தனித்தமிழும் ஸஜஷஹ எழுத்துக்களும்




தனித்தமிழ் என்றால் என்ன?

தனித்தமிழ் என்பது பிறமொழி கலப்பில்லாத தமிழ். அதை வளர்த்தெடுப்பது ஒவ்வொரு தமிழனுக்கும் பெரிதும் அவசியமானது.

தனித்தமிழ் இயக்கங்கள் ஏன் வந்தன?

வடமொழி தமிழின்மீதேறி தமிழால் தனித்து இயங்க இயலாது என்று கூறி தமிழை ஒட்டுமொத்தமாய் அழித்துவிட பலகாலும் பலவழிகளிலும் முயன்றது. வடமொழியிலிருந்து தமிழை மீட்டெடுக்கவே தனித்தமிழ் இயக்கங்கள் வந்தன. அவற்றின் சேவைகள் ஒவ்வொரு தமிழனின் தன்மான உணர்வையும் தட்டியெழுப்பக்கூடியவை.

வடமொழி கலப்பால் நிகழ்ந்த மாற்றங்கள் என்னென்ன?

வடமொழி மிக அதிகமாக கலந்ததால் தமிழின் முதல் வாழ்வியல் காவியமான சிலப்பதிகாரம் எழுதிய சேரநாடு மலையாள நாடானது. மலையாளம் என்ற புதுமொழி உருவானது. மலையாளத்திலிருக்கும் வடசொற்களை எல்லாம் நீக்கிவிட்டால், அது மீண்டும் தமிழர் நாடாகவே ஆகிவிடும். இப்படியேதான் தெலுங்கு, கன்னடம் போன்ற திராவிட மொழிகள் யாவுமே. இவையாவும் தமிழில் வடசொற்கள் கலக்கக் கலக்க தமிழை விட்டுப் பிரிந்துபோனவை.

மணிப்பிரவாளம் என்றால் என்ன?

தமிழில் வடசொற்கள் வெகுவாகக் கலந்து ஒரு புதுமொழி தமிழ்நாட்டிலேயே உருவானது. அதன் பெயர் மணிப்பிரவாளம். ஒரு மணியும் ஒரு பவளமும் சேர்த்துக்கட்டிய மாலையைப்போல ஒரு தமிழ்ச்சொல்லும் ஒரு வடசொல்லும் சேர்த்துக் கட்டிய மொழி அது. ஒரு நூறாண்டுகளுக்கு முன்னெல்லாம் மணிப்பிரவாள மொழியே தமிழ்நாட்டில் பேசப்பட்டு வந்தது. அதை மீட்டெடுக்க வந்த இயக்கம்தான் தனித்தமிழ் இயக்கம். அந்தத் தனித்தமிழ் இயக்கத்தை நேசிக்காத தமிழன் இருப்பது அரிது. தமிழ் வெகுவாக மீட்டெடுக்கப்பட்டு, இன்று தனித்து இயங்கக்கூடிய மொழியாய்த் தன்னை நிறுவி இருக்கிறது. செம்மொழி என்று அறிவிக்கப்பட்டும் இருக்கிறது. அதற்காக உழைத்த தமிழறிஞர்களை எல்லாம் நாம் என்றென்றும் போற்றுகிறோம்.

திசைச்சொல் என்றால் என்ன?

திசைச்சொல் என்பது வேற்றுமொழிகளிலிருந்து தமிழ்ப்படுத்தப்பட்டு தமிழுக்குள் நுழையும் சொற்கள். ஆனால் மூல மொழிச் சொற்களே இல்லாமல் முழுவதும் திசைச்சொற்களாகவே ஆவது எங்கே கொண்டு செல்லும்? அளவுக்கு மிஞ்சினால் அமுதும் நஞ்சல்லவா? ஆகையினால்தான் கட்டாயத் தேவை தலைதூக்கும் பொழுதில் மட்டுமே திசைச்சொல் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. மைல், கிலோமீட்டர், லிட்டர் போன்ற திசைச் சொற்கள் இதற்கான உதாரணங்கள்.

கிரந்தம் என்றால் என்ன?

