கவிஞர் புகாரியின் முதல் நூலான வெளிச்ச
அழைப்புகளுக்கு கவிப்பேரரசு
வைரமுத்து வழங்கிய அணிந்துரையில் உள்ள வைர வரிகளே இவை.
இந்த வரிகளை இன்றுவரை நிதர்சனமாக்கி,
உலகெங்கிலும் செறிந்து வாழும் இலக்கிய நெஞ்சங்களில் ஆழமாக வேரூன்றி நிற்கும் இவரது ஆற்றல் அள-விடக்கரியது.
ஒப்பீட்டிற்கும் அப்பாற்பட்டது.
நீராரும் கடலுடுத்த நிலமடந்தையாகிய பரத கண்டத்தின் திலகமான தமிழ்நாட்டில் பிறந்த இவர் மதுரை காமராஜர்
பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று கணினி வல்லுனராகி தமிழையும் கணினியையும் ஒன்றுசேர்த்தார்.
இந்த அடிப்படைப் பின்னணியே இவரை இணையத்தின் அருங்கவிஞராக
உயர்த்தியுள்ளது.
தன் நினைவுக்கு வராத காலத்திலேயே கவிதை எழுத ஆரம்பித்த இவரை
கவிஞரே என்று பள்ளிக்கூட ஆசிரியர்களே அழைத்தனர். 1979ல் இவரது முதல் கவிதை
அலிபாபா சஞ்சிகையில் பிரசுரமானது!
பணி நிமித்தமாக 1981ல் சவுதி அரேபியாவிற்குச் சென்ற இவர்
அங்கிருந்துகொண்டே தீபம், தாய், குமுதம் போன்ற சஞ்சிகைகளுக்கு கவிதைகளை
அனுப்பலானார். 1987ல் கணினி அச்சு எழுத்துக்களை தமிழுக்கென உருவாக்கி வெற்றிகண்ட
இவரது கவிதைகள் சூரியக் கதிர்களாகி உலகெங்கும் விரிகின்றன.
1999ல் கனடாவுக்கு புலம்பெயர்ந்த பின்பே எனக்கு அறிமுகமானார் கவிஞர். இவரது அழகான தமிழ் உச்சரிப்பும், தமிழ்
எழுத்தும் தமிழ்ப்-பற்றும் வெகுவாக என்னைக் கவர்ந்துகொண்டன.
தமிழ்க் கவிதைகளை ஓர் இயந்திர ஆற்றல் போன்று எழுத
ஆரம்பித்த இவருக்கு கனடா உதயன் பத்திரிகை முதற் பரிசுக்கான தங்கப் பதக்கம் வழங்கி
கௌரவித்தது. இதுவே கனடாவில் இவரது ஆரம்பப் படியாகும்.
இவரது முதலாவது நூல் 2002ல் வெளிச்ச அழைப்புகள் என்ற பெயரில் கனடாவில்
வெளியானது.
முதன்முதலாக தமிழ்நாட்டுக் கவிஞர் ஒருவர் வட அமெரிக்கா ஐரோப்பா ஆகிய மேற்குலக நாடுகளில் கவிதைத் தொகுதி வெளியிட்ட
பெருமைக் குரியவர் ஆனார்.
கவிஞர் புகாரியின் பல்வேறு ஆற்றல்கள் ஊடகத்தமிழ் வழியாக வெளிவரத்
தொடங்கின. வானொலி,
தொலைக்காட்சி, இணையம், மின்குழுமங்கள், முகநூல் போன்றவை அவரது திறன்களை
உள்வாங்கிக்கொண்டன.
தமிழகத்திலும் இவரது நூல்கள்
வெளியானமையால் கவிப்பேரரசு வைரமுத்து, மூத்த பத்திரிகையாளர் மாலன் தொடங்கி பலரது தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு தன் விசாலத்தைப்
பெருக்கிக்-கொண்டார்.
எண்ணற்ற கவிஞர்கள் இன்று
இவருடன் பயணிக்-கின்றனர்.
5000க்கும் மேற்பட்ட இணைய நேயர்கள் இவருடன் வலம் வருகின்றனர்.
