30 அன்புடன் இதயம்


விரல்கள் விரித்து
விரல்கள் கோத்து
விலகா உறவாய்

         அன்பே நீயென்
         உடன் வருவாயா

என்
கையளவே நிறைந்த
உன் சந்தோசங்களையும்
உன்
கையளவே நிறைந்த
என் சந்தோசங்களையும்
இணைத்த சந்தோசத்தில்
முளைத்த சந்தோசங்கள்
வான்நிறைத்துப் பூப்பதை
வாய்பிளந்து ரசிக்க

         அன்பே நீயென்
         உடன் வருவாயா

கிட்டத்தட்ட நெருக்கமென
கிட்டக்கிட்டக் கிடக்கும்
தண்டவாளத் தொடர்களாய்
நம்
இருவர் எண்ணங்களும்
அருகருகே
நெருங்கிக் கிடப்பதை
அதிசயமாய்க் கண்டு
அளவற்ற பெருமிதம் கொள்ள

         அன்பே நீயென்
         உடன் வருவாயா

முகமூடி உடுத்தாத
சத்திய முகங்களுடன்
சுத்த பாவங்களை மட்டுமே
சத்தமாய்க் காட்டி
என்றும் நிலைக்கும் நிதர்சனம் தழுவ

         அன்பே நீயென்
         உடன் வருவாயா

ஊரும் உலகமும்
உறவும் காட்சிகளும்
தப்பும் தவறுமாய் மொழிபெயர்த்தாலும்
நடுநாசி சிவக்க
என் செயல் முகர்ந்து
முழுமனம் பூட்டி
உள் நியாயம் புரிந்த
உன் ஆறுதல் பரிசத்தில்
என்னுயிர் காக்க

         அன்பே நீயென்
         உடன் வருவாயா

’சரியா?’ -- ’நூறுசதம்’
’அழகா?’ -- ’அற்புதம்’
என்னும்
இதய மலர்வு வார்த்தைகளும்

’சரியா?’ -- ’ம்ஹூம்’
’அழகா?’ -- ’மாற்று’
என்னும் அக்கறை
விமரிசனங்களும் தந்தருள

         அன்பே நீயென்
         உடன் வருவாயா

தன்னம்பிக்கை தத்தளிக்கும்
தோல்வித் தருணங்களில்
உன் நம்பிக்கையோடு
இந்த
உலக நம்பிக்கை அனைத்தையும்
என்னம்பிக்கைக்குள்
ஊற்றி ஊற்றி
தைரிய தீபம் ஏற்ற

         அன்பே நீயென்
         உடன் வருவாயா

அருகில் இருந்தாலும்
தூரத்தே வாழ்ந்தாலும்
அதே அடர்வில் அக்கறை சுரந்து
அன்பைப் பொழிய

         அன்பே நீயென்
         உடன் வருவாயா

சுக்கல் சுக்கலாய்
மனம் நொறுங்கிக் கிடக்கும்
இருள் பொழுதுகளில்
நான் மறைத்தாலும்
என் கவலைகள் மோப்பமிட்டு
கருணைக் கரம் நீட்டி
இடர்முள் களைய

         அன்பே நீயென்
         உடன் வருவாயா

இத்தனையும் கொண்ட உன்னை
என் ஆருயிர்ப் பொக்கிசமாய்
ஆராதித்து ஆராதித்து
நான் பாதுகாக்க

         அன்பே நீயென்
         உடன் வருவாயா


25 கவியரசனே கண்ணதாசனே
அக்டோபர் 17, 1981 கவியரசர் கண்ணதாசன் நினைவு நாள். அந்த நினைவுநாளில் அவர் நினைவாக நான் அவரின் பிறந்தநாளுக்காக எழுதிய ஒரு கவிதை


*

எத்தனை எத்தனையோ
காலங்கள்
எப்படி எப்படியோ
கழிந்தாலும்

சொப்பனத்திலும்
தப்பிப்போகாமல்
நெஞ்ச மத்தியில்
ஞாபகப் பேழைக்குள்

அப்படி அப்படியே
ஒட்டிக்கிடக்கும்
சில
மாண்புமிகு நினைவுகள்

அப்படி ஓர் நினைவினில்
நேசக்கவிதா ஆசனமிட்டு
கம்பீரமாய் அமர்ந்திருக்கும்

என்
இனிய கவிஞனே
கவியரசனே கண்ணதாசனே
இன்றுனக்குப் பிறந்தநாளாம்

ஆனால் நீ இறந்த நாள்தானே
என் ஞாபக நெடுநதியில்
தன்னந்தனிக் கருப்பு ஓடமாய்
தத்தளித்துத் தத்தளித்து
என் உயிரைக் கீறுகிறது

ம்ம்ம்
எப்படி மறப்பது

அன்றுதானே
நீ உன் கடைசி கவிதையை
எழுதி முடித்தாய்..

