தனிமையின் வெளிச்சத்தில்
*
உனக்கும் உனக்கும் கிடைத்த
ஒப்பற்ற நேரம்
தனிமை
*
உன்னோடு உன்னைச் சேர்த்துப் பார்க்கவும்
உன்னிடமிருந்து உன்னைப் பிரித்துப் பார்க்கவும்
அற்புத நிமிடங்களைத் தரும் ஞானவொளி
தனிமை
*
தனிமையின் வெளிச்சத்தில்
கடந்துபோன வாழ்க்கையை
அன்று தெரியா நிஜங்களோடும்
இன்று தெரியும் நிதரிசனங்களோடும
ஆழ ஊன்றி அலசிப் பார்க்கலாம்
*
தனிமையின் தனிமையில்
உன்னோடு அந்தரங்கமாய்ப் பேசும்
அந்தக் குரல்களைக் கேள்
உன் வாழ்க்கைப் பாதை
தெள்ளத் தெளிவாகத் தெரிவதை
உயிர் விருப்போடு காணலாம்
*
தனிமையின் தனிமையில்
உன்னை உனக்குள் நிறுத்தி
பேரறிவுச் சுடராய் எரியலாம்
*
தனிமையின் தனிமையில்
அமைதியின் ஆழத்தில்
சிந்தனை சிதறா நிலையில்
உன் நெற்றியொளி உயர்த்தி
அணையா தீபமாய் உன்னை
ஞானச் சிமிழில் ஏற்றிக்கொள்ளலாம்
*
அனுபவமற்றவர்களுக்கு
தனிமை என்பது கொடுமை
ஆழ்ந்த ஞானிகளுக்கோ
தனிமைதான் வரம்
*
தனிமைதான்
அறிவெனும் விருட்சத்தின்
வேர்களில் ஊற்றப்படும் அமுத நீர்
*
உண்மையில்
உனக்கே உனக்கென அருளப்படும்
தனிமையில்
நீ தனிமையாய் இருப்பதில்லை
*
எந்தத் தனிமையிலும்
உன்னோடு இந்தப் பிரபஞ்சமாம்
ஐம்பூதங்களும்
அகலாது இருக்கின்றன
*
தனிமையில்
உன்னைப் பிட்டுப்பிட்டு வைக்கும்
உன் ஐம்புலன்களும்
உன்னோடுதான் இருக்கின்றன
*
தனிமையில் உன்னோடு
உன் எண்ணங்கள் முழுவதுமாய்த்
தன் திறந்த விழிகளோடு இருக்கின்றன
*
தனிமையில் உன்னோடு
உன் அளவற்ற கற்பனைகள்
அய்யங்களேதுமின்றி
அழகழகாய்ச் சரணைகோத்துப்
பொங்கி வழிகின்றன
*
தனிமையில் உன்னோடு
உனக்கே உனக்கான
உன் அந்தரங்கக் காதல்
அளப்பரிய சுகத்தோடு
பேரனுபவமாய் இருக்கிறது
*
தனிமையில் உன்னோடு
உன் உச்ச சக்தி மொத்தமும்
சற்றும் குறையாமல்
சன்னமாய் இருக்கிறது
*
தனிமைதான்
உன் பூரண சக்தியை
ஓர் உற்சாகப் புயலைப்போல
சற்றும் பிறளா வீரியத்தோடு
வெளிக்கொண்டுவரும்
தங்கச்சாவி
*
தனிமையில்
நீ எங்கே தனியே இருக்கிறாய்
தனிமையில் உன்னோடு
நீ இருக்கிறாயே மறந்துவிட்டாயா?
*
ஒரு விந்து
தனித்து நீந்தியபோதுதான்
நீ கருவானாய்
*
உன் உடல் மட்டும்
தனித்து விடப்படும்போதுதான்
நீ உன் கண்கொண்டு காணவியலா
மகத்துவப் பிணமானாய்
*
எனவே இளம்பிறையே
தனிமை எப்போதும்
தனிமையில் இருப்பதில்லையடா
*
தனிமையில்தான்
தனிமை தன்
நெருக்கமான உறவுகளோடு
நெருங்கி இருக்கிறது
*
உன் உள்மனம்
நீயே அறிந்திராத உன் அந்தரங்கம்
உன் ஆழ்ந்த அறிவு
உன் ஞான ஒளிச்சுடர்
உன் சரியான விருப்பு
உன் தெளிவான வெறுப்பு என்று
தனிமையின் நெருக்கமான உறவுகள்
நீண்டு கொண்டே செல்லும்
அவை அத்தனையும்
உன் நிஜங்களின் சத்திய முகங்கள்
ஆகவே
நீ உண்மையாய் இருக்கும்
உன் பொழுதுகளே
உன் தனிமை
*
ஓர் உயிர்
இன்னொரு உயிரை
தனக்குள் தனதாய்ப் பொத்திவைக்கும்
தனிமைதான் தாய்மை
*
இரண்டு உயிர்கள்
ஒன்றுக்குள் ஒன்றை உருக்கி
உயிர்வாழ் பெருஞ் சுகமாய்க் காணும்
தனிமைதான் காதல்
*
ஓர் உயிர்
அளவிலா அன்பும் நிகரிலா அருளும் தரும்
நம்பிக்கையின் முன்
முழுவதும் பணிந்து கசிந்து காணும்
தனிமைதான் பக்தி
*
உன்னை உயர்த்துவதற்கான
அத்தனைப் படிக்கட்டுகளும்
உன் தனிமையில்தான்
உன் விழித்திரைகளில்
பிரமாண்டக் காட்சிகளாய் விரியும்
*
உன் உறவுகளை நீயறிய
உன் காதலை நீயறிய
உன் வாழ்வை நீயறிய
உன் சக்தியை நீயறிய
அட...
இப்படி நீளும் பட்டியலை
நிறுத்திச் சொல்வதானால்
உன்னையே நீயறிய
தனிமைதான் தனிமைதான்
உனக்கே உனக்குக் கிடைத்த
வரம் வரம் வரம்
*
தனிமையில்
எண்ணங்களெல்லாம்
தவங்களாகும்
*
தனிமையில்
அமைதிமடி தவழ்வது
வரங்களாகும்
*
தனிமையில்
இனிமை காண்பதோ
சாபவிமோசனங்களாகும்
*
தனிமையை
வெறுமையாய்க் காணாது
உற்ற உறவெனக் கண்டால்
என்றென்றும் உனக்குள்
கரையா நிம்மதி நிறையும் உறுதி
7 comments:
உயர்ந்த கருத்துகளை அருமையாக தந்தமைக்கு மிக்க மகிழ்வு. வாழ்த்துகள். தொடரட்டும் உங்கள் தொண்டு. வாழ்நாள் சிறிது வளர்கலை பெரிது. இருக்கும் வரை (இறைவன் நீண்ட ஆரோக்யமான வாழ்வு தர இறைஞ்சுகின்றேன்) நம்மால் முடிந்த சேவையை செய்து ஒரு முத்தாய்பு வைத்து விட வேண்டும். இறைவன் கொடுத்த அறிவு மற்றவருக்கு போய் சேர்ந்தாக வேண்டும். அந்த சேவை உங்கள் உள்ளத்தில் ஊறியது என அனைவரும் அறிவார்கள்
தனிமையிலே இனிமை காண முடியுமா வரிகளுக்கு பதில் கிடைத்து விட்டது உங்கள் வரிகள் மூலம் அருமை .
சிந்திக்க வைக்கும் அற்புதமான வரிகள் ! பாராட்டுக்கள் !
அனுபவமற்றவர்களுக்கு
தனிமை என்பது கொடுமை
ஆழ்ந்த ஞானிகளுக்கோ
தனிமைதான் வரம்
-----------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.மிகச்சரியா சொன்னீங்க! தனிமை என்பது அது வரம் அது கேட்கும் எல்லாருக்கும் வராது! அது வரும் கேட்காத சில நேரங்களில். அது தனிமையாக வருதனால் அது தனித்து தெரியும் மகத்துவமே! அது ஞானிகளுக்கு மட்டுமே தெரியும் புறக்கதிர். வாழ்துக்கள்.
தனிமைதான்
அறிவெனும் விருட்சத்தின்
வேர்களில் ஊற்றப்படும் அமுத நீர்
---------------------------------------------
ஆமாம். மிக்க சரி! தனிமை கற்பனைச்சுடரின் தீபம்.
உண்மையில்
உனக்கே உனக்கென அருளப்படும்
தனிமையில்
நீ தனிமையாய் இருப்பதில்லை.
------------------------------------------------
அருமை!அருமை! மிக்க சரி! தனிமையில் நாம் தனித்து இருப்பதல்ல எல்லா புலன்களையும் உசுபேத்தும், உணர்வை தூண்டும், கற்பனையை வரவழக்கும் தனிமையுடன் இருப்பதால் நாம் எல்லா புலன்களிலும் ஒருவித உணர்வில் மிதந்துகொண்டிருப்போம். தனிமைதான் இவற்றை நம்மோடு கோர்த்துவைக்கும் நாராக , வேராக இருக்கிறது.
ஒரு விந்து
தனித்து நீந்தியபோதுதான்
நீ கருவானாய்.
-------------------------------------
உயிர் ஜனிப்பிலும். பின் பிறப்பிலும். பின் இறப்பிலும் தனிமைதான் துணை என்பது கூட வரும் தற்காலிகம். அது நிரந்தரமல்ல! அது நீர் குமிழி! தனிமையே நம்முடன் கூடவரும் துணை!
Post a Comment