தமிழின் தூய்மை எதில் இருக்கிறது?


யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று ஏறத்தாழ 200 நாடுகளில் தமிழன் இன்புற்று வாழும் இன்றைய நாட்களில் தமிழின் தூய்மை எதுவென்ற தெளிவு இல்லாதவர்களாக சில தமிழர்கள் இருப்பது ஒரு விபத்து என்றே தோன்றுகிறது.

கீழே உள்ள பத்தியைக் கவனமாக வாசியுங்கள். அதில் ஹஸஜஷ ஆகிய நான்கு எழுத்துக்கள் பயன்படுத்தப்படவே இல்லை. ஆனால் இதைத் தூயதமிழ் என்று சொல்ல முடியுமா?  இது முழுக்க முழுக்க மணிப்பிரவாள நடை. ஹஜஸஷ இல்லாமலேயே மணிப்பிரவாள நடையை ஒருவரால் எழுதமுடியும். எழுதினார்கள். அதற்கான சான்றுதான் கீழே உள்ள பத்தி.

தமிழ் நடை ஒன்று: >>>திரயோதசாந்தமாவது யாதெனில்: சீவசாக்கிரம், மேற்படி  சொப்பனம், மேற்படி சுழுத்தி ஆக 3. நிர்மலசாக்கிரம், மேற்படி சொப்பனம்,  மேற்படி சுழுத்தி ஆக 3. பரசாக்கிரம், மேற்படி சொப்பனம் மேற்படி சுழுத்தி ஆக  3. குருசாக்கிரம், குருசொப்பனம், குருசுழுத்தி, குருதுரியம்,  குருதுரியாதீதம் ஆக 5, ஆக மொத்தம் 14. இதற்கு மேலுமுள சுத்தசிவசாக்கிரம்,  மேற்படி சொப்பனம், மேற்படி, சுழுத்தி, மேற்படி துரியம், துரியாதீதம் இவை  சேருங்கால் சீவ சாக்கிராதி நீக்கப்படும். இவ்வள வனுபவமும் பூர்வத்திலுள்ள  அனுபவிகளால் குறிக்கப்பட்ட நிலைகளில் இல்லை. ஒருவாறு குருதுரிய பரியந்தம்  வேதாகமங்களாலும் தத்துவராயர் முதலிய மகான்களனுபவத்தாலும் குறிக்கப்படும். அதற்கு மேற்பட்ட அனுபவம் சுத்த சன்மார்க்க சாத்தியம். <<<<

தனித்தமிழ் என்பது பிறமொழி கலப்பில்லாத தமிழ். அதை அடைய, நாம் தமிழ்ச் சொற்களை வெகுவாகப் புழக்கத்திற்குக் கொண்டுவரவேண்டும். அவசியமில்லாத வடமொழிச் சொற்களை அகற்ற வேண்டும். அதன் வழியேதான் நம்மால் தனித்தமிழைக் கொண்டுவரமுடியும்.

எங்கே மீண்டும் மணிப்பிரவாள நடை வந்துவிடுமோ என்ற அச்சம் தமிழனுக்கு அவசியம் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதற்குச் செய்ய வேண்டியன என்னென்ன என்பதில் தமிழர்களுக்குத் தெளிவு வேண்டும்.

கீழே உள்ள பத்தியைக் கவனியுங்கள். நல்ல தமிழால் எழுதப்பட்ட ஒரு செய்தி இது. இதில் கட்டாயத்தேவை கருதி ஒரு ஸ் என்ற எழுத்து வந்திருக்கிறது. லீ வென்லியாங் என்ற பெயர் ஆங்கில உச்சரிப்பிற்கு இயன்ற அளவு நெருக்கமாக எழுதப்பட்டுள்ளது.

தமிழ் நடை இரண்டு: >>>கொள்ளை நோயாகப் பரவிவரும் கொரோனா நுண்நச்சுயிரி நோய் பற்றி முதலில் அறிவித்த சீன மருத்துவர், 34 அகவை நிரம்பிய,  மருத்துவர். லீ வென்லியாங் இறந்துவிட்டார். சார்ஸ் என்னும் தொற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கையைவிட இந்த கொரானோ நுண்நச்சுயிரியால் கூடுதல் உயிரிழப்புகள் நேர்ந்துள்ளதாம். இதுகாறும் 361 பேர் இறந்திருப்பதாகச் சீன அரசு தெரிவிக்கின்றது!<<<

இது தூயதமிழில்லையா? இது மணிப்பிரவாள நடையா? சார்ஸ் என்ற சொல்லும் லீ வென்லியாங் என்ற சொற்களும் அயல்மொழிப் பெயர்ச் சொற்கள். அவை தமிழ் வினைச் சொற்கள் அல்ல. இந்தப் பத்தியில் எழுதப்பட்டிருக்கும் ஏனைய சொற்களெல்லாம் தமிழ்ச் சொற்கள்.

தமிழ்ச் சொற்களில்தாம் ஸஹஜஷ ஆகிய எழுத்துக்கள் வருவது தவிர்க்கப்படவேண்டும். அயல்மொழிப் பெயர்ச் சொற்களில் இயன்றவரைதான் தவிர்க்கலாம். பொருளே மாறும் வண்ணம் தவிர்த்தால், புரிதல் அழிந்துவிடும். பின் அந்த மொழியின் பயன்பாடே கேள்விக்குரியதாய் ஆகிவிடும்.

தமிழ் மொழிச் சொற்களையும் அயல்மொழிப் பெயர்ச்சொற்களையும் ஒன்றாகவே பார்க்கவேண்டும் என்பது நடைமுறைக்கு ஒத்துவராத ஒன்று. உலகோடு ஒன்றிவாழ அது ஒருக்காலும் வழி செய்யாது.

12345 ஆகிய எண்கள் அரபு எழுத்துக்கள். தமிழில் அவை ௧௨௩௪௫௬௭௮௯௰௱௲ ஆகும். நாம் தமிழில் அரபு எழுத்துக்களைத்தான் எண்களுக்குப் பயன்படுத்துகிறோம்.  அதனால் தமிழ் வளர்ந்துதான் இருக்கிறது அதன் தூய்மை கெட்டுவிடவில்லை.

1, 2, 3, 4 போன்ற எண்கள்  a+b, a2 + b2, x = y-a போன்ற கணிதக் குறியீடுகள்,  H2O, NaHCO3, NaBO3 போன்ற வேதிக் குறியீடுகள்  யாவும் தமிழ் எழுத்துக்கள் அல்ல. அவற்றை தமிழன் பயன்படுத்துகிறான். அதனால் தமிழின் தூய்மை கெட்டுவிடவில்லை.

இன்றைய உலகில் எந்த மொழியும் தூய்மையாய் இருக்க வழியே இல்லை. அப்படி ஒரு மொழி பொதுத்தளத்தில் இருக்கின்றதா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். 

ஆனால் ஒரு மொழி இயன்ற அளவு தன் கட்டுக்கோப்பு மாறாத தூய்மையில் இருப்பது அந்த மொழியின் தனித்தன்மையை வளர்க்கும். செம்மொழிக்கான உயர்வினையும் பெறும்.

நம் மொழி இயன்ற அளவு தூய்மையாக இருப்பதற்கு நாம் பழந்தமிழ்ச் சொற்களைப் புழக்கத்திற்குக் கொண்டுவரவேண்டும்.

தமிழுக்குள்ளேறிய வடமொழிச் சொற்களை வெளியேற்றும் தனித்தமிழர்களை வெகுவாகப் பாராட்டவேண்டும்.

தானே வந்துவிழும் வடசொற்களுக்கும் இணையான தமிழ்ச்சொற்களைப் பரிந்துரைக்கும் கணிநிரலிகளை உருவாக்க வேண்டும்.

புதிய புதிய அறிவியல் ஆவணங்கள், ஆராச்சிக் கட்டுரைகள், கணினி ஆய்வுகள் வாணவியல் கட்டுரைகள் என்று நவீன உலகின் அனைத்தையும் தமிழில் ஆக்கவேண்டும். அயல்மொழிப் பெயர்ச்சொற்களுக்குள் சிக்கிக்கொண்டுவிட்டால் இப்பணிகள் ஆகக்கூடியவையே அல்ல.

தமிழைக் கவிதை மொழியாய் மட்டுமே பயன்படுத்துவது ஏற்புடையதல்ல. அதை அறிவியல் மொழியாய், கணித மொழியாய், வளர்நாளின் நவீனங்களைக் கையாளும் உயரிய மொழியாய் வளர்த்தெடுக்க வேண்டும்.

அயல்மொழிப் பெயர்ச்சொற்களை சிக்கலுக்குள்ளாக்கி தமிழ் கற்கும் மாணவர்களுக்கு பெரும் நெருக்கடியைக் கொடுக்காமல், அவற்றை இயன்ற அளவு அப்படியே ஏற்று அறிவியல் அறிவை விரைந்து வளரச் செய்ய வேண்டும்.

ஆக்சிஜன் அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும், ஹீலியம் அப்படியே இருக்கட்டும், மைல் கிலோ என்றெல்லாம் நாம் ஏற்றுக்கொண்டதால் நம் தமிழின் தூய்மை கெட்டுப்போய்விடவில்லை. இது உலகறிந்த உண்மை.

புலம்பெயர்ந்தவர்களின் பிள்ளைகள் தாய்மொழியை மறந்து முழுதாக அந்த அந்த நாட்டின் மொழி மட்டுமே அறிந்தவர்களாய் ஆகிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களை மீட்டெடுக்காமல் தமிழ் வாய்மொழியாய்க்கூட இல்லாமல் போய்விடும்.

நாம் அயல்மொழிப் பெயர்ச் சொற்களோடு மல்லுக்கு நிற்கும்போது,  இளையவர்கள் தமிழைவிட்டு விலகிச் சென்றுகொண்டே இருக்கிறார்கள்.

ஹஜஸஷ எழுதத் தடைவிதிக்கும் தமிழர்களும் அவர்கள் எழுதும்போது முதலில் அடைப்புக் குறிக்குள் ஆங்கிலத்தில் பெயர்களை எழுதினார்கள். இப்போது நேரடியாய் ஆங்கிலச் சொல்லை மட்டுமே எழுதத் தொடங்கிவிட்டார்கள். தமிழ் காணாமல் போய்விட்டது.

ஆங்கில எழுத்துக்களில் தமிழை எழுதும் நிலையை நாம் ஊக்குவித்துவிடக் கூடாது. 

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் தன் மகனுக்கு ஸ்டாலின் என்று பெயரிட்டு ஸ எழுத்தைச் சேர்த்தே எழுதினார். தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள், ராஜாஜி, காமராஜர், எம்ஜிஆர், ஜெயலலிதா என்று எல்லோரும் ஜ எழுத்தை எழுதிச் சென்றார்கள்.

தமிழ் நடை மூன்று: >>>இடுமீலு இடுமீலு என்று இரிடி சுட்டான். இடிசியூமு இடிசியூமு என்று சாருசு குத்தினான். கா கா கா என்று எம்சிஆர் சிரித்தார். காசி என்பவர் கச்சுக்குச் சென்று வந்தவர். இடமாசுகசு இசுவிசுவின் தலைநகர் அல்ல.<<<

இதுவா தமிழ்? நான் நெடுங்காலமால் தமிழோடும் தமிழ்க் கவிதைகளோடும் வாழ்ந்துவருகிறேன். எனக்கு இது அயல்மொழியாகத்தான் தெரிகிறது. மணிப்பிரவாளம் எப்படிப் புரியவில்லையோ அப்படியேதான் இதுவும் எனக்குப் புரியவே இல்லை.

