நூரம்மா நூரம்மா

நூரம்மா நூரம்மா
நீங்கதான் என் ஒரே அம்மா

பெத்த பத்து தினங்களுக்குள்ளேயே
சித்திரையில் பிறந்து சீரழித்தவனே என்று
பெத்த அம்மா என்னை
எட்டி எறிஞ்சிட்டாங்க நூரம்மா

விபரம் தெரிஞ்ச என் பத்து வயசுல
அம்மா மடியில ஆசையா
உட்காரப்போன என்னை
சனியனேன்னு குதறி நான் குப்புறக் கவிழ
தூக்கி எறிஞ்சிட்டாங்க நூரம்மா

எந்த முகத்துல எல்லாம்
பாசம் தெரிஞ்சுதோ
அந்த முகத்தையெல்லாம்
அம்மா அம்மான்னே பார்த்தேன் நூரம்மா

ஆனாலும்
எந்த முகத்திலேயும்
அது நிரந்தரமாத் தங்கல நூரம்மா
உங்க முகத்தைத்தவிர

என்னைக் கட்டிக்கிட்டவளும்
உனக்கொன்னும் நான் அம்மாவாக முடியாது
என்னைப் பொண்டாட்டியா மட்டுமே
பாருன்னு தன் வேதனையைச் சொல்லி
அழுது முடிச்சிட்டாள் நூரம்மா

எப்படி நூரம்மா உங்களால மட்டும்
அன்னிக்குப்போலவே இன்னிக்கும்
என்னைத் தாய்ப்பாசத்தோடயே
பார்க்க முடியுது

பெத்த மூணும் வளர்த்தது ஒண்ணும்னு
நாலும் நாலுமாதிரி
என்னைப்போல யாருமே இல்லேன்னு
சொன்னீங்களே நூரம்மா
நான் எப்படி நூரம்மா
உங்களை மாதிரியே இருக்கேனா நூரம்மா

பெத்தது முணு வளர்த்தது ஒண்ணு
வந்ததும் ஒண்ணுன்னு என்னையும் பிள்ளையா
ஏத்துக்குவீங்களா நூரம்மா

தப்பு செஞ்சா பிள்ளைகளைக்
கண்டிக்கத்தோணும் தண்டிக்கத் தோணாது
என்னை நீங்க கண்டிக்கவும் இல்லை
தண்டிக்கவும் இல்லை ஆனால் நானா என்னைத்
தண்டிச்சிக்கிட்டேன் நூரம்மா

பதினைஞ்சு வருசம்
ஒரு தாய்முகம் காணாதவனா
தாயன்பை இழந்தவனா
தண்டிச்சிக்கிட்டேன் நூரம்மா

இப்பவும் இந்தப் பாழும் உயிருக்கு
உயிரின் ஆறுதலுக்கு எதுவுமே இல்லை நூரம்மா
யாருமே இல்லை நூரம்மா
தன்னந்தனியா அதுபாட்டுக்கு ஏங்கி ஏங்கி
துவிச்சித் துடிக்குது நூரம்மா

அந்தத் தவிப்பும் துடிப்பும் ஏக்கமும்தான்
எனக்குள்ள கருணையாவும் அன்பாயும் பாசமாயும்
ஊற்றெடுத்துக் கொட்டுது நூரம்மா

அழுது நிக்கும்போது ஏன்டான்னு கேட்க
ஆளில்லாத எல்லோருமே அனாதைங்கதானே நூரம்மா
நானும் ஒரு அனாதைதானே நூரம்மா

நான் எத்தனை எத்தனை நாள்
கதறிக்கதறி அழுதிருப்பேன் நூரம்மா
எத்தனை எத்தனை முறை வெந்து வெந்து
செத்திருப்பேன் நூரம்மா

ஆனாலும் என்ன
இப்போது உங்கள் முகம் கண்டு
வாழ்கிறேனே நூரம்மா இதுபோதும் நூரம்மா
என் இதயத்தின் மிகமிக நெகிழ்வான நன்றிகள்
உங்களின் சிரித்த முகத்திற்கு நூரம்மா

ஆறுதலுக்கும் அன்புக்கும் அலையும் இதயங்கள்
கட்டுகளையும் காலங்களையும்
மதிப்பதில்லை நூரம்மா

வாழ்க்கையின்
வளைவுகளில் விழுந்து நெளியும்போது
நேராகவே செல்ல இயலுவதில்லை நூரம்மா

ஒருவன் அன்புன் ஆறுதலுமின்றி
அப்படியே செத்துபோகலாம் அல்லது
அதைப் பெறவேண்டிய போராட்டத்தில்
செத்துப்போகலாம் நூரம்மா

குழியிலும் அமைதியற்று ஆறுதலற்று
எப்படித்தான் நான் கிடப்பது நூரம்மா

பாசத்தின் உப்பு நீர்த் துளிகளை
எனக்கும் பகிர்ந்தளியுங்கள் நூரம்மா
அந்த ஒன்றிலாவது மீண்டும் பிறக்கிறேன் நூரம்மா

(சுதந்திர தினம் 2008)