கனடாவில் தமிழர் தகவல் சஞ்சிகை இவருக்கான இலக்கிய விருதினையும் தங்கப்பதக்கத்தையும் 2019ல்
வழங்கி கௌரவித்-துள்ளது.
கவிஞரின் புதிய இலக்கியத் தடம் அன்புடன் நயாகரா என்ற பெயரில்
பதிவாகிறது. பன்னிராயிரம் ஆண்டுகள் வரலாறுகொண்ட நயாகரா நீர்வீழ்ச்சியைக் கண்டு வியக்காதவர்கள் இல்லை. அவ்-வண்ணமே இவரின் இக்கவியரங்கக் கவிதைகளையும் வாசகர்கள் வாசித்து வியப்பார்கள் என்று நம்புகின்றேன்.
கவியரங்கக் கவிதைகளை சரமாக்கிய
இந்நூல் பத்து அற்புதமான கவிதைகளை உள்ளடக்கிய ஒன்றாகும். கவிஞர்
புகாரியின் நுண்ணிய உணர்வும், மூச்சும், அறிவும் இவற்றில் அப்படியே விரவிவருகின்றன.
அழகின் ஒலிநயப் படைப்பே கவிதை என்ற அலன் போ (Edgar Allan Poe) என்பவரின் சிந்தனை
வரிகளுடன் கவிஞரும் ஒத்துப் போகிறார். கவிதை என்பது கற்பனை, உணர்ச்சி ஆகியவற்றின் மொழியாகும். ஹாஸ்லிட் (William Hazlitt) அவர்களது அற்புத வரிகளும் இவருக்குப்
பொருந்துகிறது.
முதலாவது கவிதை தமிழ்காப்புத் தொல்காப்பியம். இப்படி ஒரு கவிதையை
தொல்காப்பியத்திற்காக எவராவது எழுதி உள்ளார்களோ என்பது தெரியவில்லை. ஆனால்,
தமிழுக்கும் தமிழருக்கும் முதல் நூலான தொல்காப்பியம் இவரால் பெருமை பெறும் என்று
கூறலாம்.
இன்று கிடைக்கப்பெறும் மூத்த தமிழ் இலக்கண நூல், இலக்கிய வடிவில் எழுந்த இலக்கண
நூல், ஒல்காப்புகழ் கொண்ட நூல், உயர்
தமிழ்ச் செம்மொழி நூல் என்றெல்லாம் புகழ்பெற்ற தொல்காப்பியம், இந்நூலின் முதலாவதாக வருவது மிகவும் பொருத்தமானதே.
தொல்காப்பியா நீ புதுமைக்காரனடா என்று புளகாங்தம் கொள்ளும்
கவிஞர் அவரை ஞானத் தந்தை என்றும் அழைக்கிறார்.
பெருவெடிப்பில் பிறந்து
சூரியனோடு சுற்றி விளையாடி
பூமியையே பெற்றெடுத்தவன்
நீயென்று
பொய்யழகு கூட்டிப்
பாடத் தோன்றுதடா
தொல்காப்பியா!
இப்படிக் கவிதையெழுத கவிஞரால் எப்படி
முடிகிறதென வியந்து-போனேன்.
2016 ஜூன் ஐந்தாம் தேதி உலகத்
தொல்காப்பிய மன்றம் கனடா கிளையினரின் முத்தமிழ் விழாவில் அரங்கேறிய இக்கவிதை
உலகெங்கிலும் சென்று சேரவேண்டும் என்பதே என் அவா.
மொழிதொட்டு இலக்கியம்,
இலக்கியம் தொட்டு வாழ்க்கை என்ற அறிய சிந்தனையை வழங்கிய தொல்காப்பியருக்கு இது ஓர்
அர்ப்பணக் கவிதை.
அடுத்துள்ள கவிதை சொர்க்கம் இரண்டு. இயற்கையை அப்படியே தோய்த்து தன்
சொர்க்கங்களான பிள்ளைகளுக்கு அர்ப்பணிக்கும் அற்புதக் கவிஞரே புகாரி. எழிற்கொள்ளை என்ற தலைப்பில் பாடிய இக்கவிதை உண்மையிலேயே ஓர் எழிற்கொள்ளைதான்.
அடுத்துள்ள கவிதை புலம்பெயர் வாழ்வு தேவைதானா? என்பதாகும். இன்றுள்ள
சூல்நிலையில் புலம்பெயர்தல் என்பது தவிர்க்க முடியாத-தாகிறது.
புலம்பெயர்ந்த தமிழர்கள் எதிர்கொள்கின்ற அவலங்களைக் கவிதைகளில் கொட்டித்
தீர்க்கிறார் கவிஞர்.
முதலாவதாக எமது தமிழ்மொழி இங்கு அழிந்துபோகுமோ என்று ஏங்குகிறார். ஈழத்
தமிழர்கள் பிறந்த மண்ணைவிட்டு ஈர உதடுகளில் இரத்தம் கசியக் கசியப்
புலம்பெயர்ந்தனர். இன்று பல்வேறு ஊடகத்திலும், அரசியல் உயர்மட்டத்திலும்கூட உயர்பதவிகள் பெற்று உண்மையாலுமே சொந்த குடிமக்களாகியுள்ளோம் என்று மகிழ்கிறார் கவிஞர்.
அடுத்துள்ள கவிதை மழையல்ல பிழை. அழகு மழை அமுத மழை எனத் தொடங்கிய
கவிஞரின் உள்ளம் மழையின் கொடுமைகளைத் தாங்க முடியாமல், டைனசோர்
குட்டிகள் என்று சாடுகிறார். மழையைப் பற்றி இன்னொரு கவிஞரால் இப்படி எழுத முடியுமோ என்ற
பிரமிப்பை ஏற்படுத்திவிடுகிறது.
அடுத்துள்ள கவிதை விபுலாநந்தர். காரைத்தீவில் பிறந்த
விபுலாநந்தர் உலகம் போற்றிய தமிழ் அறிஞர், ஆன்மிக ஞானி, அறநெறியாளர், சிந்தனையாளர், யாழ்நூலைத் தந்த அற்புதர், தமிழ்ப் பாடசாலைகளைக்
கட்டியெழுப்பிய முன்னோடி.
இவரைப்பற்றி கவிஞர் எழுதிய பாடலின் பின்னரே முழுமையாக என்னாலும் அறிய முடிந்தது.
கவிதை அரங்குகளுக்கு கவிதை இயற்றுவது புகாரிக்கு அவல் தின்கிறமாதிரி. எவ்வளவு
சொல்லாட்சிகள்,
எவ்வளவு நுணுக்கமான பார்வைகள், எவ்வளவு உணர்ச்சிப் பிரவாகங்கள் என்று ஆச்சரியப்படுகிறேன்.
கனடா நூற்றைம்பது என்பது அடுத்துள்ள கவிதை. கனடாவில் முப்பத்தி நான்கு வருடங்களாக வசிக்கும்
எனக்கு இதுவே தாயக பூமியாக மாறிவிட்டது. 20 வருடங்களாக கனடாவில் வாழும்
கவிஞருக்கும் இது ஒரு தாயகம் போலத்தான். அவர் கனடா பற்றிப் பாடும்போது ஏற்பட்ட
மகிழ்ச்சி கவிதைகளில் தெரிகிறது.
கனடா இரண்டாம் தாயகம் அல்ல எங்கள் முதலாம் தாயகம் என்று கூறி மகிழ்ந்துபோகிறார். கனடாவைப்
பாராட்டுவது சொர்க்கத்தைப் பாராட்டுவது போல் அல்லவா என்கிறார்.
அடுத்துள்ள கவிதை ஊடகத் தமிழ். ஊடகமே இன்று தமிழ் வளர்க்கும் ஆரம்பப்
புள்ளி என்பதனை அழகுற விளக்குகிறார் கவிஞர். தாயிடம் கற்க வேண்டியதை இன்று ஊடகமே
ஊட்டுகிறது. ஊடகம்
என்பது தமிழின் உயிர். ஊடகத்தமிழ் உயர்ந்தால், தமிழன் உயர்வான் என்கிறார்.
