Showing posts with label * * 09 காதலிக்கிறேன் உன்னை எப்போதும். Show all posts
Showing posts with label * * 09 காதலிக்கிறேன் உன்னை எப்போதும். Show all posts
நீதான் தேவதை
நீயேதான் ராட்சசி

நீதான் தீபம்
நீயேதான் கும்மிருட்டு

நீதான் உயிர்
நீயேதான் மரணம்

நீதான் உடன்பாடு
நீயேதான் முரண்பாடு

நீதான் அமுதம்
நீயேதான் விசம்

நீதான் படுக்கை
நீயேதான் சுடுகாடு

நீதான் தெய்வம்
நீயேதான் சாத்தான்

நீதான் ரகசியம்
நீயேதான் அம்பலம்

உனையன்றி
வேறு எவரும் என்னை
இத்தனை மகிழ்வித்ததில்லை

உனையன்றி
வேரு எவரும் என்னை
இத்தனை துக்கப்பட வைத்ததில்லை

உனையன்றி
வேறு எவரும் என் முன்
இத்தனை
அசடுவழிந்ததில்லை

உனையன்றி
வேறு எவரும் என்னை
இப்படித்
திடுக்கிட வைத்ததில்லை

உனையன்றி
வேறு எவரும் என்னை
இத்தனை சேவையில்
மூழ்கடித்ததில்லை
உனையன்றி
வேறு எவரும் எனக்கு
இப்படியோர் சொர்க்கம் காட்டியதில்லை

உனையன்றி
வேறு எவரும் எனக்கு
இப்படியோர் நரகம் காட்டியதில்லை

உனையன்றி
வேறு எவரும் என்னை
இத்தனை முறை
பிறக்கச் செய்ததில்லை

உனையன்றி
வேறு எவரும் என்னை
இத்தனைமுறை
கொன்றழித்ததில்லை

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

அன்புடன் புகாரி

உனக்கு ஒருநாள்
நான் ஒரு
கவிதை எழுதுவேன்...
அது
உன்னைப்போலவே
வெகு அழகானதாக
இருக்கும்
ஆனால்
நீயே கவிதையாக
இருப்பதால்தான்
அதை
எப்படி எழுதுவதென்று
யோசிக்கிறேன்
அன்புடன் புகாரி
20171122
இந்நொடி உனைக்காண
ஏதோவொன்று
உள்ளிருந்து
துடியாய்த்துடிக்கிறது

கொஞ்சும் தமிழோடும்
குழையும் இதழோடும்
என் உயிரே


காலங்கள்
தன் திருப்பங்களோடு
தொடர்ந்து
பயணித்துக்கொண்டேதான்
இருக்கிறது

நிகழாத நிகழ்வெல்லாம்
நிகழ்த்திக் கொண்டேதான்
இருக்கிறது

ஆனாலும்
யாதொரு மாற்றமும் இல்லை
கண்ணுக்குள் உயிராக
உயிருக்குள் கண்ணாக
நீ

தித்திக்கத் தித்திக்கச்
செவிக்குள் கரும்பாய்
என் இனிய பாவாய்

உன்
கண்களும் காந்தமும்
தமிழும் தகிப்பும்
ஆழமாக பதிந்த
சொர்க்கத்தின் சொர்க்கங்கள்

வந்தால் தருவேன்
நயாகராவாக
வந்ததும்
சட்டென்று கேட்டுவிடாதே
கேட்கும் முன் கொடுக்காவிட்டால்
உனக்கான என் உணர்வுகள்
வெறும் சொத்தைகள்

களவாடப்பட்ட கனவா
நீ
ஆனால்
கனவு எப்படி களவுபோகும்

களவுபோக வழியற்ற
என் கனவே

உயிரும் உயிரும் உயிர்க்கும்
நம் கனவுகளின் திருவிழா
எப்படியும் பூக்கும்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
உன்னை நான்
அள்ளியெடுத்ததில்லை
ஆனால்
உன்னை என் உயிருக்குள்
மெத்து மெத்தென்று உணர்கிறேன் 
கண்ணே
நீ என்னிடம்
பேசியதே இல்லை
ஆனால்
உன் குரல் எனக்குச் சன்னமாய்
மிக அருகில்
கிசுகிசுப்பாய்க் கேட்கிறது
செல்லம்
என்னை உனக்குத் தெரியாது
நான் உன்னைக் கண்டதே இல்லை
ஆனால் உன்மீது நான்
யுகங்களாய் நீண்ட
வெறியன்பு கொண்டிருக்கிறேன்
உயிரே
*
நேற்று பார்த்த படத்தில் வந்த இந்த வசனம் தந்த பாதிப்பில்
I never held you but I feel you
You never spoke but I hear you
I never knew you but I love you

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
வாழ்க்கைப் பெருந்தீவில்
அதிரகசிய மறைபொருள் 
மந்திரமென்று எதுவுமே இல்லை

சுவாரசியமான ஓர் உயிர்
கிசுகிசுப்புத் தூரத்திலேயே
இணக்கமாய் உன்னோடு 
இணைந்திருந்தால்

வெறுமைப் பொழுதுகளின்
எல்லையில்லா
நீளமாவது? அகலமாவது?

அவை அனைத்துக்கும்
ஆழ்கடல் நங்கூரமாய்
ஓர் இரும்பு முற்றுப்புள்ளி
அகற்றமுடியாததாய்
இறக்கப்பட்டிருக்கும்
நிம்மதிக்கும் மகிழ்ச்சிக்கும்
கோடிப் பிறப்புகள் 
குழுமிப் பூத்திருக்கும்

வேறொரு மாய மந்திர 
தேவ தத்துவதும் 
இல்லை இந்த வாழ்க்கையில்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
அதேதான் என் அன்பே
உன் குரலில் நான் கரைகிறேன்
உன் குழலில் நான் கரைகிறேன்
உன் விழியில் நான் கரைகிறேன் 
உன் மொழியில் நான் கரைகிறேன்
உன் விரலில் நான் கரைகிறேன்
உன் வளைவில் நான் கரைகிறேன்
உன் இதழில் நான் கரைகிறேன்
உன் தமிழில் நான் கரைகிறேன்
உன் கழுத்தில் நான் கரைகிறேன்
உன் கவியில் நான் கரைகிறேன்
உன் அழகில் நான் கரைகிறேன்
உன் அணைவில் நான் கரைகிறேன்
இன்னும் நான் கரைகிறேன்
உன் எதிலும் நான் கரைகிறேன்
ஆயினும் என் அன்பே
இத்தனை இத்தனையாய்
நான் இப்படி இப்படியாய்
கரைந்து கரைந்து
உருகும்போதும்
எப்படி எப்படித்தான் என் ஆயுள்
இப்படி இப்படியாய்க் கூடுகிறதோ
என்று
அந்தச் செப்படி வித்தை
அறியாதவனாய் அதிசயிக்கிறேன்
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
மகிழ்ச்சி மொட்டுகள்
பூக்களாய் உடைந்து
மகரந்தம் சிந்தும்போது
தூக்கம் 
தானே வரும்

ஆனால்
தூங்க மனம் வருமா
என்று தெரியாது

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
இரண்டும்
உன்னுடையவைதான்

இரண்டிற்கும்
என்மீது
கொள்ளைப் பிரியம்தான்

ஆயினும்
மேலுதடு
வசந்தநிலத் தேனாய்
வழிய...

கீழுதடு மட்டும்
ஏனடி இப்படிக் கொதிக்கின்றது
பாலைவனக் கோடையின்
பேரீச்சங்கனியாய்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
* * *

உன் கன்னத்தில்
படுத்துறங்க
முடிவெடுத்துவிட்டேன்

எந்தக் கன்னத்தில் என்று
முடிவெடுக்கத்தான்
முடியவே இல்லை

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
என்னை நீ வந்து
கடைசியாய்ச் சந்தித்த நாளில்
பூத்திருந்த குறிஞ்சி
மீண்டும் பூக்கவா நீ
காத்திருந்தாய்

இப்போது வந்த நீ
இன்னுமொரு குறிஞ்சி
பூக்கும் வரையிலாவது
எனக்குள்ளேயே இருக்கும் நீ
என்னுடனேயே இருப்பாயா

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
காய்ந்த சிறகு ஒன்று
என் காலடியில் கிடந்தது

குனிந்து எடுத்து
என் கைகளில் ஏந்தினேன்

ஒரு
முத்தம் பதித்தேன்

அடுத்த நொடி
காய்ந்த சிறகின் மேனி
தங்கநிறமானது

சருகின் உடைந்த ரேகைகளில்
பசுமையின் ஒளி ஏறிச்
சீராகின

ஓரங்களில்
பொன்நிறத் துகள்கள்
உதிரத் தொடங்கின

வெட்டுக்கிளியின்
வகை வகையான
சின்னஞ்சிறு இறக்கைகள்
சடசடவெனப் பலநூறாய் முளைத்தன

அடடா
காய்ந்த சிறகு
ஓவிய அழகில்
ஆகாய வெளியில்
சிலுசிலுவெனப்
பறக்கத் தொடங்கிவிட்டது

அது செல்லும் திசையையே
பார்த்துக்கொண்டு நின்றேன்
ஆச்சரியமாய்

இப்படியே
என் முத்தங்கள் எல்லாம்
பறந்து பறந்து வந்து
உன் இதழ்களையே சேருமானால்

உனக்கல்லாத
என் முத்தங்களை
நான் எப்படித்தான்
பத்திரப்படுத்தி வைப்பேன்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

மணத்தைத் தழுவும்போது
வரும் நட்பு என்பது
மலரையே தழுவும்போது
காதலாகிறது

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
நீ
என்னைப்
புரிந்துகொள்ளும்
நாள் ஒன்று
நிச்சயமாய் வரும்
உறுதியாய் வரும்
சத்தியமாய் வரும்
என்று
மிகமிகத் திடமாய் நம்புகின்றேன்
நான்

ஆனால்
அந்த நாளை நினைத்தால்தான்
பாட்டி
பேய்க்கதைச் சொல்லிமுடித்த
நடு இரவில்
நூறு ரத்தக் காட்டேறிகளுக்கு
நடுவில் நிற்கும் சிறுவனைப்போல
என்
உயிரின் உள்ளும் புறமும்
நடுக்கமோ நடுக்கமாய்
நடுங்குகின்றன

இந்த
உலக அழிவைச்
சந்திக்கும் தைரியம்
எனக்குத்
துளியும் இல்லையே

ஆனாலும்
கடும் போராட்டத்திற்குப் பின்
நான்
அந்த நாளைச் சந்திக்க
மெல்ல மெல்லத்
தயாராகிவிட்டேன்

நீ
என்னைப்
புரிந்துகொள்ளும்
அந்த அரிய நிகழ்வு
ஒருநாள்
நிகழத்தானே வேண்டும்

இறைவா
அருள்வாய்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
என்னை ஏன் இப்படி
உடைந்தழிய வைக்கிறாய்?

காயங்களை
ஆற்றும் மயிலிறகு
காயம்பட்டே செத்துப்போவதா?

என் செவிக்குள்
உன் உதட்டுச் சிறகுகளை அசை
உன் துயரங்களிலிருந்து
பறந்து பறந்து வெளியேறுவாய்

அரவணைக்க வரும் உயிரை
நிராகரித்தல் தற்கொலை

உன் மன அமைதியாய்
என் பெயர் மாறினால்
என் உயிர் இருப்பின்
பொருள் விளங்கும் எனக்கு

கட்டுக்கடங்காத கண்ணீரை
உன் கட்டளைக்குள்
கட்டிவைத்திருக்கிறாயே

உனக்கே
நீ ஏன்
எதிரியானாய்

ஒரு கனவு விரிகிறது
என் மடியில் நீ
நான் பாடுகிறேன்

கங்கை
நீர் வீழ்ச்சியாய் விழுவதைப்போல்
என் கண்கள்

வார்த்தைகள் அழுகைக்குள்
அமிழ்ந்து அமிழ்ந்து
சிதைந்து போகாத அர்த்தங்களுடன்
வெளிவருகின்றன

அது எனக்கு
உயிர் வாழ்க்கை

உன்னால்மட்டுமே
அதைத் தரமுடியும்

வேறு எவர் தந்தாலும்
ஏற்றுக்கொள்ளும் உள்ளம்
இல்லை என்னிடம்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
எங்கிருந்து வந்தாய்

உன் வேர்களில்
எப்படி வந்தது என் வாசம்

உன் வாசத்தில்
எப்படி பூக்கிறது என் காலம்

இன்றோடு எனக்கொரு
புது ஜென்மமா

நீயா...
நீயேதானா
அதைத் தரவந்த தேவதை

உன்னை
அணைக்கத் துடிக்கிறேன்
ஆனால் மாட்டேன்

உன்னை
முத்தமிட ஏங்குகிறேன்
ஆனால் மாட்டேன்

உன்னுள்
மூழ்கிப்போக கொதிக்கிறேன்
ஆனால் மாட்டேன்

ஏன்

நீ சொல்
என்னைத் தெரிந்த
கர்வம் உனக்கிருந்தால்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
உன்னையே உயிரென்று
நான்
ஏற்றிவைத்த பின்
உன்னை
எப்படி அழைப்பதாய்க்
கற்பனை செய்தாலும்
புல்லரிக்கவே செய்கிறது

