25 பெண் ஏன் புரியாத புதிர்?

காதல் கிறுக்கனின் கேள்வி:
"புகாரி ஸார்,உலகம் போற்றும் ஒரு கவிஞர் நீங்கள்.
உங்களாலாவது புரிந்துகொள்ள முடிகிறதா பெண்ணின் மனதின் ஆழத்தை?
சில நேரங்களில் அவள் சிரிப்பின் அர்த்தங்களை?"
*

பெண்ணின் மனதைத் தெளிவாகவே
புரிந்துகொண்டவன் நான்.

புரிந்துகொள்ளவே முடியாது என்று
பெண்ணின் மனதைத் தெளிவாகவே
புரிந்துகொண்டவன் நான் ;-)

என்று இதற்கு நகைச்சுவையாகப்
பதில் தரலாம்தான்

ஆனாலும் ஒரு வாழ்க்கைச்
சுவாரசியத்தை உங்கள் முன் நான் வைக்கிறேன்

பிடித்திருக்கிறதா என்று பாருங்கள்

எந்த ஒரு விசயமும் அறியமுடியாத அதிசயமாய்
இருக்கும் வரைதான் அது அழகு
மீண்டும் மீண்டும் காண வைக்கும் மந்திரம்

பெண்ணின் மனம் புரியாததல்ல
அது சட்டென்று புரிந்துவிடும்
ஆனால் புரிந்தது உறுதிப்படும் முன்
மெல்ல நிறமிழப்பதாய்த் தோன்றும்

என்றால் அவள்
அவளே அறியாத வற்றாப் புதிர்

ஏன்?

அப்படி அவள் இருக்கும்வரைதான்
உங்களுக்கு அவள்மீது சுவாரசியம் இருக்கும்

எல்லாம் பளிச் பளிச் என்று ஆகிவிட்டால்
ஒருவேளை புளித்துப் போகக்கூடும்

வானத்தை ஆயிரம் முறை பார்த்தாலும்
அது ஏதோ ஒரு செய்தியைப்
புதிதாய்ச் சொல்லிக்கொண்டே இருக்கும்

இந்தப் பிரபஞ்சத்தில்
புரிந்துகொள்ளவே முடியாத ஒன்று
ஆகாயத்தைவிட வேறு உண்டா?

அந்த சுவாரசியம்தானே அதன்மீது
அடங்காத ஈர்ப்பை நமக்குள்
கட்டி வைத்திருக்கிறது

இப்படியும் பதில் சொல்லலாம்

ஓர் ஆணின் விழிகளில் ஆயிரம் ஆசைகள்
ஒரு பெண் மட்டும்
ஒற்றை ஆசையோடு இருக்க வேண்டுமா?

ஓர் ஆணின் தேவைகளில்
ஆயிரம் சறுக்கல்கள்
ஒரு பெண் மட்டும்
ஒற்றைத் தேவையோடு மட்டும்
உறைந்து போய் இருக்க வேண்டுமா?

ஓர் ஆண் எப்படியெல்லாம்
மாறித் தொலைந்து விடுகிறான்
இவனை இப்படி நம்புகிறோமே
நாம் ஏமாந்துவிடுவோமோ?

ஏமாந்தால் அவனுக்கு ஒன்றுமில்லை
நாமல்லவா கந்தல் துணியாகிவிடுவோம்
அப்படியல்லவா சமுதாயம் நம்மை
ஆக்கி வைத்திருக்கிறது என்று
ஒரு லட்சம் ஒரு கோடி சந்தேக எண்ணங்கள்
அவள் மனதில் ஊசலாடாதா?

ஆண் கெட்டால் ஒரு அத்தியாயம்தான்
பெண் கெட்டால் புத்தகமே போட்டுடுவாங்க
என்று நம் சமூகத்தில் ஒரு பெண்
உள்ளுக்குள் கதறியழாமல் இருக்க முடியுமா?

ஆக பெண் புதிராவது அவளாலா
அல்லது ஓர் ஆணாலா
அல்லது அவளை அப்படி ஆக்கிவைத்திருக்கும்
ஆண் படைத்த சமூகத்தாலா?

Comments

ரசித்தேன்...

நல்ல கேள்விகளும் கூட...

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்

கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே