ஆசையாக ஓடிவந்தேன் அமெரிக்காவே


2012 பெட்னா வெள்ளிவிழா கவியரங்கத்தில் பாடிய பாடல். வாழ்வாங்கு வாழ்வதற்காக அமெரிக்கா வந்த ஒரு தமிழன் வருத்தத்தோடு பாடும் தெருப்பாடல். டை கட்டி கோட்டு சூட்டு போட்ட அமெரிக்கத் தமிழன் சென்னை மெரினாவில் அனாதையாய் நின்று பாடும் பாடல்.

ஆசையாக ஓடிவந்தேன் அமெரிக்காவே - இப்போ
    அத்தனையும் ஒடஞ்சுபோச்சே அமெரிக்காவே
பாசமான ஊரை விட்டேன் அமெரிக்காவே - இப்போ
    படுறபாடு கொஞ்சமில்லே அமெரிக்காவே

காதலிச்சேன் வெள்ளைக்காரி அமெரிக்காவே - அவ
    கழுத்தறுத்துப் போட்டுட்டாளே அமெரிக்காவே
வளைஞ்சி நெளிஞ்சி ஒருத்தன் வந்தான் அமெரிக்காவே - வந்து
    கட்டிக்கலாம் வாரியான்னு கேட்டுட்டானே

வீடு வாங்கி செட்டில் ஆனேன் அமெரிக்காவே - அதை
    வங்கிக்காரன் ஆட்டைபோட்டான் அமெரிக்காவே
காலமெல்லாம் உழைச்ச காசு அமெரிக்காவே - இப்போ
    கடங்காரன் ஆயிப்புட்டேன் அமெரிக்காவே

காலையில வேலையில சேத்துக்கறான் - அந்த
    ராத்திரிக்கே வேலைவிட்டு தூக்கிடறான்
வெள்ளக்காரன் மேனேஜரா இருந்துக்கரான் - நான்
    மேல போனா காலவாரி விட்டுடுறான்

சேந்து படிச்ச பசங்க எல்லாம் அமெரிக்காவே - அங்க
    ஜில்லா கலெக்டர் ஆயிட்டாங்க அமெரிக்காவே
சொந்த ஊரப் போல சொகம் ஏதும் இல்லே - இதை
    சொல்லப் போனாக் கேட்க ஒரு நாதி இல்லே