*****இன்று ஏதாவது கவிதை எழுதினீர்களா?

அறிதலில்லா அறிதல் கவிதை நூலுக்கான என் முன்னுரை


இன்று ஏதாவது கவிதை எழுதினீர்களா?' என்று கேட்கிறார்கள் சிலர்.

என் கவிதைகளை வாசிக்க வேண்டும் என்ற தாகம் அவர்கள் கண்களில் மிதக்கலாம் அல்லது ஒரு கவிஞனை விசாரிக்கும் சம்பிரதாய கேள்வியாகவும் அது இருக்கலாம்.

இந்தக் கேவிக்கு பதிலாக 'இல்லை' என்று ஒரு சொல்லிலும் பதில் கூறலாம் அல்லது எனக்கு எப்பொதெல்லாம் கவிதைச் சிறகுகள் முளைக்கும் என்ற ரகசியத்தை விளக்கியும் கூறலாம். ஆனால் நானோ 'விரைவில் எழுதுவேன் எழுதியதும் முதலில் உங்களுக்குத்தான் அனுப்பிவைப்பேன்' என்று கூறுவதுண்டு.

இந்த பதிலுக்குப் பின்னணியாய் நான் பிறந்த ஒரத்தநாட்டில் எங்கள் தெருவில் நெடுங்காலம் தபால்காரராய் எங்களுக்கு தபால்ப் பால் ஊட்டிய கண்ணையா என்பவரின் உயர்ந்த பண்பு இருக்கிறது. எங்களுக்குக் கடிதம் வராவிட்டால் 'இன்று கடிதம் இல்லை' என்று அவர் சொல்லமாட்டார் 'அவசியம் நாளை தருகிறேன் தம்பி' என்று அன்போடும் கனிவோடும் கூறுவார்.

ஒரு கவிதையாவது எழுதாமல் உறங்கச் செல்லாத நாட்கள் அடர் மழைக் காலத்தைப்போல தொடர்ந்து எனக்குச் சிலகாலம் இருப்பதுண்டு. அதே போல கவிதைகளே எழுதாமல் பலகாலம் அப்படியே மௌனமாயும் மூடிக்கிடப்பேன்.

கவிதைகள் என் உயிரின் கதவுகளைத் தட்டும்போது நடு இரவானாலும் உடனே எழுந்து எழுதுவதும் உண்டு, மூளைக்குள் அப்படியே ஒரு சேமிப்பாய்க் கிடத்திவிட்டு பின்னொருநாள் தட்டி எழுப்பி அதற்கொரு வடிவம் அமைக்கப் பாடுபடுவதும் உண்டு. ஆனால் இன்று ஒரு கவிதை எழுதியே தீரவேண்டும் என்று முடிவெடுத்துக்கொண்டு ஒரு நாளும் அமர்ந்ததே இல்லை.

இதில் சில விதிவிலக்குகளும் உண்டு.

தலைப்பு தந்து கவியரங்கம் பாட அழைக்கும்போது வலுக்கட்டாயமாக அமர்ந்து கவிதை எழுத வேண்டிய சூழல் அமையும். அப்ப்டி அமையும் போதெல்லாம் கவிதை எழுதிப் பழகிய அனுபவ விரல்கள் வார்த்தை விளையாட்டுகளில் இறங்கிவிடும். சில சமயம், பழைய கவிதைகளை எடுத்துக் கோத்து இடைச் செருகல்களோடு புதிய கவிதைகள் உருவாக்கும் நிலைப்பாடும் அமையும்.

இங்கே நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், கவிதைகள் என்பன உள்ளத்தில் கருக்கொண்டு உணர்வுகளில் உந்திக்கொண்டு உயிரை உரசிக்கொண்டு அறிவின் சீரமைப்போடு தானே வெளிவருபவை. அப்படி வராதவை கவிதைகளாய் இருப்பதில்லை, வார்த்தை விளையாட்டுக்களாய்த்தான் அமையும்.

ஆகையினால்தான் நான் என் இணையக் குழுமமான அன்புடனில் கவிதைப் போட்டிகளை அறிவித்தபோது கவிதை எழுதுவதற்கு எந்த ஒரு தலைப்பினையும் தரவில்லை. அது மட்டுமல்லாமல் கவிதை எழுதுவதற்கான காலத்தையும் அதிகமாக நீட்டிக்கொடுத்தேன்.

தானாய்க் கனிவதுதான் கனி. தடியால் அடித்துக் கனியவைப்பது என்பதே கவிதை உலகில் தனி.

*

என்னிடம் சமீபகாலமாக சிலரிடமிருந்து ஒரு கேள்வி வந்து அவசரமாய் விழுகிறது. ’கவிதை எழுதுவதை விட்டுவிட்டு எப்போது இறைவனின் வழியில் செல்லப்போகிறீர்கள்?’

இந்தக் கேள்வியை அப்படியே நிராகரித்துவிட்டு நான் நடக்கலாம்தான். ஆனாலும் அதற்கான பதில் எனக்குள் மிதந்துகொண்டிருக்கும்போது அதை இங்கே பத்திரமாய்க் கரையேற்றினால் என்ன என்று தோன்றுகிறது.

நான் கண்டவரை பெரும்பாலான மத நூல்கள் கவிதை நடையிலேயே இருக்கின்றன.

ஏன்?

உயர்வானவற்றை உயர்வான நடையில் எழுதுவதுதானே சிறப்பு.


உயிரின் மொழி
மொழியின் உயிர்
கவிதை

இப்படி நான் என் முதல் கவிதைத் தொகுப்பின் முதல் கவிதையிலேயே எழுதிவிட்டேன். இதை உணர்ந்துகொள்ள முடியாதவர்களும் இருக்கிறார்கள்தான். அவர்களின் அறியாமையின்மீது உண்மையான அக்கறைகொண்டு நான் இதை இங்கே எழுத வருகிறேன்.

மொழியின் உயர்வான நடையில் தங்களின் வேதங்களைத் தொகுத்து வைத்திருக்கும் மதங்கள் கவிதைகளை மறுப்பவையாக இருக்க முடியுமா? அப்படி ஏதேனும் ஒரு மதம் கவிதையை மறுத்தால், அது தன்னைத் தானே மறுப்பதாய் ஆகிவிடாதா?

*

இதுவரை நான் நான்கு கவிதை நூல்கள் வெளியிட்டிருக்கிறேன். அனைத்தையும் நான் கனடா சென்றபின்தான் வெளியிட்டேன். இந்த 2010 நவம்பரில் இரு கவிதைத் தொகுதிகளை வெளியிடுகிறேன். இந்த முறை முன்பு எப்போதும் அமையாத ஒரு தித்திப்பான வாய்ப்பு என் கவிதைகளுக்கு அமைந்திருக்கிறது. இந்த இரு நூல்களையும் இரு கவிஞர்கள் தங்களின் கவிதைக் கைவண்ணத்தில் தொகுத்து பதிப்பிக்கிறார்கள்.

கவிஞர்களே கவிதை நூல்களுக்குப் பதிப்பகத்தார்களாய் அமைவது எப்படி?

தாய் தன் முதல் குழந்தைக்கு பாலூட்டிச் சீராட்டி அலங்காரம் செய்து பள்ளிக்கு அனுப்புவதைப் போன்ற சிறப்பல்லவா?

கவிஞர் சுதீர் செந்தில் இந்த என் 'அறிதலில்லா அறிதல்' தொகுப்பைப் பதிப்பிக்கிறார். கவிஞர் ரமணன் 'காதலிக்கிறேன் உன்னை எப்போதும்' என்ற கவிதை நூலைப் பதிப்பிக்கிறார்.

அட... எனக்குத்தான் எத்தனை ஆனந்தம்? என் உதிரிப் பூக்களைக் கவிதைப் பொன் விரல்களல்லவா விழா மாலைகளாய்க் கட்டுகின்றன!

கவிஞர் சுதீர் செந்தில் அவர்களின் ’உயிர் எழுத்து’ பத்திரிகை என் எழுத்தையும் உயர் எழுத்தாய் அங்கீகரித்து நூலாய்ப் பதிப்பக்கச் சம்மதித்ததற்கும் அதற்குத் துவக்கப் புள்ளியாய் இருந்த கவிஞர் ரத்திகா அவர்களுக்கும் என் நன்றிகள் சீருடையணிந்த பள்ளி மாணவர்களின் ஊர்வலமாய்...

இலக்கியம் ஊட்டி மனிதநேய இதயத்தோடு என்னை உயர்த்தி வளர்க்கும் தமிழுக்கும் நிம்மதி தீபங்களை அடுக்கடுக்காய் ஏற்றி வாழ்வொளி தரும் கவிதைகளுக்கும் இந்த நூலைச் சமர்ப்பிக்கிறேன்.

என் கவிதைகளுக்கு முத்தங்கள் ஈவதற்காகவே தங்களின் இதழ்களில் தாக ஈரம் நிரப்பிக்கொண்ட என் கவிதைகளின் காதலர்களுக்கு என் கவிதைகளின் பாராட்டு முத்தங்கள் அந்த நெடுவான நட்சத்திரங்களின் எண்ணிக்கையில்...

குழந்தை பிறந்த அந்த நொடியே அது அழுவது ஒரு கவிதை. அதை அப்போதே கேட்க ஆவலோடு வாசலில் இதயம் துடிக்க சில உயிர்கள் காத்துக்கிடக்க, அந்தப் பிஞ்சுக் கவிதையை ஏந்தி கம்பீரமாய் ஆடிவரும் காற்று எத்தனை பாராட்டுக்குரியது? அதுபோல என் கவிதைகளை நான் எழுதிய அதே கதகதப்போடு அப்போதே அச்சேற்ற இனிய மடிதரும் இணையத்துக்கு என் ஒப்பில்லா நன்றிகள்.

அன்புடன் புகாரி
நவம்பர் 2010, கனடா
anbudanBuhari@gmail.com
001-416-500-0972

No comments: