பொய்த் திரையில் எடுத்ததை
நிஜமாகவே எடுத்துக்கொண்டான்

இந்தியன்
ஏன்தான் எடுத்தான்
துப்பாக்கி?

அன்னா அசாரேயின் உண்ணாவிரதம்
ஒன்றுக்கும் ஆகாது
துப்பாக்கி மட்டும்தான் துளைத்தெடுக்கும்
தேச ஊழலைக் கொன்றழிக்கும் என்று
கையில் எடுத்தானா துப்பாக்கி?

இல்லை இல்லை

அன்பளிப்பு என்ற அடைமொழிபோய்
இலவசம் என்ற புதுமொழியோடு
அரசியல் எருமைகள் இந்திய ஓடைகளைக்
கலக்கி எடுக்கின்றனவே என்று
கையில் எடுத்தானா துப்பாக்கி?

இல்லை இல்லை

சாதியும் சாகாது மதமும் இணங்காது
கலவரமும் தீராது
கொட்டும் ரத்தமும் நிற்காது என்று
கோபப்பட்டு இந்தியன்
கையில் எடுத்தானா துப்பாக்கி?

இல்லை இல்லை

நீர் என்றாலும் தகராறு
நிலமென்றாலும் தகராறு
மொழி என்றாலும் தகராறு
முதலீடு என்றாலும் தகராறு
என்று சினந்த இந்தியன்
கையில் எடுத்தானா துப்பாக்கி?

இல்லை இல்லை

வறுமைக்கு முற்றுப்புள்ளி இல்லை
விவசாயத்திற்கு வாழ்வில்லை
மக்கள் பெருக்கத்துக்குக் கட்டுப்பாடு இல்லை
சுகாதாரத்துக்கு வழியில்லை
என்று கொந்தளித்து
கையில் எடுத்தானா துப்பாக்கி?

இல்லை இல்லை

பிறகு
ஏன்தான் எடுத்தான்
துப்பாக்கி?

வீட்டின் முன் சிறுநீர் கழிக்காதே என்று
பதினேழு வயது பள்ளி மங்கை
இந்தியத் தலைநகர வீதியொன்றில்
கண்டித்தாள்

அவ்வளவுதான்....

எதற்குமே ரோசம் வராத அசல் இந்தியனுக்கு
அதிவேகமாய்ப் பொத்துக்கொண்டு
வந்துவிட்டது ரோசம்

எடுத்தான் துப்பாக்கியை
அடுக்கடுக்காய் எறிந்தான்
அநியாயக் குண்டுகளை

கொன்றழித்தான்
நியாயத்தின் குரலை

ஒழுக்கம் கேட்டதால் உயிரிழந்தாள்
வாழ்வின் நுழைவாயிலில்
பருவத்தோடும் கனவுகளோடும் நின்ற
அந்த அபலை

பாவம்....
சுதந்திர இந்தியாவில்
வாழ்நாள் கழிப்பதற்கு
சளைக்காத சகிப்புத் தன்மை
வேண்டும் என்று
அவளுக்குத் தெரியாமல் போயிற்று

நிர்வாணப்படுத்தி
நடுவீதி இடுவார்கள் குண்டர்கள்
புன்னகைக்க வேண்டும்

மலம் ஊட்டிவிட்டு மகிழ்வார்கள்
மேல் சாதி மைந்தர்கள்
வாய் திறக்க வேண்டும்

கற்பழித்துக் குதூகலிப்பார்கள்
கற்றைப்பண வாசிகள்
வசதியாக்கித் தரவேண்டும்

இதெல்லாவற்றுக்கும்
மேலாக....

ஓட்டுக் கேட்டு
வணக்கத்தோடு வருவார்கள்
வெள்ளைச் சட்டைக்காரர்கள்
பேசாமல் போட்டுவிட்டுப்
பொத்திக்கொண்டு போக வேண்டும்

இந்தியா
வல்லரசாகிவிட்டது உண்மைதான்

சிறுநீர் கழிக்கும் சுதந்திரமும்
பறிபோவதைப் பொறுக்கமாட்டாமல்
புறப்பட்டுவிட்டான்
பண்பாட்டு பாரதக் குடிமகன்
இன்று துப்பாக்கியோடு

*
செய்தி: வீட்டின்முன் சிறுநீர் கழித்தவரை தடுத்த மாணவி சுட்டுக்கொலை
http://articles.timesofindia.indiatimes.com/2012-11-23/delhi/35318847_1_girl-shot-police-officer-mother-shot



தமிழ் பைத்தியக்கார மொழியா?

அன்புடன் புகாரியின் இருநூறு முந்நூறு நாறூறு பகுதியை பேராசிரியர் அப்துல் காதர் அவர்கள் மிகுந்த சுவை உடையவை என்று கூறுகிறார். அதே நேரம் தமிழின் பைத்தியக்காரத்தனம் என்கிற வார்த்தையைக் கடுமையாகச் சாடுகிறார்.

இது போன்ற விமரிசனங்கள் சில என் முன் பதிவுக்கு வந்தன.

அமுத தமிழை விளையாட்டாகக் குறைத்துக்கூறினாலும் அதை ஒரு தமிழனும் ஏற்கமாட்டான். தமிழ்ப்பேராசிரியர் எப்படி ஏற்பார்?

ஆங்கிலத்தில் இடத்திற்கு ஏற்ப உச்சரிப்பு மாறுவதும் அந்த மொழிக்கே உரிய தனிப் பண்புதான் அழகுதான். அதில் பிழை ஏதும் இல்லை.

அது போலவே தமிழில் சொல்லாடல் ஓர் அழகுதான் பிழையில்லை.

ஒரு மொழியை ஒரு காரணத்திற்காகப் பைத்தியக்கார மொழி என்று சொல்ல வந்தால் எல்லா மொழிகளையுமே பைத்தியக்காரமொழி என்று சொல்லிவிடலாம்.

இதழ்கள் ஊறுமடி - இதழ் கள் ஊறுமடி

எழுத்துக்களுக்கு இடையில் ஒரு இடைவெளி இட்டால் பொருளே மாறிப்போகும் மொழியை அழகென்பதா பைத்தியக்காரன் மொழி என்பதா?

இதுபோன்ற இனிமை நிறைந்த சொல்லாடல்கள் தமிழின்மீது நம்மைப் பைத்தியமாய் அலைய வைக்கும்.

இப்படி பைத்தியாகி நேசிக்க்கும் பைத்தியக்காரர்களின் மொழிதான் தமிழ் :-)

இந்த இருநூறு முந்நூறு நானூறு விளையாட்டால் தமிழை நீதிமன்றத்தில் பயன்படுத்துவதில் பெரும் சிக்கல் வரும் என்று கண்ணதாசன் சொன்னார். நீதிபதிக்குப் பைத்தியமே பிடித்துவிடும், தீர்ப்பு வழங்க எப்படி முடியும் என்றார்.

இப்படியான மேலும் சிலவற்றையும் காண்போம்:

”வாரும் இரும்படியும்” என்றான் கொல்லன். சினந்த கவிஞருக்கு கொல்லன் விளக்கம் தர வேண்டியதாயிற்று “வாரும், இரும், படியும்” உங்கள் கவிதைகளை என்று

”பணத்தட்டு யாருக்கு” என்றான் புலவன், இரண்டும் உனக்குத்தான் என்றான் மன்னன். பணத்தட்டும் உனக்கு பணத்துக்கான தட்டுப்பாடும் உனக்கு.

கடைமடை என்ற ஊரிலிருந்து கடைசியாக மேடையேற வந்த கவிஞரை ”கடைமடையரே” என்றழைத்தார் கவியரங்கத் தலைவர், ”மடத்தலைவரே” என்று வணக்கம் சொன்னார் கடைமடைக் கவிஞர்

இப்படியாய்த் தமிழில் ஏராளம் உண்டு. சுவைத்துச் சுவைத்து இதயம் மகிழ்வானில் இறக்கைகட்டிக்கொண்டு பறக்கும்.

வானூறி மழை பொழியும்
வயலூறி கதிர் "வளையும்"
தேனூறி பூவசையும்
தினம்பாடி வண்டாடும்
காலூறி அழகுநதி
கவிபாடிக் கரையேறும்
பாலூறி நிலங்கூட
பசியாறும் உரந்தையில்

நான் பிறந்தேன் என்பது என் அறிமுகக் கவிதை.... இதில் கதிர் விளையும் என்றல்லவா இருக்க வேண்டும் என்றார் ஒரு நண்பர். அவருக்கு நான் எழுதிய மறுமொழி இதோ:

கதிர் விளையும்தான். அது மற்றவர்கள் ஊரில்!

ஆனால் கதிர் விளைந்து அழகு நெல்மணிகளின் பாரம் தாளாமல் அப்படியே வளையும்!
அது எங்கள் ஊரில், ஒரத்தநாட்டில் :-)

இது பிழையாய் எழுதியதல்ல, அமுதத் தமிழில் அழகாய் எழுதியது.


ஹாஜா முகைதீன் சார் அவர்கள் சுட்டிக்காட்டிய ஆங்கிலத்தின் குழப்பம் தரும் சொல்லை சிலேடை நயமுள்ள தமிழின் சொற்சுவையுடன் முடிச்சுப் போட்டு தமிழின் பைத்தியக்காரத்தனம் என்று எழுதுவதும் அவ்விதம் சிந்திப்பதும் ஒரு தமிழ்ப் பேராசிரியரால் ஏற்றுக் கொள்ள முடியாதது என்று பதியச்சொன்னார்.

ஒரு தமிழ்ப்பேராசிரியரின் மனம் நோகச் செய்வது என் விருப்பம் அல்ல. நான் தமிழை நேசிப்பவன். அதன் இனிமைக்குள் சிலிர்ப்பவன். எந்த மொழியிலும் பைத்தியக்காரத்தனம் என்பது நம் பார்வையில்தான் இருக்கிறது என்பதே நான் முன்வைக்கும் கருத்து.

