Showing posts with label * * 16 மரணம் உன்னைக் காதலிக்கிறது. Show all posts
Showing posts with label * * 16 மரணம் உன்னைக் காதலிக்கிறது. Show all posts
4

தாளாத துயர் வரும்போது
தன்னையறியாமல்
மனிதன்
மரணத்தைக்
காதலிக்கவே செய்கிறான்

வாழ்நாளில்
ஒரே ஒரு முறையாவது
மரணத்தைக் காதலிக்காத
மனிதன் இருக்கிறானா

உயிர் கிழியும்
கொடுந் துன்பத்தில்
மனிதன் நினைப்பது
இரண்டினை
ஒன்று இறைவன்
அடுத்தது மரணம்

இறைவனும் மணரமுமே
மனிதமனப் படகின்
ஆறுதல் கரைகள்

மரணம் உன்னைக் காதலிக்கிறது

1

நீ
செல்லுமிடமெல்லாம்
தன் கோடிகோடிக் கரு விழிகளால்
உன்னையே
அடங்காக் காதலோடு
பார்த்துக்கொண்டிருக்கிறது

வேறெவரையும்விட
அது உன்னை
அதி தீவிரமாய்க் காதலிக்கிறது

எரிபொருள் தேடும்
நெருப்பினும் தாகமாய்
வாசனைகள் ஏற்றும்
காற்றினும் ஆவலாய்
ஏந்திக்கொள்ள ஏங்கும்
நிலத்தினும் பாசமாய்
வழிந்தோடத் துடிக்கும்
நீரினும் தவிப்பாய்
பரந்துவிரியச் சுழலும்
வானினும் மோகமாய்

உன்னைக் காதலிக்கிறது
2

மரணத்திற்கு
உயிர்களிடம் பசியில்லை
அடங்காக் காதலே உண்டு

உயிர்கள் மரணத்தின்
தீனியாவதில்லை
மரணத்தோடு ஐக்கியமாகி
நிகரில்லா நிம்மதி பெறுகின்றன

புலி
உன் உடலை
உண்டு செரிக்கும்
ஏனெனில்
அதன் தேவை சதை

மரணமோ
உயிர்களைத்
தன்னில் தழுவி
தனதாக்கி அணைத்துக்கொள்ளும்
உடல்களை நிராகரிக்கும்

புலி
கவ்விக் குதறும்போது
நீ வேதனைப்படுவாய்

மரணமோ
தழுவ வரும்வரைதான்
பயத்தின் நடுக்கம்
தழுவியபின் சுகம் சுகம்

மரணம் உன்னைக் காதலிக்கிறது

16

ஒரு
நிலையிலிருந்து
முழுவதும்
துண்டிக்கப்பட்டு
இன்னொரு நிலை
மாறும்போது
நமக்குக் கிடைப்பது
பூரண நிம்மதி

பிறந்த குழந்தை மட்டுமல்ல
உடல் விட்ட உயிரும்

மரணம் உன்னைக் காதலிக்கிறது
3

காதலியின்
மடியில் கிடந்து ஒருவன்
உணர்வு உச்சத்தில் சொல்லும்
வார்த்தை எது

இப்படியே செத்துப் போகலாம்
என்று இருக்கிறது
என்பதுதானே

ஏன்?

அந்த நிமிடம்
பரிபூரண நிம்மதி
மரணத்தில் மட்டும்தான் என்பதை
காதல் உணர்ந்திருக்கிறது
என்பதால்தானே

மரணம் உன்னைக் காதலிக்கிறது
7

மரணத்திடம் பாகுபாடுகள் இல்லை
மனித வாழ்க்கைதான்
பாகுபாடுகளுடையது

ஒருவன்
கொலை செய்யப்படுகிறான்.
ஒருவன்
தற்கொலை செய்துகொள்கிறான்.
ஒருவன்
நோயில் விழுந்து இறக்கிறான்.
ஒருவன்
முதுமை அடைந்து இறக்கிறான்.

இவை யாவும்
மண்ணில் நிகழும் மனித வாழ்க்கையின்
நிலையாமை தரும் பாகுபாடுகள்

மரணம் குறையற்றது
அது மனிதனுக்கு
எந்தத் துயரையும் தருவதில்லை.

துயரிலிருந்து
விடுதலை தரும் மரணத்திற்கு
துயரம் தரவேண்டிய
அவசியமும் ஏதுமில்லை

மரணம் உன்னைக் காதலிக்கிறது
26

மரணம் நேர்ந்ததும்
மண்ணின் தொடர்புகள் எல்லாம்
துண்டிக்கப்பட்டுவிடுகின்றன

மரணத்திற்குப் பின்
நிம்மதிதான்
எஞ்சி இருக்கப் போகிறது என்றாலும்
மண்ணில் உள்ள இனிய வாழ்வை
மரணத்தால் நாம் இழக்கிறோம்

அதை இழக்க
எந்த உயிரும் சம்மதிப்பதில்லை

ஆகவே
சொர்க்கத்தை
மண்ணில் காண்போம்
யாவரும் வாழவும்
நாமும் வாழவும் வாழ்வோம்

மரணம் பற்றிய சரியானதும்
நிம்மதியானதுமான அறிதல்தான்
மனிதனுக்கு அந்த
உயர்வான உணர்வுகளைத் தரும்
18

மரணம் புனிதமானது
அது எப்போது வரும் என்று
எவராலும் சொல்ல முடியாது

மரண முடிவு இல்லாத ஒருவரும்
மண்ணில் கிடையாது

இறைவனைக்
காணவேண்டும் என்று
ஆத்திகர்கள் மட்டுமல்ல
நாத்திகர்களும் அலைகிறார்கள்

மரணத்தால் மட்டுமே எவரையும்
இறைவனின் மடிகளில்
கொண்டு சேர்க்க முடியும்

மரணம் உன்னைக் காதலிக்கிறது


15

மரணம் என்றதுமே
ஒரு சாந்தம் வருகிறது
அமைதி நிலவுகிறது
தாய் மடியின் நிம்மதி வருகிறது
அள்ளியணைக்கும் கரங்கள் நீள்கின்றன

மரணத்தை விரோதியாகவே
பார்க்கும் கண்களுக்கு
மரணத்தைத் தாயாய் ஏற்க
மனம் வராமல் இருக்கலாம்
ஆனால்
துயரங்களின் முற்றுப்புள்ளியாய்
இருக்கும் மரணத்தை
வேறு எதைச் சொல்லி
அழைப்பது?

9

பிறந்ததும் ஏன் நாம் அழுகிறோம்
மண்ணுக்குப் பயந்தா
மனிதர்களுக்குப் பயந்தா

துக்கங்களால் ஆனதுதானா உலகம்
ஏன் நாம் நம் வாழ்வை
துக்கமாக ஆக்கிக்கொள்கிறோம்

எங்கிருந்து முளைக்கின்றன
துக்கம் தரும் ஆசைகள்
எங்கே இருக்கின்றன
அந்த ஆசைகளின் ஊற்றுகள்

உடம்புக்குள்
சிறைபட்ட உயிருக்கு
நிம்மதியே இல்லையா

உடம்புதான்
அனைத்திற்குமான கேடா

மரணம்தான்
அதற்கான மருந்தா
அல்லது மாற்றுவழி ஏதுமுண்டா

மரணம் உன்னைக் காதலிக்கிறது
8

மரணம் கண்டு பயப்படாதீர்கள்
அது
இருட்டுக்குள் இருக்கும்
பேய் அல்ல
எப்போதும் உங்களைக் காதலிக்கும்
தாய்
உங்கள் உயிரை
அது தட்டிப் பறிப்பதில்லை
மிகுந்த கருணை உள்ளம்
கொண்டதே மரணம்

மரணம் உங்களைக் காதலிக்கிறது
6

நல்லவன் என்றாலும்
கெட்டவன் என்றாலும்
மரணத்தைச்
சந்தித்தே ஆகவேண்டும்

மரணம் பற்றிய
நினைப்பு எப்போதும்
கூடவே இருந்தால்
கெட்டவனும்
நல்லவன் ஆவான்

அடுத்த நிமிடம்
சாகப்போகிறோம் என்று
அறியும் ஒருவன்
நல்லதையே செய்வான்

மரணம் உன்னைக் காதலிக்கிறது
7

ஒரு
பக்தன் சொல்கிறான்
இறந்ததும்
நான் கடவுளிடம்
சென்றுவிடுவேன் என்று

நம்மை
நம் கடவுளிடம்
கொண்டு சேர்க்கும்
மரணம்
கொடியதாக
இருக்க முடியுமா

மரணம் உன்னைக் காதலிக்கிறது

பாரபட்சமில்லை - மரணம் உங்களைக் காதலிக்கிறது


மரணம்
ஒவ்வொரு உயிரையும்
உண்மையாய்க் காதலிக்கிறது
எத்தனை கோடி உயிர்கள்
தன்னிடம் வந்தாலும்
அவை அத்தனைக்கும்
பாரபட்சமில்லாத
நிம்மதிப் பாலூட்டும்
தாய்தான் மரணம்

வரம் - மரணம் உன்னைக் காதலிக்கிறது


கடவுளைப்
பார்க்க முடியாது
மரணத்தின் சுவடுகளையோ
நாம் எங்கும் காணலாம்
கடவுளிடம் கேட்கும் வரம்
கிடைக்காமல் போகலாம்
மரண வரம்
ஒருநாள் கிடைத்தே தீரும்

பேரறிவு - மரணம் உன்னைக் காதலிக்கிறது


ஒரு
மரண நிகழ்வுக்குச்
சென்றுவரும் மனிதன்
அந்த ஒருநாள் மட்டுமாவது
நல்லவனாய் வாழ்வான்
அதுதான் மரணம் தரும் அறிவு
எதை இழக்கப்போகிறோம்
இங்கே என்ற தெளிவு
மனிதனைச் செதுக்குகிறது
எந்த நொடியும் மரண மடிகளில்
நிம்மதி ஊஞ்சல் ஆடலாம் என்ற
பேரறிவு பெற்றவன்
தானும் வாழ்ந்து
பிறரையும் வாழவைக்கும்
கருணை இதயம்
கொண்டவனாகவே வாழ்வான்

சொர்க்கம் - மரணம் உன்னைக் காதலிக்கிறது


வாழும் நாட்களை
நரகமாக்கிக் கொள்ள
மதங்களெல்லாம்
மரணத்தின் பின்
நரகம் உண்டென்று
பிதற்றுகின்றன
அந்தத் தளையை அறுத்து
வெளியில்வா
வாழ்வைச் சுவை
சொர்க்கம் அனுபவி
மரணம்
நீங்காத நிம்மதியோடு
உனக்காகக் காத்திருக்கிறது
எல்லா பிள்ளைகளும்
நல்ல பிள்ளைகளே
மரணத்தாய்க்கு

நிம்மதிக்கடல் - மரணம் உன்னைக் காதலிக்கிறது


எத்தனை அணையிட்டு
பாதுகாத்து வைத்திருந்தாலும்
நீரெல்லாம்
கடலையே சேரும்
நீரில் பெரியது
கடல்
நிம்மதியில் பெரியது
மரணம்

கருணையே வடிவானது - மரணம் உன்னைக் காதலிக்கிறது


கருணையே வடிவானது
மரணம்
கருவான நொடிமுதலாய்
காதலிக்கிறது அது உன்னை
ஆனபோதிலும்
ஒருபோதும் தட்டிப்பறித்தெடுக்க
எண்ணுவதே இல்லை
அது உன் உயிரை
தானே வரும் நாளுக்காய்க்
காதலோடு காத்திருக்கும்
உயர் காதல் கொண்டது
மரணம்
உன் தற்கொலை முயற்சிகள்
தோல்வியில் தொங்கிப்போவதற்கு
கருணைமிகு மரணமே காரணம்
கனிந்து நீ நிறைந்தவனாய்
வரும் நாளல்லாது
உடைந்து நீ
ஓடிவரத் துடிக்கும் நாளில்
உன்னை ஏற்காமல்
அது கதறியழும்
கருணையே வடிவானது
மரணம்