நலமாக இருக்கிறாயா
அம்மா

ஆறும்
ஆறுக்கு வந்த ஆறும்
பெற்றெடுத்தப் பதினாறும்
உன்னை
முதியோர் இல்லத்திற்கு
அனுப்பவில்லை
நீ இருக்கும் இடத்தையே
முதியவள் இல்லமாய்
மாற்றிவிட்டு
வெளிநாடுகளுக்குப் பறந்துவிட்டன

*

நலமாக இருக்கிறாயா
அம்மா

எங்களுக்குத் தவித்தபோது
உனக்கே தவித்ததுபோலத்
தண்ணீரோடு நின்றாய்
இன்று
உன் தவித்த வாய்க்குத்
தண்ணீர்தர உன்னுடன்
ஒருவருமே இல்லை
கண்ணீரோடு நிற்கிறாய்

*

பிள்ளைகள் சுகம் மட்டுமே
போதும் என்ற தியாகத்தைப்
பொட்டலாய்ப் போன
உன் வாழ்க்கையிலும்
தீபமாய் ஏற்றிக்கொண்டாய்

ஐந்து ஆண் பெற்ற உனக்கு
பெண்பிள்ளை என்றால் உயிர்

மருமகளிடமே
இத்தனைப் பாசம் கொட்டும் நீ
மகளிடம் எத்தனைக் கொட்டச்
சேர்த்துச் சேர்த்து வைத்துக்
காத்திருந்திருப்பாய்
உன் கனவுதிர் இரவுகளிலும்
தரிசுப் பகல்களிலும்

*

இன்று உன்னோடு
சேர்ந்து வாழும் ஜீவன்கள்
நீ பெற்ற பிள்ளைகள் அல்ல
நீ பெற்ற நோய்கள்தாம்

காசுதருவோம் வீடுதருவோம்
ஸ்கைப் வழியே முத்தம் தருவோம்
வேறு எதைத் தந்துவிடப் போகிறோம்

உன் உடல் நோய்க்கு
உலகின் எந்த மூலையில் இருந்தாலும்
கொண்டுவரச்சொல்லி
மருந்து தருவோம்

உன் மன நோய்க்கு
பொங்கும் கண்ணீரைத் தவிர
வேறு என்ன தருவோம்

*

வெளிநாடு சென்றால்
எவனும்
பணக்காரன் ஆவதில்லை
எல்லோருமே
பிச்சைக்காரர்கள்தான்
ஆகிறார்கள்

*

விமானம் ஏற
உன் கால்களுக்கு வலுவில்லை
ஆகாயப் பயணம் செய்ய
உன் நெஞ்சுக்குள் திடமூச்சு இல்லை

தாபங்களும் தவிப்புகளுமோ
நாளும் பொழுதும்
பல்லாயிரம்கோடி மைல்களை
அநாயாசமாய்க்
கடந்து கடந்து உயிர்கடுக்கத்
தேம்பி நிற்கின்றன

*

நலமாக இருக்கிறாயா
அம்மா

எப்படி
நலமாக இருப்பாய்

நீ எத்தனைதான் சமாளித்தாலும்
உன் காயங்களை மறைத்து மறைத்து
நல்லா இருக்கேண்டா நல்லா இருக்கேண்டா
என்று நீ சொல்லிக்கொண்டே இருந்தாலும்

உன் பிள்ளைகள் எல்லோரையும்
ஒருநாளேனும் ஒன்றாய் ஒரு கூடத்தில்
ஒற்றை இரவிலாவது
வரிசையாய் மெத்தையிட்டு
அடுக்கடுக்காய்ப் படுக்க வைத்து
இந்தக் கடைசி முதல் அந்தக் கடைசிவரை
பார்த்துப் பார்த்து பேசிப்பேசி
அணைத்து அணைத்து
ஆனந்தக் கண்ணீர் உகுத்து உகுத்து
உறங்கித் தீர்க்க வேண்டும்
என்ற உன் ஆசையை உன்னால்
மறைக்கவே முடியவில்லையே
அம்மா

*
நலமாக இருக்கிறாயா
அம்மா

இதோ
இந்த மண்ணில்தான் கேட்கிறாய்
உன் சொர்க்கத்தை

அது ஒன்றும்
கிடைக்கவே கிடைக்காத
பேராசையும் இல்லை

என் வேண்டுதலும் உனக்காக
அது ஒன்றுதான் அம்மா

இதோ
வெகு பக்கத்தில் இருக்கிறது

இதோ
இப்போது வந்துவிடப் போகிறது

இதோ இதோ
எல்லோரும் ஒன்றாக
உன்னுடன் இருப்போம்

அந்த நினைவுகளில்
கனியும் கனவுகளில்
நீ நலமாக இரு அம்மா

- அன்புடன் புகாரி  நவம்பர் 5, 2016

No comments: