பொய் பொய்யல்ல பொய்தான் பொய்

பொய் என்பது கள்ளம் என்பதோடு தொடர்புடையது. அப்படியான ஒன்றையே பொய் என்று சொல்ல வேண்டும்.

அன்பே உன் நாணம்
கோடி நிலாக்களின்
ஊர்வலம்

என்று காதலன் காதலியைப் பார்த்துக் கவிதை சொல்லும்போது அது பொய்யல்ல. அவன் மன உணர்வுகளின் இலக்கிய வடிவம்.

ஓர் ஊரில் ஒரு ராசகுமாரி இருந்தாளாம் என்று ஆரம்பித்து கற்பனையின் உச்சம்வரை செல்லும் கதாசிரியன் பொய் சொல்லவில்லை. தன் கற்பனையை இலக்கியமாக்குகிறான்.

நீ ஒரு வாய் வாங்கிக்கலேன்னா நான் அந்த நிலாவுக்குக் கொடுத்துடுவேன் என்று ஒரு தாய் சொல்வது பொய்யல்ல. உணவு ஊட்டுவதற்கான அளவற்ற பாசம்.

காந்தியின் கதை முழுவதையும் மூன்று மணி நேரத்தில் ஒரு படமாக எடுத்துக் காட்டியது பொய்யல்ல. திரைக்கலை. காந்தி தூங்கி எழுந்திருக்கவே குறைந்தது ஆறு மணி நேரம் ஆகும், பிறகு எப்படி அவர் கதையை மூன்றுமணி நேரத்தில் சொல்லமுடியும்?

இதுபோன்ற பொய்கள் ஏராளம். அவை யாவுமே பொய்களல்ல.

உண்மையான பொய் என்பது கள்ளம் நிறைந்தது.

நீதான் என் உயிர், உன்னைத்தான் நான் கல்யாணம் செய்துகொள்வேன். இல்லாவிட்டால் சத்தியமாய் நான் செத்துவிடுவேன், இது உன் மீது சத்தியம் ஆகவே இப்போ.... அவசரமா.... என்று கள்ள உள்ளத்தோடு காமம் தேடுகிறவன் சொல்வது பொய். சொல்லும்போதே அவன் அறிவான் அது பொய் என்று.

ஆகவே நோக்கமே ஒரு விசயத்தை பொய்யாக மாற்றுகிறது.

பெண்டாட்டியை ஏமாற்றுவதற்காக, அலுவலகத்தில் இன்று ஆடிட் என்று கூறுவது பொய்தான்.

இலக்கியத்திலும் கலையிலும் சொல்வதும் செய்வதும் பொய்யெனக்கொள்வது கற்பனையையும் உணர்வுகளையும் அவமதிப்பதன்றி வேறில்லை.