வடமொழியும் தமிழும் கலந்து எழுதிய எழுத்துக்கு நாம் மணிப்பிரவாளம் என்று பெயரிட்டோம். இதற்கு என்ன பெயர் இடுவது? புரியா நடைக் குருட்டுத்தமிழ்?

இங்கே மூன்றுவகையாக எழுதப்பட்ட தமிழைக் கண்டோம். ஒன்று மணிப்பிரவாள நடை. அடுத்தது கிரந்தம் அளவோடு கலந்த நல்ல தமிழ் நடை. அடுத்தது கிரந்தம் தவிர்த்த நடை.  நான்காவதாக ஒரு நடை இருக்கிறது. அதுதான் பல்கிப் பெருகி நிற்கின்றது இன்று.

தமிழ் நடை நான்கு: >>>ini solvatharkku onnum ille. ellaam sollitten. Parkku beachunnu inime suththakkoodathu. Pubbum thanniyum mattum life ille. Dance date oda padikkavum venum <<<<

செல்பேசி கணினி அனைத்திலும் இதுதான் நீக்கமற நிறைந்திருக்கின்றது. நாம் என்ன செய்யப் போகிறோம்?

இந்த நான்கு நடையிலும் கூடுதல் வாக்குகளைப் பெற்று நல்ல தமிழ் என்ற நடை என்பது இரண்டாவது நடைதான். இதை 99 விழுக்காட்டினர் ஏற்பர். ஏற்காத ஒரு சிலரையும் விரைவில் காலம் ஏற்க வைக்கும்.

வினைச் சொற்களையும் பெயர்ச்சொற்களையும் ஒரே மாதிரி பாவிக்க முடியாது.

அஹர முதஸ எஸுத்தெல்லாம்
ஆஷி பஹவன் முஷற்றே உஸஹு

இப்படி எவராவது எழுதுகிறார்களா?

மாத்திரைகளின் பெயர்கள் அயல்மொழிப் பெயர்ச்சொற்களில் இருக்கின்றன. அவற்றைத் தமிழ்ப்படுத்தினால் என்னாகும் என்று சிந்திக்கவேண்டாமா?

தமிழில் பிறமொழிப் பெயர்களை உச்சரிக்க வழி தந்ததால் மலையாளம் உருவாகவில்லை. தமிழுக்குள் பிறமொழிச் சொற்கள் அத்துமிறி நுழைந்ததால்தான்  மலையாளம் உருவானது. ஆகவே மணிப்பிரவாள அச்சம் இனி அவசியமில்லை.

தமிழ்ச் சொற்கள் எதிலும் கிரந்தம் கலக்காமல் எழுத முயல்வதே நல்ல தமிழ்.

வழக்கு அழிந்துபோன தமிழ்ச் சொற்களையும் மீட்டெடுத்துப் புழக்கத்தில் கொண்டுவந்து எழுதுவதே நல்ல தமிழ்.

தமிழ்மொழி வளர்ச்சிக்குக் கணினி நிரலிகள் எழுதிப் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதே நல்ல தமிழ்ச் சேவை.

புதிய புதிய அறிவியல் ஆவணங்கள், ஆராச்சிக் கட்டுரைகள், கணினி ஆய்வுகள், வாணவியல் கட்டுரைகள் சமைப்பதே நல்ல தமிழ்ச் சேவை.

வடமொழிப் பற்றாளர்கள் மட்டுமே பத்திரிகைகள் நடந்திவந்த அந்தக் காலம் எப்போதோ முடிந்துபோய்விட்டது.

தமிழ் வினைச் சொற்களில் ஹ ஜ ஸ ஷ வை வலிந்து சேர்ப்பது கூடாது. அதே போல அயல்மொழிப் பெயர்ச் சொற்களில் ஹ ஜ ஸ ஷ வைக் கலக்காமல் எழுதுகிறேன் என்று தமிழை புரியாத புதிராய் எழுதுவதும் கூடாது.

எந்த தமிழ் வார்த்தையும் தெரியாமல் தமிழர் கூட்டம் நான் shopping போறேன், எனக்கு Sick leave வேண்டும், என் father engineer, என் அக்கா housewife என்றெல்லாம் உரையாடுகிறார்கள். எந்த தமிழ் வினைச் சொல்லும் பயன்படுத்தாமல் தமிழ் அதல பாதாளம் சென்றுவிட்டது. அதை மீட்டெடுப்போம். நம் கவனத்தை அயல் மொழிப் பெயர்ச்சொற்களிலிருந்து மாற்றி தமிழ் வினைச்சொற்களின் சேகரிப்பில் முழுமையாகச் செலுத்துவோம்.

இயல்பாக அறிவியலில் புழக்கச் சொற்களை அதன் மொழியிலேயே பயன்படுத்தி அறிவியல் அறிவை வளர்க்கும் போக்கை துரிதப்படுத்தவும் தூண்டவும் வேண்டும். அதுதான் உயர்ந்த தமிழ்ச் சேவை.

தமிழ் வாழும் மொழியாய் இருக்க வேண்டும் அது மிக மிக முக்கியம். இந்த உலகின் அறிவியல், கணிதம், வேதியல், கணினி, பெயர்ச்சொற்கள் இவற்றை எல்லாம் இளகுவாக ஆக்கிக்கொள்ளாமல் தமிழை வாழும் மொழியாய் ஆக்கிவிட முடியாது.

ஔவை நடராசன், கவிக்கோ அப்துல் ரகுமான், கவியரசர் கண்ணதாசன், கவிப்பேரரசு வைரமுத்து இன்னும் எழுத்தாளர்கள் கவிஞர்கள் பத்திரிகையாளர்கள் ஊடகவியலாளர்கள் அனைவரும் அவசியம் ஏற்படும்போது அந்த நான்கு எழுத்துக்களை எழுதுபவர்களாகவே இருக்கிறார்கள். ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தினால் இது தெளிவாகத் தெரியும்.

தமிழையும் தங்களையும் தனிமைப் படுத்திக்கொள்கின்றனர் சிலர். இது புதிதல்ல, அந்தக் காலம் முதல் நிகழும் ஒன்றுதான். மரபுகவிதைதான் எழுதவேண்டும். இவையெல்லாம் குப்பைகள், கவிதைகள் அல்ல. உனக்குத் தமிழ் தெரியாது தமிழ் இலக்கணம் தெரியாது என்று வசைபாடினார்கள் அன்று. இன்று அப்படிப் பேசுவோர் இருக்கிறார்களா என்பதே ஐயம்தான். ஆகவே காலம் சரியான பதிலைச் சொல்லும். இப்போதே அப்படியான பழமைவாதிகள் 1 விழுக்காடு கூட இருக்கமாட்டார்கள்.

ஹ ஜ ஸ ஷ சுமார் ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக தமிழில் இருக்கின்றன. அன்று மணிப்பிரவாளம் தலைதூக்கி ஆடியது. இன்று மணிப்பிரவாளம் அழிந்துவிட்டது.

அதாவது மணிப்பிரவாளம் இந்த நான்கு எழுத்துக்களும் பயன்பாட்டில் இருக்கும்போதே அழிந்துவிட்டது. என்றால் நாம் சிந்திக்க வேண்டும். மணிப்பிரவாளம் வருவதும் போவதும் இந்த நான்கு எழுத்துக்களால் அல்ல, வடமொழியைத் தமிழில் ஏற்றவேண்டும் என்ற சிலரின் தீராத விருப்பத்தால்தான். ஆகவே நமக்கு அந்த பழைய அச்சம் இன்று தேவையே இல்லை. தூயதமிழ் எதுவென்ற தெளிவில் நல்ல தமிழ் வளர்ப்போம்.

அன்புடன் புகாரி

No comments: