நட்பு காதல் கல்யாணம் பிள்ளைகள்

ஆணுக்கும் பெண்ணுக்கும் நட்பு மிக முக்கியமானதுதான்.
இருவரும் ஒன்றாகவே நட்பு பாராட்டுகிறார்கள்

ஆனால் காதல் என்று வந்துவிட்டால்
நட்பு ஒருபடியாவது கீழே இறங்கிவிடுகிறது
ஏனெனில் காதலின் நெருக்கம் மனம் + உடல்
இரண்டையும் ஆட்சி செய்கிறது
தனக்கே என்பதில் அதிக சுயநலமானது

கல்யாணம் என்று வந்துவிட்டால்
காதல் சில படிகள் கீழே இறங்கிவிடுகிறது
என்பது நடைமுறை உண்மை
உரிமைகளும் பொறுப்புகளும் வந்ததும்
காதல் வெளிக்காட்ட நேரமின்றி தடுமாறுகிறது
உடல்கள் பழகியபின் ஈர்ப்பில் அலட்சியம் புகுந்து
அதிகாரங்கள் உயர்ந்து காதல் காயப்படுகிறது
ஆனாலும் உண்மையான வேர்க்காதல்
உள்ளே ஒளிந்துகொண்டுதான் இருக்கும்

குழந்தைகள் என்று வந்துவிட்டால்
ஆண்களின் காதல் மனைவியிடம் அப்படியே இருக்கும்
ஆனால் பெண்ணின் காதல் பிள்ளைகளுக்கு மாறிவிடும்
அதுதான் பெண்ணின் படைப்பு
பெண் அப்படிப் படைக்கப்படவில்லை என்றால்
இனவிருத்தி உயிரின பெருக்கும் எல்லாம்
இல்லாமல் அழிந்துபோகும்


*

நட்பு முதலாக

ஆண் பெண் நட்பு
24-7 திறந்துகிடக்கும் சொர்க்க வாசல்
நட்பு நாடும் ஈர்ப்பில்
இருவருமே இமயங்கள்
காதலென மாறின் நட்பு
ஒருபடியேனும் கீழிறங்கும்

மனம் + உடல் என்ற
இரு பெரும் வாழ்வுச் சக்திகளை
தனதாட்சிக்குள் கவர்ந்து
தனக்கே தனக்கென்பதில்
சுயநலம் மிகுத்து
பேருறுதிகொள்வது காதல்

கல்யாணம் என்றாகிவிட்டாலோ
சன்னமாய்ச் சில படிகள்
கீழிறகிப் போய்விடுவதே
காதல்

உரிமைகள் பொறுப்புகள்
பழகியபின் வரும்
உடல் ஈர்ப்பு அலட்சியங்கள்
தொடரும் மனவெளி வெறுமைகள்
அதிகார உயர்வால் காதல் காயங்கள்
என்று துரிதகதியில் நீர்த்துப்போனாலும்
உண்மை வேர்க்காதல்
உள்ளின் உள்ளே ஒளிந்தே கிடக்கும்

குழந்தைகளென்று
உறவுவான் விரிந்துவிட்டால்
ஆண் காதல் பெண்ணிடம்
அப்படியே அப்பிக்கிடந்தும்
பெண் காதல் பிள்ளைகளுக்கென்று
புலம்பெயர்வதைத் தடுப்பதற்கில்லை

அவ்வண்ணமாய்ப் பெண்
படைக்கப்படவில்லையெனில்
இனவிருத்தி உயிர்ப்பெருக்கம்
என்பவையாவும் கழிந்து
பிரபஞ்சம் உடைந்தழியும்

Comments

Shama said…
சரியாகச் சொன்னீர்கள்...உண்மையிலும் உண்மை... இதுவே யதார்த்தம்!

அன்புடன், ஷாமா (ஜெர்மனி).

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சென்னை விழா நன்றியுரை

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

காணி நிலம் வேண்டும் பராசக்தி

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