அன்பை உயிரில் பொருத்து

2017 கனடா உதயன் பல்சுவைக் கலை விழாவில், சாலமன் பாப்பையா பட்டிமன்றங்கள் வளர்த்தெடுத்த திரு. ராஜா தலைமையில் ஒரு பட்டிமன்றம் டொராண்டோவில் நிகழ்ந்தது. சிறந்த வாழ்க்கைத் துணைக்குத் தேவை அன்பா அறிவா என்பதே தலைப்பு. அன்பு என்ற அணியில் நின்று நான் வழக்காடினேன். அதன் முத்தாய்ப்பாய்பிற்காக நான் எழுதி வாசித்த கவிதையே இது.


கண்திறந்த போதிலும்
காட்சியற்றுப் போகலாம்
பொன்னிறைத்த வீட்டிலும்
புன்னகைக்க மறக்கலாம்

விண்ணொளிரும் மீன்களும்
விழுந்தெரிந்தே போகலாம்
அன்பிருக்கும் வாழ்வுதனில்
இன்பமின்றிப் போகுமா

தரமில்லாத நாவினால்
தகரும் உறவுப் பாலமே
அறமில்லாத அறிவினால்
அழியும் உலகம் யாவுமே

ஒருவர் உயிரில் ஒருவராய்
இருவர் வாழ வேண்டுமா
அறிவைத் தூர நிறுத்து - உயர்
அன்பை உயிரில் பொருத்து



கவிதைகள் பலவிதம்


மரபுக் கவிதைகள்
மடிசார்ப் புடவைகள்
அச்சு மாறாமல்
கட்டுதல் வேண்டும்


புதுக் கவிதைகள்
நவீன ஆடைகள்
விருப்பம்போல
இட்டுக் கொள்ளலாம்


துளிக் கவிதைகள்
        நீச்சலுடைகள்
இயன்றவரைக்கும்
வெட்டியெறிதல் வேண்டும்


அனைத்தும் அழகுதான்
        அனைத்துக் குள்ளும்
பொம்மைகள் இன்றி
உயிர்கள் இருப்பின்



தடங்கள் மாறும் சின்னவரே 

நண்பர்கள் அதிகம் கொண்ட காலம் என்றால் அது பள்ளிப்பருவம்தான். அதன் பின்னர் கல்லூரிக் காலங்கள். என் அத்தனை நண்பர்கள் மீதும் எனக்கு அன்புண்டு பாசமுண்டு அக்கறையுண்டு. திசைமாறும் நண்பர்களைக் கண்டால் வேதனை எழும் ஆனால் கோபம் வராது. அறிவுரை வழங்குவதற்குத் தகுதி என்ன? வயதா அறிவா? இந்த அறிவுரைக் கவிதைக்குக் காரணம் இரண்டுமே இல்லை, என் அன்பு மட்டும்தான். அறிவுரை கூறும் கவிதைகளை நான் நூலாய் வெளியிடுவதைத் தவிர்ப்பேன். ஆனாலும் இதை இடுகிறேன் என்றால் அதற்கும் காரணம் அதே அன்புதான், உயர்வான நட்பன்பு.


அலைமேல் தவறிய துரும்புகளாய்
ஆசைக் கரைகள் சேரும்வரை
தலைகால் புரியாத் தத்தளிப்பில்
தடங்கள் மாறும் சின்னவரே


நீதியும் நியாயமும் தின்றுவிட்டு
நித்திரை என்பதும் வருவதில்லை
ஆசைகள் இல்லா இதயமில்லை
ஆசைகள் இன்றிச் சுகமுமில்லை


செதுக்கிய ஆசைகள் சந்தோசம்
செதுக்கா ஆசைகள் சிறைவாசம்
புதுப்புது ஆசைகள் பூக்கவிடு
பொசுங்கிய ஆசையைத் தூக்கிலிடு