அடுத்துள்ள கவிதை வன்னிமகள். வன்னியில் வாழாது விட்டாலும் வன்னியைப்
பற்றி நிறையவே அறிந்துகொண்டவர் கவிஞர். வன்னியில் நிகழ்ந்த யுத்த வலியை அப்படியே
கவிதைகளில் வடித்துள்ளார். ஓர் ஈழத் தமிழராகவே மாறியிருக்கிறார். வன்னிமகளின் கண்ணீரில் அவரும் நனைந்து
எம்மையும் நனைய வைக்கிறார்.
நாளைய தமிழன் எதிர்காலத் தமிழன் பற்றிய கவிதை. தமிழிலேயே உரையாடுவான் தமிழன், தமிழ்
இணையம் கணினி யுகம் ஆளும், தமிழ் என்றும் அழியாது, அறிவியலில் சாதிப்பான் தமிழன் என்று மிக அழுத்தமாகக்
குறிப்பிடுகிறார். தமிழனாய் வாழ்வோன் எவனோ அவனே தமிழன் என்று இடித்துரைத்து
முடிக்கிறார் கவிஞர்.
அடுத்த கவிதை நீராக நானிருந்தால். உயிர் மூல வேர், பரிணாம
வேர், மரணமற்ற நீர், உயிர் தந்தேன் உடல் தந்தேன்
உணவும் தந்தேன் வேறு என்னதான் தரவில்லை நான், உன் உடல், உள அழுக்கைக் கழுவுவேன், நானின்றி நீயில்லை உன் எதிர்காலமே நான் தான் நீ எனக்குள் இறங்கு என்று நீர் கூறும் விதமாகக் கவிஞர் கூறுவது சிலிர்க்க வைக்கிறது.
கவியரங்கக் கவிதைகளை இவ்வாறு ஒன்றுசேர்த்து தொகுத்த ஒரு நூலை நான் இதுவரை
பார்க்கவில்லை. அளவுக்கு மீறிய பிரமிப்பைத் தரும் கவிதைகளை என்னால் இத்தொகுப்பில் பார்க்க முடிகிறது.
உலகத் தமிழ் ஊடாக உலகறிந்த கவிஞராக வலம்வரும் இவரது கவிதைகள் அனைத்தும் இவரது ஆத்மாவிலிருந்து உருவானவை-யாகும்.
அறிவியல் அழகியல் உளவியல் சமூகவியலென எல்லா-வற்றையும் ஒரு
சேரக் கட்டும் திறம் இவருக்கே உள்ள தனித்துவம்.
கவிதை உலகில் கவிஞர் புகாரியின் இருப்பிடம் இணையில்லாத ஒன்று.
தொல்காப்பியருக்கு பலகோடி முத்தங்கள் தரவேண்டும் என்று எழுதிய கவிஞருக்கு
தமிழர்களாகிய நாமும் பலகோடி முத்தங்கள் தரவேண்டும் போல் உள்ளது.
இந்த நூற்றாண்டில் தமிழ் வாழ்வதற்குரிய பெருமைக்கு கவிஞர் புகாரியின்
பங்களிப்பு மிகவும் முக்கியம் ஆகும். அவரது கவிதைகள் ஞானச் சூரியன்களாய் வலம்வர வேண்டும்
என்பதே எனது ஆசையாகும்.
சிந்தனைப்பூக்கள் எஸ். பத்மநாதன்
ஜூன் 2019, கனடா
தூறல் சஞ்சிகையின் வாழ்நாள் சாதனையாளர் விருது, மணிவிழாக்
குழுவினரின் சிந்தனைச் செல்வர் விருது, தமிழர் தகவலின் இலக்கியச்
சேவை விருது என்று பல விருதுகளைத் தொடர்ந்து பெற்றுவரும் சிந்தனைப்பூக்கள் பத்மநாதன்,
சிந்தனைப்பூக்கள் நூல்களின் ஆசிரியர்,