Showing posts with label Tamil. Show all posts
Showing posts with label Tamil. Show all posts

யாதும் ஊரே யாவரும் கேளிர்

எல்லாமும் எங்கள் ஊரே
எல்லோரும் எங்கள் உறவே

தீயதும் நல்லதும்
பிறர் தந்து வருவதில்லை

வறுந்துதலும் தணிதலும்கூட
மற்றவரால் வருவதில்லை

சாதல் புதுமையில்லை
வாழ்தல் இன்பமென்று
மகிழ்வதும் இல்லை
வெறுத்து வாழ்வே துன்பமென
விலகியதுமில்லை

மின்னலோடு வானம்
குளிர்மழை பொழிய
கல் மண் புரட்டி இறங்கிப்
பெருகியோடும் ஆற்றின்
திசையிலேயே செல்லும்
சிறு படகினைப் போலே
ஆருயிர் வாழ்வும் செல்லுமென்று
பகுத்தறிவோர் ஊட்டிய
அறிவினால் தெளிந்தோம்

ஆகையினாலேயே
பெரியோரை வியந்து
போற்றுவதுமில்லை
அதைவிடச்
சிறியோரை இகழ்ந்து
தூற்றுவதுமில்லை

*

யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன;
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்
இன்னாது என்றலும் இலமே; ”மின்னொடு
வானம் தண் துளி தலைஇ, ஆனாது
கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று
நீர் வழிப்படூஉம் புணை போல், ஆர் உயிர்
முறை வழிப் படூஉம்என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

கணியன் பூங்குன்றன்
(புறம்: 192)


வாழ்க தமிழ்

வித்தகர் யாவரும்
கூடிடுவீர்
விண்ணிலும் தமிழை
ஏற்றிடுவீர்

முத்தமிழ் இன்றியோர்
வாழ்வேது
முரசுகள் ஒலித்தே
போற்றிடுவீர்

இரத்தமும் பீறிடும்
தமிழாக
முத்தமும் ஊறிடும்
தமிழ்பாட

பித்தமும் தெளிந்திடும்
தமிழ்பேச
பேய்களும் வணங்கிடும்
தமிழ்கேட்க

எத்தனைப் பொற்கரம்
தமிழோடு
இமயமும் அற்பமே
தமிழுக்கு

நித்திரை மறந்து
தமிழெடுப்போம்
நீலவான் எங்கிலும்
நட்டுவைப்போம்

கவிஞர் புகாரி
டொராண்டோ தமிழ் இருக்கை
University of Toronto Chair in Tamil Studies
ஜூன் 25, 2018

Image may contain: 3 people, people smiling, people standing and suit

இன்று சரித்திரம் காணாத ஓர் அருமை நிகழ்ச்சி டொராண்டோ பல்கலைக்கழகத்தில் இனிதாய் நடந்தேறியது. ஒரே மணி நேரத்தில் 600,000 கனடிய டாலர்களைத் தாண்டி மகத்தான வசூல். இதில் பாதிக்கும் மேல் நன்கொடை வழங்கியவர்கள் அமெரிக்காவிலிருந்து இதற்கென விமானத்தில் வந்திறங்கிய தமிழ்நாட்டுத் தமிழர்கள் எனும்போது மெய் சிலிர்த்தது.

ஹார்வர்ட் தமிழ் இருக்கை அமைக்க 6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்பட்டது. அதை பெருவெற்றியுடன் திரட்டி நிறுவிய சூடு இன்னும் ஆறவில்லை. அந்தச் சூட்டோடு சூடாக டொராண்டோ பல்கலைக்கழகத்தில் அடுத்ததொரு தமிழ் இருக்கை.

டொராண்டோ தமிழ் இருக்கைக்கு 3 மில்லியன் கனடிய டாலர்கள் போதுமாம். அமெரிக்க டாலர்களில் கணக்கிட்டால் சுமார் 2.5 மில்லியன் டாலர்கள் போதும்.

ஹார்வர்ட் தமிழ் இருக்கைக் குழுமத்தின் தலைவர் ஜானகிராமனும் திருஞானசம்பந்தமும் தொடங்கிவைத்த யோகமா இது என்று தெரியவில்லை. மின்னல் வேகத்தில் நன்கொடைகள்  'கொடை' (குடை)யின்றி நிற்கும் பெண்ணின் மீது விழும் மழையாகக் கொட்டிப் பொழிந்தன.

ஹார்வர்ட் தமிழ் இருக்கைக் குழுமத்தின் சார்பாக ஜானகிராமன் 51,000 அமெரிக்க டாலர்களை (சுமார் 70,000 கனடிய டாலர்கள்) முதல் நன்கொடையாக வழங்கித் துவங்கிவைத்தார். பின் 50, 000, 25,000, 10,000 என்று பல்கிப் பெருகி வந்து குவிந்தன நன்கொடைகள்.

இரண்டு வருடங்களில் 3 மில்லியன் சேர்த்தால் போதும். 18 மாதங்களில் சேர்த்துவிட வேண்டும் என்று திட்டமிட்டார்கள். போகின்ற போக்கைப் பார்த்தால் ஓரிரு மாதங்களிலேயே 3 மில்லியன் சேர்ந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. ஏனெனில் பெரும்பாலான இலங்கைத் தமிழர்கள் இன்னும் நன்கொடை வழங்கத் துவங்கவே இல்லை.

டொராண்டோ தமிழ் இருக்கைக்கு ஒரு சிறப்பு உண்டு. இங்கே தமிழ் ஆர்வத்தோடு பயில அநேகம் பேர் இருக்கிறார்கள். மாணவ எண்ணிக்கை நிச்சயமாக ஹார்வர்ட் இருக்கையைக் காட்டிலும் பன்மடங்காய் அதிகரிக்கும் என்று நான் நம்புகின்றேன்.

தமிழக அரசிடமிருந்து வாழ்த்துச் செய்தி வேறு வந்தது. அடுத்து நன்கொடையும் வரக்கூடும்.

கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் MP நேரில் வந்து வாழ்த்துச் செய்தி வழங்கினார். கனடிய அரசு நிதியுதவி செய்யுமா என்று தெரியவில்லை. தமிழுக்கென்று கனடிய அரசும் ஏதேனும் செய்யத்தானே வேண்டும் என்று எனக்குத் தோன்றியது.

எனக்குள் சற்றே கவிதைச் சிறகுகள் படபடத்தன. அப்படியே எழுதி வைக்கிறேன் ஆனந்தத்தோடு கீழே:

*

உலகெலாம் தமிழ் இருக்கை!

இருகை குவித்து நறுமுகை விரித்து
இருக்கை இருக்கை என்றார்கள்
காணுமிடமெலாம்

ஏதென எட்டிப்பார்த்தேன்
அட இறக்கை இறக்கை
எங்கும் இறக்கை என்றே
கண்டேன்

ஒவ்வொன்றாய் இறக்கைகள்
வெடித்துப் படபடக்க
அடடா
வான் கிழித்துப் பறக்கும்
வைரப் பறவையாய்த்
தமிழ்

தமிழ்த்தாய்க்கு
புலம்பெயர் ஏக்கப் பிள்ளைகள்
எடுத்துக் கட்டும் பொன்னாரங்கள்
அள்ளி வழங்கும் பொற்கிழிகள்

நீறு பூத்த நெருப்புத் தமிழ்
இங்கே பற்றி எரியுதடி
தங்கமே தங்கம்
என்று பாடத் தோன்றியது

*
உலகில்
ஏழாயிரம் எட்டாயிரமாய்
மொழிகள் மொழிகள்

இருந்தும்
ஏழே ஏழுமட்டுமே
அவற்றுள் செம்மொழிகள்

செம்மொழித் தேர்வின்
தகுதிகளோ பதினொன்று
அவற்றுள்
ஆறு மொழிகள் பெற்றது
ஏழோ எட்டோதாம்

அத்தனையும் பெற்றது
உலகில்
ஒரு மொழிதான்
ஒரே ஒரு மொழிதான்
அது நம் தமிழ் மொழிதான்
தமிழா தமிழா
அது நம் தமிழ் மொழிதான்

*
உலகின்
பழம்பெரும்
பல்கலைக் கழகங்களின்
இருக்கைகளுக்கு
ஏற்றப் பெருமை சேர்க்கும்
எங்கள் தமிழ் மொழி
எங்கள் தமிழ் மொழி
என்றென்றும் வாழியவே

அன்புடன் புகாரி



நன்றியுரை

என் புத்தக வெளியீட்டிற்கு வந்து சிறப்பித்த டொராண்டோ வாழ் தமிழர்களுக்கு நான் சொன்ன நன்றியுரையின் துவக்கமாக இப்பாடலை வாசித்தேன். இது சிந்துவகைப் பாடல். இசைகூட்டிப் பாடிப்பார்க்கலாம்.

*


இந்தியா இன்பத்திரு நாடு - இங்கே
  இருப்போரில் பலருக்கும்
  அதுதானே கூடு

சிந்தாத முத்தாரப் பேழை - தெற்கில்
  சிரிக்கின்ற தமிழ்நாடோ
  வைரப்பொன் மாலை

வந்தோரை வாழவைக்கும் அருமை - அந்த
  வளமான மண்ணுக்குப்
  பொருள்தந்த பெருமை

செந்தாழம் பூவாகத் தஞ்சை - எங்கும்
  செழித்தோங்க நெல்வார்க்கும்
  எழிலான நஞ்சை

நானந்த மண்பெற்ற பிள்ளை - நெஞ்சில்
  நாளெல்லாம் அணைக்கின்றேன்
  நல்லதமிழ்ச் சொல்லை

மானந்தான் தமிழர்தம் எல்லை - உண்ட
  மண்தாண்டி வந்தும்மண்
  மறந்ததே இல்லை

வானத்தின் வண்ணங்கள் கூடி - எந்தன்
 வார்த்தைக்குள் உயிராக
 வரவேண்டும் ஓடி

தேனொத்த வாழ்த்துக்கள் பாடி - வந்த
   டொராண்டோ தமிழர்க்கென்
   நன்றிகளோ கோடி

பூவுலகம் நிறைத்துப்
புலம்பெயர்ந்து வாழும்
புதுப்பிஞ்சுகளின் நாவிலும்
தமிழ்
சர்க்கரைப் பொங்கலாய்ப்
பொங்கவேண்டும்

அதுவே எங்கள் திசை
அதுவே எங்கள் தேடல்
அதுவே எங்கள் பயணம்
அதுவே எங்கள் இலக்கு
அதுவே எங்கள் வெற்றி

அன்புடன் புகாரி
மிக நெருங்கி வந்துவிட்டோம் தமிழர்களே
தமிழ் இருக்கை இதோ இதோ
தமிழ் இருக்கையால் ஹார்வர்ட் பெருமையடையப் போகும் நற்பொழுது இதோ இதோ
இந்த அளவிற்கு ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தை இதற்கு முன் யாரும் உலகறியப் பேசி இருக்க முடியாது என்றே சொல்லலாம்.
அந்த அளவிற்கு தமிழால் தமிழ் இருக்கையால் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் இன்று பேசப்படுகிறது.
உலகத் தமிழர் அனைவரின் விருப்பங்களையும் ஆசைகளையும் நிறைவேற்றி நிமிரும் ஆய்வுகளை ஹார்வர்ட் இருக்கை தரவேண்டும்.
அதை அறிவுசால் நம் தமிழ் உலகம் ஒவ்வொரு நொடியும் கவனமாகப் பார்த்துக்கொண்டே இருக்கும்.
தமிழைப் பற்றிப் பிடித்து ஹார்வட்டின் பெருமை இவ்வுலக அரங்கில் மேலும் உயர்ந்து வளரும் என்று நான் முழுதாக நம்புகின்றேன்
அன்புடன் புகாரி
ஹார்வர்டில் மட்டுமல்ல உலகின் அத்தனைப் பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கை அமைக்க வேண்டும்
தமிழ் இருக்கையின் பலன் என்ன என்று தமிழர்களாகிய நாம் சிந்தித்துக்கொண்டிருக்கிறோம்.
தமிழ் இருக்கை பலன் தந்துவிடப் போகிறது அதைத் தடுத்துவிட வேண்டும் என்று யாரெல்லாம் சிந்தித்துச் செயல் பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று சிந்தியுங்கள்
*
எங்கள்
உணர்வில்
உயிரில்
கலந்திருப்பது
தமிழ்
அதை
உங்கள்
சின்னஞ்சிறு
கைக்குட்டையால்
துடைத்தெறிந்துவிட
முடியாது
வீழ்வது
எதுவாக இருப்பினும்
வாழ்வது
தமிழாகவே இருக்கும்
தமிழர்தம்
நெஞ்சாங்குழிப்
பேழைகளில்
கவிஞர் புகாரி
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழிய வே!

வான மளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழிய வே!

ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
இசைகொண்டு வாழிய வே!

எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!
என்றென்றும் வாழிய வே!

சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையக மே!

தொல்லை வினைதரு தொல்லை யகன்று
சுடர்க தமிழ்நா டே!

வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!
வாழ்க தமிழ்மொழி யே!

வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே!

