ஆங்கிலமும் தமிழும் பைத்தியக்காரர்களின் மொழி

ஆங்கிலம் ஒரு பைத்தியக்காரர்களின் மொழி (English is the language of lunatics) என்று பெர்னாட்ஷா சொன்னார்.

அதை நிரூபிக்கும் முகமாக ஒரு காகிதத்தை எடுத்து GHOTI என்கிற ஆங்கில வார்த்தையை எழுதி இதைப்படி என்றார். எல்லோரும் கோட்டி என்று உச்சரித்தார்கள். ஆனால் பெர்னாட்ஷா சொன்னாராம் இதன் உச்சரிப்பு FISH என்று.

ஆங்கிலத்தில் ROUGH என்கிற வார்த்தையில் கடைசி இரண்டு எழுத்துக்கள் ஆகிய GH க்கு உங்கள் ஆங்கிலம் தரும் உச்சரிப்பு F, அதேபோல் WOMEN என்கிற வார்த்தையில் O என்கிற எழுத்து I என்கிற உச்சரிப்பைத் தருகிறது அத்துடன் STATION என்கிற வார்த்தையில் TI என்கிற எழுத்துக்கள் தரும் உச்சரிப்பு SH என்பதாகும். அப்படிப் பார்த்தால் GHOTI என்பதை FISH என்று படிக்கலாமா கூடாதா என்றும், இப்படி குழப்பம் ஏற்படுத்தும் மொழி பைத்தியக்கார மொழியா? இல்லையா? என்றும் கேட்டாராம்.

ஆங்கிலம் ஒரு பைத்தியக்காரர்களின் மொழி என்று பெர்னாட்சா சொல்லலாம். ஆனால் அவருக்கே தெரியும் எந்த மொழியிலும் ஒரு பைத்தியக்காரத்தனம் உண்டு என்று.

இதோ தமிழின் பைத்தியக்காரத்தனம். உண்மையில் இவை பைத்தியக்காரத்தனமா? அல்லது மிகுந்த சுவையுடையவையா என்பதை நேயர்கள்தான் முடிவு செய்யவேண்டும்.

ஒரு புலவர் மன்னைப் புகழ்ந்து பாடினார். மன்னர் அவருக்கு நூறு ரூபாய் பரிசளிப்பதாகக் கூறி, கொண்டு வந்தார்.

புலவர்: மன்னா, இருநூறு தருகிறேன் என்றீர்களே?. மன்னர் 200 ரூபாய் கொண்டு வந்தார்.

புலவர்: மன்னா, முன்னூறு தருகிறேன் என்றீர்களே?. மன்னர் 300 ரூபாய் கொண்டு வந்தார்.

புலவர்: மன்னா, நானூறு தருகிறேன் என்றீர்களே?. மன்னர் 400 ரூபாய் கொண்டு வந்தார்.

புலவரை ஏன் இப்படி மாற்றினீர்கள் என்று கேட்டார்.

புலவர் சொன்னார்: நீங்கள் இரு, நூறு ரூபாய் கொண்டு வருகிறேன் என்றீர்கள். அமரவே இடம் இல்லை. அதைச் சொன்னேன். உடனே, 200 ரூபாய் கொண்டு வந்தீர்கள். முன் 100தானே தருவேன் என்றீர்கள். அதைச் சொன்னேன். 300 ரூபாய் கொண்டு வந்தீர்கள். 'நான் 100 ரூபாய் தருவேன்' என்றீர்களே என்றேன். உடனே 400 ரூபாய் எடுத்து வந்தீர்கள். இதுதான் நடந்தது.

மன்னர் மகிழ்ந்து, மொத்தத் தொகையான 1000 ரூபாய் கொடுத்தார்

இதையே வேறு விதமாகவும் அழகான அருந்தமிழில் தமிழர்கள் கட்டினார்கள்

புலவர்: ஐநூறு தரமுடியுமா ?
மன்னன் : தருகிறேன்.

புலவர்: அறுநூறு தரமுடியுமா?
மன்னன்: தருகிறேன்.

புலவர்: எழுநூறு தந்தால் நல்லது!
மன்னன்: தருகிறேன்.

புலவர்: எண்ணூறு மகிழ்ச்சியாக இருக்கும்.
மன்னன்: தருகிறேன்.

ஆனால், மன்னன் கொடுத்தது நூறு ரூபாய்தான்.

புலவர்: ஐநூறு ரூபாய் தருகிறேன் என்றீறே?
மன்னன்: ஐ (! ஆச்சர்யம்), நூறு தருகிறேன் என்றேன்.

புலவர்: அறுநூறு தருகிறேன் என்றீறே?
மன்னன்: அறு! (என்னை விட்டு விடு) நூறு தருகிறேன் என்றேன்.

