மூடப்பட்டுக் கிடக்கும் புத்தகங்கள்

படிப்பதற்காக வாங்கி வைத்த
புத்தகங்களின் அட்டைகளில்
ஏறி நின்று
விருப்பமும் நேரமும்
ஒன்றை ஒன்று
தேடிக்கொண்டிருக்கின்றன

நிரம்பி வழியும் சறுக்கல்களில்
ஓடிப் போகும் நேரத்தைத்
தப்பவிடும் விருப்பம்
எங்கே தொலைந்தாய் நேரமே
என்று சாடுகிறது

துளியும் வைத்துக்கொள்ளாமல்
வாரிக்கொடுக்கும் நேரம்
நேரம் கிடைக்கும்போதெல்லாம்
எங்கே தொலைந்தாய் விருப்பமே
என்று வழக்காடுகிறது

கத்தி கம்புகளோடும்
நித்திரை விழிப்புகளோடும்
மான அவமானங்களோடும்
அட்டைகளின் மேல்
யுத்தம் விருவிருப்படைகிறது

மூடப்பட்டுக்கிடக்கும்
புத்தங்களின் உள்ளே
தீர்வுகள் எழுதப்பட்டிருக்கலாம்

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
விருப்பமிருப்பின் நேரம் கிடைக்குமல்லவா
ந்ன்றி நண்பரே