நூறுபேரிடம் காதல்

நெஞ்சு நெருங்கிய போதெல்லாம்
நல்ல நட்பு பூப்பதைப்போல
வாழ்வில் நூறுபேரிடம்கூட
ஒருவருக்குக் காதல் வரலாம்

ஆனால்
காதல் இதயம் என்பது ஒற்றைக் காம்பு
அதில் ஒரு பூதான் பூக்கும்
அந்த ஒரு பூ காய்ந்து உதிர்ந்தால்தான்
இன்னொரு பூ பூக்கும்

காதலிக்கும் நூறுபேரும்
கைக்குள்ளேயே சிக்கிக்கொண்ட விரல்களைப்போல
நம்முடனேயே இருப்பார்கள் என்றில்லை

வண்ண வண்ண எழிற் கோலங்களில்
நம் உயிர் கரைந்து போனதை
அந்த வண்ணத்துப் பூச்சியிடமே
நாம் சொல்லாததைப்போல
அந்த நூறுபேரிடமும் நம் காதலைச்
சொல்லிவிட்டோம் என்றுமில்லை

வீசிச் செல்லும் வசந்தக் காற்று
சுகத்தையெல்லாம்
நம்மிடம் நிறைவாய்க் கொட்டிவிட்டு
நாம் யாரென்றும் அறியாததாய்
விலகிப்போவதைப்போல
அந்த நூறுபேரும்
நம்மைக் காதலித்தார்கள் என்றுமில்லை

ஆனால்
ஏதோ ஒரு நொடியில் எங்கோ ஒரு நினைவில்
அந்த நூறுபேரும்
நம் உயிரை உரசி ஊதுவத்தியாக்கி
வாசனைப் புகையாய்
நினைவும் நினைவுமல்லாததுமான
வினோதக் காற்றில்
கரையவைத்துச் சென்றிருப்பார்கள்

ஆமாம்
காதல் ஓர் அற்புத உணர்வு
அது இதயத்தின் முழுமொத்தத்துடன்
மல்லுக்குநின்ற உயிரின் பேரவஸ்தை

ஆயினும் ஓர் உண்மையை நாம்
ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்

அந்த நூறு பூக்களில் ஏதோ ஒரு பூமட்டும்
உயிரில் நங்கூரம் செழுத்தி
நகராமல் கிடப்பதைத் தவிர்க்க
எவராலும் இயலுவதில்லை

அந்த ஒரே ஒரு பூமட்டும்
உயிருரசிய தொண்ணூற்றொன்பது பூவிலும்
தன் வாசனையின் ஓரத்தை
அப்பி வைத்திருப்பதை
உணராமல் இருக்க முடிவதில்லை

அந்த ஒரே ஒரு பூமட்டும்
உயிரை இரண்டாய்ப்பிளந்து ஒன்றை மட்டும்
நிரந்தரமாய்க் களவாடிக்கொண்டு
மற்றொன்றை ஜென்மத்திற்கும் தவிக்கவிடாமல்
இருப்பதில்லை

எப்படியோ...
வாழ்வில் நூறுபேரிடம்கூட
ஒருவருக்குக் காதல் வரலாம்தான்

ஏனெனில்
நட்பைத் தவிக்கலாம்
காதலைத் தவிர்க்க முடியாது
புன்னகைப்பதைத் தடுத்தாலும்
பூப்பூப்பதைத் தடுப்பதியலுமா

காதல் காமம்தான் என்றால்
சில நூறு டாலர்கள் போதும்
அதைச் சமாளிக்க

காதல் நட்புதான் என்றால்
ஆணுக்குப் பெண்ணும் பெண்ணுக்கும் ஆணும்
தேவையே இல்லை

காதல் அன்புதான் என்றால்
ஓராயிரம் குழந்தைகள் உண்டு
அதை அள்ளித்தர

காதல் ஈர்ப்புதான் என்றால்
இயற்கையும் கலைகளும் போதும்

காதல் ஆறுதல்தான் என்றால்
தாய்மடியும் இலக்கியங்களும் போதும்

காதல் காதல்தான் என்றால்
காதலுக்கு இவை யாவுமே வேண்டும்

Comments

அருமை அருமை - காதல் காதல் தான் - அது மற்றவையாக ஆக முடியாது. அது அனைத்தையும் உள்ளடக்கியது. காதலில் காமம், நட்பு, அன்பு, ஈர்ப்பு, ஆறுதல், பிரிதல், புரிதல், சேர்தல், இன்பம், துன்பம் அனைத்துமுண்டு. 100 பேரிடம் காதல் கொள்ளலாம் - சொல்ல முடியாது. அது நட்பாக, அன்பாக, காமமாக, ஈர்ப்பாக, ஆறுதலாக மாறிவிடும். ஆனால் அதிலும் ஒன்று தப்பித்து காதலாகவே இருக்கும். பூப்பூக்கும். மலரும். கனியும். மகிழும். மகிழ்விக்கும். காலம் காதலுக்கு உதவும்.
Begum said…
அற்புதம் புகாரி. நூறு பேரிடம் காதல்.......என்பது நிஜமே. காதல் என்பதை வார்த்தைகளால் கூறிவிட முடியாது. அது ஒரு உணர்வு. கண்ணால் காணத ஒருவரிடம் கூட காதல் ஏற்பட்டுவிடுவது தான் விந்தை.
ஒரு சிறந்த கவிதையை தந்தமைக்கு என் இதய நன்றிகள்.