-பாரதியார்
எங்கள்
உணர்வில் உயிரில்
கலந்திருப்பது
தமிழ்
அதை உங்கள்
சின்னஞ்சிறு
கைக்குட்டையால்
துடைத்தெறிந்துவிட முடியாது

வீழ்வது
எதுவாக இருப்பினும்
வாழ்வது
தமிழாகவே இருக்கும்
தமிழர்தம்
நெஞ்சாங்குழிப் பேழைகளில்

கவிஞர் புகாரி
தமிழ் ஆங்கிலம் இந்தி தமிழ்நாடு இந்தியா

கடந்த வருடம் நான் டொராண்டோ ’பாங்க் ஆஃப் மான்றியலில்’ ஒன்றரை ஆண்டு ஒப்பந்தப் பணி செய்தேன். அங்கே எனக்கு ஒரு நண்பன் வாய்த்தான். அவன் ’கனடியன் டயரில்’என்னோடு வேலை செய்தவன்தான். மான்றியல் வங்கியிலும் என்னோடு வேலை செய்தான்.

அவன் பெயர் வருண், பஞ்சாப்காரன். பழகுவதற்கு இனிமையானவன்.  நாங்கள் ஆங்கிலத்தில்தான் பேசிக்கொள்வோம். ஒரு நாள் ‘நீ நல்லே இருக்கே’ என்றான். 'வருண், என்னாச்சு எப்படித்தெரியும் உனக்குத் தமிழ்' என்றேன். எனக்குத் தமிழ் தெரியாது. இந்த வரி மட்டும்தான் தெரியும், நான் தமிழ்நாட்டில் 5 வருடங்கள் வேலை செய்தேன் என்றான்.

5 வருடங்கள் தமிழ் நாட்டில் மட்டுமல்ல, இரண்டு வருடங்கள் கொச்சின் - கேரளாவிலும் வேலை செய்திருக்கிறான். ஆனால் அவனுக்குத் தமிழும் தெரியாது மலையாளமும் தெரியாது. இந்தி தெரியும் ஆங்கிலம் தெரியும். அவ்வளவுதான்.

அவன் பஞ்சாபி என்றாலும் டெல்லிதான் அவனது வாழ்விடம்.

அவன் இன்னொரு தகவலையும் சொன்னான். நான் மட்டுமல்ல, ஏராளமான வட இந்தியர்கள், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் வெகுகாலம் பணி செய்கிறார்கள் என்றான். ஏன் என்றேன். கணினித் துறையில் தென் இந்தியாதானே கொடி கட்டிப் பறக்கிறது என்றான். எனக்குக் கிடைத்த முதல் வேலையே தமிழ்நாட்டில்தான் என்றான்.

இந்தியா மட்டும் நேற்று பிறந்த மொழியான இந்தியை விட்டுவிட்டு பழம்பெரும் மொழியான தமிழை, நாடு முழுவதும்  கல்வி மொழியாய் ஆக்கி இருந்தால், எத்தனை நன்றாக இருக்கும்?

செம்மொழியான தமிழ் மொழி இந்திய ஆட்சி மொழி என்றால் உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு எத்தனை உயர்ந்துவிடும்?

அடர்ந்தியான இலக்கிய இலக்கணங்களைக் கொண்ட சிந்து சமவெளி நாகரிகம் கண்ட ஒரு மொழியை ஏற்பதால் இந்தியாவின் பழம்பெரும் பண்பாடு கலாச்சார மெல்லாம் எப்படியெல்லாம் உயர்த்திப் பிடிக்கப்பட்டிருக்கும்?

என்றெல்லாம் பட்டியல் இட்டு, நான் ஆதங்கப்படவில்லை பேராசை கொள்ளவில்லை.

ஒரு பெரிய உண்மையைச் சாட்சியோடு உணர்ந்தேன்.

ஆங்கிலம் எங்கள் கல்வி மொழி அதுவே எங்கள் அலுவல் மொழி எனும்போது வருணுக்கும் எனக்கும்தான் எத்தனை நெருக்கம்? நான் தமிழ் அவன் பஞ்சாபி என்பது மறந்துபோய், அதற்காக அடித்துக்கொள்ளாமல் இந்தியர்களாய்த் தோள்சேர்ந்து நிற்கிறோம்.

நான் என் பள்ளியில் இருமொழி படித்தேன். ஆங்கிலம் + தமிழ்.
வருண் அவன் பள்ளியில் இருமொழி படித்தான். ஆங்கிலம் + இந்தி. ஒரு மலையாளி அவன் பள்ளியில் இருமொழி படிக்கிறான். ஆங்கிலம் + மலையாளம். ஒரு தெலுங்கன் அவன் பள்ளியில் இருமொழி படிக்கிறான். ஆங்கிலம் + தெலுங்கு.

