என் தங்கத்துக்குத் தாலாட்டு

பொன்மாலை வேளையில்
தவழ்கின்ற வெண்ணிலா
கண்ணான கண்மணி
உன்போலத் தவழுமா

பனிதூவும் காலையில்
பூக்கின்ற பூக்களும்
கனிவான உன்னெழில்
முகம் போல பூக்குமா

ஆரீராரீ.. ஆரீராரோ

முற்றாத மாலையில்
முகம்வீசும் தென்றலும்
நான்பெற்ற கண்மணி
உன் போல வீசுமா

வற்றாத கங்கையில்
செழித்தோடும் வெள்ளமும்
ஒப்பில்லாக் கண்மணி
உன்போல ஓடுமா

ஆரீராரீ.. ஆரீராரோ

கிளிபேசும் பேச்சிலும்
குயில்பாடும் பாட்டிலும்
தளிரான கண்மணி
உன் பாஷை கேட்குமா

மயில்தோகை விரிப்பிலும்
மான்தேக வனப்பிலும்
ஒயிலான கண்மணி
உன் வண்ணம் விளங்குமா

ஆரீராரீ.. ஆரீராரோ

உலகங்கள் யாவுமே
என் சொந்தம் ஆயினும்
உயிரான உயிரென்றும்
நீதானே கண்மணி

உயிர் நீங்கும் வேளையும்
உறங்காத கண்களில்
ஒளிவீசும் தங்கமே
உனைத்தானே தேடுவேன்

ஆரீராரீ.. ஆரீராரோ

அன்பே அன்பே
என் சொந்தமே
கண்ணே கண்ணே
கண் தூங்குவாய்

ஆரீராரீ.. ஆரீராரோ

மானே தேனே
தேனோடையே
பூவே பொன்னே
பூ முத்தமே

ஆரீராரீ.. ஆரீராரோ

உயிரே உயிரே
உயிர்த் தேடலே
உயிரில் ஊறும்
கவி வெள்ளமே

ஆரீராரீ.. ஆரீராரோ





பிரிக்கவும் சேர்க்கவும் பழகவும்

மகிழ்ச்சியையும் முத்தத்தையும்
பகிர்ந்தால் மட்டுமே
இன்பத்தைச் சுவைக்க முடியும்

கோபத்தையும் ரகசியத்தையும்
பகிராவிட்டால் மட்டுமே
நிம்மதியைக் காக்க முடியும்


உதடுகளையும் உள்ளத்தையும்
ஒட்டவைத்தால் மட்டுமே
சத்தியத்தில் நனைய முடியும்

துக்கத்தையும் தூக்கத்தையும்
பிரித்துவைத்தால் மட்டுமே
நெடுந்தூரம் கடக்க முடியும்


கண்களையும் காட்சிகளையும்
பிணைத்துவைத்தால் மட்டுமே
உலகத்தை ரசிக்க முடியும்

கனவுகளையும் யதார்த்தங்களையும்
பிரித்துவைத்தால் மட்டுமே
வாழ்க்கையை ருசிக்க முடியும்


சிந்திப்பையும் சிரிப்பையும்
பிண்ணிவைத்தால் மட்டுமே
செவிகளை ஆள முடியும்

கருத்தையும் கட்டளையையும்
பிரித்துவைத்தால் மட்டுமே
ஏற்பினை எட்ட முடியும்


உயிரையும் உணர்வையும்
சேர்த்து வைத்தால் மட்டுமே
அன்பை வளர்க்க முடியும்

புகழையும் பேச்சையும்
பிரித்து வைத்தால் மட்டுமே
சுயத்தைக் காக்க முடியும்


நட்பையும் நம்பிக்கையையும்
இணைத்து வைத்தால் மட்டுமே
மெய்யாக நகைக்க முடியும்

காதலையும் கபடத்தையும்
பிரித்து வைத்தால் மட்டுமே
உறவுகள் தழைக்க முடியும்


காயங்களையும் கருணையையும்
சேர்த்து வைத்தால் மட்டுமே
எவரையும் மன்னிக்க முடியும்

வார்த்தைகளையும் வக்கிரங்களையும்
பிரித்து வைத்தால் மட்டுமே
வன்முறையைக் கொன்றழிக்க முடியும்


இறைவனையும் நம்பிக்கையையும்
சேர்த்து வைத்தால் மட்டுமே
இறைவனிடம் கையேந்த முடியும்

நன்மையையும் தீமையையும்
பிரித்து வைத்தால் மட்டுமே
இன்னல்களை எடுத்தெறிய முடியும்



கடவுளின் மடிகள்

அறுபட்ட நரம்புகளில்
விடுபட்ட உறவுகளின் மிச்சம்
சொட்டுச் சொட்டாய்க் கொட்ட

எது அழிந்து
எப்படிப்போனாலும்
என்றும் அழிந்துபோகாத
பசி மட்டும்
சுயநினைவைச் சூறையாட

விழுந்துகிடக்கிறது
கிழம்
குப்பைத் தொட்டியில்

குப்பைத் தொட்டிகள்
கடவுளின் மடிகள்

இன்று மலர்ந்த தளிர்களும்
நாளை உதிரும் சருகுகளும்
அந்த மடிகளில்தான்
இப்போதெல்லாம்

மனிதநேயம் நாளுக்கு நாள்
தாயம் விளையாடப்பட்டு
பாம்பு கொத்தி பாம்பு கொத்தி
நச்சுப்பல் அச்சுகளோடு
குப்பைத் தொட்டிகளில்

நியாயம்தான்!

வேண்டாதவற்றைக்
கொட்டத்தானே
குப்பைத்தொட்டிகள்

இளைஞனே
இது உனக்கு நல்லதோர் எச்சரிக்கை

நீதானே
நாளைய கிழம்
இன்றே
சுதாரித்துக் கொள்

உன் முதுமை வாழ்வுக்கு
சில்லறைகளைச் சேமித்துக்கொள்

இன்று
நீ எறிந்ததைவிட
நாளை உன்னைத்
துரிதமாய்த் தூக்கியெறிவான்
உன் பிள்ளை

இப்போதே
கொஞ்சம் சேமிப்பை
எவரும் தொட முடியாப்
பாதுகாப்புப் பெட்டகத்தில்
பதுக்கி வைத்துக்கொள்

அது
எதைப் போக்காவிட்டாலும்
அற்பப் பசியையாவது
அது போக்குமல்லவா

*
செய்தி:
குப்பைத் தொட்டி ஒன்றில் முதியவர் ஒருவர் கொட்டப்பட்டு உயிரோடு கிடந்தார்