ஆயிஷா
மல்லிகை said…
புகாரி,

எப்போதும் போல கவிதை அழகுதான்..ஆனால் இந்தக் கருத்தை மட்டும் என்னால் ஒத்துக்கவே முடியாது..நீங்களே நட்பு, காமம், அன்பு,ஈர்ப்பு, ஆறுதல் எல்லாம் ஒன்னா வருவதுதான் காதல்னு சொல்லறீங்க..இது அனைத்தும் சேர்ந்து ஒருவரிடம் வருவதே பெரிய விஷயம்..100 பேரிடம் வருவதாவது??

நான் எப்பவும் சொல்வதுபோல், இரண்டாவது முறை ஒருவரிடம் காதல் வந்தால், அப்போ முதலில் வந்தது காதலே இல்லை..இல்ல முதலில் வந்த உணர்வில் காதலுக்கு தேவையான ஏதோ ஒன்று குறைவாக இருக்கும்..

காதல் ஒரே ஒரு முறை, ஒருவரிடம் மட்டுமே சாத்தியம்!! :)

''ஒரு கொடியில் இரு மலர்கள்" கதையெல்லாம் காதலுக்கு ஒத்து வராது!! :)))
அன்புள்ள வாணி,

ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் காதல் கொள்கிறான். ஆனால் அந்தப் பெண் இறந்துவிடுகிறாள். இவன் வயது 20 என்று வைத்துக்கொள்ளுங்கள். இவன் காதலிக்கவே மாட்டானா? அல்லது காதலிக்கவே கூடாதா? அல்லது அப்படி ஒரு பெண்மீது இவன் உருகி வழிந்து உயிரே என்று கொஞ்சி திருமணமும் செய்துகொண்டால் அது காதலே இல்லையா?

இன்னொரு காதல் என்பதே இல்லாமல், விதவைக்கு வாழ்வுண்டா?

இன்னொரு காதல் என்பதே இல்லாமல், ஒரு காதல் தோல்வியடைந்தவனுக்கு வாழ்க்கை உண்டா?

காதலுக்கு நீங்கள் ஆயிரம் பெயர் சூட்டலாம். உண்மைக் காதல், புனிதக் காதல், இளவயதுக் காதல், முதுமைக் காதல், உயிர்க்காதல், மெய்க்காதல், பொய்க்காதல், கல்லூரிக்காதல், பள்ளிக்காதல் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். அடிப்படையில் அவையாவும் காதல் என்றுதானே கூறுகிறீர்கள்?

ஒருகொடியில் ஒருமுறைதான் மலரும் மலரல்லவா என்று எழுதிய கண்ணதாசனைக் கேட்டார்கள். இது உண்மையா கவிஞரே என்று. அட அது அந்தப் படத்து நாயகியின் பேத்தலப்பா. காதல் பல்கிப் பெருகும் என்று சொன்னார்.

ஒரே பொழுதில் ஒன்பதுபேரோடு காதல் வராது என்று சொல்லுங்கள், அது ஏற்புடையது. மரணம் வரை மரித்துப் போனவளே காதலி. என்னோடு வாழ்பவள் காதலியல்ல என்றுகூறினால் அது தாம்பத்தியமில்லை, வேறு பெயராகிப்போய்விடும்!

சரி ஒரு கேள்வி உங்களிடம், ஒரு பெண் ஒருவனைக் காதலிக்கிறாள், கல்யாணமும் செய்துகொண்டால், காலமும் பத்தாண்டுகளுக்கும்மேல் உருண்டோடிவிட்டது. இந்தக் காலங்கள் யாவற்றிலும் அந்தப் பெண்ணுக்கு ஒரே மாதிரியான காதல்தான் அச்சுமாறாமல் அப்படியே இருக்குமா தன் காதலனிடம்? அது ஊஞ்சலைப்போல இங்கும் அங்கும் ஆடவே ஆடாதா?

என் கவிதையை மீண்டும் ஒருமுறை வாசித்துப்பாருங்கள். நீக்கமுடியாத உயர்வான காதல் உணர்வு ஒரே ஒரு பெண்ணிடம் சிக்கிக்கிடக்கும் என்றாலும் காலத்தாலும், சூழலாலும், சந்தர்ப்பங்களாலும், மரணங்களாலும், வாழ்க்கையாலும் காதல்கள் பல்வாராய் மலரவே செய்யும்.

ஆனபோதிலும் உங்கள் எண்ணத்தைத் தகர்ப்பது என் நோக்கம் அல்ல, என் கோணத்தை விளக்குவதே இம்மடல்.

உங்களின் விமரிசனத்திற்கு நன்றி :)
காதல் பல உணர்வுகளின் கலவை..விளக்கம் அருமை...
begum said…
புஹாரி நல்லா சொன்னீங்க.

வாணியோட கருத்தோட ஒத்துப் போக எனக்கு முடியல. அதற்காக அவங்க கருத்தை ஏத்துக்க முடியாதுன்னோ அல்லது பிழைன்னோ நான் சொல்ல வரல்ல. அது அவங்க கருத்து.

நட்பு, காமம், அன்பு,ஈர்ப்பு, ஆறுதல் இது சகலதும் சேர்ந்தது தான் காதலா? எனக்குப் புரியல. இவை எல்லாம் இருந்தாலும் காதல் வரும்........இவற்றில் ஒன்றோ பலவோ இல்லாவிட்டாலும் காதல் வரும். அப்படித்தான் நான் நினைக்கின்றேன்.


காதல் ஒரே ஒரு முறை, ஒருவரிடம் மட்டுமே சாத்தியம்!! : எனும் வாணியின் கருத்து......... நான் ஒருவரைத் தவிர வேரு யாரையும் தவறியும் பார்த்துவிடக் கூடாது.......அல்லது காதலித்து விடக் கூடாது என மனதை பலவந்தமாக கட்டிப் போடும்........பைத்தியக்காரத்தனமான வறட்டுப் பிடிவாதம் அது.

ஒவ்வொருவரும் தம் வாழ்க்கையை திருப்பிப் போட்டுப் பார்த்துக் கொண்டால்.......எத்தனை பேர்.......நம் மனதைப் பாதித்துச் சென்றுள்ளார்கள் என்பது புரியும். பள்ளியில் படிக்கும் போது பருவம் அறியா வயதில் கூடப் படிக்கும் ஒரு கெட்டிக்காரப் பையனிடம் அல்லது பெண்ணிடம் , ஒரு அழகான பையனிடம் அல்லது பெண்ணிடம்.... கற்பிக்கும் ஒரு ஆசிரியையிடம் அல்லது ஆசிரியரிடம்........கூட வேலை செய்யும் இடத்தில் நெருங்கிப் பழகும் நண்பனிடம்.........கண்காணாத இடத்தில் கண்ணால் நேரிடையாக கண்டே இராத ஒரு கவிஞனிடம்..........கலைஞனிடம், ஒரு பாடகனிடம்.....நமக்கு காதல் தோன்றுவதில்லையா? இதில் எல்லாம் எங்கிருக்கு காமம்? இயற்கையின் அழகை இரசிக்கப் பிடிக்கிறது.........இரசிப்பவர்களையும் பிடிக்கிறது..........ஓடிச்சென்று அவர்களிடம் ஓராயிரம் வார்த்தை பேச இதயம் துடிக்கும்.........நம்மையறியாமல் நம் மனதில் ஓர் இடம் பிடித்து விடுகின்றார்கள்........ எப்போதாவது நினைக்கும் போதும் மயிலிறகால் மனதை வருடும்..........ஓர் உணர்வு.......... நிட்சயமாக இது காதல் தான்..... இதில் எங்கிருக்கு.........காமம்?

நம் உள்ளக்கிடக்கைகளை ஒப்புவிக்க ஒரு இதயம், நம் தலை கோரி நம்மைப் புரிந்து கொள்ளும் போது அங்கு தானே காமம் எல்லை மீறுகின்றது. அது நிட்ச்யமாக நம் கணவர் அல்லது மனைவிதானே.

என்னைப் பொறுத்தவரை..........காதல் நம்மை மீறி நமக்குள் நுழைந்து கொள்ளும் ஒரு அற்புத சக்தி........உணர்வு...... இதை புரிந்து கொள்ளத்தான் முடியுமே தவிர ......புரிய வைக்க முடியாதுங்க. நான் ஒருவனிடம் நட்பாகப் பழகினேன்......அதீத அன்பு கொண்டிருந்தோம்.......அதை புரிந்து கொள்ளாத பலர்........காதல் என்றார்கள்......ஆம்....காதல் தான்.........ஏற்றுக் கொண்டோம்........புனிதமாக........பிரிந்தோம்..நண்பர்களாகவே............அவனும் திருமணம் செய்தான்.........நானும் திருமணம் செய்தேன்..........வேறு வேறு நபர்களை....நான் என் கணவருடனும்......அவன் தன் மனைவியுடனும் சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். காதல் ஒரு முறை தான் வரும் என்றால்........என் கணவருடன் என்னால் எப்படி எந்தக் குறையுமின்றி சந்தோசமாக வாழ முடிகின்றது. என் நண்பனின் மேல் வைத்தது காதல் இல்லையென்றால்..........அவன் நினைவு வரும் போதெல்லாம்........என் இதயத்தில் பூ பூக்குமே அது எதற்காக........? அந்த நிமிடமே அவனை பார்க்க உள்ளம் துடிக்குமே.......எதற்காக?

என்னைப் பொறுத்த வரை காதல் எத்தனை பேரிலும் பூக்கலாம். ஆனால் காமத்துடனான காதலின் வெளிப்பாடு நிட்சயமாக ஒருவரிடம் தான்.

அன்புடன் ஆயிஷா.

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்