இந்தியா செழுமையான பாரம்பரியங்களைக் கொண்டது. அதன் செழுமையில் மிகப் பெரும் செழுமை அதன் மொழி வளம். ஒவ்வொரு மொழியுமே உயர்ந்த மொழி. எந்த மொழியின் மீதும் எந்த மொழியும் ஏறி மிதித்து அழிக்கப்பார்க்கும் கேடு இந்தியாவை அழித்துவிடும்.

ஐரோப்பாவைப் போல தமிழ்நாடு தனி நாடு, கேரளா தனிநாடு, ஆந்திரா தனிநாடு, பஞ்சாப் தனிநாடு, வங்காளம் தனி நாடு. என்று அத்தனையும் தனித்தனி நாடுகளாய் இருந்தால்தான் அவரவர் தாய் மொழியைக் காப்பாற்ற அவர்களால் முடியும், அல்லாமல் சேர்ந்து ஒற்றுமையாய் ஒரே நாடாக இருந்தால் நடுவண் அரசின் இந்தி மொழி மாநில மொழிகளை அழித்துவிடும் என்றால் அங்கே மிகப் பெரும் பிழை இருக்கிறது. பிழையல்ல குற்றம் இருக்கிறது  குற்றமும் அல்ல கொடுங்கோல் இருக்கிறது.

உலகில் ஏராளமான மொழிகள் உண்டு. எல்லோரும் தாராளமாகப் படிக்கலாம். யார் தடுத்தார்? ஆனால் இதைத்தான் படிக்க வேண்டும் என்று நடுவண் அரசு இந்தி மொழியைத் தூக்கிக்கொண்டு வந்தால் தீப்பொறிதான் பறக்கும், இரத்த ஆறுதான் ஓடும், நாடுகள் வெட்டுப்பட்டுத் துண்டுகளாகித்தான் போகும்.

வெறுப்புதான் எகிறும் ஒற்றுமைதான் சுக்குநூறாகும்.

இதற்கு மேல் எப்படிச் சொல்லிப் புரியவைப்பது?

மொழி வெறியைக் கைவிடு இந்திய நடுவண் அரசே!

அன்புடன் புகாரி
யார் சொன்னது
தமிழ்
வயிற்றுமொழி  இல்லை
என்று

தமிழன்
தமிழ்நாட்டில்
தமிழ் படித்தால்
இல்லைதான்

ஆனால்
ஆங்கிலேயன்
ஆர்வர்டில்
தமிழ் படித்தால்
உண்டல்லவா

அன்புடன் புகாரி
20180123
மிகுந்த வறுமையில்...

செல்வத்தால்
புலம்பெயர் நாட்டில்
ஏழைகள் என்று
எவருமே இல்லை

ஆனால்
தமிழ்ப் பிள்ளைகளுக்குத்
தமிழ் வேண்டுமா
என்பதில்
மிகுந்த வறுமையில்
இருக்கிறார்கள்



அன்பின் மணி மணிவண்ணன், ஹார்வர்ட் தமிழ் இருக்கை நான் துவக்கம் முதலாகவே, ஆதரிக்கவும் முடியாமல் எதிர்க்கவும் முடியாமல் நடுவிலேயே நின்று கொண்டிருந்தேன். நாலும் தெரிந்த என் இனிய தமிழ்பற்று நண்பர்களாகிய நீங்கள் எல்லோரும் ஏதேனும் சிறந்த பயன்பாட்டைச் சொல்லி என்னை ஆதரவின் பக்கம் இழுப்பீர்கள் என்று நம்பினேன். ஆகையினால்தான் நான் தொடர்ந்து கேள்விகள் கேட்டேன். ஆனால் என்னை மீண்டும் அதே நிலைக்கே கொண்டு வந்து விட்டுவிட்டீர்கள் ஆகவே இப்போதும் ஆதரவும் இல்லை எதிர்ப்பும் இல்லை. நான் ஆதரிக்க இந்த இருக்கை எந்த பெரிய நல்லதையும் செய்யப் போவதில்லை நான் எதிர்க்க இந்த இருக்கை எந்த ஒரு கேட்டையும் தமிழுக்குச் செய்துவிடாது என்றும் நம்புகின்றேன். அப்படியே கேடிழைத்தாலும், அது வடமொழியர் செய்ததுபோல கேடாக்க வழியே இல்லை என்றும் நம்புகின்றேன். தமிழ் அறிந்த தமிழனுக்கு இயலாது தமிழே அறியாத ஆங்கிலேயனுக்குத்தான் இயலும் என்று தமிழர்கள் கைப்பட எழுதிக் கையெழுத்திட்டுக் கொடுக்கிறோமே என்ற கேட்டினைத் தவிர வேறு கேடு எனக்குப் பெரிதெனத் தெரியவில்லை. உண்மைத் தமிழர்களின் ஆறு மில்லியன் டாலர்களும் அயராத சேவைகளும் ஆங்கிலேயரின் பல்கலைக் கழகத்திற்கு ஒரு நன்கொடையாகிப் போகட்டும். நம்மூர் அரசியல்காரன் ஒருசில நிமிடத்தில் சம்பாதிக்கும் அற்பத் தொகைதான் அது. ஓர் இருக்கைக்காக கடைக்கோடித் தமிழனும் தன் ஏழ்மையிலும் பொருள் தந்து உதவி இருக்கிறான். அத்தனை உயர்வாய் அவன் தமிழை மதிக்கிறான் என்ற எண்ணமே தமிழுக்குச் சிம்மாசனம் எனக்குக் கண்களில் நீர். தமிழ் இருக்கை என்பது இரு கை ஓசை அல்ல ஒரு கை ஆசை தமிழுக்குச் சிலர் ஊட்டுகிறார்கள் தமிழால் சிலர் ஊட்டப்படுகிறார்கள் இந்த இருக்கைப் பணியில் நான் பெரிதும் நேசிக்கும் மிக உயர்ந்த, சிறந்த, நல்ல தமிழர்கள் இருக்கிறார்கள். அதைக் கண்டே நான் பலகாலும் மௌனமாகவே இருந்திருக்கிறேன். அந்த மௌன நாட்களிலும் எனக்குள் பெரும் சூராவளி உள்ளே சுற்றிக்கொண்டேதான் இருந்தது. இன்றைய பாழ்நிலை நாட்களில், நாம் தமிழுக்குச் செய்யக் கூடையன எத்தனையோ இருந்தும் ஏன் இப்படி ஏன் இப்படி ஏன் இப்படி என்றே குமைவேன்! தாய்நிலத் தெருக்களிலும் தமிழ்வளர்ப் பாடங்களிலும் புலம்பெயர்க் கூடுகளிலும் புதுப்பிஞ்சு நாவுகளிலும் தமிழை அழகாக வளர்க்க, வாழச் செய்ய இந்த இனிய உயர்ந்த தமிழர்கள் ஒன்று கூடட்டும் ஒருநாள். அந்த நாளுக்காகக் காத்திருப்பேன் தத்தளித்துத் தவிக்கிறாள் தமிழ்த்தாய் ஆழ்கடல் விழுந்து உப்புநீர் விழுங்கி மூச்சுமுட்டி தத்தளித்துத் தவிக்கிறாள் தமிழ்த்தாய் கை கொடுத்துக் காப்பாற்ற ஒற்றைத் தமிழனும் இங்கில்லையாம் தத்தளித்துத் தவிக்கிறாள் தமிழ்த்தாய் கரையோரக் கூடத்தில் தங்க இருக்கை ஒன்று அவசர அவசரமாய்த் தயாராகிறதாம் தாயவளோ தத்தளித்துத் தவிக்கிறாள் நடுக்கடலில் மஞ்சள் பூசிக் குங்குமம் இட்டு மாலைகள் சூடி மலர்கள் தூவி பறை மேளம் கொட்டி மேற்கத்தியக் குத்தாட்டம் ஆடிக் களிக்க கரையோரக் கூடத்தில் தங்க இருக்கை ஒன்று அவசர அவசரமாய்த் தயாராகிறதாம் தாயவளோ தத்தளித்துத் தவிக்கிறாள் நடுக்கடலில் கை கொடுத்துக் காப்பாற்ற ஒற்றைத் தமிழனும் இங்கில்லையாம் அன்புடன் புகாரி
தத்தளித்துத் தவிக்கிறாள்
தமிழ்த்தாய்

ஆழ்கடல் விழுந்து
உப்புநீர் விழுங்கி
மூச்சுமுட்டி

தத்தளித்துத் தவிக்கிறாள்
தமிழ்த்தாய்

கை கொடுத்துக்
காப்பாற்ற
ஒற்றைத் தமிழனும்
இங்கில்லையாம்

தத்தளித்துத் தவிக்கிறாள்
தமிழ்த்தாய்

கரையோரக் கூடத்தில்
தங்க இருக்கை ஒன்று
அவசர அவசரமாய்த்
தயாராகிறதாம்

தாயவளோ
தத்தளித்துத் தவிக்கிறாள்
நடுக்கடலில்

மஞ்சள் பூசிக்
குங்குமம் இட்டு
மாலைகள் சூடி
மலர்கள் தூவி
பறை மேளம் கொட்டி
மேற்கத்தியக் குத்தாட்டம்
ஆடிக் களிக்க

கரையோரக் கூடத்தில்
தங்க இருக்கை ஒன்று
அவசர அவசரமாய்த்
தயாராகிறதாம்

தாயவளோ
தத்தளித்துத் தவிக்கிறாள்
நடுக்கடலில்

கை கொடுத்துக்
காப்பாற்ற
ஒற்றைத் தமிழனும்
இங்கில்லையாம்

அன்புடன் புகாரி

ஆயிரம் இருக்கைகள் அமைத்து
ஆய்வதைக் காட்டிலும்
சால உறு தவ நனி கூர் கழிச்
செயல் ...

ஆங்கோர் தமிழனுடன்
தமிழில் உரையாடி ...

தாய்நிலத் தெருக்களிலும்
தமிழ்வளர்ப் பாடங்களிலும்

புலம்பெயர் கூடுகளிலும்
புதுப்பிஞ்சு நாவுகளிலும்

வாழும் மொழியென
தமிழை
வாழவைப்பதே

அன்புடன் புகாரி
நான் மேடையேறியதும் தமிழ்த்தாய்க்கு ஒரு வணக்கம் சொல்லிவிட்டு என் கவிதையையோ உரையையையோ தொடங்குவது வழக்கம். அதற்காக நான் அவ்வப்போது தமிழ்த்தாய் வாழ்த்து எழுதிக்கொண்டே இருப்பேன். அவற்றுள் சில இங்கே. இவற்றுள் எந்த வாழ்த்து உங்களுக்கு நெருக்கமாக இருக்கிறது என்றும் ஏன் என்றும் கூறுனால் மகிழ்ச்சி

கூகுளின் நெற்றியில் - தமிழே
நீயொரு குங்குமப் பொட்டு

செல்பேசி அலைகளில் - தமிழே
நீயொரு பொங்கு மாக்கடல்

இணையக் கூடுகளில் - தமிழே
நீயொரு தாய்ப் பறவை

கணினி முற்றங்களில் - தமிழே
நீயொரு கோடி நிலா

முகநூல் முகப்புகளில் - தமிழே
நீயொரு தேவதை நாட்டியம்

டிவிட்டர் இழைகளில் - தமிழே
நீயொரு ட்ரில்லியன் மீட்டர்

வலைப்பூ வனங்களில் - தமிழே
நீயொரு தீராத் தேன்கூடு

மின்னஞ்சல்கள் தோட்டங்களில் - தமிழே
நீயோர் ஆடும் பொன்னூஞ்சல்

குழுமக் கருத்தாடல்களில் - தமிழே
நீயோ நான்காம் தமிழ்ச்சங்கம்

தமிழே தமிழே

அன்று நீ சங்கத் தமிழ்
இன்று நீ டிஜிட்டல் தமிழ்

நாளை வரும் நவீனத்திலும்
நீயே தமிழே தாயே

உனக்கு என்
தலையாய முத்த வணக்கம்


****


சந்திரனில் கையசைத்து
       செவ்வாயில் கால்பதித்து
மந்திரமாய் மின்வெளியில்
       மந்தகாசம் செய்கின்றாய்
எந்திரமாய்ச் சென்றவாழ்வை
       இழுத்துவரும் உந்தனுக்கு
வந்தனங்கள் தந்தவண்ணம்
       வருகின்றேன் தமிழ்த்தாயே
 
****

செம்மொழியே செம்மொழியே
செந்தமிழர்த் தாயே
செம்மொழியே செம்மொழியே
என்றானாய் என்றோ

செம்மொழியே செம்மொழியே
என்றறிந்தும் அன்றே
செம்மொழியே செம்மொழியே
என்றழைத்தார் இல்லை

செம்மொழியே செம்மொழியே
இன்றிதுவோர் மாயம்
செம்மொழியே செம்மொழியே
வந்ததென்ன ஞானம்

செம்மொழியே செம்மொழியே
இன்றேற்றார் மூடர்
செம்மொழியே செம்மொழியே
மன்னிப்பாய் தாயே

****

யுனித்தமிழே
இனிக்கும் கணித்தமிழே

மின்தமிழே
மயக்கும் எண்தமிழே

வலைத்தமிழே
வியக்கும் தொலைத்தமிழே

உலவுதமிழே
இணையம் பழகுதமிழே

சில்லுத்தமிழே
கணியுகச் சொல்லுத்தமிழே

கையகத்தமிழே
வணக்கம் வையகத்தமிழே

இன்னும் சிலவற்றைத் தேடிக்கொண்டிருக்கிறேன். கண்டதும் இடுகிறேன்

அன்புடன் புகாரி

யுனித்தமிழே
இனிக்கும் கணித்தமிழே

மின்தமிழே
மயக்கும் எண்தமிழே

வலைத்தமிழே
வியக்கும் தொலைத்தமிழே

உலவுதமிழே
இணையம் பழகுதமிழே

சில்லுத்தமிழே
கணியுகச் சொல்லுத்தமிழே

கையகத்தமிழே
வணக்கம் வையகத்தமிழே
வெள்ளை என்பது 
அழகல்ல 
நிறம்

ஆங்கிலம் என்பது 
அறிவல்ல 
மொழி

கறுப்பு என்பது
நிறமல்ல
பேரண்டம்

தமிழ் என்பது 
மொழியல்ல 
பண்பாடு


ஓடி விளையாடு பாப்பா, - நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா,
கூடி விளையாடு பாப்பா, - ஒரு
குழந்தையை வையாதே பாப்பா.

சின்னஞ் சிறுகுருவி போலே - நீ
திரிந்து பறந்துவா பாப்பா,
வண்ணப் பறவைகளைக் கண்டு - நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா.

கொத்தித் திரியுமந்தக் கோழி - அதைக்
கூட்டி விளையாடு பாப்பா,
எத்தித் திருடுமந்தக் காக்காய் - அதற்கு
இரக்கப் படவேணும் பாப்பா.

பாலைப் பொழிந்துதரும் பாப்பா, - அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா;
வாலைக் குழைத்துவரும் நாய்தான் - அது
மனிதர்க்குத் தோழனடி பாப்பா.

வண்டி இழுக்கும்நல்ல குதிரை - நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு,
அண்டிப் பிழைக்கும் நம்மைஆடு, - இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா.

காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு - என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா.

பொய் சொல்லக் கூடாது பாப்பா - என்றும்
புறஞ்சொல்ல லாகாது பாப்பா,
தெய்வம் நமக்குத்துணை பாப்பா - ஒரு
தீங்குவர மாட்டாது பாப்பா.

பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா,
மோதி மிதித்துவிடு பாப்பா - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா.

துன்பம் நெருங்கிவந்த போதும் - நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா,
அன்பு மிகுந்ததெய்வ முண்டு - துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா.

சோம்பல் மிகக்கெடுதி பாப்பா, - தாய்
சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா,
தேம்பி யழுங்குழந்தை நொண்டி, - நீ
திடங்கொண்டு போராடு பாப்பா.

தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற - எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா,
அமிழ்தில் இனியதடி பாப்பா, - நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா.

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே, - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா;
செல்வம் நிறைந்த ஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா.

வடக்கில் இமயமலை பாப்பா - தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா,
கிடக்கும் பெரியகடல் கண்டாய் - இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா.

வேத முடையதிந்த நாடு, - நல்ல
வீரர் பிறந்த திந்த நாடு,
சேதமில் லாதஹிந்து ஸ்தானம் - இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா.

சாதிகள் இல்லையடி பாப்பா; - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி, உயர்ந்தமதிகல்வி - அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்.

உயிர்க ளிடத்தில் அன்பு வேணும்; - தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்;
வயிர முடைய நெஞ்சு வேணும்; - இது
வாழும் முறைமையடி பாப்பா.

மகாகவி பாரதி
மச்சான்,
நம் பிள்ளைகளைக் காப்பதற்கான ஒரே வழி, வீட்டில்
குடும்ப அன்பும், 
இஸ்லாம் தரும் அறமும்,
தமிழ் தரும் பண்பாடும்தான்.
அந்த அரணுக்குள் நுழைவது எளிதல்ல.
நாங்கள் இங்கே கனடாவில் ஊரில் வாழ்வதைவிட பாதுகாப்பாக நன்றாகவே வாழ்கிறோம்.
அன்புடன் புகாரி