வெற்றிக்கு மந்திரம் மனவீரம்

*
இசை கூட்டித் தமிழ்க் கவிதைகள் எழுதுவது எனக்குப் பிடித்த விசயம். யாப்பிலக்கண விதிகளைப்பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை ஆனால் அதன் நயங்களைக் களவாடாமல் நான் விடுவதில்லை.


*

கோடுகள் வாழ்க்கையில் ஏராளம் - அந்தக்
கோட்டுக்குள் நாடகம் அன்றாடம்
தாவிடும் ஆசைகள் கூத்தாடும் - இன்பத்
தவிப்புக்குள் சிக்கியே நாளோடும்

மூடிய மாங்கனி வீடாகும் - உள்ளே
முத்தாக வாழ்வது வண்டாகும்
கூடுகள் இன்பத்தின் ஆதாரம் - அந்தக்
கூட்டுக்குள் அன்புதான் தேனூட்டும்

கட்டிய காலுடன் நாட்டியம் - கண்கள்
கட்டித்தான் காட்சிகள் அரங்கேற்றம்
ஒட்டிய தேவைகள் போராட்டம் - உயிரின்
ஓலந்தான் ஞானமாய் வேரோட்டும்

வெட்டிய கீறலாய் ஏமாற்றம் - தொடரும்
வெற்றெதிர் பார்ப்போ ரணமாக்கும்
தொட்டது தோற்பது சிறையாகும் - தொட்டுத்
திறவாமல் வெற்றியும் திசைமாறும்

இருட்டினில் கண்களும் கூராகும் - துயரம்
இடைமுட்ட வாழ்வோ சீராகும்
கருத்தினில் இழையா கனவுலகம் - வெற்று
காற்றோடு கரைந்து மணலாகும்

பருந்திடம் மாட்டிய குஞ்சாக - நாளும்
போராடித் தவிக்கும் நன்னெஞ்சம்
விருந்தென மடிவது படுமோசம் - வாழ்க்கை
வெற்றிக்கு மந்திரம் மனவீரம்

- அன்புடன் புகாரி

Comments

வேந்தன் said…
நல்லா இருக்கு

பாட்டு பாடவா என்றொரு தொ.கா நிகழ்ச்சி நடக்குது

பேரிசை பாடகர்தான் பாடுகிறார்கள். பாடல்வரிகளை பிழையற்று பாட வேண்டும் என்பதே போட்டி

அதில் என்ன தெளிவாகிறது என்றால் பாடல் மறந்தாலும் பண் மறப்பது இல்லை
எனவே கவிதைகளுக்கு ஓசையே முதன்மை. ஓசை பற்றி எழுந்ததே பா வகைகள்


வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
இசைக்கு ஓசையே முக்கியம் என்று சொன்னால் மட்டுமே அது சரி :)

Popular posts from this blog

பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே