25 கவியரசனே கண்ணதாசனே
அக்டோபர் 17, 1981 கவியரசர் கண்ணதாசன் நினைவு நாள். அந்த நினைவுநாளில் அவர் நினைவாக நான் அவரின் பிறந்தநாளுக்காக எழுதிய ஒரு கவிதை


*

எத்தனை எத்தனையோ
காலங்கள்
எப்படி எப்படியோ
கழிந்தாலும்

சொப்பனத்திலும்
தப்பிப்போகாமல்
நெஞ்ச மத்தியில்
ஞாபகப் பேழைக்குள்

அப்படி அப்படியே
ஒட்டிக்கிடக்கும்
சில
மாண்புமிகு நினைவுகள்

அப்படி ஓர் நினைவினில்
நேசக்கவிதா ஆசனமிட்டு
கம்பீரமாய் அமர்ந்திருக்கும்

என்
இனிய கவிஞனே
கவியரசனே கண்ணதாசனே
இன்றுனக்குப் பிறந்தநாளாம்

ஆனால் நீ இறந்த நாள்தானே
என் ஞாபக நெடுநதியில்
தன்னந்தனிக் கருப்பு ஓடமாய்
தத்தளித்துத் தத்தளித்து
என் உயிரைக் கீறுகிறது

ம்ம்ம்
எப்படி மறப்பது

அன்றுதானே
நீ உன் கடைசி கவிதையை
எழுதி முடித்தாய்..

அன்றெல்லாம்
கூட்டமாய் நண்பர்கள்
என் கூடவே இருந்தபோதும்
எவருக்கும் புலப்படாத
என் தனிமைக் கூட்டுக்குள்
நான் அடைந்து அடைந்து
உள்ளுக்குள் உடைந்து
உதிர்த்த முத்தெழுத்துக்களை
மீண்டும் இன்று
கோத்தெடுத்துக் கட்டுகிறேன்

உன் பிறந்தநாளுக்கு
நீ இறந்தநாளின்
வேதனைக் கண்ணீரே
நான் தரும்
பரிசுத்தமான பெரும் பரிசு..

இதோ என் கண்ணீர்:

ஞானத் தாமரை ஒன்று
மண்ணின் இரைப்பையில்
ஜீரணிக்கப்பட்டுவிட்டது

வேதனை நெஞ்சங்களை
வருடிக் கொடுக்கும்
ஒரு மகத்தான கவிமலர்க்கரம்
தீக்கரங்களுடன்
கை குலுக்கிக் கொண்டுவிட்டது

மாகவியே
இதுதான் உன்
கடைசிக் கவிதையா

ஆனால்
இதை நீ இவ்வளவு சீக்கிரம்
இத்துணைச் சோகமாய்
எழுதி விடுவாய்
என்று நான் எண்ணியிருக்கவில்லையே

கவிதேவனே
உன் வலக்கர விரல்கள் ஆறு

ஆம்..
மைவற்றா தூரிகையும்
உனக்கொரு விரல்தானே

உன்
பாதம்பட்ட இடங்களில்தாம்
எத்தனைக் கவிமணம்

நீ
மயானத் தீவில் நின்று
பாடினாலும்
அங்கே மண்ணைப் பிளந்து
செவிப் பூக்கள் வெளிப்படுமே

உனக்குத் தெரியுமா
கடைசியில் இடும்
என் கையெழுத்தைத் தவிர
என் காதல் கடிதங்களில்
உன் கவிதை முத்துக்களே
ரகசியம் பேசுகின்றன

கண்ணதாசா
என் உயிர் தொட்ட
உன்னதக் கவிஞனே

உன் செவிமலர்க் கதவுகளில்
சாவுமணி ஒலித்தபோது
நீ என்ன செய்தாய்

அழுதாயா

இல்லை
நீ அழுதிருக்கமாட்டாய்

அந்த அகோர ராகத்திற்கும்
ஓர் அழகு கவியல்லவா
படைத்திருப்பாய்

நீ
இருந்தது கொஞ்ச நாள்
இயற்றியது எத்தனை கோடி

நிறுத்தப்படாத
இந்த என் அழுகை
உன் சமாதியைக் கரைத்து
உன்னை வெளிக்கொண்டு வருமா

என் இனிய கவிஞனே
கவியரசனே கண்ணதாசனே
இன்றுனக்குப் பிறந்தநாளாம்

உன் பிறந்தநாளுக்கு
நீ இறந்தநாளின்
வேதனைக் கண்ணீரே
நான் தரும்
பரிசுத்தமான பெரும் பரிசு..

கண்ணதாசன்: ஜூன் 24, 1927 - அக்டோபர் 17, 1981

6 comments:

Nilofer Anbarasu said...

//நிறுத்தப்படாத
இந்த என் அழுகை
உன் சமாதியைக் கரைத்து
உன்னை வெளிக்கொண்டு வருமா//
nalla arumaiyaana varigal.....En Kaneeraiyum avan samaathiyil samarpIkiNdrean......

Anonymous said...

கண்ணதாசனை விளித்து இப்படி ஒரு கவிதையா!

உங்கள் சோகத்தில் நானும் கைகோர்த்துக் கொள்கிறேன்.

Unknown said...

நவனுக்கும் ராஜாவுக்கும் நன்றி

cheena (சீனா) said...

கவியரசைப் பற்றி இப்படி ஒரு கவிதையா - பிறந்த நாளுக்கு இறந்த நாளின் வேதனைக் கண்ணிரைப் பரிசாகக் கொடுக்கும் பாங்கே பாங்கு. நல்வாழ்த்துகள்.

நேரமிருப்பின் பார்க்கவும்

http://padiththathilpidiththathu.blogspot.com/2007/10/blog-post_12.html


http://padiththathilpidiththathu.blogspot.com/2007/10/blog-post_21.html

Unknown said...

அன்பிற்கினிய சீனா,

என்னைப் பற்றிய உங்கள் இடுகைகள் இரண்டையும் முன்பே கண்டு பெருமகிழ்வடைந்திருக்கிறேன்.

உங்களைப் போன்றோரின் பாராட்டுதல்களைப் பெற கொடுத்து வைத்திருக்க வேண்டும்

நன்றி சீனா நன்றி

கண்ணதாசனைப் பற்றிமட்டுமல்ல, சிவாஜி கணேசன், அப்துல் கலாம் ஆகியோருக்கும் கவிதை எழுதி என் வலைப்பூவில் இட்டிருக்கிறேன். வாசித்து உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள்

அன்புடன் புகாரி

நா.பூ.பெரியார்முத்து said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி

www.periyarl.com - பகலவன் திரட்டி



உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….