எங்கள் ஊர்ப் பொங்கல்

ஞாபக இழைகளைச்
சிக்கெடுத்து
எங்களூர்ப் பொங்கலை
ஓர் நினைவுச் சடையாய்ப்
பின்னிப் பார்க்கிறேன்

அன்பைப் பெருக்கி கண்களில் சுருக்கி
ஆழ உயிர்க் குரலில்
அம்மா வென்ற கதறலோடு
சாம்பல் நிறப் பசுமாடு
திண்ணை மெழுகிப்போட
சாணம் இட்டு நிற்கும்
சுவரோர நிழலில்

எத்தனையோ முறை
கீறிக்கீறிக் காயப்படுத்தினாலும்
கொத்திக்கொத்திப் புண்ணாக்கினாலும்
அத்தனை முறையும்
சிரிக்கும் அன்புத் தாயாய்
அமுதள்ளி ஊட்டும் நிலம்

சோற்றுத் தட்டின்
ஓரங்களாய் ஈரம் மிளிர
நனைந்து கிடக்கும் வரப்புகளில்
நடப்பேன் நான் நாளெல்லாம்
கால்கள் நொந்ததில்லை

வேண்டும் என்று எண்ணி
வானம் பார்க்கும் போதெல்லாம்
என் வேண்டுகோளுக்காகவே
காத்திருக்கும் மழைத்தேவதை
நெஞ்சு நெகிழ வீழ்வாள்
மண்வாச மோகம் எழும்ப

வேட்டுச் சத்தம் கேட்டதோடு
வீரிட்டு ஓடும்
மாட்டுவண்டிக் கொண்டாட்டத்தை
விழிகளில் அச்சம் கிடுகிடுக்க
பதுங்கி நின்று வேடிக்கை பார்த்த
அந்தப் பழைய நாட்கள்

முகத்தை
வெட்டிவெட்டி நடக்கும்
குங்குமப் பொட்டுக் குமரிகள்
வட்டவட்டமாய் வந்து கும்மியிட்டு
'குடுடா காசு' என்று மதுச்சிரிப்போடு
மல்லுக்கு நிற்கும்போது
பருவ நெருப்புச் சிறகுகள் விரித்த
கல்வெட்டுப் பொற்பொழுதுகள்

இன்றெல்லாம்
நகர மறுக்கும் நகர வாழ்க்கை

தினந்தோறும்
நீள அகளத்தில் அறிவைக் கிழிப்பதும்
தையல் போடவும் வழியற்றுப்
பிதுங்குவதுமாய் நாட்கள்

பொங்குது பொங்குது பொங்கல்
என் கண்களில் பொங்குது
பொங்கல்

1 comment:

பிரதீபா said...

பொங்கல் கவிதைகளை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளத் தேடினேன்.. அதில் இந்தக் கவிதை மிகப் பிரமாதமாய் இருந்தது. முகநூலில் பகிர்ந்துள்ளேன், தங்களின் பெயரோடு. நன்றி, கவிதைக்கும், நினைவுகளை மீட்டெடுத்தமைக்கும்.