தனித்தமிழ் கருத்தாடல்

தனித்தமிழ் எனக்குப் பிடித்தமான ஒன்று, நான் அதையே இயன்றவரை செய்கிறேன். நான் எழுதும் நடையைக் கண்டால் அது எவருக்கும் விளங்கும்.

ஆனால் தனித்தமிழ் என்ற பெயரில் கையாளப்படும் சில அத்துமீறல்களை என்னால் செரிக்கவே முடியவில்லை.

தமிழுக்குள் வலுக்கட்டாயமாகக் கள்ளம்புகுந்த வடச்சொற்களை நான் வெகுவாக வெறுக்கிறேன். எது தமிழ்ச்சொல் எது வடச்சொல் என்று தமிழன் அறியமுடியாத வண்ணம் அது இரண்டறக் கலந்த கொடுமை தமிழுக்கு நிகழ்ந்த அநீதி. அதை எதிர்த்துப் போரிட்டு நற்றமிழ்ச் சொற்களைக் கொண்டுவந்தவர்களை ஆயிரமுறை பாராட்டி இருக்கிறேன்.

தமிழுக்குள் வடசொல் அத்துமீறி கலந்ததால்தான் மலையாளம் என்று தமிழனின் சேரநாடு மாறியது.

ஆனால் இதெல்லாம் தமிழ்ச்சொற்கள் தமிழ்ச்சொற்களாய் இருக்க வேண்டும் என்ற நிலையில் உள்ளவை. இதில் ஏதும் மாற்றுக்கருத்தே இருக்க முடியாது.

ஆனால்.....

குஷ்பு, ஹரிஹரன், ஜரினா, ஜேக்கப், ஜோசப் என்பவை தமிழ்ச்சொற்கள் அல்ல, தமிழில் எழுதப்படும் அயல் பெயர்ச்சொற்கள்.

இவற்றை...

குசுப்பு, கரிகரன், சரினா, சேக்கப்பு, சோசப்பு என்றெல்லாம் எழுதுவது தமித்தமிழ் அல்ல. வரட்டுத்தமிழ். 

வரட்டுத்தமிழ் என்றும் சொல்லமாட்டேன். ஏனெனில் தமிழுக்கு வரட்டுத்தனம் வராது. 

இப்படி அயல் பெயர்ச்சொற்களை வேர் மொழியோடு இணைத்து நடத்தும் வரட்டுத்தனத்துக்கு தமிழ் என்ன பாவம் செய்தது?

ஜெர்மனி, ஸ்காட்லாண்ட், டொராண்டோ, ஸ்கார்பரோ, அலாஸ்கா என்பனவெல்லாம் தமிழ்ச்சொற்களா?

இல்லையே, இவை நாடு, ஊர் ஆகியவற்றின் பொதுச் சொற்கள்.

இதைத் தமிழ்ப்படுத்துகிறேன் என்று படுத்தியெடுப்பது வரட்டுத்தனம் மட்டுமல்ல முரட்டுத்தனமும் கூட

செருமனி, இடாய்ச்சுலாந்து, இசுக்காட்டுலாந்து, தொரந்தோ, இசுக்காருபரோ, அலாசுக்கா....

ஏன் தமிழனில் நாவுகளில் இந்த அயல் பெயர்கள் நுழையவே நுழையாதா? நுழைந்தால் என்ன அழிந்துவிடும், தமிழனின் நா உலக அரங்கில் உச்சரிக்க வேண்டிய அயல் பெயர்களைச் சரியாகத்தானே உச்சரிக்கும்?

தமிழ்ச்சொல் எது அயல் பெயர்சொல் எது என்பதுகூடவா தெரியாத மொழியியல் நேயர்கள் இருக்கிறார்கள்? 

ஆச்சரியம்

மலையாளம் ஏன் வந்தது - தமிழில் பிறமொழிப் பெயர்ச்சொற்களை உச்சரிக்க வழி தந்ததாலா?

அல்லது தமிழுக்குள் பிறமொழிச் சொற்கள் அத்துமிறி நுழைந்ததாலா?

சமஸ்கிருதம் ஏன் பேச்சின்றி புதையுண்டது? வேற்று எழுத்துக்கள் ஏதேனும் உள் நுழைந்ததாலா?

அல்லது, நடைமுறைக்கு ஒவ்வாததாய் பேசுவோரை விட்டுவிட்டு நூலில் மட்டும் தனிச்சமஸ்கிருதமாய் நின்றதாலா?

No comments: