இன்று நான் அவனைச் சந்தித்தேன்

கண்டுகொள்ளாதவர்களின் முன்
கதறி அழுவதே
வாடிக்கையாகிவிட்டது
அவனுக்கு

காரியம் கருதி
கண் கசக்குபவர்களைக்
கண்டுகொள்ளாமல் இருக்கவும்
தெரியவில்லை

மரணத்தைச் சுமப்பவன்தான்
மனிதன்

இவனோ
நொடிக்கு நூறு என்று
செத்து செத்து விழும்
தன்னுடைய பிணத்தையே
உயிரின் எலும்புகளும்
முறிய முறிய சுமந்து திரிகிறான்

என்ன பிழை
என்று அவனை இழுத்து
கண்களுக்குள் இறங்கிப் பார்த்தேன்

அங்கே
துடியாய்த் துடித்துக்கொண்டிருந்த
பஞ்சு நெஞ்சம் ஒன்று
கனிந்துருகி
வழிவதைக் கண்டேன்

அட
இதுவா சேதி

எடுத்து எறியடா
அந்த
வெட்கமில்லா இதயத்தை
என்று
ஒரு வார்த்தையை
ஆயிரம் முறை
அசந்த உறக்கத்திலும் கேட்கும்படி
அழுத்திச் சொல்லிவிட்டு
வந்தேன்

No comments: