வளைந்து கொடுத்தால்தான்

ஏனோ தானோ என்று
தரப்படும் முத்தம்கூட
எச்சில் சுரந்தால் மாத்திரமே
முத்தமாய் இருக்கும்

வளைந்து கொடுத்தால்தான்
வானவில்லும்
அழகாய் இருக்கும்
வானத்தோடு
வசீகரமாய் இணையும்

இணக்கமில்லாத உதடுகள்
புன்னகை சிந்தினாலும்
புண்ணாகவே உதிரும்

விருப்பமில்லாத
வண்டுக் குழலில்
எந்தத் தேனும்
நுழைவதில்லை

விலகிக் கொடுக்காத
மண்ணில்
எந்த விதையும்
முளைக்கப் போவதில்லை

0

பாறையும்
விதையை நேசிக்கின்றது

அந்த நேசிப்புதான்
விதையின் வேர்களை
பாறையின் இடுக்குகளில்
வாழ்வாய் வளர்க்கிறது

கல்லும் மலரும்
ஒன்றாய் இருக்கலாம்
கல் மலரென்ற
சிற்பமாய் மாறும்
மனம்கொண்டிருந்தால்

மலரும் கல்லும்
ஒன்றாய் இருக்கலாம்
மலர் கல்லில் தன்னைக்
காணக் காத்திருந்தால்

0

விலக இயலாக்
கதவுகளுக்குள்
வாழ்க்கைக் காற்று
வீசப்போவதே
இல்லை

வெறுப்பின் நீட்சி
ஒருவருக்கு மட்டுமல்ல
இருவருக்குமே
நரகம்

வெறுப்பிலிருந்து
வெளியேறும் நினைப்பு
ஒரு நொடி உதித்தாலும்
போதும்

சொர்க்கம் எப்போதுமே
கதவு திறந்து
காத்துக்கிடப்பதையே
தன் முழுநேர
விருப்பப் பணியாய்ச்
செய்துகொண்டே
இருக்கிறது


நீதானா அது நீதானா

இருளைப் பார்த்துப்
பயம்கொள்ளாதீர்

இருள்
வெளிப்படையானது
வெளிச்சம்தான்
மாயமானது
தந்திரமானது

ஒளிந்துகொண்டு
கண்ணாமூச்சி ஆடும் ஒளி
எங்கே இருந்தது
எங்கிருந்து வெளிப்படுகிறது
என்பது
மாயவித்தையல்லவா

0

எங்கிருந்தோ
சட்டெனத்தொற்றி
பற்றி எரியும் நெருப்பு
ஆகாயத்துள் ஓடி
ஒளியப் பார்க்கிறது

எங்கிருந்தோ திடுமென
மின்னித் தெறிக்கும் நெருப்பு
பூமிக்குள் பாய்ந்து
மறையப் பார்க்கிறது

தன்னை உரித்துக் காட்ட
ஒளிக்கு ஏன்
இத்தனை அச்சம்

0

கல்லும் கல்லும்
மோதிக் கொண்டால்
உடைந்துதானே
நொறுங்கவேண்டும்

அங்கே
நெருப்பு எப்படிச்
சிசுவாகிறது

மரமும் மரமும்
முட்டிக்கொண்டால்
முறிந்துதானே
சிதையவேண்டும்

அங்கே
காட்டுத்தீ எப்படித்
தலைகாட்டுகிறது

உன்
சினத்திற்குள்ளும்
என் சினத்திற்குள்ளும்
பதுங்கிக் கிடப்பது
செந்தீதானோ

சிந்தனைச் செல்கள்
ஒன்றுடன் ஒன்று
உரச உரச
ஞானவொளி எப்படித்
தெறிக்கிறது

0

கருப்பு மூலமா
அன்றி
நெருப்புதான்
மூலமா

வானமே
யார் நீ

நீக்கமற நிறைந்திருக்கும்
இருளா
இருட் போர்வைக்குள்
ஒளிந்திருக்கும்
ஒளியா

சூட்சுமமாய்ப்
பேரிருட் கருவோட்டுக்குள்
பேருண்மைக் கனலாய்
பேரமைதிப் பிழம்பாய்
ஒளிந்து மறைந்திருக்கும்
பேரிறை அத்தாட்சியே

நீதானா
அது நீதானா