வடசொற்களைத் தென்னகத்தில் எழுதுவதற்குப் பயன்பட்ட ஓர் எழுத்து வடிவமே கிரந்தம். ஏனெனில் வடசொற்களின் உச்சரிப்புகளை தமிழ் எழுத்துக்களைக்கொண்டு எழுதிவிடமுடியாது. ஆகவே வடமொழி அறிஞர்கள் கிரந்தம் என்ற ஓர் எழுத்துமுறையை தமிழ் எழுத்துக்களில் இருந்து உருவாக்கினர் என்பர். தமிழ்மொழி மணிப்பிரவாள மொழியாகி தமிழ் எழுத்து கிரந்த எழுத்தாகி தமிழ் அழிப்பு வெகுவாக நடந்தேறிக்கொண்டிருந்தது. அதை தமிழனால் ஏற்கமுடியுமா? ஏற்றால் அவன் தமிழன் தானா?

ஸ ஜ ஷ ஹ எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்களா?

தமிழகத்தில் கிரந்த எழுத்துக்கள் வெகுவாக ஒழிக்கப்பட்டுவிட்டன. ஆயினும் கட்டாய தேவை கருதி ஒரு நான்கு எழுத்துக்கள் மட்டும் தமிழறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. ஸ ஜ ஷ ஹ ஆகியவையே அவை. கணினியில் தமிழ் எழுத்துக்களைத் தட்டச்சும்போது இந்த நான்கு எழுத்துக்களும் இருப்பதைக் காணலாம்.

இந்த நான்கு கிரந்த எழுத்துக்களும் ஏன் கட்டாயத் தேவையில் இருக்கின்றன?

இன்றைய உலக வாழ்வும் வளமும் இலக்கியங்களைத் தாண்டி கணிதம் அறிவியல் வேதியல் இயற்பியல் போன்ற பலவற்றாலும் ஆனவை. தமிழ்ச் சொற்களை எழுதுவதற்கு தமிழ் எழுத்துக்கள் நிச்சயமாகப் போதும். ஆனால் அனைத்து அயல்மொழிப் பெயர்ச் சொற்களையும் எழுதுவதற்கு தமிழ் எழுத்துக்கள் போதுவவில்லை. அதற்காக மீண்டும் அனைத்து கிரந்த எழுத்துக்களையும் ஏற்க முடியுமா? முடியாது, கூடாது. அதற்கான அவசியமும் இல்லை. ஆனால் இந்த ஸ ஜ ஷ ஹ ஆகிய நான்கு எழுத்துக்களைத் தவிர்ப்பது கடினமானதாய் இருக்கிறது.

அதற்காக இந்த நான்கு எழுத்துக்களையும் மீண்டும் வடமொழிச் சொற்களைத் தமிழில் எழுதுவதற்குப் பயன்படுத்தலாமா? நிச்சயம் கூடாது. தமிழில் தமிழ்ச் சொற்களையே புழக்கத்தில் கொண்டுவரவேண்டும். அப்படிக் கொண்டுவந்துவிட்டால், இந்த எழுத்துக்களுக்கு அவசியமே இல்லை.

பிறகு ஏன் இந்த நான்கு எழுத்துக்கள்?

மொழி, கவிதை, அன்பு, முரசு என்பனவெல்லாம் தமிழ்ச் சொற்கள். அதை எந்தத் தமிழனும் மொஸ்ஸி, வ்ஜை, ஹன்பு,முர்ஷு என்று ஹஜஸஷ ஆகிய நான்கு கிரந்த எழுத்துக்களைச் சேர்த்து எழுதுவதில்லை.

ஜான், ஜார்ஜ், குஷ்பு, ஹரிஹரன், குஷ்வந்த் சிங், ஸ்டாலின், ராஜாஜி, எம்.ஜி.ஆர் போன்ற தனிமனிதப் பெயர்களும்   ஸ்காட்லாண்ட், டமாஸ்கஸ், ஸ்கார்பரோ போன்ற நாடுகளின் நகரங்களின் பெயர்களும் ஜனவரி, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் போன்ற ஆங்கில மாதப் பெயர்களும் பெயர்ச் சொற்கள், சரியாகச் சொல்வதென்றால் அவை அயல்மொழிப் பெயர்ச்சொற்கள்.

