Showing posts with label - 00 கவிதை வந்த கதை. Show all posts
Showing posts with label - 00 கவிதை வந்த கதை. Show all posts
புன்னகைக் கொத்து

புன்னகை என்பது ஒரு மாயமொழி. மௌனத்தின்முன் மொழிகளெல்லாம் தங்களின் வீரியம் இழக்கின்றன. புன்னகையின் முன்னோ தம்மையே இழக்கின்றன. ஒரு புன்னகையை மட்டும் வைத்துக்கொண்டு இந்த உலகின் அத்தனை பொக்கிசங்களையும் அடைந்துவிடலாம், அனுபவித்துவிடலாம்.

உண்மையான புன்னகையாய் மட்டும் அது இருக்கவேண்டும். எல்லாவ்ற்றுக்கும் போலியைக் கண்டுபிடித்து வித்திருக்கிறானே மனிதன். ஆகையால் பொறுப்புத் துறப்பாக இதையும் எழுதிவிடத்தான் வேண்டும்.

உண்மையான புன்னகை என்பது ஆழ்மனக் கிடங்கில் அன்பின் எழுச்சியில் தானே பிறந்து இதழ்களில் விரியும் புதினப்பூ.

பத்துமாதம் இடைநோகச் சுமந்து பெற்ற பிள்ளையை முதலில் காணும் கண்களில் முதலில் புன்னகை சிறுதுளியாய் கண்களிலிருந்து மலர்கிறது பின் அது இதழ்களை நிறைக்கிறது. ஆம் புன்னகை என்பது இதழ்களிலிருந்து விரியும் பூ மட்டுமல்ல, முதலில் அது கண்களில் மலர்ந்தால்தான் அதன்பின்னால் உண்மையின் ஊற்றுகள் இருக்கின்றன.

ஒரு புன்னகை இதழ்களில் மலரும்போது, அந்த உயிருக்குள் எத்தனை புத்தெழுச்சி மாற்றங்கள் நிகழ்கின்றன என்பது ஆழ் உணர்வுகளின் அதிசயம். ஒவ்வொருவரும் புன்னகை மட்டுமே சிந்தும் பூக்களாகிப் போனால் இந்த பூமி சொர்க்கத்தைவிட பலமடங்கு சுகங்களை அள்ளி இறைக்கும் வரமாகிப் போகும்.

இப்படியே புன்னகையைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம். இந்தக் கவிதை புன்னகையைப் பற்றி ஏதோ சொல்கிறது. மூடிக்கிடக்கும் இதழ்களில் ஒரு புன்னகை சட்டென விரியுமா இக்கவிதையை வாசித்தால் என்று சொல்லுங்கள்.

உன் புன்னகையைப் பிடித்துக்கொண்டு என் புன்னகை வரைந்த ஒரு புன்னகைக் கவிதைதான் அன்பே இது!

முக்கியமானவர் எவரையேனும்
சந்திக்கச் சென்றால்
வழமையாய்ப்
பூங்கொத்து கொடுப்பார்கள்
நீயுன் புன்னகையைக் கொடு
போதும்
பூக்களெல்லாம்
நிறமிழந்து
உதிர்ந்து போகும்

அன்புடன் புகாரி

கடத்தப்பட்ட நகரங்கள்

ஆகஸ்ட் 14, 2003 ஒண்டாரியோ, நியூயார்க், மிச்சிகன் ஆகிய வட அமெரிக்க மாகாணங்கள் ஒரே நேரத்தில் மின்சாரமற்றுப் போயின. அடுத்தநாள் இரவுக்குள் அனைத்தும் கட்டுக்குள் வந்துவிட்டன என்றாலும் அந்த இருட்டு இரவின் எண்ணங்கள் ஒரு பிரகாசமான கவிதைக்கு வெளிச்சம் தந்ததென்னவோ உண்மை.


கஞ்சா கடத்தினால்
சிலமாதச் சிறைவாசம்

விமானம் கடத்தினால்
சிலவருடச் சிறைவாசம்

செழித்துக் கொழித்த சில
நகரங்களையே கடத்தினால்?