புலவர்: எழுநூறு ,தருகிறேன் என்றீறே?
மன்னன்: எழு!(இடத்தை விட்டு) நூறு தருகிறேன் என்றேன்.

புலவர் : எண்ணூறு தருகிறேன் என்றிறே?
மன்னன்: எண்(ரூபாயை எண்ணுங்கள்) நூறு தருகிறேன் என்றேன்

புலவரும், மன்னனே உங்கள் தமிழ்முன் போட்டி போட என்னால் முடியாது நூறே போதும் என்றார்.

மன்னனும், புலவரே, யாம் தமிழுடன் விளையாடினோம். மகிழ்ந்தோம் என்று கூறி ஆயிரம் ரூபாய் கொடுத்து அனுப்பினான் .

Comments

nidurali said…
அருமையான விளக்கம் எதிலும் அழகும் அருமையும் வேண்டும் அற்புதம் வேண்டாம் . இதில் அழகும் அருமையும் அணைத்துக் கொண்டு பெருமகிழ்வைத் (ஆனந்தம்) தருகின்றது
Vengu said…
இது பைத்தியக்காரத்தனம் அல்ல.மொழி விளையாட்டை
இதோடு ஒப்பிடுவது அழகல்ல.வேறு குறைகள் இருப்பின் பார்வைக்கு வைக்கவும்.பார்க்கலாம்.
Vengu said…
வானூறி மழை பொழியும் வயலூறி கதிர் "வளையும்".... இதில் கதிர் விளையும் என்றல்லவா இருக்க வேண்டும்!
Nice. Good post. Thanks sharing.
kari kalan said…
அருமை
நிச்சயம் தமிழ் அறுசுவை நிறைந்த மொழிதான் என்பதற்கு இந்த இடுகையும் ஒரு சான்றே
வணக்கம் புகாரி.
நல்லதொரு முயற்சி.நாங்கள் முடிவு செய்து விட்டோம்
தமிழ்க்கு அமுதென்று பேர் என்று .தொடர்ந்து எழுதுங்கள்.நீண்டநாளின் பின்னர் வருகின்றிர்கள் போலும்
கரிகாலன்
put புட் என்பதும் but பட் என்பதும் பள்ளிக்கால தமிழராசிரியர் சொல்லிக் கொடுத்த அரிச்சுவடி.
தமிழு மேல இம்புட்டு வெறியா.
சந்தோசமாத்தான் இருக்கு.
anbudan buhari said…
அன்பின் வெங்கு,

ஆங்கிலத்தில் இடத்திற்கு ஏற்ப உச்சரிப்பு மாறுவதும் அந்த மொழிக்கே உரிய தனிப் பண்புதான் அழகுதான். அதில் பிழை ஏதும் இல்லை.

அது போலவே தமிழில் சொல்லாடல் ஓர் அழகுதான் பிழையில்லை.

ஒரு மொழியை ஒரு காரணத்திற்காகப் பைத்தியக்கார மொழி என்று சொல்ல வந்தால் எல்லா மொழிகளையுமே பைத்தியக்காரமொழி என்று சொல்லிவிடலாம்.

இதழ்கள் ஊருமடி -> இதழ் கள் ஊருமடி

எழுத்துக்களுக்கு இடையில் ஒரு இடைவெளி இட்டால் பொருளே மாறிப்போகும் மொழியை அழகென்பதா பைத்தியக்காரன் மொழி என்பதா?

இந்த இருநூறு முந்நூறு நானூறு விளையாட்டால் தமிழை நீதிமன்றத்தில் பயன்படுத்துவதில் பெரும் சிக்கல் வரும் என்று கண்ணதாசன் சொன்னார்.

அன்புடன் புகாரிanbudan buhari said…
>>>>>
வானூறி மழை பொழியும் வயலூறி கதிர் "வளையும்".... இதில் கதிர் விளையும் என்றல்லவா இருக்க வேண்டும்!
<<<<<

அன்பின் வெங்கு,

கதிர் விளையும்தான். அது மற்றவர்கள் ஊரில்!

ஆனால் கதிர் விளைந்து அழகு நெல்மணிகளின் பாரம் தாளாமல் அப்படியே வளையும்!
அது எங்கள் ஊரில், ஒரத்தநாட்டில் :-)

இது பிழையாய் எழுதியதல்ல, அமுதத் தமிழில் அழகாய் எழுதியது.

அன்புடன் புகாரி


anbudan buhari said…
நீடூரலியண்ணா, மாசிலா, கரிகாலன், ராஜ நடராஜன், சேக்காளி அனைவருக்கும் நன்றி

அன்புடன் புகாரி
Vengu said…
தவறுக்கு வருந்துகிறேன். உங்கள் மண்ணின் மணம் கமழட்டும்.வாழ்க.
Vengu said…
தவறுக்கு வருந்துகிறேன். உங்கள் மண்ணின் மணம் கமழட்டும்.வாழ்க.

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்