ஆதாமின் புத்திரர்கள்

ஓர்
உயர்ந்த இதயம்
சந்தர்ப்பங்களின்
சதியில்
தடுமாற்றம்
கண்டிருக்கலாம்

அதனால் மட்டுமே
அது
கெட்டுவிட்டது
என்றில்லை

அப்படித்தான்
உயர்வுகள் கெடுமென்றால்
உயர்வு என்ற ஒன்று
இல்லவே இல்லை

இதயநெறி

நீ
விழும்போது
மின்னல் கீற்றாய்
விரைந்து
உன்னைத் தாங்கும்
ஓர் இதயம்
முன்பே விழுந்து
பேரடி
வாங்கியதாய்த்தான்
இருக்கும்
உனதே உனது

எந்த விரல்கள்
உன் சந்தோச தீபங்களை
ஏற்றி வைக்கின்றனவோ
அதே விரல்களே
உன் சோக ஊற்றுகளையும்
தீண்டித்
திறந்துவிட்டு நிற்கும்

சந்தோசமோ சோகமோ
எதுவாயினும்
அதன் காரணியை
வெளி விரல்களில் இருந்து
கைப்பற்று
உன் சொந்த விரல்களுக்கு
இடம்மாற்று

மறுகணம்
நீ வாழும் வாழ்க்கை
உனது

உன்
இன்ப துன்பங்கள்
உனதே உனது



நானொரு கவிதை
நீயொரு கவிதை

ஒருவர் வரியிலே
ஒருவரடி

அறிமுகமாயிற்று...

ஒருவர் உயிரிலே
ஒருவரடி

சிலிர்த்தாகிவிட்டது...

ஒருவர் மெய்யிலே
ஒருவரடி

கலந்தாயிற்று...

ஒருவர் பொய்யிலே
ஒருவரடி

வாழத்தொடங்கியாயிற்று...