இதோ மேலும் சில நயங்கள்:

”என்னங்க வடை ஊசி இருக்கா” என்றாள் பழைய உளுந்து வடையைக் கணவனிடம் கொடுத்த மனைவி.

ஊசி மட்டும் இல்லை, நூலும் இருக்கு, தையலுக்கு உதவும் இந்தா என்றார். (தையல் = பெண்)

”பால் கசக்கிறதா?” எனக் கேட்டாள் பாலைத் துணியில் தோய்த்து படுக்கையில் சாகக் கிடக்கும் கவிஞனுக்கு ஊட்டிவிடும்போது அவன் முகம் சுளித்ததனால்.

கவிஞனுக்கு மரணப்படுக்கையிலும் சிரிப்புதான் வந்தது தமிழின் சுவைதான் எழுந்தது.

”பாலும் கசக்கவில்லை, துணியும் கசக்கவில்லை” (துணி கசக்கவில்லை = அழுக்குத் துணியைத் துவைக்கவில்லை)

தமிழ்ப் பேராசிரியர் என்னைத் தவறாக எண்ணக்கூடாது என்பதற்காக நான் எழுதிய ஒரு கவிதையை இங்கே இடுகிறேன்:


இதயத்தில் இனிக்கின்ற...
இதயத்தில் இனிக்கின்ற
மொழி - தமிழ்
மொழியினுள் துடிக்கின்ற
இதயம்

கவிதைக்குள் விளைகின்ற
வைரம் - தமிழ்
வைரத்துள் ஒளிர்கின்ற
கவிதை

விரலுக்குள் ஊறிவரும்
எழுத்து - தமிழ்
எழுத்தினில் நிமிர்கின்ற
விரல்

ஓசைக்குள் கூடுகட்டும்
சுகம் - தமிழ்
சுகங்களில் வெடிக்கின்ற
ஓசை

காற்றுக்குள் சிறகோட்டும்
வாசம் - தமிழ்
வாசத்தால் எழுந்தாடும்
காற்று

பார்வைக்குள் விரிகின்ற
வானம் - தமிழ்
வானத்துள் மிளிர்கின்ற
பார்வை

மண்ணுக்குள் கருவான
வளம் - தமிழ்
வளத்தினில் கொழிக்கின்ற
மண்

இயற்கைக்குள் முத்தாடும்
மழை - தமிழ்
மழையினில் தழைக்கின்ற
இயற்கை

மனசுக்குள் எழுகின்ற
உணர்வு - தமிழ்
உணர்வினுள் கசிகின்ற
மனசு

மூச்சுக்குள் உள்ளாடும்
தாகம் - தமிழ்
தாகத்தில் தீயாகும்
மூச்சு

மோகத்துள் கமழ்கின்ற
இளமை - தமிழ்
இளமையில் திரள்கின்ற
மோகம்

முயற்சிக்குள் முளைவிடும்
சிறகு - தமிழ்
சிறகினில் தெறிக்கின்ற
முயற்சி

மனிதத்துள் செழித்தோங்கும்
கருணை - தமிழ்
கருணையால் வேர்பாயும்
மனிதம்

உயிருக்குள் குடிகொண்ட
மானம் - தமிழ்
மானத்தில் துடிக்கின்ற
உயிர்

தீபத்துள் வாழ்கின்ற
புனிதம் - தமிழ்
புனிதத்தில் நிமிர்கின்ற
தீபம்


இந்தக் கவிதைக்கு ஒரு தனி நடைச்சிறப்பு இருக்கிறது. முதல் பத்தியைக் கவனியுங்கள். 'இதயம்' என்று துவங்கி 'மொழி' என்று முடிகிறது. பின் 'தமிழ்' என்ற உயிர்ச் சொல்லைத் தனிச் சொல்லாக நிறுத்திவிட்டு, பின் 'மொழி' என்னும் சொல்லிலேயே துவங்கி 'இதயம்' என்ற சொல்லுக்கு வந்து ஒரு முழு சுற்றினையும் ஆனந்தமாய் நிறைவு செய்கிறது.

இதே போலவே இக்கவிதை முழுவதும் தமிழைப் போற்றிப் பாடும் இக்கவிதையைத் தமிழ்த்தாய் புன்னகையோடு தன் கூந்தலில் சூடிக்கொள்வாள் என்று நம்புகின்றேன்.

அதோடு இக்கவிதை இதுவரை கையாளப்படாத யாப்பிலக்கண வடிவம். இதுவரை அந்தாதி என்ற அமைப்பு மட்டுமே யாப்பில் உண்டு. அது முடிந்த சொல்லில் தொடங்கும் அடுத்த வரியைக் கொண்டதாய் அமையும். இக்கவிதையோ, முடிந்ததில் தொடங்கியதோடில்லாமல், தொடங்கிய சொல்லிலேயே முடிவதுமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிரமமான வடிவமைப்புக்குள் கருத்தாழமிக்க கவிதையை அமரச்செய்ய எனக்கு சொற்கள் தந்த தமிழன்னைக்கு நன்றி.


பிற்சேர்க்கை:

அட இதை மறந்துவிட்டேனே?

http://anbudanbuhari.blogspot.ca/2009/08/blog-post_23.html

அத்திக்காய் காய் காய் பாடலுக்கான விளக்கம். இதில் இல்லாத சுவையா?

ஆங்கிலமும் தமிழும் பைத்தியக்காரர்களின் மொழி

ஆங்கிலம் ஒரு பைத்தியக்காரர்களின் மொழி (English is the language of lunatics) என்று பெர்னாட்ஷா சொன்னார்.

அதை நிரூபிக்கும் முகமாக ஒரு காகிதத்தை எடுத்து GHOTI என்கிற ஆங்கில வார்த்தையை எழுதி இதைப்படி என்றார். எல்லோரும் கோட்டி என்று உச்சரித்தார்கள். ஆனால் பெர்னாட்ஷா சொன்னாராம் இதன் உச்சரிப்பு FISH என்று.

ஆங்கிலத்தில் ROUGH என்கிற வார்த்தையில் கடைசி இரண்டு எழுத்துக்கள் ஆகிய GH க்கு உங்கள் ஆங்கிலம் தரும் உச்சரிப்பு F, அதேபோல் WOMEN என்கிற வார்த்தையில் O என்கிற எழுத்து I என்கிற உச்சரிப்பைத் தருகிறது அத்துடன் STATION என்கிற வார்த்தையில் TI என்கிற எழுத்துக்கள் தரும் உச்சரிப்பு SH என்பதாகும். அப்படிப் பார்த்தால் GHOTI என்பதை FISH என்று படிக்கலாமா கூடாதா என்றும், இப்படி குழப்பம் ஏற்படுத்தும் மொழி பைத்தியக்கார மொழியா? இல்லையா? என்றும் கேட்டாராம்.

ஆங்கிலம் ஒரு பைத்தியக்காரர்களின் மொழி என்று பெர்னாட்சா சொல்லலாம். ஆனால் அவருக்கே தெரியும் எந்த மொழியிலும் ஒரு பைத்தியக்காரத்தனம் உண்டு என்று.

இதோ தமிழின் பைத்தியக்காரத்தனம். உண்மையில் இவை பைத்தியக்காரத்தனமா? அல்லது மிகுந்த சுவையுடையவையா என்பதை நேயர்கள்தான் முடிவு செய்யவேண்டும்.

ஒரு புலவர் மன்னைப் புகழ்ந்து பாடினார். மன்னர் அவருக்கு நூறு ரூபாய் பரிசளிப்பதாகக் கூறி, கொண்டு வந்தார்.

புலவர்: மன்னா, இருநூறு தருகிறேன் என்றீர்களே?. மன்னர் 200 ரூபாய் கொண்டு வந்தார்.

புலவர்: மன்னா, முன்னூறு தருகிறேன் என்றீர்களே?. மன்னர் 300 ரூபாய் கொண்டு வந்தார்.

புலவர்: மன்னா, நானூறு தருகிறேன் என்றீர்களே?. மன்னர் 400 ரூபாய் கொண்டு வந்தார்.

புலவரை ஏன் இப்படி மாற்றினீர்கள் என்று கேட்டார்.

புலவர் சொன்னார்: நீங்கள் இரு, நூறு ரூபாய் கொண்டு வருகிறேன் என்றீர்கள். அமரவே இடம் இல்லை. அதைச் சொன்னேன். உடனே, 200 ரூபாய் கொண்டு வந்தீர்கள். முன் 100தானே தருவேன் என்றீர்கள். அதைச் சொன்னேன். 300 ரூபாய் கொண்டு வந்தீர்கள். 'நான் 100 ரூபாய் தருவேன்' என்றீர்களே என்றேன். உடனே 400 ரூபாய் எடுத்து வந்தீர்கள். இதுதான் நடந்தது.

மன்னர் மகிழ்ந்து, மொத்தத் தொகையான 1000 ரூபாய் கொடுத்தார்

இதையே வேறு விதமாகவும் அழகான அருந்தமிழில் தமிழர்கள் கட்டினார்கள்

புலவர்: ஐநூறு தரமுடியுமா ?
மன்னன் : தருகிறேன்.

புலவர்: அறுநூறு தரமுடியுமா?
மன்னன்: தருகிறேன்.

புலவர்: எழுநூறு தந்தால் நல்லது!
மன்னன்: தருகிறேன்.

புலவர்: எண்ணூறு மகிழ்ச்சியாக இருக்கும்.
மன்னன்: தருகிறேன்.

ஆனால், மன்னன் கொடுத்தது நூறு ரூபாய்தான்.

புலவர்: ஐநூறு ரூபாய் தருகிறேன் என்றீறே?
மன்னன்: ஐ (! ஆச்சர்யம்), நூறு தருகிறேன் என்றேன்.

புலவர்: அறுநூறு தருகிறேன் என்றீறே?
மன்னன்: அறு! (என்னை விட்டு விடு) நூறு தருகிறேன் என்றேன்.

புலவர்: எழுநூறு ,தருகிறேன் என்றீறே?
மன்னன்: எழு!(இடத்தை விட்டு) நூறு தருகிறேன் என்றேன்.

புலவர் : எண்ணூறு தருகிறேன் என்றிறே?
மன்னன்: எண்(ரூபாயை எண்ணுங்கள்) நூறு தருகிறேன் என்றேன்

புலவரும், மன்னனே உங்கள் தமிழ்முன் போட்டி போட என்னால் முடியாது நூறே போதும் என்றார்.

மன்னனும், புலவரே, யாம் தமிழுடன் விளையாடினோம். மகிழ்ந்தோம் என்று கூறி ஆயிரம் ரூபாய் கொடுத்து அனுப்பினான் .

நெல்லை சந்திப்பில் என் பாட்டு

பாடல் பாடியவர்கள்: விஜய் ஜேசுதாஸ் ,பாலஅபிராமி
இசை :யுகேந்திரன் வாசுதேவன்.
பாடல் :அன்புடன் புகாரி
இயக்கம் :நவீன்.KBB



உண்மை இங்கே ஊனமோ
கொடும் பேய்கள் ஓதும் வேதமோ
கூண்டில் கண்ணீர் கோலமோ
முழு நிலவின் கருவும் ஏலமோ

விதி கண்ணில் பார்வை இல்லை
அதை வெல்லும் வழி ஏதோ

இவன் கூடு எங்கே குயில்கள் எங்கே
வாழ்ந்த வாழ்வெங்கே 

போதும் இது போதும்
இந்த துன்பச் சுமை போதும்

*

விழிகளில் உதிருதே
வலியும் துளியாக
உயிருமே சிதறுதே
மழையின் குமிழாக

ஓர் காவல் நிலைய கம்பியில்
அவன் சிலுவை என்றானால்
இந்த தேசம் என்னும் விதியிலே
இவன் வாழ்வு என்னாகும்

பலசாலியல்ல

கயிறிழுத்துப்
பார்ப்பதா

மீட்டெடுக்கமுடியாத
ஈர உயிர் நாட்களை
இரத்தப் பலியிட்டு

கரித் துண்டுகளாய்க்
கருகி விழும்
மரண நாட்களில்
எரிந்து

கயிறிழுத்துப்
பார்ப்பதா

0

பலசாலியல்ல....
வாழக் கிடைத்ததை
வாழாதிருப்பவர்

பலசாலியல்ல....
வாழ்வை விட்டுவிட்டு
வறட்டுத்தனம் பற்றியவர்

பலசாலியல்ல....
உறவை வெளியேற்றி
வெறுமையில் அமிழ்ந்தவர்

பலசாலியல்ல...
வளையத் தெரியாது
வம்படியாய் நிற்பவர்

பலசாலியல்ல....
வாழ்வின் கழிவுகளைக்
களையத் தெரியாதவர்

பலசாலியல்ல....
விட்டுக்கொடுப்பதோ
என்றோர் ஜம்பமடிப்பவர்

பலசாலியல்ல....
உயிராய் வந்ததை
உதறும் கர்வமுடையவர்

பலசாலியல்ல....
அன்பைத் தெரியாது
பிழைகளைத் துருவுபவர்

பலசாலியல்ல....
வாழத் தெரியாது
வீழ்வதில் பெருமையுடையவர்

பலசாலியல்ல....
சந்தேகங்களுக்கு
சந்தோசங்களை பலியிடுபவர்

பலசாலியல்ல....
முட்டாள்தனங்களையே
முறையென்று பற்றியவர்

பலசாலியல்ல
தொலைந்துபோவதே ஏதெனத் தெரியாது
சினம் கட்டிக் கூத்தாடுபவர்

பலசாலியல்ல
பழநெறிகள் பற்றிக்கொண்டு
துளிர் மனம் புதைப்பவர்

பலசாலியல்ல
அன்புதரும் மெல்மனப் பிறப்பறியாது
வஞ்சந்தரும் மரணங்கள் நேசிப்பவர்

0

கயிறிழுத்துப்
பார்ப்பதா

மீட்டெடுக்கமுடியாத
ஈர உயிர் நாட்களை
இரத்தப் பலியிட்டு

கரித் துண்டுகளாய்க்
கருகி விழும்
மரண நாட்களில்
எரிந்து

கயிறிழுத்துப்
பார்ப்பதா


இருட்டில் இருக்கிறது இன்பம்

பிரபஞ்சத்தில் இருக்கிறது
இருட்டு

இருட்டில் இருக்கிறது
சூரியக் குடும்பம்

சூரியக் குடும்பத்தில் இருக்கிறது
பூமி

பூமியில் இருக்கிறது
கடல்

கடலில் இருக்கிறது
சிப்பி

சிப்பிக்குள் இருக்கிறது
முத்து

முத்தில் இருக்கிறது
அழகு

அழகில் இருக்கிறது
ஒளி

ஒளியில் இருக்கிறது
இன்பம்

இன்பத்தில் இருக்கிறது
பிரபஞ்சம்

பிரபஞ்சத்தில் இருக்கிறது
இருட்டு

இருட்டில் இருக்கிறது
இன்பம்

இருட்டு பேசுகிறது - கேள்விகள் பதில்கள் - 2


அப்துல் ரகுமான்: நீங்கள் சொல்வதுபோல் சூரியனின் வெளிச்சம் எட்டும் தூரம் வரை உள்ள பகுதியைத்தான் வானம் என்கிறோம் இது பற்றி எனக்கு போதிய தெளிவு இல்லை என்பதால் நீங்கள் சொல்வதையே எடுத்துக்கொண்டாலும், நீங்கள் சொன்ன 70 % dark energy யை வெளிச்சம் இல்லாமல் பூமிப் பந்தின் மனிதன் உள்ளிட்ட உயிரினங்கள் எப்படி அடையாளம் கொள்ளும்? 70 % இருப்பதால் dark energy யை நீங்கள் தாய் என்கிறீர்கள் அப்படி என்றால் இந்த பூமிப் பந்தின் முக்கால் பகுதி கடல் நீரால் சூழப்பட்டுள்ளது. அதனால் கடலும் தாய்தான் என்பீர்களா? 70 % dark energy உண்மை என்றாலும் அதை தாயாக உருவகப்படுத்துவதை ஏற்க முடியாது

அன்புடன் புகாரி: முதலில் ஒன்று. உங்கள் எண்னங்கள் எல்லாம் நம் பூமிப் பந்தின் மீதே இருக்கின்றன. அதில் தவறில்லை ஆனால் இந்த பூமி என்பது பிரபஞ்சத்தில் ஒரு தூசுத் துகள் அளவுகூட இல்லை என்பதை நீங்கள் அறிவீர்களா?

Now consider that there are at least 10 trillion planetary systems in the known universe. Notice the “at least”. That is 10,000,000,000,000. Earth would be “1″ of those.
http://www.joshuakennon.com/how-big-is-earth-compared-to-the-universe/

இதுபோல பல ஆயிரம் தகவல்கள் இணையம் முழுவதும் கிடைக்கும். வானவியல் பற்றி ஒரு நல்ல புத்தகம் வாசித்தால், ஆச்சரியங்களால் அசந்துபோவோம். அதையெல்லாம் விட்டுவிட்டு பூமி பூமி என்று மட்டுமே எண்ணுவது நம் அறிவின் எல்லையைத்தான் காட்டுகிறது.

70% of the Universe is dark energy.
Dark matter makes up about 25%.
The rest adds up to less than 5% of the Universe.

நான் முன்பு கொடுத்த தகவலை முழுமையாக வாசியுங்கள். வெறும் 70 விழுக்காடு அல்ல. குறைந்தது 95 விழுக்காடு. அது 99 ஆகவும் இருக்கலாம். நம்மிடம் சரியான அளவுகள் இதுவரை இல்லை. அறியும் திசையில் பயணப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறோம்.

பூமி முக்கால் பங்கு நீரால் சூழப்பட்டிருக்கிறது அதனால் நீரை தாய் என்று கூறுவீர்களா என்று கேட்டிருக்கிறீர்கள். நல்ல கேள்வி.

உண்மையில் நீரும் தாய்போலத்தான். நீரில்தான் உயிரினங்கள் தொடங்கின. நீரில்லாமல் மனிதன் இல்லை. உங்கள் உடலிலும் பெரும் பகுதி நீர் மட்டும்தான். நீர் இல்லாவிட்டால் நீங்கள் மரணமடைந்துவிடுவீர்கள்.

பிரபஞ்சத்தில் எந்த கோளில் நீர் இருக்கிறதோ அந்தக் கோளில் மட்டும் தான் உயிரினங்கள் வாழமுடியும். பூமிக் கோளில் நீர் இருப்பதால்தான் உயிரினங்கள் வாழ்கின்றன. நிலாவில் நீர் இல்லை, எனவே அங்கே உயிர்கள் இல்லை. செய்வாய்க்கோளில் நீர் இருக்க வாய்ப்பு உள்ளது என்று நினைக்கிறார்கள். அதனால் அங்கே உயிரினங்கள் வாழ வழியிருக்கக்கூடும் என்றும் நினைக்கிறார்கள். கீழுள்ள சுட்டியைப் பாருங்கள்.

http://www.marsdaily.com/reports/Can_People_Live_On_Mars_999.html

இருட்டைத் தாயாக உங்களால் ஏற்க முடியாவிட்டால் ஏற்காதீர்கள். நான் உங்களைக் கட்டாயப்படுத்தவில்லையே. இறைவன் தந்த என் சிந்தனையால் நான் அறிவதையும் உணர்வதையும் அப்படியே பதிவு செய்கிறேன். அவ்வளவுதான்.