எட்டாக் கிளைக்கும் திட்டமிடு
எட்டிய கனிகளை முத்தமிடு
வெட்டிப் போனதை விட்டுவிடு
எட்டிப் புதியதைத் தொட்டுவிடு

  
கெட்டவை மிஞ்சிய கூடுகளில்
கொட்டுந் தேளே குடியிருக்கும்
ஒட்டிய வயிறு வெந்தாலும்
உண்ண விசமும் தொடுவாயா


நல்லதை அறியும் மனம் வேண்டும்
நல்லதைச் சுவைக்கும் நாவேண்டும்
நல்லதும் கெட்டதும் நம்மோடு
நல்லதைக் கொண்டே சுகம்தேடு


அன்புடன் நான்

என்
தோகையையே
நான் விரிக்காதவன்

என்
நகங்களையே
நான் அணியாதவன்

ஏமாளியல்லன்
இதயம் உள்ளவன்
கோமாளியல்லன்
கருணை உள்ளவன்

மனிதநேயத்தோடு
நின்றால் கேலி

பித்தலாட்டத்தோடு
நின்றால் கைதட்டல்

உலகம் வினோதமானது
ஆனால்
நான் நானாக இருத்தல்தான்
எனக்கு இயல்பானது
இதய சுகமானது

v   

அன்புடன் நான்…

கட்டிவைத்த
கரையில்லா வெள்ளம் 

எந்நாளும் நீரோடும் 
உயிர் நதி 

காலவாய்க் கொட்டுகளுக்குக்
கட்டுப்படாத தேனீ 

வெட்டிப்பேச்சு         
விரும்பாத வேங்கை

எதற்கும்
வெட்கமின்றி ஒளிவதில்லை 
கருத்தோடு நெருப்பெரியும்
காட்டுத்தீ 

விழி பார்த்து 
உள்மொழி காணும்
தேடல்

தூற்றி வெறுப்போர்க்கும்
விளக்கம் நெய்யும்
தறி

ரசனையெனும் 
அமுதக்கடலில் மிதப்பு
 
அதில் துடிப்புகளின் 
துடுப்புகளாய் அலைவு

பொய்கேட்டுத் 
தீயாகும் ரத்தம்

விரோதிக்கும் அன்பளித்து 
வாக்களிக்கும் நெஞ்சம்

v   

அன்புடன் நான்…

தனக்குள்
எரியும் நெருப்பை
திரியில் ஏற்றும்
எரிமலை

புழுக்கள்
நிறைந்த பூமியைச்
சலிக்கத் தெரிந்த
சல்லடை

அனுபவ
ரத்தம் திரித்து
பாலாய்ச் சுரக்கும்
மார்பு

மொழியின்
வேர்கள் உலுக்கிப்
பூக்கள் கொட்டும்
காம்பு

உணர்வின்
விரல்கள் விரித்து
உழலும் உயிர்க்கு
மருந்து

நிலவும்
வாழ்க்கை வழக்கில்
தலைமுறை கடந்த
தீர்ப்பு

மறுக்கும்
தரையை மிதித்துப்
பறக்கத் தெரிந்த
சிறகு

v   

அன்புடன் நான்…

கருணை அன்பு
கணக்கற்றுப் பொங்கும்
கணங்களில்…

கலை இலக்கியச்
சுகமடிகளில்
கண்மூடித் துடிக்கும்
பொழுதுகளில்…

இரக்கமெனும் ஈகைநதி
இதயம் நிறைத்துப் பாயும்
பொழுதுகளில்….

நெகிழ்கிறேன் நெகிழ்கிறேன்
நெகிழ்ந்துடைந்தே வழிந்துயர்கிறேன்

நெகிழ்ந்து
என்
விழிமணிகளை
உதிர்த்து
நான்
மெல்ல அழும்
பொழுதுகளில்தான்
ஈடற்ற இதய சுகத்தை
இன்னும் வேண்டும்
என்ற
ஏக்கத்தோடு அனுபவிக்கிறேன்