Showing posts with label 09 கடவுளின் மடிகள். Show all posts
Showing posts with label 09 கடவுளின் மடிகள். Show all posts
கடவுளின் மடிகள்

அறுபட்ட நரம்புகளில்
விடுபட்ட உறவுகளின் மிச்சம்
சொட்டுச் சொட்டாய்க் கொட்ட

எது அழிந்து
எப்படிப்போனாலும்
என்றும் அழிந்துபோகாத
பசி மட்டும்
சுயநினைவைச் சூறையாட

விழுந்துகிடக்கிறது
கிழம்
குப்பைத் தொட்டியில்

குப்பைத் தொட்டிகள்
கடவுளின் மடிகள்

இன்று மலர்ந்த தளிர்களும்
நாளை உதிரும் சருகுகளும்
அந்த மடிகளில்தான்
இப்போதெல்லாம்

மனிதநேயம் நாளுக்கு நாள்
தாயம் விளையாடப்பட்டு
பாம்பு கொத்தி பாம்பு கொத்தி
நச்சுப்பல் அச்சுகளோடு
குப்பைத் தொட்டிகளில்

நியாயம்தான்!

வேண்டாதவற்றைக்
கொட்டத்தானே
குப்பைத்தொட்டிகள்

இளைஞனே
இது உனக்கு நல்லதோர் எச்சரிக்கை

நீதானே
நாளைய கிழம்
இன்றே
சுதாரித்துக் கொள்

உன் முதுமை வாழ்வுக்கு
சில்லறைகளைச் சேமித்துக்கொள்

இன்று
நீ எறிந்ததைவிட
நாளை உன்னைத்
துரிதமாய்த் தூக்கியெறிவான்
உன் பிள்ளை

இப்போதே
கொஞ்சம் சேமிப்பை
எவரும் தொட முடியாப்
பாதுகாப்புப் பெட்டகத்தில்
பதுக்கி வைத்துக்கொள்

அது
எதைப் போக்காவிட்டாலும்
அற்பப் பசியையாவது
அது போக்குமல்லவா

*
செய்தி:
குப்பைத் தொட்டி ஒன்றில் முதியவர் ஒருவர் கொட்டப்பட்டு உயிரோடு கிடந்தார்




தனிமையின் வெளிச்சத்தில்

உனக்கும் உனக்கும் கிடைத்த
ஒப்பற்ற நேரம்
 தனிமை

உன்னோடு
உன்னைச் சேர்த்துப் பார்க்கவும்
உன்னிடமிருந்து
உன்னைப் பிரித்துப் பார்க்கவும்
அற்புத நிமிடங்களை
அள்ளித்தரும் ஞானவொளி
தனிமை

அனுபவமற்றோர்க்குக் கொடுமை
ஆழ்ந்த ஞானிகளுக்கோ வரம்
தனிமை

அறிவெனும் விருட்சத்தின்
வேர்களில் ஊற்றப்படும் அமுத நீர்
தனிமை

உன் பூரண சக்தியை
ஓர் உற்சாகப் புயலைப்போல
சற்றும் பிறளா வீரியத்தோடு
வெளிக்கொண்டுவரும் தங்கச்சாவி
தனிமை

0

தனிமையின் தனிமையில்
உன்னை உனக்குள் நிறுத்தி
பேரறிவுச் சுடராய் எரியலாம்

அமைதியின் ஆழத்தில்
சிந்தனை சிதறா நிலையில்
உன் நெற்றியொளி உயர்த்தி
அணையா தீபமாய் உன்னை
ஞானச் சிமிழில் ஏற்றிக்கொள்ளலாம்

தனிமையின் தனிமையில்
உன்னோடு அந்தரங்கமாய்ப் பேசும்
குரல்களைக் கேள்

உன் வாழ்க்கைப் பாதை
தெள்ளெனத் தெரிவதை
உயிர் விருப்போடு காணலாம்

0

உண்மையில்
உனக்கே உனக்கென அருளப்படும்
தனிமையில்
நீ தனியாய் இருப்பதில்லை

பிரபஞ்சமாம் ஐம்பூதங்களும் 
உன்னோடுதான் இருக்கின்றன

உன்னைப் புட்டுப்புட்டு வைக்கும்
உன் ஐம்புலன்களும்
உன்னோடுதான் இருக்கின்றன

உன் எண்ணங்கள்
தன் திறந்த விழிகளோடு பூரணமாய்
உன்னோடுதான் இருக்கின்றன

உன் அளவற்ற கற்பனைகள்
யங்களேதுமின்றி
அழகழகாய்ச் சரணைகோத்துப்
பொங்கி வழிகின்றன

உனக்கே உனக்கான உன் அந்தரங்கக் காதல்
அளப்பரிய சுகத்தோடு
பேரனுபவமாய் இருக்கிறது

நீயே அறிந்திராத
உன் அந்தரங்கம்
உன் ஆழ்ந்த அறிவு
உன் ஞான ஒளிச்சுடர்
உன் தெளிந்த விருப்பு  என்று
தனிமையில்
உன் உண்மையான உறவுகள்
உன்னுடனேயே இருக்கின்றன

அவை அத்தனையும்
உன் நிங்களின் சத்திய முகங்கள்

ஆகவே
நீ உன்னோடு நீயாய்
உண்மையாய் இருக்கும்
உன் சொந்தப் பொழுதுகளே
தனிமை

ஓர் உயிர் 
இன்னொரு உயிரை
தனக்குள் தனதாய்ப் பொத்திவைக்கும்
தனிமைதான் தாய்மை

இரண்டு உயிர்கள்
ஒன்றுக்குள் ஒன்றை உருக்கி 
உயிர்வாழ் பெருஞ் சுகமாய்க் காணும்
தனிமைதான் காதல்

ஓர் உயிர்
அளவிலா அன்பும்
நிகரிலா அருளும் தரும்
நம்பிக்கையின் முன்
முழுவதும் பணிந்து
கசிந்து காணும் தனிமைதான் பக்தி

உன்னை உயர்த்துவதற்கான
அத்தனைப் படிக்கட்டுகளும்
உன் தனிமையில்தான்
உன் விழித்திரைகளில்
பிரமாண்டக் காட்சிகளாய் விரியும்

உன் உறவுகளை நீயறிய
உன் காதலை நீயறிய
உன் வாழ்வை நீயறிய
உன் சக்தியை நீயறிய

அட...
இப்படி நீளும் பட்டியலை நிறுத்திச்
சட்டெனச் சொல்வதானால்
உன்னையே நீயறிய

தனிமைதான் தனிமைதான்
உனக்கே உனக்குக் கிடைத்த
வரம் 

0

             தனிமையில்
             எண்ணங்களெல்லாம் தவங்கள்

             தனிமையில்
             அமைதிமடி தவழ்வது வரங்கள்

             தனிமையில்
             இனிமை காண்பதோ சாபவிமோசனங்கள்