...பைத்தியம்
...பிசாசு
...உசுரு
...லட்டு
...ராட்சசி
...டைனசர்
...செல்லக்குட்டி
...சாத்தான்

நீ பைத்தியம் என்றால்தான்
என் நோய் வைத்தியம் பெறும்

நீ பிசாசு என்றால்தான்
என் உயிர் உனதாகிப்போகும்

நீ உயிர் என்றால்தான்
தமிழ் எனக்குக் கவிதைகள் தரும்

நீ லட்டு என்றால்தான்
என் எறும்புகளெனைக் கொல்லாதுவிடும்

நீ ராட்சசி என்றால்தான்
என் காதல் சாந்தம் பெறும்

நீ டைனசர் என்றால்தான்
என்னைத் தேடித்தேடிக் கடிப்பாய்

நீ செல்லக்குட்டி என்றால்தான்
என் மடிவிட்டு இறங்கவே மாட்டாய்

நீ சாத்தான் என்றால்தான்
நான் உன் ஆப்பிள் உண்ணுவேன்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
* * *

எங்கே நீ என்று
என்னிடம் கேட்டால்
நான் எப்படிச் சொல்வேன்


நீ
கண்டுபிடித்தால்
ஒப்படைத்துவிட
ஓடோடி வந்துவிடாதே

ஏனெனில்
நீ
கண்டுபிடிக்கப்போவது 
என்னை அல்ல
உன்னை

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

நீ ஒரு வானம் கொண்டுவந்தாய்
நான் ஒரு வானம் கொண்டுவந்தேன்

உன் நட்சத்திரங்களை
நீ என் வானில் இறைத்தாய்
என் நட்சத்திரங்களை
நான் உன் வானில் நிறைத்தேன்

இரண்டு வானங்களிலும்
நீயே ஒற்றை நிலவானாய்
உன்முக ஒளியெழிற்காகவே
நான் கதிர்வீசும் சூரியனானேன்
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
பசுமை விரித்த
இலைகளால் மட்டுமின்றி
நீருக்கு மேலே எட்டிப் பார்க்கும்
வேர்களாலும் சுவாசிக்கும்
அலையாத்தியை போல
உள்ளத்தின் உதடுகளால் மட்டுமின்றி
உயிரின் இழைகளாலும்
என்னையே சுவாசிக்கும்
அடியாத்தி
நீ என் அலையாத்தி

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

*

குறிப்புகள்:

அலையாத்தி என்பது ஒரு வகை மரம். இது கடலோரங்களில் தொடர்ச்சியாகக் காண்ப்படும். இதை சதுப்புநிலத் தாவரம் என்று கூறலாம்.

2008ல் இந்தியா சென்றபோது முத்துப்பேட்டையில் உள்ள இந்த அலையாத்திக் காட்டுக்குச் சென்றிருந்தேன். அருமையான பயணமாக இருந்தது. ஒரு படகில் பதினைந்துபேர் சென்றோம்.

அலையாத்தி மரம் அலைகளைக் கட்டுப்படுத்தக்கூடியது. இதனால் சுனாமி போன்ற பெரும் ஆபத்துக்களும் தடுக்கப்படும்.

இதன் வேர்கள் வினோதமானவை. அதை கீழே வாசியுங்கள்

Adaptations to low oxygen
Pneumatophore penetrates the sand surrounding the mangrove tree.
Red mangroves, which can survive in the most inundated areas, prop themselves above the water level with stilt roots and can then absorb air through pores in their bark (lenticels). Black mangroves live on higher ground and make many pneumatophores (specialised root-like structures which stick up out of the soil like straws for breathing) which are also covered in lenticels. These "breathing tubes" typically reach heights of up to thirty centimeters, and in some species, over three meters. There are four types of pneumatophore—stilt or prop type, snorkel or peg type, knee type, and ribbon or plank type. Knee and ribbon types may be combined with buttress roots at the base of the tree. The roots also contain wide aerenchyma to facilitate oxygen transport within the plant.
* *

சந்தேகிக்க
நூறு விழுக்காடு
வாய்ப்பிருந்தும்
துளியும்
சந்தேகிக்காத
கசடறு அன்பே
காதல்


காதலிக்கிறேன் உன்னை எப்போதும்