இருட்டு பேசுகிறது - கேள்விகள் பதில்கள்

அதிரை அஹ்மது: الله نور السماوات والارض (அல்லாஹு நூருஸ் சமாவாத்தி வல் அர்ழி) - "வானங்கள், பூமியின் ஒளியானவன் அல்லாஹ்" என்ற மறை வாக்கைக் கொண்டு, ஒளிக்கு நிலைத்த தன்மையையும்,ظلمات எனும் இருள்களை 'அறியாமை, இறைமறுப்பு' முதலான negative aspectகளுக்கு இறைவன் உவமைகளாக்குவதையும் ஏற்றுக்கொண்டு, வெளிச்சத்துக்கு முன்னுரிமை
கொடுப்போம்! அதனையே நாடி, ஆண்டவனிடம் வேண்டுவோம்!

அன்புடன் புகாரி” மூத்த சகோதரர், கவிஞர், எழுத்தாளர், ஆய்வாளர் அஹ்மது அவர்களுக்கு. இருள் ஒளி பற்றிய உலக வழக்கைச் சரியாகத்தான் சொல்லி இருக்கிறீர்கள். எனக்கு அதில் மாற்றுக்கருத்தே இல்லை.

இருள் என்பதை அறியாமை, இறைமறுப்பு, கயமை, கள்ளம், சைத்தானியம் என்றும் வெளிச்சம் என்பதை இவற்றை விரட்டுவதற்காகத் தொடுக்கப்படும் சக்தி என்றும்தான் நாம் காலங்காலமாக ***உருவகப்படுத்திக்கொண்டு*** வருகிறோம். அதன் அடிப்படையில் அமைந்தவைதான் அத்தனையும் என்பதையும் நான் அறிவேன்.

நான் கொண்டு நிறுத்தும் இருட்டு என்பது எல்லையற்று விரிந்த ஆதியந்தமான நிலை. அது அறியாமை, இறைமறுப்பு, கயமை, கள்ளம் போன்றவை அல்ல. தாயாய் நிறைந்திருக்கும் இறைமை என்று கூறலாம்.

அந்த இருட்டு தன்னுள் ஒளியையும் கொண்டதாக இருக்கிறது. காற்று என்ற வாயுவையும் கொண்டதாக இருக்கிறது. நீரையும் கொண்டதாக இருக்கிறது. நிலத்தையும் கொண்டதாக இருக்கிறது. முற்று முழுதாகப் பூரணமாய் நிறைந்திருக்கிறது.

அப்படி முழுமையானதாக இருக்கின்ற ஒன்று உவமைகளால் சொல்லப்பட்ட இருள்களுக்கு முற்றிலும் மாறுபட்டது.

ஒளியைத் தருவது நெருப்பு என்பதை நாம் அனைவரும் அறிவோம். இருட்டைத் தருவது எது? இருட்டுதான் இருப்பு என்பதால் அங்கே யோசிக்க வழியில்லை. அந்த நிரந்தர இருப்புக்குள் இருப்பவைதான் மற்ற அனைத்தும்.

சூரியன் என்பது எரியும் வாயு, நெருப்பு. அது அணைந்துபோகக் கூடியது. நட்சத்திரங்கள் யாவும் எரியும் நெருப்புக் கோளங்கள்தாம். யாவும் அணையக்கூடியவையே. பால்வீதி தொட்டு பல விண்மீன் வீதிகள் யாவும் எரியும் நெருப்பு மாத்திரமே. அவை யாவும் இருட்டு என்ற நிரந்தர இருப்புக்குள் இருப்பவைதானே?

எரியும் ஒரு மெழுகுவர்த்தி அணைந்துபோகக்கூடிய சிறிய நெருப்பு என்றால், ஒரு நட்சத்திரமும் அணைந்துபோகக்கூடிய ஒரு பெரிய நெருப்பு அவ்வளவுதான்.

ஆகவே நான் கூறும் இருட்டும், தீய பண்புகளை சுட்டிக்காட்டப் பயன்படும் இருளும் முற்றிலும் வேறானவை.

Dark Enery, Dark Matter - What Is Dark Energy?

http://science.nasa.gov/astrophysics/focus-areas/what-is-dark-energy/

It turns out that roughly 70% of the Universe is dark energy. Dark matter makes up about 25%. The rest - everything on Earth, everything ever observed with all of our instruments, all normal matter - adds up to less than 5% of the Universe.

*

முகமது தஸ்தகீர்: அந்த அல்லாஹ் இருட்டா? அவன் பிரகாசமான ஒளி! பின் வருபவைகளில் ஜோதி என்பதின் பொருள் நீங்கள் புரிந்து வைத்துள்ளது என்ன? "நிராகரிப்பாளர்கள் அல்லாஹ்வின் ஜோதியை தமது வாய்களால் ஊதி அணைக்கலாம் என்று நினைக்கின்றனர் ஆனால் அல்லாஹ் தனது ஜோதியை முழுமையாக்கியே தீருவான் - குர் ஆன்

அன்புடன் புகாரி: இங்கே ஜோதி என்பது கவி நயத்தோடு சொல்லப்பட்டிருக்கிறது. இப்படியான நயங்களைத்தான் கவிதைக்குப் பொய்யழகு என்று சொல்வார்கள். இறைவனின் ஜோதி என்பதை ஏதோ எரியும் ஒரு நெருப்பு என்று நினைத்துவிட்டீர்கள். இறைவன் வெறுமனே எரியும் எந்த நெருப்பும் அல்ல. அவனுக்கு உருவமே கிடையாது. நெருப்புக்கு உருவம் உண்டு.

இந்த வார செய்திகளைப் பார்த்தீர்களென்றால், கமல ஹாசன் பேஸ்புக் ஜோதியில் கலந்தார் என்று இருக்கும். கமல் ஹாசனும் கடவுளும் ஒன்றா அல்லது பேஸ்புக்கும் இறைவனும் ஒன்றா என்று கேட்டால் எப்படி இருக்கும்?

ஜோதி என்பதற்கான பொருளே இங்கு வேறு. இறைவன் என்கிற இருப்பு, இறைவன் என்கிற ஆளுமை, இறைவன் என்கிற நிஜம் என்று வேண்டுமானால் கூற முயலலாம். அதை சரியாக எடுத்துக்கொள்வதே இங்கே முக்கியம்.

ஒன்றுக்கு உருவகமாகவோ உவமையாகவோ கூறுவதை அதுவாகவே எடுத்துக்கொள்ளக்கூடாது. அப்படி எடுத்துக்கொண்டால் மொழி உங்களை நிறையவே ஏமாற்றிவிடும்.

செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்றால் காதில் நிஜமாகவே தேன் பாயுமா?

இன்று மனம் உருகித் தொழுதேன் என்றால் மனம் வெண்ணை என்றும் அது அனல் பட்டு உருகுகிறது என்றும் மனதை ஒரு திடப்பொருளாக எடுத்துக்கொள்ள முடியுமா?

இருட்டு பேசுகிறது - என்னை விடாது போலிருக்கிறது

அப்துல் ரகுமான்: சூரிய குடும்பமும் நட்சத்திர கிரகங்களும் வெளிச்சத்தின் அடிபடையிலேயே உள்ளன. அப்படி இருக்கையில் இந்த சூரிய, நட்சத்திர குடும்பம்களுக்கு ஒளி என்ற வெளிச்சம் இல்லாதிருந்தால் நாம் எப்படி இந்த பிரபஞ்சத்தை அடையாளம் கண்டிருப்போம்? இந்த கேள்விக்கு பதில் உங்கள் பதிலுரையில் இல்லை. விஞ்ஞானம் வளரவில்லை என்றுதான் சொல்லப்பட்டுள்ளது

அன்புடன் புகாரி: இதுவரை நம் பிரபஞ்சம் முழுமையாக அடையாளம் காணப்படவில்லை. அது இன்னமும் மூடுமந்திரமாகத்தான் இருக்கிறது. வெளிச்சம் எங்கெல்லாம் இருக்கிறதோ அதை நோக்கித்தான் மனிதன் பயணப்படுகிறான். இதுவரை அதுதான் அவனுக்கு இயலுமானதாக இருக்கிறது. நாளையும் இப்படித்தான் இருக்கும் என்று சொல்லமுடியாது. ஒவ்வொன்றுக்கும் கருவிகளையும் அளவுகோல்களையும் கண்டுபிடித்துக்கொண்டுதான் இருக்கிறான் மனிதன்.

ஒரு காலத்தில் எக்ஸ்-ரே என்ற ஒன்று இல்லை என்று அறிவீர்கள். அப்போது ஒருவனிடம் உன் எலும்பை எல்லாம் அப்படியே நான் பார்க்கப் போகிறேன் என்று ஒருவன் சொன்னால். அதற்கு அவன் என்ன பதில் சொல்லி இருப்பான்? என்ன, என்னை அறுத்து சதையை எல்லாம் கழித்துவிட்டு என் எலும்பைக் காணப்போகிறாயா, என்னைக் கொலை செய்யப் போகிறாயா என்றிருப்பான். ஏனெனில் வெளிச்சம் இருந்தால்தான், கண்பார்வை செல்லும் இடத்தில்தான் எதையும் காணமுடியும் என்ற அறியாமையின் பதில்தானே அது?

விஞ்ஞானம் வளர்ந்திருக்கிறது என்பதும் உண்மை. விஞ்ஞானம் வளரவில்லை என்பதும் உண்மை. எனெனில் அது அறிவு. அறிவுக்கு எல்லையே கிடையாது. இதுவரை நாம் விஞ்ஞானத்தில் எட்டி இருக்கும் தூரம் மகத்தானதுதான் என்றாலும், அத்தோடு அது நின்றுவிடப் போவதில்லை. நம் சந்ததியர் இன்னும் விளக்கமாகவும் விபரமாகவும் காணுவார்கள். ஆனால் அவர்களோடும் அது நின்றுவிடப்போவதில்லை. தொடரும் தொடரும் தொடரும் எப்போதும்.

