தடிச்ச ஒதட்டுக்காரி தாராள மனசுக்காரி


தடிச்ச ஒதட்டுக்காரி
     தாராள மனசுக்காரி
படிச்ச புத்திசாலி
     பழக்கத்துல கெட்டிக்காரி

முடிஞ்ச மனமுடிச்ச
     முடிஞ்சதுன்னு சொல்லிப்புட்டா
வடிஞ்ச கண்ணுக்குள்ள
     வாய்க்கால வெட்டிப்புட்டா

இடிஞ்சித் தூளானேன்
     இடியாப்ப நூலானேன்
ஒடிஞ்ச மனசோட
     ஒப்பாரி பாடுகிறேன்

விடிஞ்ச பொழுதோடும்
     விடியாமத் தவிக்கிறேன்
மடிஞ்ச உசிரோட
     மயாணத்துல நடக்கிறேன்

படிஞ்ச கூந்தலிலே
     முடிஞ்சி வெச்சிருந்தாள்
நொடிஞ்சு போனவனை
     நிமித்திப் பாத்திருந்தாள்

கடிஞ்சு ஒருசொல்லைக்
     கனவுலயும் சொன்னதில்லை
ஒடஞ்சி ஒருநாளும்
     ஓரநகம் கீறவில்லை

அடைஞ்ச சுகமெல்லாம்
     ஆட்டிவச்சுப் பாக்குதடீ
ஒடஞ்ச கண்ணாடியா
     ஒம்மொகத்தைக் காட்டுதடீ

செடிக்குப் பூவாட்டம்
     சித்தாளு நடையாட்டம்
கடையும் மோருக்குள்ள
     கூத்தாடும் நுரையாட்டம்

மடிக்குள் பூவாட்டம்
     மத்திமீன் கொழம்பாட்டம்
நடுவான நெஞ்சுக்குள்ள
     நாளெல்லாம் வாழ்ந்தவளே

பிடிச்சது பிடிச்சதுதான்
     பிடிக்காமப் போவாது
கடிச்சது கடிச்சதுதான்
     காதல்கனி மாறாது

துடிக்குது மனமயிலு
     தூங்காத பூங்குயிலு
வடிக்குது விழியருவி
     வத்தாத செங்குருதி

ஒடஞ்சது ஒம்மனசு
     இடிஞ்சது ஒங்கனவு
துடிக்குது ஒன்னுசுரு
     ஒன்னநீ காக்கவாடீ

5 comments:

விசாலம் said...

அன்பு புஹாரி ஜி கிராம மணம் கமிழ கண்முன் சித்திரம் தீட்டிவிட்டீர்கள்

வரதராஜன் - சிங்கை said...

வடிஞ்ச கண்ணுக்குள்ள வாய்க்கால வெட்டிபுட்டா

அற்புதமான வரிகள். மிகவும் நெகிழ்ந்து போனனன் படித்து.
வரத ராஜன்.அ.கி
சிங்கப்பூர்

பூங்குழலி said...

பழக்கத்தில் கெட்டிக்காரி

நல்லாருக்கு இது

செடிக்குப் பூவாட்டம்
சித்தாளு நடையாட்டம்
கடையும் மோருக்குள்ள
கூத்தாடும் நுரையாட்டம்


அழகோ அழகு ..கூத்தாடும் நுரையாட்டம் .....


பிடிச்சது பிடிச்சதுதான்
பிடிக்காமப் போவாது
கடிச்சது கடிச்சதுதான்
காதல்கனி மாறாது


புதுசா இருக்கு ...


ஒடஞ்சது ஒம்மனசு
ஒடஞ்சது ஒங்கனவு
ஒடஞ்சது ஒன்னுசுரு
உன்னைநீ காப்பாத்துடீ


அழகான பாடல் புகாரி ...

ஆயிஷா said...

ஆசான் இந்தக் கவிதை ரொம்பவே பிடிச்சிருக்கு. அத்தனை வரியும் அழகு.
அன்புடன் ஆயிஷா

Prabhu said...

Mr Buhari. Excellent rendition in your writing

Prabhu