ஆம்!
உலகின் தலைசிறந்த
வட அமெரிக்க நகரங்களுள்
சிலவற்றை
சிரஞ்சீவிமலை பெயர்த்துச்
சிவ்வென்று பறந்த அனுமந்தனாய்க்
கடத்திக்கொண்டுபோய்
கூடுவாஞ்சேரியும் கிண்டலடிக்கும்
ஓர் ஆதிவாசிப் பொட்டலில்
அப்படியே போட்டுவிட்டு
அநியாயமாய்ப் பறந்துவிட்டது
மின்சாரம் என்னும் துரோகி

வினோதம் என்னவென்றால்
கடத்தப்பட்ட நகரங்கள்
கடத்திய கொடுங் கள்ளன்
மின்சாரத்திடமே
ஆயுளுக்கும்
சிறையிருக்கக் கோரி
கண்ணீர்விட்டுக் கதறின


இருட்டுப் பற்கள்
மயான நிசப்தமாய் நெறிய
சத்தமில்லாமல்
சாத்தானாய்ச் சிரித்தான்
மின்சாரம்

o

ஆசைகளே தேவைகள் -அந்தத்
தேவைகளே மனிதர்கள்

'என்னை எடுத்துக்கோ
ஏய்... என்னையும் எடுத்துக்கோ'
என்றே அழகுகாட்டி
அங்காடிச் சாளரங்களில்
வீற்றிருக்கும்
தேவையில்லாப் பொருட்கள்
ஆசை வாகனங்களேறி
நம்வீட்டு
அலமாரிகளை நிறைக்கும்
கதையல்லவா நம் கதை

இந்த நவீன நாட்களில்
சூரியனைக் கிள்ளித்தரும்
செயற்கை நிலாக்களாய் அணிவகுக்கும்
சாலை விளக்குகள் முதல்
வாழ்வின் எல்லாமுமாகிப்போன
இணையம் வரை
கொடுத்துக் கொடுத்து
மனிதவாழ்வை அடிமைவாழ்வாக்கிய
மின்சாரம் என்னும் மகா பூதம்
ஒருநொடி தொலைந்துபோனால்
உயிர் தொலைத்தப் பரிதவிப்பில்
தேடியோடும் பிணங்களாய்
மக்கள்

O


பெண்டாட்டி
பிறந்தகம் போனால்
வரும் வரை காத்திருக்கலாம்
கண்ணில் பொங்கும்
புதுப்பிக்கப்பட்ட காதலோடு

மின்சாரம் போனால்?

o

வங்கிநிறையப் பணமிருந்தும்
ஓர் அட்டையைத்தானே
வைத்திருந்தோம்

O

காசுகேட்டு நின்றால்
பேசாமல் நின்று
நம்மைப்
பிச்சைக்காரனாக்கிய
வங்கி இயந்திரத்தின்
பேச்சை நிறுத்தியது யார்?

சின்னச் சிறகடித்து
வானம் பாய முடியாத
கோழிக்குஞ்சுகளாய்
மின்தூக்கிப் பருந்துகளிடம்
அகப்பட்ட அவலங்கள்

'ஆயிரத்தெட்டாம் திருப்படி
சரணம் பொன் மின்சாரம்' என்று
அடுக்கு மாடிப் படிக்கட்டுகளில்
அழுகுரல்கள்

உணவை
நஞ்சாய் மாற்றித்தரும்
குளிரில்லாப்பதனப் பெட்டிகள்



தண்ணி இல்லாக்
கழிப்பறைக் கொடுமையை
எங்கே கொண்டுபோய்க்
கழிப்பது?

இந்தத்
திருடர்களின் சுதந்திரதினத்தில்
மிரட்டும் இருட்டுக்குப் பயந்து
அவர்களும் பதுங்கிவிட்டார்கள்

உங்கள் பிரச்சினை உங்களோடு
எங்களுக்கு தொலைக்காட்சியில்
சித்திரப்படம் காட்டு என்று
உருண்டுபுரளும் இரண்டுவயது
புதிய சுகவாசிகள்

இப்படிப்
பட்டியலிட்டால்
முடிந்துபோகும் அவதிகளா
மின்சாரமில்லா அவதிகள்?

o

ஆனாலும்
இந்த ஓர் இரவு மட்டும்
ஊருக்குப் போய்வந்த
அடிமன நிறைவு

மெல்ல மெல்ல
இருட்டைப் பழகிய கண்கள்
தங்களின் உட்பாவைக்குள்
ஊரை உயிர்ப்பித்துக்கொண்டன

நேற்றுவரை
கண்ணில் தெரியாத வானம்
ஆயிரம் கவிதைகள் சொன்னது


மெல்லிய ஓசைகளின்
இனிய காதலைக்
காதுகள் அங்கீகரித்து
மோகம் கொண்டன

இத்தனையையும்
தின்றுவிட்டுத்தானே
மின்சாரம் என்ற பக்காத்திருடன்
நம்மை உள்ளே அடைத்துத்
தாளிட்டுக் கொள்கிறான்

அந்தச் சிறையில்
காலமெல்லாம்
கம்பி எண்ணிக்கொண்டே
நம் நவீன வாழ்க்கை

* (ஆகஸ்ட் 2003)