அன்றெல்லாம்
கூட்டமாய் நண்பர்கள்
என் கூடவே இருந்தபோதும்
எவருக்கும் புலப்படாத
என் தனிமைக் கூட்டுக்குள்
நான் அடைந்து அடைந்து
உள்ளுக்குள் உடைந்து
உதிர்த்த முத்தெழுத்துக்களை
மீண்டும் இன்று
கோத்தெடுத்துக் கட்டுகிறேன்

உன் பிறந்தநாளுக்கு
நீ இறந்தநாளின்
வேதனைக் கண்ணீரே
நான் தரும்
பரிசுத்தமான பெரும் பரிசு..

இதோ என் கண்ணீர்:

ஞானத் தாமரை ஒன்று
மண்ணின் இரைப்பையில்
ஜீரணிக்கப்பட்டுவிட்டது

வேதனை நெஞ்சங்களை
வருடிக் கொடுக்கும்
ஒரு மகத்தான கவிமலர்க்கரம்
தீக்கரங்களுடன்
கை குலுக்கிக் கொண்டுவிட்டது

மாகவியே
இதுதான் உன்
கடைசிக் கவிதையா

ஆனால்
இதை நீ இவ்வளவு சீக்கிரம்
இத்துணைச் சோகமாய்
எழுதி விடுவாய்
என்று நான் எண்ணியிருக்கவில்லையே

கவிதேவனே
உன் வலக்கர விரல்கள் ஆறு

ஆம்..
மைவற்றா தூரிகையும்
உனக்கொரு விரல்தானே

உன்
பாதம்பட்ட இடங்களில்தாம்
எத்தனைக் கவிமணம்

நீ
மயானத் தீவில் நின்று
பாடினாலும்
அங்கே மண்ணைப் பிளந்து
செவிப் பூக்கள் வெளிப்படுமே

உனக்குத் தெரியுமா
கடைசியில் இடும்
என் கையெழுத்தைத் தவிர
என் காதல் கடிதங்களில்
உன் கவிதை முத்துக்களே
ரகசியம் பேசுகின்றன

கண்ணதாசா
என் உயிர் தொட்ட
உன்னதக் கவிஞனே

உன் செவிமலர்க் கதவுகளில்
சாவுமணி ஒலித்தபோது
நீ என்ன செய்தாய்

அழுதாயா

இல்லை
நீ அழுதிருக்கமாட்டாய்

அந்த அகோர ராகத்திற்கும்
ஓர் அழகு கவியல்லவா
படைத்திருப்பாய்

நீ
இருந்தது கொஞ்ச நாள்
இயற்றியது எத்தனை கோடி

நிறுத்தப்படாத
இந்த என் அழுகை
உன் சமாதியைக் கரைத்து
உன்னை வெளிக்கொண்டு வருமா

என் இனிய கவிஞனே
கவியரசனே கண்ணதாசனே
இன்றுனக்குப் பிறந்தநாளாம்

உன் பிறந்தநாளுக்கு
நீ இறந்தநாளின்
வேதனைக் கண்ணீரே
நான் தரும்
பரிசுத்தமான பெரும் பரிசு..

கண்ணதாசன்: ஜூன் 24, 1927 - அக்டோபர் 17, 1981

22 தமிழை மறப்பதோ தமிழா

தமிழை மறப்பதோ தமிழா
உன் தரமின்று தாழ்வதோ தமிழா

கற்கும் மொழிகள்
கணக்கற்றவையாயினும்
உன் உயிரின் மொழியென்பது
தமிழன்றி வேறோ

தமிழச்சியிடம்
தாய்ப்பால் பருகிப் பருகி
நிமிர்ந்த உன் முதுகெலும்பை
தாய்மொழிக்கன்றி
வேறெதற்கும் வளைக்கலாமோ

அடகுவைக்க
உன் உயிரை வேண்டுமானால் உரசிப்பார்
தன்மானத்தையா தொடுவாய்

தாய்மொழி இழந்தவன்
தன் முகம் இழந்தவன்

தமிழற்றுப் போனவனோ
தன் தலையற்றுப் போனவனன்றோ

கணினிக் கோட்டையிலும்
இணைய இடுக்குகளிலும்
இணைச்செங்கோல் ஏந்தி
ஏகமாய் ஒளிவீசும்
நம் செந்தமிழ் மறுப்பதோ தமிழா

நம்
மூச்சுக் காற்றிலும்
கன்னித் தமிழ் மணம்
என்றும் வீசுதல் வேண்டாமோ

நம்
இரத்தக் குழாய்களிலும்
சுத்தத் தமிழெழுத்துக்கள்
வற்றாது ஓடுதல் கூடாதோ

வா தமிழா
நல்ல தமிழில் நாம்
நாளெல்லாம் பேசுவோம்
வா

வார்த்தைகள் அவிழ்ந்து உதிரும்போது
சுற்றுப்புறமெங்கும் சுகந்தம் வீசுமே
அதற்காக

நாக்கு நர்த்தனங்களில்
நல்லோசை எழும்புமே
அதற்காக

உச்சரிப்பு ஒவ்வொன்றும்
சிற்பங்கள் செதுக்குமே
அதற்காக

எந்த இசையிலும் இயைந்து கலந்து
நெஞ்சின் மத்தியில்
கொஞ்சிக் கிசுகிசுக்குமே
அதற்காக

உள்ள உணர்வுகளை அள்ளிப் பொழிய
நல்ல வார்த்தைகள்
நயாகராவாய்ப் பொங்குமே
அதற்காக

வா தமிழா
நல்ல தமிழில் நாம்
நாளெல்லாம் பேசுவோம்
வா

10 தோழியரே தோழியரே


தோழியரே தோழியரே...

ஓ பெண்ணே நீ போகாதே பின்னே
நீ பின்னுக்குப்போனால்
வாழ்க்கை மண்ணாகிப் போகும்
உன் கண்ணுக்கு முன்னே

போராடு
யாரையும் சாகடிக்க அல்ல
உன்னையே நீ வாழ வைக்க
உன்னோடு இந்த உலகப் பெண்களையும்
உயர்த்தி வைக்க

முன்னுக்கு வருவதென்பது
முதலையே மோசமாக்கும் மூர்க்கச் செயலல்ல
ஆண்களை மிதித்துக்கொண்டு
அதிகாரம் காட்டுகின்ற அவலமல்ல
ஆணோடு பெண்ணும் சமமென்றே கைகோக்கும்
அற்புதம் செய்ய

பிறப்புச் சூட்சுமம் உரைக்கும் நியதிப்படி
மறுப்பவர்கள் அல்ல ஆண்கள்
கொடுப்பவர்கள்தாம்

ஓர் உயிரைக் கருக்கொள்ள
பலகோடி உயிரணுக்களைக்
கணக்கின்றி செலவிடுகிறான் ஆண்
ஒற்றைக் கருமுட்டையோடு
சிக்கனமாய் நிற்கிறாள் பெண்
ஆக ஊதாரிதானே ஆண்
கவலையை விடுங்கள்

பெண்களின் விருப்பமே அறியாமல்
ஓடிக்கொண்டிருக்கலாம் உங்கள் ஆண்கள்
அவர்களிடம் கேளுங்கள் தோழியரே
காதல் பேசிய விழிகளால் மட்டுமல்ல
சம்மதம் சொன்ன மொழிகளாலும்
உங்கள் தேவைகளைக் கேளுங்கள்

தொட்ட நாள் முதல் தொடரும் நாளெல்லாம்
விட்டு விடாமல் வீரமாய் நின்று
வார்த்தை மொட்டவிழ்த்துக் கேளுங்கள்
கேட்பது என்பது எவருக்கும் பொது
நாளெல்லாம் அவர்கள் உங்களிடம்
கேட்டுக் கேட்டுப் பெறுகிறார்களே அதைப் போல
கேளுங்கள் தோழியரே

வரம் கேட்டு
வாங்கிக்கொள்வதெல்லாம் பெண்கள்
அதைக் கொடுத்துவிட்டு அல்லல் படுபவரே
ஆண்கள் என்றுதானே
நம் இலக்கியங்களும் எழுதப் பட்டிருக்கின்றன
அந்தப் பயத்தில் எவரேனும் முரண்டுபிடிக்கலாம்
அது வெறும் பயமே தவிர
பாரபட்சம் காட்டும் போக்கு அல்ல

உங்கள் வரங்கள் வாழ்வதற்கன்றி
வதைப்பதற்கல்ல என்று
உங்கள் முகப்பூக்களின் விழிச் சுவடிகளில்
இனிமையாய்த் தெளிவாய் எழுதி வையுங்கள்

பிறகு பாருங்கள்
நீங்கள் கேட்கும் முன்னரே
எல்லாமும் கிடைக்கக் கூடும்

திருமணம் என்பது தண்டனை அல்ல
செக்கில் கட்டிச் சிதைக்கும் காரியமல்ல
தலையைக் கொய்யும் தலையெழுத்தல்ல
அடிமையாவதற்கு அடிமைகளே எழுதித் தந்த
அடிமைச் சாசனம் அல்ல

இதைத் தெளிவாக்கிக்கொண்டுவிட்டால் தோழியரே
பெண்ணின் மீது இடப்பட்ட அத்தனை விலங்குகளும்
பட்டுப் பட்டென்று தெறித்துச் சிதறி
எங்கும் சமத்துவமே துளிர்க்கும்
வாழ்த்துக்கள்

6 வெள்ளிப் பௌர்ணமியே


வெள்ளிக் கால்கொலுசு
வீதியெல்லாந் தாளமிட
முல்லைச் சிரிப்புதிர்த்து
முந்தானைக் கையசைத்து

வெள்ளிப் பௌர்ணமியே
விரைகிறாயடி - மனதைக்
கிள்ளித் தவிக்கவிட்டே
மறைகிறாயடி

அல்லிக் குளத்தினிலே
அந்தியொளி மஞ்சளிலே
மெல்ல நீரிறைத்து
முகப்பூவை ஈரமாக்கிப்

புள்ளி இளமானே
நிற்கிறாயடி - நெஞ்சை
அள்ளிப் பனிமடியில்
வைக்கிறாயடி

உள்ளக் கனவுகளை
ஒருவருக்கும் சொல்லாமல்
நெல்லி மரத்தடியில்
நெடுநேரம் தலைசாய்த்து

மெல்ல வேறுலகம்
நுழைகிறாயடி - என்பால்
உள்ளம் உருகுவதை
ரசிக்கிறாயடி

கள்ளக் கண்ணோட்டம்
கண்மணியே போதுமினி
உள்ளம் எனக்கென்றே
உருகிவரும் சத்தியத்தைக்

கிள்ளை மொழியாலே
சொல்லிவிடடி - என்னைக்
கொல்லும் தவிப்பினையே
கிள்ளிவிடடி

3 கைகள் ஏந்தி

கழுத்தில் தொங்கிய
தங்கச் சங்கிலியைக்
காணவில்லை நேற்றுமுதல்

ஓர்
அனாதை ஆசிரமத்திற்கு
வழங்கியிருக்கலாம்

மனம்
எவ்வளவு நிறைவாய்
இருந்திருக்கும்


உருப்படாத படம்
நூறு ரூபாய் தண்டம்

ஓர் ஏழை வீட்டு
அடுப்பெரிக்க
காரணமாயிருந்திருக்கலாம்

நல்லதாய்
நான்கு
வாழ்த்தாவது வந்திருக்கும்



சட்டைப்பையில் இருந்த
பத்து ரூபாய்
பறிபோயிருக்கிறது
பேருந்து நிறுத்தம் வரும்முன்

கண்ணில்லாப்
பிச்சைக்காரிக்கு
கண்திறந்து போட்டிருக்கலாம்

அந்தச் சிரிப்பில்
இறைவனையாவது
பார்த்திருக்கலாம்



சரி சரி

இனியும் இந்த
லாம்... லாம்.... கள் வேண்டாம்
புறப்படு

இன்றைய தேதிக்கு
உன் மனிதாபிமானத்தின்
மதிப்பென்ன

எத்தனையோ
மனிதநேய அமைப்புகள்
கைகள் ஏந்திய வண்ணம்

கொடுக்கத்தான்
மனிதர்கள் இல்லை

2 நான்தான் வேண்டும் எனக்கு

 அன்பே

நீ
கேட்டதைவிடக்
கூடுதலாய்த்தானே கொடுத்தேன்
நீ கேட்காததையும்
நானே கண்டுபிடித்துச் சேர்த்து

நீ
சொன்னதையெல்லாம்
சுத்த நெய்யினால்
சுடப்பட்ட நிஜங்கள்
என்றுதானே நம்பினேன்

காதல்
வெறும் வாய் வித்தையல்ல
செயல் என்று நான்
நிரூபிக்காத நாளுண்டா

நிறுத்தாத பேச்சும்
நிமிடத்திற்கொரு முத்தமுமென
சுவர்க்க மத்தியில்தானே
மனங்கள் மணக்க மணக்க
மல்லாந்து கிடந்தோம்

உன் கண்களுக்குள் புகுந்து
வண்ண வண்ணக் கனவுகளை
விசாரித்து விசாரித்து
அத்தனையையும் நான்
உண்மையாக்கித்தானே
நிமிர்ந்தேன்

என்னைப் பார்த்தேன்
என்று நான்
உன்னைப் பார்த்துத்தானே
சொன்னேன்

ஆழமும் அழுத்தமும்
காதலின் முத்திரைகள் என்று
உறங்காத கடலாய்க் கிடந்துதானே
உன்முன் அலைகள் தொடுத்தேன்

இன்று ஏன் என்னை
ஒன்றுமில்லாதவனாக்கிவிட்டாய்

நீயே வலியவந்து இழுத்த தேரை
ஏன் திராவகத் தீயில்
செலுத்தினாய்

உன்
இடறிய தேவைகள்
நம் காதலைக் கொன்றனவா

நீயும் நானும் காதலிக்க
ஒரு கோடி காரணங்கள் சொன்னாய்
பிரிவதற்கு மட்டும்
ஒரே ஒரு காரணம்தானே சொன்னாய்
அதுவும் உப்பு சப்பில்லாமல்

இறுதியாய்
என் உயர்காதல் விழிநோக்கும்
உரங்கெட்டுத் தலைதாழ்த்தி
நரக உதடுகள் நச்சு இழைகளாய்
ஒட்டி ஒட்டிப் பிரியஒப்புக்கு நீயோர்
மன்னிப்பு கேட்டதை
புரியாத மூடனல்ல நான்
இருந்தும் அழுது நிற்கிறேன்

நீயும் நானும் ஆடிய ஆட்டங்களில்
இதய அணுக்கள் தேயத் தேய
நிஜமாய் நின்றவனாயிற்றே நான்

மௌனங்கள் பூட்டி உதடுகள் ஒட்டி
உள்ளம் திரிந்து நிற்கும் உன்னிடம்
இனி நான் என்ன கேட்பது

உன்னை இழந்தேன் என்பதை நான்
நம்பமறுத்தாலும்
தொடர்ந்து என்னை என்னாலேயே
ஏமாற்றிக்கொள்ள இயலாததால்
இன்று நான்
ஊர்ஜிதப்படுத்திக் கொள்கிறேன்

கண்ணீர்க் கரைகளில்
மெல்ல மெல்ல என் எண்ணங்கள்
மேலே மேலே எழுகின்றன

என் பிரியமான பாவியே
நிலைக்கத் தெம்பில்லா
நெஞ்சம் கொண்ட
உன்னை மட்டுமா நான் இழந்தேன்
மென்மையும் உண்மையும்
குழைத்துக்கட்டிய
சிம்மாசனத்தில் வீற்றிருந்த
என்னையுமல்லவா இழந்துவிட்டேன்

ஆம்
நீ வேண்டாம் இன்றெனக்கு
மீண்டும்
நான்தான் வேண்டும் எனக்கு

தண்டவாளங்கள் நீளமானவை
அடுத்த ரயிலுக்கு இன்னும்
ஐந்து நிமிடங்கள் என்று
அறிவிப்புகளும் வருகின்றன

கடந்துவிட்ட ரயிலுக்கும்
கைவிட்ட காதலுக்கும்
வருந்தித் துருப்பிடித்துச் சாவது
ஒருக்காலும் உசிதமல்ல

நானும் போய்
காத்திருக்க வேண்டும்

எனவே
என் பிரியக் காதலியே
நீ வேண்டாம் இன்றெனக்கு
மீண்டும்
நான்தான் வேண்டும் எனக்கு