வெறுமனே ஒரு எண்ணை எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் அறிந்த மிகப்பெரிய எண் எது? நீங்கள் அறிந்த மிகச் சிறிய எண் எது? யோசித்துப் பார்த்தீர்களா?

இதைத்தான் நான் என் ஆகாயம் என்ற கவிதையில் இப்படி எழுதி இருந்தேன்:

ஒன்றைத் திறக்க அதனுள் ஒன்று
இதுதான் இறுதி என்பதும் இல்லை
ஒன்றைச் சூழ்ந்து அதன்மேல் ஒன்று
அதுதான் பெரிது என்பதும் இல்லை

அணுவே சிறிது அண்டம் பெரிதென
அடித்துச் சொல்லத் தெளிவும் இல்லை
அறிவுப் பயண எல்லைக் குள்ளே
ஆயிரம் ஐயம் தீர்வோ இல்லை

சிறிதும் பெரிதும் ஒன்றின் உருவே
வானம் தானே மூலக் கருவே
அறியா நெஞ்சம் அறிந்தது கொஞ்சம்
அறியும் முன்னர் ஆறடி மிஞ்சும்

இருட்டு பேசுகிறது - மேலும் சில கேள்விகள்

அதிரை சித்திக்: இருட்டை துரத்த வெளிச்சம் காட்டிய வேகம், வேகமாக சென்று மறைந்தது போன்றிருந்தது. வெளிச்சத்திற்கும் இருளுக்கும் இடையே கவியன்பன் கவி சமாதானம் செய்தது போல் இருந்தது. தொடரட்டும் கவி யுத்தம்.

புகாரி: உலகம் தட்டையென்று கூறிய காலத்தில் இல்லை அது உருண்டை என்று சொன்னவனைக் கொன்றுபோட்டுவிட்டார்கள். எதையும் புதிதாய்க் கேட்கும்போது அப்படித்தான் இருக்கும், பிறகு அவர்கள் மனதிலேயே ஆணிவேராய் ஓடத் துவங்கிவிடும்.

இந்தப் பிரபஞ்சம், பேரண்டவெளி(space) முழுவதும் இருட்டுதான். கருவறை தொடங்கி கருந்துளை வரை இருட்டுதான்.

இருட்டு தாய். ஐம்பூதங்களில் ஒன்றுதான் நெருப்பு. நான் ஐம்பூதங்கள் என்பதையே உடைத்தவன். நான்கு பூதங்களே என்று உரத்துச் சொன்னவன். நான்கு பூதங்களும் ஆகாயம் என்ற ஒற்றை பிரமாண்டத்தின் கூறுகள் என்று உறுதி செய்தவன்.

பூதங்களில் ஒன்றான நெருப்பின் தன்மையையும் எழுதி இருக்கிறேன். ஏதேனும் தீனி இருந்தால் மட்டுமே அது வாழும். தீனி தீர்ந்தால் அது இல்லாமல் போய்விடும். மேல் நோக்கிமட்டுமே தாவும், நம்மோடு இருக்க அதற்கு ஆகாது, ஆனால் நம்மைத் தின்று செரிக்க விரும்பும். இருள் அப்படியல்ல. நிலைபெற்றது. தாய் போன்றது. எந்தத் தீங்கும் செய்யாதது.

உங்கள் ஆர்வம் கருதி, மேலும் ஒரு கவிதையை இங்கே இடுகிறேன்:

ஆகாயம்
===========

ஒன்றைத் திறக்க அதனுள் ஒன்று
இதுதான் இறுதி என்பதும் இல்லை
ஒன்றைச் சூழ்ந்து அதன்மேல் ஒன்று
அதுதான் பெரிது என்பதும் இல்லை

அணுவே சிறிது அண்டம் பெரிதென
அடித்துச் சொல்லத் தெளிவும் இல்லை
அறிவுப் பயண எல்லைக் குள்ளே
ஆயிரம் ஐயம் தீர்வோ இல்லை

சிறிதும் பெரிதும் ஒன்றின் உருவே
வானம் தானே மூலக் கருவே
அறியா நெஞ்சம் அறிந்தது கொஞ்சம்
அறியும் முன்னர் ஆறடி மிஞ்சும்

நீரும் நிலமும் காற்றும் நெருப்பும்
வானம் இட்ட தேவ பிச்சை
ஐம்பெரும் பூதம் என்பதும் தவறு
அனைத்தும் ஈன்ற வானம் வேறு

வானம் நிறைத்து விரிந்தே கிடக்கும்
வெற்றுப் பெருவெளி யாவும் இருட்டே
வானம் என்பதும் வையம் என்பதும்
அண்டம் என்பதும் எல்லாம் இருட்டே

விதையும் விதையின் உள்ளும் இருட்டு
வெளிச்சம் வாழும் வெளியும் இருட்டு
நிம்மதி கூட்டும் நித்திரை இருட்டு
ஆறுதல் சொல்லும் அமைதியும் இருட்டு

இயற்கை எல்லாம் இருட்டின் பிள்ளை
இருட்டே இன்றி வாழ்க்கை இல்லை
பிறப்பும் இருட்டு இறப்பும் இருட்டு
உயிர்கள் யாவும் இருட்டின் திரட்டு

கோள்கள் யாவும் இருட்டில் துகள்கள்
விண்மீன் கூட்டம் இருட்டின் கனிகள்
இருட்டில் இருந்தே எல்லாம் பிறப்பு
இருட்டே இன்றி எதுவும் இல்லை

நீண்டு விரிந்த மாபெரும் வெளியில்
பூமிப் பந்தும் ஒற்றைத் தூசு
ஒற்றைத் தூசின் உள்ளுக் குள்ளே
தூசுத் துகளாய் மனிதப் பிறப்பு

மனிதன் வாழும் ஆயுட் காலம்
இருட்டின் வயதில் பொருட்டே இல்லை
இருட்டே நிச்சயம் இருட்டே நிரந்தரம்
இருட்டே சத்தியம் இருட்டே பூரணம்


அதிரை அஹ்மது: الله نور السماوات والارض (அல்லாஹு நூருஸ் சமாவாத்தி வல் அர்ழி) - "வானங்கள், பூமியின் ஒளியானவன் அல்லாஹ்" என்ற மறை வாக்கைக் கொண்டு, ஒளிக்கு நிலைத்த தன்மையையும்,ظلمات எனும் இருள்களை 'அறியாமை, இறைமறுப்பு' முதலான negative aspectகளுக்கு இறைவன் உவமைகளாக்குவதையும் ஏற்றுக்கொண்டு, வெளிச்சத்துக்கு முன்னுரிமை கொடுப்போம்! அதனையே நாடி, ஆண்டவனிடம் வேண்டுவோம்!

புகாரி: இருள் ஒளி பற்றிய உலக வழக்கைச் சரியாகத்தான் சொல்லி இருக்கிறீர்கள். எனக்கு அதில் மாற்றுக்கருத்தே இல்லை. அப்படியே ஏற்கிறேன். இருள் என்பதை அறியாமை, இறைமறுப்பு, கயமை, கள்ளம், சைத்தானியம் என்றும் வெளிச்சம் என்பதை இவற்றை விரட்டுவதற்காகத் தொடுக்கப்படும் சக்தி என்றும்தான் நாம் காலங்காலமாக ***உருவகப்படுத்திக்கொண்டு*** வருகிறோம். அதன் அடிப்படையில் அமைந்தவைதான் அத்தனையும் என்பதையும் நான் அறிவேன், ஏற்கிறேன்.

நான் கொண்டு நிறுத்தும் இருட்டு என்பது எல்லையற்று விரிந்த ஆதியந்தமான இறைநிலை. அது அறியாமை, இறைமறுப்பு, கயமை, கள்ளம் போன்றவையல்ல தாயாய் நிறைந்த இறைமை. அது தன்னுள் ஒளியையும் கொண்டதாக இருக்கிறது. வாயுவையும் கொண்டதாக இருக்கிறது. நீரையும் கொண்டதாக இருக்கிறது. நிலத்தையும் கொண்டதாக இருக்கிறது. முற்று முழுதாகப் பூரணமாய் நிறைந்திருக்கிறது. அப்படி முழுமையானதாக இருக்கின்ற ஒன்று உவமைகளால் சொல்லப்பட்ட இருள்களுக்கு முற்றிலும் மாறுபட்டது.

ஒளியைத் தருவது நெருப்பு என்பதை நாம் அனைவரும் அறிவோம். இருட்டைத் தருவது எது? இருட்டுதான் இருப்பு என்பதால் அங்கே யோசிக்க வழியில்லை. அந்த நிரந்தர இருப்புக்குள் இருப்பவைதான் மற்ற அனைத்தும். சூரியன் என்பது எரியும் வாயு, நெருப்பு. அது அணைந்துபோகக் கூடியது. நட்சத்திரங்கள் யாவும் எரியும் நெருப்புக் கோளங்கள்தாம். யாவும் அணையக்கூடியவையே. பால்வீதி தொட்டு பல விண்மீன் வீதிகள் யாவும் எரியும் நெருப்பு மாத்திரமே. அவை யாவும் இருட்டு என்ற நிரந்தர இருப்புக்குள் இருப்பவைதானே?

எரியும் ஒரு மெழுகுவர்த்தி அணைந்துபோகக்கூடிய சிறிய நெருப்பு என்றால், ஒரு நட்சத்திரமும் அணைந்துபோகக்கூடிய ஒரு பெரிய நெருப்பு அவ்வளவுதான். ஆகவே நான் கூறும் இருட்டும், தீய பண்புகளை சுட்டிக்காட்டப் பயன்படும் இருளும் முற்றிலும் வேறானவை.

Dark Enery, Dark Matter - What Is Dark Energy? http://science.nasa.gov/astrophysics/focus-areas/what-is-dark-energy/
It turns out that roughly 70% of the Universe is dark energy. Dark matter makes up about 25%. The rest - everything on Earth, everything ever observed with all of our instruments, all normal matter - adds up to less than 5% of the Universe.

