கிரந்தம் நாலெழுத்தும் அயல் பெயர்ச்சொல்லும்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
என்றான் தமிழன்

கிணற்றுத் தவளையா
தமிழன்

சொல்லவும் கூடுவதில்லை
அவை சொல்லுந் திறமை
தமிழ்மொழிக் கில்லை என்றொரு
பேதையுரைத்தான் என்றான்
பாரதி

உலகின் அயல் பெயர்ச்சொற்கள்
அனைத்தையும்
தமிழனால் உச்சரிக்க இயலவேண்டும்
அப்போதுதான் அவனால்
உலக மேடைகளில் ஓங்கி நிற்கவியலும்

சொல்லவே தெரியாதவன்
உலகமேடையில்
வெல்லவா போகிறான்

சொல்லுஞ் சொல்லில்
தமிழன் தமிழ்ச்சொல்லையே கொய்வான்
ஆயினும் தமிழல்லாச் சொல்லைச்
சொல்ல நேருங்கால்
அவனால் தங்குதடையின்றி
சொல்லி முடிக்கவும் தெரியும்

பெயர்ச்சொல்லில் இரட்டை நாக்கு
அவசியமற்றது
வீணே சக்தியை இழப்பதும்கூட

இந்த நான்கே போதும்
இனி எந்த எழுத்தும் தேவையில்லை
என்று அன்றே முடிவெடுத்தத் தமிழன்
தந்த நான்கினையும் ஏன் மறுப்பானேன்

அது மேலும் பெருக வேண்டுமென
எவன் வந்தாலும்
இடுப்பொடிக்கும் விழிப்புணர்வு
இன்று தமிழனுக்குண்டு

பண்டை நாலெழுத்தால்
என்ன கெட்டது தமிழில்
சொல்லா? பொருளா?
சொற்களின் தன்னிகரா?
பொருளின் தரமா?

குஷ்புவை குசுப்பு என்று அழைப்பது
தமிழனுக்கு நாற்றமல்லவா

ஜெய்ஹிந்தை செய்யிந்து என்றால்
நன்றாகவா இருக்கும்

உலகின் பழம்பெரும் மொழி
அனைத்து எழுத்துக்களையும் கொண்டிருக்காது
அதுவே அதன் சிறப்பு

ஆனால்
ஓரிரு எழுத்துக்களை
புதியன புகுதலென
அயல் பெயர்ச்சொற்கள் பயிலும்போது
மட்டும் ஏற்கும்போது
மெருகேறித்தானே நிற்கிறது

தமிழ்ச்சொல் கெட்டதா
தமிழன்தான் கெட்டானா

எழுத்து என்பது
ஒரு வாகனம்தான்
அதில் ஏறிச்செல்லும்
மொழிதான் உயிர்

சில்லறைவிடயங்களில்
செலவழிந்துபோகாமல்
நாம் சிகரம் தொடும்
தமிழ் படைப்போம்

அறிவியல் புதினங்களிலும்
கணினிக் கலைகளிலும்
உயர்ந்து தழைப்போம்

உடனே முயன்று
ஒரு கணிநிரலி படைப்போம்
அது அந்நோடியே
எம்மொழியையும் மாற்றித்தரட்டும்
தமிழனுக்கு

பிறகென்ன
அவன் விண் தாண்டியல்லவா பறப்பான்
தமிழ் நீடித்தல்லா வாழும்

*

பிற்சேர்க்கை விளக்கம்:கிரந்தம் இல்லாவிட்டால் தமிழுக்கு மரணமா?

1. ஹ ஷ ஜ போன்ற எழுத்துக்கள் குஷ்பு போன்ற அயல் பெயர்ச்சொற்களை இயன்ற ஓசை கொண்டு எழுத தமிழுக்கு உதவுகின்றன

2. கிரந்தம் நான்கெழுத்து தமிழுக்குப் பேறு அல்ல. தமிழுக்குப் பேறு என்பது புது கணினி நிரலி ஒன்றைத் தமிழன் கண்டுபிடித்து உலக அறிவியல் கணித தொழில்நுட்ப ஆய்வுகளை அந்த நொடியே தமிழில் மாற்றித் தரக்கூடிய வசதியைச் செய்து தருவது

3. கிரந்தம் நான்கெழுத்து தமிழுக்குப் பேறு அல்ல. தமிழ்ச் சொற்கள் எதிலும் அந்தக் கிரந்தம் கலக்காமல் எழுத முயல்வதே தமிழுக்குப் பேறு.

4. கிரந்தம் நான்கெழுத்து தமிழுக்குப் பேறு அல்ல. வழக்கு அழிந்துபோன தமிழ்ச் சொற்களை மீட்டெடுத்துப் புழக்கத்தில் இடுவது பேறு

5. கிரந்தம் நான்கெழுத்து தமிழுக்குப் பேறு அல்ல. பூக்களின் இடையில் அவசியம் கருதி மட்டும் இருக்கும் நாரினைப் போல, அயல் பெயர்ச் சொற்களுக்காக மட்டுமே பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறியவே அந்த நான்கெழுத்து

*

தமிழை அழிப்பதற்கான சிறந்த வழிகள் சில
1. ஆக்கப்பூர்வமான தமிழ்த் தொண்டுகளைக் கைவிட்டுவிட்டு அவசியமில்லாத காரியங்களில் தமிழன் நேரத்தைச் செலவிடுவது. தமிழ்மாற்றிக் கணினி நிரலி எழுதாமல் அயல் பெயர்ச் சொற்களோடு மல்லாடுவது ஓர் உதாரணம்
2. பழந்தமிழ்ச்சொற்களைப் புழக்கத்துக்கொண்டுவராமல், திசைச்சொற்களையே பயன்படுத்தும் நோக்கத்தோடு அதனை நோண்டிக்கொண்டிருப்பது
3. புதிய புதிய அறிவியல் ஆவனங்கள், ஆராச்சிக் கட்டுரைகள், கணினி ஆய்வுகள் வாணவியல் கட்டுரைகள் சமைக்காமல் எழுத்துக்குள் நின்று எதுவுமற்றுப் போவது
4. அயல் பெயர்ச் சொற்களை ஒலிக்கத் தமிழனால் முடியவே முடியாது அவன் அதைச் சிதைத்தே கொல்வான் என்றுபதுபோல தமிழைத் வெறும் எழுத்துக்காக மட்டுமே தாழ்த்திப் பிடிப்பது
இன்னும் சொல்லலாம் ஆனால் இதுவே போதும் என்று நினைக்கிறேன்

Comments

அருமை நண்பரே
சிகரம் தொடும்
தமிழ் படைப்போம்

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்