*வெற்றிக்கு மந்திரம் மனவீரம்*
இசை கூட்டி தமிழ்க் கவிதைகள் எழுதுவது எனக்குப் பிடித்த விசயம்.
யாப்பிலக்கண விதிகளைப்பற்றி அதிகம் நான் கவலைப்படுவதில்லை. ஆனால் அதன் சுவைகளைப் பெரும்பாலும் களவாடிக்கொள்வேன்.
இந்தக் கவிதை ஒவ்வொரு வரியிலும் ஒரு கருத்தைச் சொல்லி நிறைவு செய்துகொள்கிறது.
நிறைவு செய்து கொள்வதோடு நின்றுவிடாமல் அடுத்த வரியையும் தன் கருத்தோடு கொக்கியிட்டு இணைத்துக்கொள்கிறது.
இதுபோன்ற கவிதையின் ஒரு வரியை மட்டுமே ஒரு கவிதையாய் அறிமுகம் செய்யலாம்.
சில வரிகளை மட்டும் இணைத்து ஒரு கவிதையாய்க் காட்டலாம்.
கீழிருந்து மேலாக வாசித்துச் சுவைக்கலாம் அல்லது இடையிலிருந்து தொடங்கி கீழ்நோக்கிச் சென்று பின் மேல்நோக்கிச் செல்லலாம்.
காலங்களில் அவள் வசந்தம் என்று ஒரு திரைப்பாடல். கவியரசர் கண்ணதாசன் எழுதி இருப்பார். அந்தப் பாடலும் இவ்வகைக் கவிதைதான். ஒவ்வொரு வரியும் தனித்து இயங்கக் கூடையன
*
கோடுகள் வாழ்க்கையில் ஏராளம் - அந்தக்
கோட்டுக்குள் நாடகம் அன்றாடம்
தாவிடும் ஆசைகள் கூத்தாடும் - இன்பத்
தவிப்புக்குள் சிக்கியே நாளோடும்
மூடிய மாங்கனி வீடாகும் - உள்ளே
முத்தாக வாழ்வது வண்டாகும்
கூடுகள் இன்பத்தின் ஆதாரம் - அந்தக்
கூட்டுக்குள் அன்புதான் தேனூட்டும்
கட்டிய காலுடன் நாட்டியம் - கண்கள்
கட்டித்தான் காட்சிகள் அரங்கேற்றம்
ஒட்டிய தேவைகள் போராட்டம் - உயிரின்
ஓலந்தான் ஞானமாய் வேரோட்டும்
வெட்டிய கீறலாய் ஏமாற்றம் - தொடரும்
வெற்றெதிர் பார்ப்போ ரணமாக்கும்
தொட்டது தோற்பது சிறையாகும் - தொட்டுத்
திறவாமல் வெற்றியும் திசைமாறும்
இருட்டினில் கண்களும் கூராகும் - துயரம்
இடைமுட்ட வாழ்வோ சீராகும்
கருத்தினில் இழையா கனவுலகம் - வெற்று
காற்றோடு கரைந்து மணலாகும்
பருந்திடம் மாட்டிய குஞ்சாக - நாளும்
போராடித் தவிக்கும் நன்னெஞ்சம்
விருந்தென மடிவது படுமோசம் - வாழ்க்கை
வெற்றிக்கு மந்திரம் மனவீரம்
அன்புடன் புகாரி