சித்திக்: உள்ளத்தின் வெளிச்சம் = தெளிவு பெற்ற சிந்தை

புகாரி: ஆகவே வெளிச்சம் என்பது வெறுமனே வெளிச்சம் அல்ல. அறிவு, தெளிவு, தீர்க்கம், நேர்வழி மனமாற்றம் என்று பல. இருள் என்பது வெறுமனே இருட்டு அல்ல. மடமை, கயமை, துரோகம், துக்கம் என்று பல. இனி ஒருமுறை என் ”ஆகாயம்” கவிதையை எவரும் வாசித்தால், சரியான பொருளையே புரிந்துகொள்வார்கள் என்று நம்புகின்றேன்.

அப்துல் ரகுமான்: இந்த பூமியில் வாழும் நமக்கு வெளிச்சம் என்று ஒன்று இல்லாவிட்டால் இருள் எப்படி வரும்?

புகாரி: உங்களைப் பொருத்தவரை எப்போதும் உலகமும் அண்டமும் பேரண்டமும் வெளிச்சத்திலேயே இருக்கின்றன. இருள்தான் ஓடி வந்து இரவு என்ற பெயரில் வெளிச்சத்தைக் கவ்விக்கொள்கின்றன என்று நினைக்கிறீர்கள். இது பிழையான பார்வை அன்பரே. சூரியன் என்ற எரியும் நெருப்புப் பந்து பூமியின் எந்த இடங்களில் படுகின்றதோ அந்த இடங்களில் மட்டுமே டார்ச் அடித்தாற்போல வெளிச்சம் இருக்கும்.

பூமி சூரியனைச் சுற்றி வருகிறது, தன்னைத்தானேயும் சுற்றிக்கொள்கின்றது என்று பள்ளிகளில் படித்திருப்பீர்கள். அப்படி பூமி சூரியனைச் சுற்றும்போது பூமியின் எந்தப் பகுதி சூரியனின் பக்கம் இருக்கிறது அங்கே வெளிச்சம் பரவுகிறது. அவ்வளவுதான். ஆகவே பூமியில் இருட்டுதான் எப்போதும் இருக்கிறது. சூரிய ஒளி படும் சமயங்களில் மட்டுமே வெளிச்சம் வருகிறது. அதாவது இருட்டுதான் வெளிச்சத்திற்கு தன்னை விளக்கிக்கொண்டு இடம் தருகிறது. அல்லது இருட்டுதான் வெளிச்சமாக உருமாறுகிறது என்றுகூடச் சொல்லலாம்.

வெளிச்சம் என்பது குறைவான இருட்டு. அவ்வளவுதான். முழு இருட்டையும் விரட்டும் வலிமை எதற்கும் இல்லை. ஏனெனில், வீடுகளுக்குள், மரத்தின் கீழ், நம் நிழல்களாக என்று இருட்டு எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கும். இருட்டு என்பது நல்ல விசயம் அது கெட்ட விசயம் அல்ல என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.

அப்துல் ரகுமான்: சூரிய குடும்பமும் ,நட்சத்திர கிரகங்களும் வெளிச்சத்தின் அடிபடையிலேயே உள்ளதாகும் அப்படி இருக்கையில் இந்த சூரிய ,நட்சத்திர
குடும்பம்களுக்கு ஒளி என்ற வெளிச்சம் இல்லாதிருந்தால் நாம் எப்படி இந்த பிரபஞ்சத்தை அடையாளம் கண்டிருப்போம்?<<<<<

புகாரி: ஆமாம் சூரியன் நட்சத்திரங்கள் எல்லாம் ஓளிதான் வெளிச்சம்தான் நெருப்புதான். சூரியனும் ஒரு நட்சத்திரம்தான் என்பதே உண்மை. ஆனால் நீங்கள் இரவில் வானத்தைப் பார்த்தீர்கள் என்றால் என்ன தெரிகிறது? அடர்ந்த கருமைக்குள் இங்கும் அங்குமாக நட்சத்திரங்கள் தெரிகின்றன. அவ்வளவுதான். அதாவது இருட்டுக்குள் சில விளக்குகள் எரிகின்றன. அந்த விளக்குகளும் அணையக் கூடியன. கருந்துளைக்குள் இழுத்துக்கொள்ளப்படுபவைகளாகவே இருக்கின்றன என்றும் விஞ்ஞானம் கூறுகிறது. விஞ்ஞானம் இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டும் என்பதால் நான் அதிகம் அதுபற்றிக் கூற விரும்பவில்லை. வானத்தை முழுமையாக அறிந்துகொள்ள மனிதனுக்கு இன்னும் வாய்க்கவில்லை. அதனால்தான் இப்படி பாடல்கள் எழுதிச் செல்லுகிறான்.

வானம் எனக்கொரு போதிமரம்
நாளும் எனக்கது சேதி தரும் -வைரமுத்து

அள்ளித்தந்த பூமி அன்னையல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தையல்லவா -மதுக்கூர் கண்ணன்

அப்துல் ரகுமான்: அந்த வெளிச்சங்கள் இல்லாமல் எப்படி நாம் வானத்தை பார்க்க முடியும்?

அன்பரே, உங்களுக்கு ஒரு முக்கியமான விசயம் தெரியணும். நாம் வானத்தைப் பார்க்கவில்லை. தூரத்தில் நீல நிறமாகத் தெரிவதை, வானம் என்று நம்பிக்கொண்டிருக்கிறோம். எவ்வளவுதூரம் வெளிச்சம் பரவுமோ அவ்வளவுதூரம்தான் பரவும். அப்படி அது பரவிமுடியும் எல்லை நீல நிறமாகத் தெரியும். இணையத்தில் அறிவியல் கட்டுரைகள் கோடிக்கணக்கில் உள்ளன. அற்புதமான பொக்கிசங்கள் அவை. வாசிக்கத் தொடங்குகள். மிக மிக சுவாரசியமாக இருக்கும். வாழ்த்துக்கள்.

நாம் வெளிச்சத்தின் அடிமைகளாக இருப்பதால்தான் முழு பிரபஞ்சத்தையும் உணர்ந்துகொள்ளவோ புரிந்துகொள்ளவோ முடியாமல் தவிக்கிறோம். எதைப் பார்க்கவும் நமக்கு வெளிச்சம் தேவைப்படுகிறது. நமக்கு இருப்பது அய்ந்து புலன்கள். ஆனால் கண் மட்டுமே வெளிச்சத்தை நம்பி இருக்கிறது. மற்ற நான்கு புலன்களும் வெளிச்சத்தை நம்பி இல்லை. அவை இருட்டில்தான் மிகத் தெளிவாக இருக்கும். ஒரு மலரை முகர்ந்து வாசனை பார்க்கக்கூட நாம் கண்களை மூடிக்கொள்வோம். முழு உணர்வுகளையும் சேர்த்து ஒரு முத்தமிடுவதற்குக்கூட நாம் நம் கண்களை மூடிக்கொள்வோம்.

நல்ல கேள்விகளைக் கேட்டிருக்கிறீர்கள். இப்படி அடிப்படையான *இருள்* களுக்கு விளக்கம் கொடுத்துவிட்டால், அதன் மேல் எழுப்பப்பட்டுள்ள கோபுரங்கள் தானே *வெளிச்சத்துக்கு* வந்துவிடும்

ஆராதனை எனும் தலைப்பில்...

அதிரை நிருபர் என்ற வலைப்பூங்காவில் கவிதைகள் பற்றிய ஒரு கருத்தாடலில் இப்படி ஒரு கேள்வி வந்தது எனக்கு

கேள்வி: விளக்கம் தரும் ஓர் எழுத்தாளராக இதுவரை உங்களைக் காண முடிகிறது. ஒரு கவிஞராய்க் காண ஆசைப் படுகிறேன் *ஆராதனை* எனும் தலைப்பில் சிறு கவிதை ஒன்றைத் தாருங்களேன் (அதிரை சித்திக்)

பதில்: இங்கே நான் இப்படி உரைநடை எழுதினாலும் நான் கவிதைக்கு ஆதரவாக எழுதி வருகிறேன். நான் உரைநடை எழுதும்போதே அர அல போன்ற சகோதரர்கள், இறைவனுக்கு இணைவைப்பதை நான் ஆதரிப்பதுபோல் தவறாக எண்ணி இருக்கிறார்கள். நான் கவிதை எழுதினால் என்னாகும்? சற்றே கலக்கமாக இருக்கிறதல்லவா :-)

உரை நடையில் நான் அழுத்தமாகச் சொன்னாலும் அதை சகோ அர அல லேசாக எடுத்துக்கொள்வார். ஆனால் கவிதையில் நான் மென்மையாகச் சொன்னாலும் கடும் கோபம் கொண்டுவிட வாய்ப்பிருக்கிறதல்லவா? அப்படி இருக்க, ஏன் என்னை வம்பில் மாட்டிவிடும் விதமாய் இப்படி ஒரு விருப்பத்தை என்முன் வைக்கிறீர்கள்? சகோ அர அல அவர்களைக் கோபம் கொள்ளச் செய்வதில் எனக்குத் துளியும் விருப்பமில்லை. அதே சமயம் என் முன் வைக்கப்பட்ட உங்கள் விருப்பத்தை நிராகரிக்கவும் மனம் வரவில்லை. ஆகவே.....

முதலில் கவிதையைப் பற்றி சில வரிகள் சொல்லிவிடுகிறேன். கவிஞனிடம் கவிதைக்கான தலைப்பைக் கொடுத்து கவிதை கேட்கக் கூடாது. ஏனென்றால் கவிதை என்பது செய்வதல்ல. இயல்பாக இதயத்திலிருந்து ஓர் உந்துதலில் தானே வருவது. அந்த உந்துதலுக்குக் காரணம் எதுவோ அந்தத் தலைப்பில்தான் கவிதை அமையும். அதுதான் உண்மையான கவிதை என்ற நம்பிக்கை உள்ளவன் நான். என் கவிதை நூல் ஒன்றுக்கு இப்படி ஒரு முன்னுரை எழுதினேன்:

*

இன்று ஏதாவது கவிதை எழுதினீர்களா?' என்று கேட்கிறார்கள் சிலர்.
என் கவிதைகளை வாசிக்க வேண்டும் என்ற தாகம் அவர்கள் கண்களில் மிதக்கலாம் அல்லது ஒரு கவிஞனை விசாரிக்கும் சம்பிரதாய கேள்வியாகவும் அது இருக்கலாம்.

இந்தக் கேவிக்கு பதிலாக 'இல்லை' என்று ஒரு சொல்லிலும் பதில் கூறலாம் அல்லது எனக்கு எப்பொதெல்லாம் கவிதைச் சிறகுகள் முளைக்கும் என்ற ரகசியத்தை விளக்கியும் கூறலாம். ஆனால் நானோ 'விரைவில் எழுதுவேன் எழுதியதும் முதலில் உங்களுக்குத்தான் அனுப்பிவைப்பேன்' என்று கூறுவதுண்டு.

இந்த பதிலுக்குப் பின்னணியாய் நான் பிறந்த ஒரத்தநாட்டில் எங்கள் தெருவில் நெடுங்காலம் தபால்காரராய் எங்களுக்கு தபால்ப் பால் ஊட்டிய கண்ணையா என்பவரின் உயர்ந்த பண்பு இருக்கிறது. எங்களுக்குக் கடிதம் வராவிட்டால் 'இன்று கடிதம் இல்லை' என்று அவர் சொல்லமாட்டார் 'அவசியம் நாளை தருகிறேன் தம்பி' என்று அன்போடும் கனிவோடும் கூறுவார்.

ஒரு கவிதையாவது எழுதாமல் உறங்கச் செல்லாத நாட்கள் அடர் மழைக் காலத்தைப்போல தொடர்ந்து எனக்குச் சிலகாலம் இருப்பதுண்டு. அதே போல கவிதைகளே எழுதாமல் பலகாலம் அப்படியே மௌனமாயும் மூடிக்கிடப்பேன்.

கவிதைகள் என் உயிரின் கதவுகளைத் தட்டும்போது நடு இரவானாலும் உடனே எழுந்து எழுதுவதும் உண்டு, மூளைக்குள் அப்படியே ஒரு சேமிப்பாய்க் கிடத்திவிட்டு பின்னொருநாள் தட்டி எழுப்பி அதற்கொரு வடிவம் அமைக்கப் பாடுபடுவதும் உண்டு. ஆனால் இன்று ஒரு கவிதை எழுதியே தீரவேண்டும் என்று முடிவெடுத்துக்கொண்டு ஒரு நாளும் அமர்ந்ததே இல்லை.
இதில் சில விதிவிலக்குகளும் உண்டு.

தலைப்பு தந்து கவியரங்கம் பாட அழைக்கும்போது வலுக்கட்டாயமாக அமர்ந்து கவிதை எழுத வேண்டிய சூழல் அமையும். அப்ப்டி அமையும் போதெல்லாம் கவிதை எழுதிப் பழகிய அனுபவ விரல்கள் வார்த்தை விளையாட்டுகளில் இறங்கிவிடும். சில சமயம், பழைய கவிதைகளை எடுத்துக் கோத்து இடைச் செருகல்களோடு புதிய கவிதைகள் உருவாக்கும் நிலைப்பாடும் அமையும்.

இங்கே நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், கவிதைகள் என்பன உள்ளத்தில் கருக்கொண்டு உணர்வுகளில் உந்திக்கொண்டு உயிரை உரசிக்கொண்டு அறிவின் சீரமைப்போடு தானே வெளிவருபவை. அப்படி வராதவை கவிதைகளாய் இருப்பதில்லை, வார்த்தை விளையாட்டுக்களாய்த்தான் அமையும்.

ஆகையினால்தான் நான் என் இணையக் குழுமமான அன்புடனில் கவிதைப் போட்டிகளை அறிவித்தபோது கவிதை எழுதுவதற்கு எந்த ஒரு தலைப்பினையும் தரவில்லை. அது மட்டுமல்லாமல் கவிதை எழுதுவதற்கான காலத்தையும் அதிகமாக நீட்டிக்கொடுத்தேன்.
தானாய்க் கனிவதுதான் கனி. தடியால் அடித்துக் கனியவைப்பது என்பதே கவிதை உலகில் தனி.

*

சரி, ஆராதனை என்ற தலைப்பில் ஒரு கவிதை கேட்டீர்கள் அல்லவா? நான் இருட்டை ஆராதித்த ஒரு கவிதையை இங்கே இடுகிறேன். நான் எப்படி இருட்டை ஆராதிக்கிறேன் என்று இருட்டே சொல்வதுபோல் அமைந்த இந்தக் கவிதை என் முதல் தொகுப்பான வெளிச்ச அழைப்புகளில் வெளிவந்தது. எத்தனை முரண் பார்த்தீர்களா? வெளிச்ச அழைப்புகளில் இருட்டு பேசுகிறது :)

*

இருட்டு பேசுகிறது
==================

நான் இருட்டு
கொஞ்சம் ஊடுருவிப் பாருங்கள்
நானே நிஜம்

வெளிச்சம் விருந்தாளி
நானே நிரந்தரம்

புலன்கள் ஐந்து
அவற்றுள் ஒற்றைப்புலனே
வெளிச்சத்தின் அடிமை
அந்த விழிகளும் என்னில் மட்டுமே
கனவுகள் காண்கின்றன
கனவுகளே உங்களின்
சத்தியப் பண்புகளைச் சொல்கின்றன

உங்களின் சரியான முகவரி
உங்கள் கனவுகளில்தான்
பொறிக்கப் பட்டிருக்கிறது

வெளிச்சம் உங்களைப் பொய்யுடன்
பிணைத்துக் கட்டுகிறது

வெளிச்சம் பொய்களின் கூடாரம்
இருட்டே உண்மையின் தீர்மானத் தளம்

என்றாவது உங்களை
வெளிச்சத்தில் பார்த்திருக்கிறீர்களா
இருட்டில்தானே நீங்கள் தெரிவீர்கள்
வெளிச்சத்தில் உங்களுக்கு தினம் ஒரு முகம்
இருட்டில் உங்களுக்கு ஒரே முகம்
வெளிச்சத்தில் நாளும் நிறம்மாறுகிறீர்கள்
இருட்டில்தான் நீங்கள் நீங்களாகவே இருக்கிறீர்கள்

வெளிச்சம் பொய்
இருட்டே நிஜம்

வெளிச்சம் துயரம்
இருட்டே சந்தோசம்

வெளிச்சம் அரக்கன்
இருட்டே உங்கள் தாய்

நிறைய அழுகை மனிதனுக்குச் சொந்தம்
அவை அனைத்தும்
வெளிச்சம் உங்களுக்குத் தந்த விசங்கள்
அத்தனைக் கண்ணீரையும் கொட்டித்தீர்க்க
இருட்டே உங்களுக்கு மடி வார்க்கிறது

கரு எங்கே உதிக்கிறது
விதை எங்கே முளைக்கிறது
உயிர்கள் அத்தனைக்கும் மூலம் இருட்டுதானே

வெளிச்சம் வேசம்
வெளிச்சத்தில் சொல்லப்பட்ட
கதைகள்தாம் இருட்டை பயமென்று பிதற்றுகிறது

கருப்பையில் பயந்தீரா
வெளிவந்து அழுதீரா
இருட்டா உங்களுக்குப் பயம் சொல்லித்தந்தது
வெளிச்சம் கவலைகளின் தொழிற்சாலை
இருட்டு உங்களின் சத்தியமான வாழ்க்கை
புறக்கண் என்றேனும் எவரின் நிஜத்தையும்
உங்களுக்குக் காட்டி இருக்கிறதா
சொல்லுங்களேன்
பாசமென்பது பெத்தவளின் முகமா
அவள் அரவணைப்பா
காதல் தந்தது காதலியின் வெளியழகா
அவள் உள்ளழகா
நிம்மதிச் சொத்து உருவங்களாலா
உள்ளங்களாலா

யோசித்துப் பாருங்கள்
இருட்டையே நீங்கள் காதலிக்கிறீர்கள்
வெளிச்சத்தை வெறுக்கிறீர்கள்

வெளிச்சம் இதயத்தை மதிப்பதில்லை
இருட்டு உருவத்தை மதிப்பதில்லை
தினம் தினம் வெளிச்சம் உங்களை
ஏமாற்றுகிறது

தவறாக எண்ணாதீர்கள்
இருட்டு வெளிச்சத்தைக் கண்டு
ஓடி ஒளிவதில்லை
வெளிச்சத்துக்கும் வாழ்க்கை தருகிறது
வெளிச்சம் இல்லாமல் இருட்டு இருக்கும்
இருட்டே இல்லாமல்
வெளிச்சம் எங்கே இருக்கும்

பூமி இருட்டு நிலா இருட்டு
கோள்களெல்லாம் இருட்டு பிரபஞ்சமே இருட்டு
உயிர்கள் அத்தனையும் இருட்டின் துகள்கள்
இருட்டே நிஜம் வெளிச்சம் பொய்

*

பின்னூட்டங்கள்:

கவிஞர் சபீர்:
இருட்டில் இத்துனை வெளிச்சம் பாய்ச்சுதல் எங்ஙனம் சாத்தியம் என எழுதியவர்க்கே சாத்தியம். முதன்முதலாக இருட்டைத் தெளிவாகப் பார்க்க வாய்த்தது, எனினும் எனக்கென்னவோ... வெளிச்சமே இருப்பு எனவும் இருட்டு இல்லையின் வறையரை எனவும் ஓர் அபிப்ராயம் உண்டு. நேரம் வாய்க்கும்போது பதிலடி தருகிறேன்,,,வெளிச்சமே வெற்றி என்று. க்ளாஸ் பீஸ் ஆஃப் ரைட்டிங், சகோ.

*

அதிரை சித்திக்:
எதையும் தெளிவாய் சொல்ல கவிஞனால் மட்டுமே முடியும். கருவுக்குள் இருளில் அமைதியாய் இருந்த குழந்தை வெளிச்சத்தை கண்டு வீரிடுவதாக கூறும் கவி மனிதனுக்குள் திணிக்க படும் முதல் விஷயம் வெளிச்சம் ...கவியின் ஆழம் கருத்து கடலின் ஆழம் ..கவிஞர் சபீர் கருத்து மோதலுக்கு தயாராகிறார். நானோ கவிஞரின் கவியில் மயங்கி கருத்தில் ஆழ்ந்து போனேன் இருளில் துவக்கமும் முடிவும் உள்ளதாகவே நினைகிறேன் தூக்கத்திற்கும் இருள் தேவை ..இருளின் குணம் அமைதி .கோழைக்குஇருள் பிடிக்காது பயம் பிடிக்கும் இருள் ..மீது ஒரு காதலையே கொண்டு வந்து விட்டீர்கள் கவிஞரால் எதையம் எப்படியும் கூறி மனதில் பதிய வைக்க முடியும் என்பதற்கு இதுவே சான்று.

*
கவிஞர் சபீர்:

நான்… வெளிச்சம்!
==================

விடியல் என்றொரு வினையில்
சற்றுமுன்தான்
உலகின் இருட்டு அழுக்கைத்
துடைத்தெடுத்தத்
தூய்மை நான்.

இருட்டு
இல்லையின் வறையரை
நானோ
இருப்பின் அறிவிப்பு

என்னைக்கொண்டே
நாட்களைக் கணக்கிடுவர்
இருட்டைக் கொன்றே
நானும் வெளிக்கிடுவேன்

உள்ளுக்குள் உறங்கும்
மிருகம்
இருட்டின் தயவிலேயே
குற்றம் புரியும்
இருட்டை உடுத்தியே
எங்கும் உலவும்
நான்
நல்லது கெட்டதை
நானிலத்திற்குக் காட்டும்
நல்லவன்

இருட்டு
கண்கொத்திப் பாம்பு
துரோகத்தின் துணைவன்
எல்லாப் பொருட்களையும்
இல்லையென்றாக்கும்
ஏய்ப்பு இருட்டு.

நான் நிஜம்
இருட்டு நிழல்

வெளிச்சம் விருந்தாளியல்ல
இருட்டு தரிக்கும்
வேடம் திருத்தி
யதார்த்தமாக்க முயலும் அறிவாளி

யாவற்றின்
இயல்புகளையும்
கருமை பூசி
போலியாகக் காட்டும்
முகமூடி இருட்டு

நிஜம்தான்
நிரந்தரம்
இருட்டு
எத்தனை முயன்றாலும்
என்னைக்கொண்டு
விரட்டவே விழையும் உலகு

இருட்டு
காத்திருக்கு மொரு கயமை
நான்தான்
அதைக் கட்டுப்படுத்தும்
காவல்காரன்.

நான் துவக்கம்
இருட்டு இறுதி
என்னில்
வாழ்க்கைத் துவங்கும்
இருட்டில் எல்லாம் இறக்கும்

இருட்டு இருமாப்பு
வெளிச்சமே இறை வார்ப்பு!

*

கவிஞர் அபுல் கலாம்:

கறுப்பும் வெள்ளையும்:
=====================

கருவறை இருட்டெனும் கறுப்பு;
பயணிக்கும் உயிரணுவோ வெள்ளை!
இருட்டும் வெள்ளையும் கலந்து
பிறப்பது குழந்தை எனும் கவிதை!
கரும்பலகையில்
வெள்ளைக் கட்டியால்
எழுதினாற்றானே
பழுதின்றிப் பாடம் கற்கலாம்!

கருமையையும் வெண்மையையும்
பிரித்துக் காட்டும் வைகறைப்
பொழுதில் எனக்கு ஓர் ஈர்ப்பு!

இருட்டு அறியாமையை
வெளிச்ச அறிவு வென்ற பின்னரும்
அறியாமையும் அறிவும் கலந்து
ஐயமும் தெளிவும்
ஐக்கியமாய் இருப்பதும் கண்கூடு!

கல்லறையெனும் இருட்டறைக்கு
அமல்கள் எனும் வெளிச்சம்
கொண்டு சேர்த்த பின்னரும்
மீண்டும் எழுப்பும் வரை
பயமெனும் இருளும்
நம்பிக்கை எனும் வெளிச்சமும்
கூடவே நிற்கும்!

நிகரற்று ஒளிதெறிப்பாய்



ஏதும் மீதமின்றி
எக்கதவும் திறப்பின்றி
யாவும் இழந்தே
இருட்சிறை வீழ்ந்தனையோ

மனமே....
நீ ஏதும் இழக்கவில்லை
எத்துயருளும் மூழ்கவில்லை

இழந்தது ஏதாகிலும்
எள்ளளவும் தேடா இதயம் பெறு

ஜென்ம விடுதலையின்
பூரணப் பொருள்
உன் உயிரில் பொரிக்கப்படும்

நெருப்பெனும் பூதமாவாய் நீ
நிகரற்று ஒளிதெறிப்பாய்

உனைத் தொடவும் அஞ்சும்
உலகுமேலேறி
என்றுமழியா பிரபஞ்சம் நிறைவாய்
அழைத்தேன் ஒருதரம் அழைத்தேன் இரண்டுதரம் அழைத்தேன் மூன்றுதரம்

தோழியை அழைத்தேன்....

இந்த வேற்றுக்கிரகவாசியைக்
கட்டிக்கொண்டு நான் படும்பாடு
அப்பப்பா
எரிச்சலில் என் இதயத்தையே
இடியாப்ப இழைகளாய்ப்
பிழிந்துகொண்டிருக்கிறேன்
பிறகு பேசலாமா என்றாள்

*

நண்பனை அழைத்தேன்...

விமான நிலையம் வந்திறங்கினேன்
இடி என் நடுத்தலையில்
சன்னமாய் இறங்கியது

எங்கள் சுண்டுவிரல்களிலிருந்து
வெட்டிப்போட்ட நகங்கள் கூட
குதித்துக் குதித்துச்
சண்டைபோட்டுக்கொள்கின்றன
அப்புறம் பேசலாமா நண்பா
என்றான்

*
தொப்புள் கொடியால்
பிரித்தெடுக்கப்படாத
ஆனால் தாய்ப்பால் அருந்திய
பாசந்தரும் என்னைப் பெறா
அம்மாவை அழைத்தேன்

எங்கள் குடும்பத்தில்
எரிமலை வெடித்து
தீக்குழம்பு
கொட்டிக் கொண்டிருக்கிறது

பல மாதங்களாய்ச் சூடேறியது
இன்று வீடேறிவிட்டது

பேசும் சூழலில்லை மகனே
எதுவும் பிடிக்கவில்லை மன்னித்துவிடு

வீடு சீரானால்
நானும் உயிருடன் இருந்தால்
நானே அழைப்பேன்
அதுவரை
வேண்டாம் உன் தொலைபேசி
என்றார் பயத்தோடும் பாசத்தோடும்

*
எங்கு போனாலும்
இதுதானா?

என்னிடமும்
அந்த எழவெடுத்த
நெருப்புச் சுனாமி என்றுதானே
தொடர்ந்து
ஒவ்வொருவராய் அழைத்தேன்

வீட்டைவிட்டு
வெளியேற....

என் துக்கம் தாண்டி
ஒரு துயரத்தில் குதிக்க...

வாடகைக்கு நிலவறை தேடி
அலைந்துகொண்டிருக்கிறேன்
ஒரே படகில் பயணப்படும்
என் உறவுகளே

இது என்ன
விதி?

மண்ணில்
மனித வாழ்க்கைபோல்
ஒரு கேடுகெட்ட நரகம்
விண்ணில் இருக்கிறதா என்ன?

ச்சும்மா
பூச்சாண்டி காட்டுகிறார்கள்
செத்தப் பேய்களிடம்

சிரிப்புச் சிரிப்பாய் வருகிறது
எனக்கு

உங்களுக்கு???

கணியன் பூங்குன்றன்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்,
இன்னா தென்றலும் இலமே ‘மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

 -கணியன் பூங்குன்றன்

எல்லா ஊரும் எம் ஊர்
எல்லா மக்களும் எம் உறவினரே
நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை
துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை
சாதல் புதுமை யில்லை; வாழ்தல்
இன்பமென்று மகிழ்ந்தது இல்லை
வெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்கியதுமில்லை
பேராற்று நீர்வழி ஓடும் தெப்பம்போல
இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று
தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம்
ஆதலினால்,பிறந்து வாழ்வோரில்
சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை
பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை.
அரபுதேசப் பிரவேசம்

பசி வந்தால்
பத்தும் பறந்துபோகும்

அப்படி ஒரு பசி
அவனுக்கும்
வந்தது

அஃறிணைத் தோட்டத்தில்
ஆகாரம் கிடைப்பதாய்க்
கேள்வி

மனக்குரல் பாதங்களில்
கிழிந்து கூக்குரலிட
அவமதித்தி
அவசரமாய் நடந்தான்

எதிரே நரிவர
நரியானான்

நாய்வர
குரைத்தான்

ஆந்தைவர
இமைகளைத் தொலைத்தான்

இன்று அவனிடம்
பசியும் இல்லை
அவனும் இல்லை
காலம் மாறித்தான் போச்சு

தொப்புள்கொடி அறுந்ததோடே
தொலைந்து போனதாய் இருக்கலாம்
தாயின் உறவு

ஆனால்
விந்துப்பையில்
துளிகளாய் நெளியும்போது மாத்திரமே
பிள்ளைகளின் உறவு
தகப்பனுக்கு