அவை தமிழ்ச்சொற்கள் அல்ல.  இவற்றை சான், சாருசு, குசுப்பு, கரிகரன், குசுவந்த சிங்கு, இசுட்டாலின், இராசாசி, எம்.சி.ஆர்,   இசுக்காட்டுலாந்து, இடமாசுகசு, இசுக்காருபரோவு, சனவரி, சூன், சூலை, ஆகத்து என்று சிலர் எழுதுகின்றனர். அதுதான் தனித்தமிழ் என்று பிழையாக எண்ணிக்கொள்கின்றனர்.

தமிழ் மொழிச் சொற்களையும் அயல்மொழிப் பெயர்ச்சொற்களையும் ஒன்றாகவே பார்ப்பேன் என்பது நடைமுறைக்கு ஒத்துவராது. உலகோடு ஒட்டிவாழ அது ஒருக்காலும் வழி செய்யாது.

உடனே சிலர் பாரதி என்று எழுதும்போது முதல் எழுத்து B யா அல்லது P யா? அதை உங்களால் சரியாக எழுதமுடியுமா உச்சரிக்க இயலுமா என்று விமரிசிக்க வருகிறார்கள்.

மொழி மாறும்போது உச்சரிப்பில் சிதைவுகள் கொஞ்சம் இருக்கும் அதில் பிழையில்லை. முழுச்சிதைவு தமிழையும் தமிழனையும் உலக அரங்கில் நிலைகுலையச் செய்துவிடும்.

பாரதி என்ற பெயர்ச்சொல்லில் B என்ற உச்சரிப்பு வராமல் போனாலும் பெரும் சிதைவு இல்லை என்று அதை ஏற்றார்கள் தமிழ் அறிஞர்கள். ஆனால் டமாஸ்கஸ் என்ற சொல்லை இடமாசுகசு என்று எழுதினால் பெருஞ் சிதைவு ஏற்படுகிறது. அதைத் தவிர்ப்பதே உலக அரங்கில் நிற்கும் தமிழனுக்கான வளர்ச்சி.

குஷ்வந்த் சிங் மிகப்பெரும் பத்திரிகையாளரும் வழக்கறிஞரும் அரசியல்வாதியும் ஆவார். அவர் பெயரை குசுவந்த சிங்கு என்று எழுதுகிறார்கள். குசவந்து சிங்கு என்று இதை மாற்றிக்கொள்ளலாம் என்று ஒருவர் சமாளித்தார். ஆனால் நாலுபேருக்கு மத்தியில் அல்லது மேடையில் குஷ்வந்த் சிங் எனச் சொல்வார்களா அல்லது குசவந்த சிங்கு என்று சொல்வார்களா? Kusavantha Singu என்று தனித்தமிழ் முறைப்படி அவரை ஆங்கிலத்தில் எழுதுவார்களா?

சிலர் சிக்கிக்கொண்டு வெளிவர இயலாமல் தவிப்பது எதிலென்றால், தமிழ்ச்சொல்லுக்கும் அயல்மொழிப் பெயர்ச் சொல்லுக்கும் ஒரே இலக்கணத்தைப் பலுக்கப்பார்ப்பதுதான். அயல்மொழிப் பெயர்ச் சொற்கள் தமிழ்ச்சொற்கள் அல்ல.

குஷ்வந்த் சிங் எப்படித் தமிழ்ச் சொல் ஆகும்? குஷ் என்றால் மகிழ்ச்சி, குஷ்வந்த் என்றால் மகிழ்ச்சி நிரம்பப் பெற்ற என்று பொருள்.

இந்த குஷ்வந்த் என்பதைத் தமிழ்ச் சொல்லாய் ஏற்றுக்கொண்டால் அதை குசவந்த என்று ஏற்கத்தான் வேண்டும். ஏனெனில் தமிழ்ச் சொற்களில் கிரந்த எழுத்துக்கள் வரக்கூடாது. அதன்படி, குச என்றால் மகிழ்ச்சி குசவந்த என்றால் மகிழ்ச்சி நிரம்பிய என்று பொருளாகும். பின்னரெல்லாம் நாம் தமிழில் எழுதும்போது பொங்கல் விழா குசவந்த விழாவாக இருந்தது என்று எழுத வேண்டிவரும். ஏனெனில் நாம் குஷ்வந்த் என்ற சொல்லைத் தமிழ்ச் சொல்லாய் ஏற்றுக்கொண்டுவிட்டோம். இது தமிழுக்குப் படுநாசம் அல்லவா? பிறகென்ன தமிழ்மொழி காணாமல் போய் உலகமொழிகள் அனைத்தும் தமிழ்ச்சொற்களாய் ஆகிப்போய்விடும் அல்லவா?

ஆகவே, நாம் தமிழ்ச் சொற்களைப் பற்றியே கவலைகொள்ள வேண்டும். அயல்மொழிப் பெயர்ச்சொற்கள் எப்படி இருந்தால் நமக்கென்ன என்று அவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

மகனே உன் பெயர் ஜான் என்கிறாயா ஜான் என்றே உன்னை நான் அழைப்பேன். இல்லை உன் பெயர் யோகான் என்கிறாயா, அதுவும் சரி, உன்னை நான் யோகான் என்றே அழைப்பேன். ஏனெனில் அது உன் பெயர். அதில் களேபரம் செய்வது எவருக்கும் கூடாத செயல்.

அடுத்து, Hariharan என்கிற ஒருவரின் தகப்பனார் பெயரை அரிகரன் என்று தமிழில் எழுதி பின் அப்படியே ஆங்கிலத்தில் Arikaran என்று எழுதியதால், H  என்னும் இனிசியல் A  என்று ஆனது.  பள்ளிக்கூடத்தில் எழுதிய இதை பிறகு கல்லூரிகளிலும் கடவுச் சீட்டிலும்  மாற்ற வழியே இல்லாமல் போய்விடுகிறது.

தமிழன் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்திய தமிழ் எழுத்துக்களை மட்டுமே இன்றும் பயன்படுத்திக்கொண்டிருக்கவில்லை. எத்தனையோ மாற்றங்களைத் தமிழ் எழுத்துக்கள் பெற்றுவந்துள்ளன.

தமிழ் எழுத்துக்களோடு மட்டுமே இன்றைய தமிழனின் மொழித்தேவை நின்றுவிடுவதில்லை.

12345 ஆகிய எண்கள் அரபு எழுத்துக்கள். தமிழில் அவை  ௧௨௩௪௫௬௭௮௯௰௱௲ ஆகும். நாம் எண்களுக்குத் தமிழ் எழுத்துக்களைப் பயன்படுத்துவதில்லை அரபு எழுத்துக்களைத்தான் பயன்படுத்துகிறோம்.

கணித தீபிகை என்ற நூல் 1825ஆம் ஆண்டு வெளிவந்தது. தமிழில் கணிதத்தைப் பற்றி அச்சான முதல் நூலாக இதுவே இருக்கக்கூடும். அன்றைய அச்சுப் பதிப்பில் கணிதத்தினைத் தமிழ் எண்களைக்கொண்டு விளக்கியுள்ளது. ஆனால் நாம் இன்று தமிழ் எண்ணெழுத்துக்களைக்கொண்டு கணிதம் பயில்வதில்லை. அரபி  எண்களைக்கொண்டுதான் பயில்கிறோம். இங்கே தனித்தமிழ் என்று எழுத்துக்களைப் பற்றியே கவலைகொள்ளும் சிலரும் இது ஏன் என்று சிந்திக்க வேண்டும்.

1, 2, 3, 4 போன்ற எண்கள்  a+b, a2 + b2, x = y-a போன்ற கணிதக் குறியீடுகள்,  H2O, NaHCO3, NaBO3 போன்ற வேதிக் குறியீடுகள்  யாவும் தமிழ் எழுத்துக்கள் அல்ல. ஆனால் தமிழன் இவற்றைப் பயன்படுத்தியே தீரவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான்.

கட்டாயத் தேவை என்பது எங்கே தலை தூக்கி நிற்கிறதோ அங்கே ஏற்கவேண்டியவற்றை ஏற்க வேண்டும். ஏற்பதுதான் வளர்ச்சி. தமிழ் வளரும் மொழி. அது இவ்வுலக வழக்கங்களைத் தழுவி வளராமல், வெறுமனே வாடி, வதங்கி, சிதைந்து, உதிர்ந்துபோகும் பட்டமரமல்ல.

நான் பழந்தமிழ்ச் சொற்களைப் புழக்கத்தில் கொண்டுவந்து தமிழுக்குள்ளேறிய வடமொழிச் சொற்களை வெளியேற்றும் தனித்தமிழர்களை வெகுவாகப் போற்றுபவன்.

அயல்மொழிப் பெயர்ச் சொற்களை நகைப்புக்குரியதாய் ஆக்கி உலக அரங்கில் தமிழனை கையாளாகாதவனாய் நிறுத்தும் வரட்டுத்தனத்தை ஆதரிக்காதவன்.

எந்த ஒரு தமிழனாவது இன்று ஒரு மேடையில் ஏறி, நான் சூனில் இடமாசுகசு போனேன் அங்கே சான் சாருசை, குசுப்போடும் கரிகரனோடும் சந்தித்தேன், இசுட்டாலினைப்பற்றியும் எம்சியாரைப் பற்றியும் ராசாசியோடு ஒப்பிட்டுச் சொன்னேன், குசுவந்த சிங்கை நினைவு கூர்ந்தேன் என்று பேசுவானா?

அன்று வடமொழி காட்டிய அச்சத்தால் இன்று உலக அரங்கில் இடறி விழுந்து பிடரி நரம்பறுந்து நிற்பது தனித்தமிழ் அல்ல, தண்டனைத்தமிழ்.

தமிழ்மொழி வளர்ச்சிக்குக் கணினி நிரலிகள் எழுதாமல் அயல்மொழிப் பெயர்ச் சொற்களோடு மல்லாடுவது தமிழ் அழிப்பு.

புதிய புதிய அறிவியல் ஆவங்கள், ஆராச்சிக் கட்டுரைகள், கணினி ஆய்வுகள் வாணவியல் கட்டுரைகள் சமைக்காமல் அயல்மொழிப் பெயர்ச் சொற்களைத் தமிழாக்குகிறேன் என்று வெகுவாகச் செலவழிந்து போவது தமிழ் அழிப்பு.

தமிழைக் கவிதை மொழியாய் மட்டுமே பயன்படுத்துவது தகாத செயல். அதை அறிவியல் மொழியாய்க் கணித மொழியாய் வளர்த்தெடுக்க வேண்டும். அதற்கு அயல்மொழிப் பெயர்ச் சொற்களை மாற்றிக்கொண்டிருக்காமல், அந்தந்த அயல்மொழிப் பெயர்ச்சொற்களை அப்படியே ஏற்று அறிவியல் அறிவை விரைந்து வளரச் செய்ய வேண்டும். ஆக்சிஜன் அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும், ஹீலியம் அப்படியே இருக்கட்டும், மைல் கிலோ என்றெல்லாம் நாம் ஏற்றுக்கொண்டு கெட்டுப்போய்விடவில்லை.

புலம்பெயர் பிஞ்சுகள் தாய்மொழியை மறந்து முழுதாக அந்த அந்த நாட்டின் மொழிக்குள் சென்றுகொண்டே இருக்கின்றனர். அவர்களை மீட்டெடுக்காமல் தமிழ் வாய்மொழியாய்க்கூட இல்லாமல் போய்விடும்.

சாருசு இமாசுகசு குசுப்பு என்றெல்லாம் சொல்லி உலக அரங்கில் நிற்கும் தமிழ் இளைஞர்களை வெகுண்டோட வைப்பது தமிழை வளர்க்குமா அழிக்குமா?

தமிழை வளர்க்க உருவான தனித்தமிழை, தமிழை அழிக்கப்பயன்படுத்துவதைவிட தகாத செயல் இன்னொன்றில்லை.

அன்புடன் புகாரி

No comments: