அணிந்துரை - இலந்தை - அன்புடன் இதயம்


பழைமையின் லயமும் புதுமையின் வீச்சும்
-கவிமாமணி இலந்தை சு. இராமசாமி

கவிதை என்பது ஒரு பாதிப்பு.

கவிதை எழுதுமுன்னும் எழுதும் போதும் கவிஞனைப் பாதிக்கிறது எழுதப்பட்ட பின்பு அதைப் படிப்பவனைப் பாதிக்கிறது. படிப்பவனை எந்த அளவு பாதிக்கிறதோ அந்த அளவு அது சாதிக்கிறது அப்படிச் சாதிக்கிற முப்பது கவிதைகளின் தொகுதிதான் இது.

வெளிநாட்டிலிருந்து கொண்டு கவிதை ஒளிநாட்டிக்கொண்டிருக்கும் கவிஞர் புகாரியின் மொழிநாட்டம் இந்தத் தொகுதியின் முதற்கவிதையாக முகிழ்க்கிறது.

பார்ப்பவற்றைப் படமாக்குவது விழி, எண்ணத்தை ஒலியாக்குவது மொழி, கவிஞனுக்கு மொழிதான் விழி, அதுதான் அகத்தைக் காட்டும் வழி.

பிள்ளையை, தாய் தந்தைக்குக் காட்டுகிறாள், தந்தை ஊருக்குக் காட்டுகிறார், மொழி உலகுக்குக் காட்டுகிறது, அதன் இனிய ஓசையில் யாவர்க்கும் மயக்கம். அது சந்தத்தில் வசந்தத்தைக் காட்டுகிறது, வசந்தத்தில் சந்தத்தைக் கூட்டுகிறது. பாருங்களேன் இந்தக் கவிஞர் எப்படிப் பாடுகிறார் என்று!

கவிதையில் தொனிக்கின்ற
ஞானம்-தமிழ்
ஞானத்தில் உயிர்க்கின்ற
கவிதை


சொல்மடக்கு எத்தனை மிடுக்கு!

கண்களை மூடிக்கொண்டு கவிஞன் கவிதை பாடுவதில்லை. அவனைச் சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகள் அவனைப் பாதிக்கின்றன. சாக்கடை கூட அவனது கவிதையில் பூக்கடையாகிவிடுகிறது. கவிஞர் புகாரியின் "அழிவில் வாழ்வா" என்ற கவிதை மிகவும் அவசியமானது. மிகச் சிறந்த சமுதாய உணர்வோடும் தார்மீகப் பொறுப்போடும் எழுதப்பட்ட ஒன்று.

இந்தக் கவிதை அருமையான மனோதத்துவக் கவிதை. பழிக்குப் பழி என்று நெஞ்சில் வன்மம் கொண்டிருக்கும் ஒருவனிடம் போய் ' நீ செய்வது' தவறு என்று நேரடியாகக் குற்றஞ்சாட்டினால் கத்தியைப் பிடித்தவன் வாளெடுப்பான்.

தவறொன்றும் செய்யாமலேயே
தரையோடு தரையாக
இரத்தச் சகதியாய்ச்
சிதைந்து கிடக்கும் சகோதரா

முதலில்...
என் கருணைக் கரங்களை
உன் கண்ணீர் துடைக்கவே
நான் நீட்டுகின்றேன்


என்று முதலில் பரிவோடு சொல்லும் போது, கத்தியைக் கையில் வைத்துக் கொண்டே நிமிர்ந்து பார்க்கிறான். அந்தப் பரிவு ஒரு நெருக்கத்தைக் கொடுக்கிறது. அடுத்து,

கண்ணீரை முந்திக்கொண்டோ டும்
உன் இரத்த அருவியை
நாளை அங்கே ஓடும்
மரண காட்டாறாய் மாற்றிவிட
நீ குறிவைத்து வெறிகொள்வதில்
நிச்சயம் நியாயம் இருக்கிறதுதான்

வீடு புகுந்து...
நம் பெண்களின் முந்தானை இழுக்கும்
மூர்க்கக் கரங்களை முழுதாய்க் கொய்வது
முறையான செயல்தான் சகோதரா


என்று அவனது செயலை நியாயப்படுத்திச் சொல்கிறபோது நெருக்கம் இன்னும் அதிகரிக்கிறது. மேலும் சொல்வதைக் கேட்பதற்குத் தயாராகிறான்.

தலைகள் எடுப்பதால்
உன் தலையும் ஓர் நாள்
குறி வைக்கப்படுகிறது
என்பதை நீ மறக்கலாமா


என்கிறபோது சிந்திக்கத் தொடங்குகிறான். வெறும் பிரச்சினைகளையே சொல்லித் தீர்வைச் சொல்லாமல் விடுப்பதுதான் இன்றையப் போக்கு. ஆனால் நம் கவிஞன் அப்படி விடவில்லை.

கேள் !
பொருளாதார மேன்மை
மனோதிடச் செல்வம்
பேரறிவுப் பெருநெருப்பு
இவையே
எந்தக் கொம்பனும் நெம்பமுடியாத
பூரண அரண்கள் உனக்கு
அரிவாள்கள்
அறிவில்லாதவனுக்கே வேண்டும்
இந்தக் கேடயங்களல்லவா
உனக்கு வேண்டும்


இப்பொழுது அங்கே ஒரு மனமாற்றம் நிகழ வாய்ப்புண்டு. இந்தக் கவிதை ஆழமான கவிதை, அவசியமான கவிதை.

நான் அலாஸ்கா வீதிகளில் பனியின் கொள்ளைஅழகைக் கண்டிருக்கிறேன். கனடாவில் உள்ள வேங்கூவர் மிக அழகிய தூய்மையான நகரம் . அந்த நகரத்தின் தூய்மையைப் பற்றிக் கவிஞர் புகாரி சொல்லியிருப்பதைவிடச் சிறப்பாகச் சொல்லமுடியாதென்பதே என்கருத்து.

பெண்கள் தான் ஊதாரிகள் என்பது பொதுவான கருத்து. இல்லை, இல்லை ஆண்கள் தான் ஊதாரிகள் என்று அறிவியல் பூர்வமாக நிறுவுகிறார் புகாரி

ஓர்
உயிரைக் கருக்கொள்ள
பலகோடி உயிரணுக்களைக்
கணக்கின்றி செலவிடுகிறான் ஆண்
ஒற்றைக் கருமுட்டையோடு
சிக்கனமாய் நிற்கிறாள் பெண்
ஆக,
ஊதாரிதானே ஆண் -
கவலையை விடுங்கள்


ஒரு திருமணக்காட்சி மிக அற்புதமாகப் படம் பிடிக்கப்படுகிறது. திருமணமேடையின் அலங்காரம் எப்படித் தெரியுமா?

வட்ட நிலவெடுத்து
வடுக்கள் அகற்றிவ்஢ட்டு
இட்ட மேடைதனில்
இளமுகில் பாய்போட்டு


இந்தத் தொகுதியின் முத்திரைக் கவிதைகள் ' பஞ்ச பூதக் கவிதைகள். ஒவ்வொன்றிலும் முதல் நான்கு வரிகள் 'ஆலாபனை' போலக் கவிதையின் விகசிப்புக்குக் கட்டியம் கூறிவிடுகின்றன. ஒவ்வொன்றையும் தனித்தனியாகப் படிக்கவேண்டும். 'என்தெய்வம் தான் பரம்பொருள்' என்று அவரவர் தெய்வத்தை உயர்த்திக் கூறுவதுபோல, பஞ்சபூதத்தின் ஒவ்வொரு பூதமும் அதுதான் மற்றவற்றை உயர்ந்தது என்பதாக ஒரு பிரமிப்பை உண்டாக்கி விடுகிறது.

கவிஞர் புகாரியின் கவிதைகளில் பழைமையின் லயமும் புதுமையின் வீச்சும் இழைந்திருக்கக் காணுகிறேன்.

தன்னுளே கவிதை யென்னும்
தவத்தினை நிகழ்த்து கின்ற
அன்பராம் புகாரி இங்கே
அளித்துள இனிய நூலாம்
'அன்புடன் இதயம்' தாய்க்கோர்
அணிகலன், போற்று கின்றேன்
உன்னதம் காண உங்கள்
உள்ளத்தைக் கண்ணில் சேர்ப்பீர்

அனிந்துரை - கவிநாயகர் - அன்புடன் இதயம்


அன்புக் கவிதைகள்
-கவிநாயகர் வி. கந்தவனம்

கவிஞனுக்குப் படிப்பறிவு மட்டுமன்றி பட்டறிவும் வேண்டும்; பருகும் கண்கள் மட்டுமன்றி உருகும் உள்ளமும் வேண்டும்; உருகும் உள்ளம் மட்டுமன்றி உணர்வை வடித்தெடுக்கும் வல்லமையும் வேண்டும்; வடித்ததை இடையிலே எவரின் உதவியும் இல்லாமலேயே வாசகர் தரிசிக்கும் வகையிற் பிடித்து வைக்கவல்ல விவேகமும் வேண்டும்.

இந்த விவேகத்தை நான் கவிஞர் புகாரி அவர்களிடம் காண்கின்றேன். கவித்துவத்தைக் காட்டக் கடினமான வார்த்தைகளைக் கட்டித் தழுவாது, எளிமையான சொற்களை எடுத்து, அவற்றுக்குள் கனதி ஏற்றுகின்ற கலைஞனாக புகாரி விளங்குகின்றார்.

இதனை, கனடாவில் கடந்த ஆண்டு நடந்த 'வெளிச்ச அழைப்புகள்' என்னும் அவரது முதற் கவிதைத் தொகுதியின் வெளியீட்டு விழாவிற் கலந்து கொண்டு பேசும்பொழுது குறிப்பிட்டிருந்தேன்.

அத்தொகுதி கனடாவில் அதிகம் விரும்பப்பட்டதிலிருந்தே அவர் ஒரு 'வாசகர் கவிஞன்' என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது. இணைய வாசகர்களும் அவருக்கு நாளாந்தம் பெருகிய வண்ணம் இருக்கின்றனர்.

முதற்கவிதைத் தொகுதியின் வெற்றி, ஒரு வருடத்துக்குள்ளாகவே மற்றுமொரு கவிதைத் தொகுதிக்கு வழிவகுத்திருப்பது, அவரது பிரகாசமான எதிர்காலத்தின் நிகழ்காலமாகும்.

'அன்புடன் இதயம்' தமிழோடு தொடங்குகிறது. 'தமிழ்' என்ற சொல்லின் பொருள்களிலே அன்பு என்பதும் ஒன்று.

என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே


என்ற திருமூலர் மந்திரத்தில் தமிழ், அன்பு என்ற பொருளில் வந்திருப்பதைப் பார்க்கிறோம். கவிஞரும்

மனிதத்துள் செழித்தோங்கும்
கருணை - தமிழ்
கருணையால் வேர்பாயும்
மனிதம்


என்று பாடும் பொழுது அன்பின் முதிர்ச்சியாகிய கருணையைத் தமிழ்மீது ஏற்றியிருப்பதைப் பார்க்கிறோம்.

அத்தகைய கருணை மொழியைக் கற்க மறுப்பதோடு பேசுவதும் மதிப்புக் குறைவு என்று நினைக்கும் சில தமிழருக்கு 'தமிழை மறப்பதோ தமிழா' என்ற பாடலில் உணர்ச்சி ஊசி ஏற்றுகின்றார் கவிஞர்.

அன்பு உணர்ச்சியே தொகுதி முழுவதும் பொன்பூச்சொரிகின்றது. 'கைகள் ஏந்தி', 'கண்களின் அருவியை நிறுத்து' போன்ற பரிவுக் கவிதைகளிலும் 'நிறுத்து மனிதா நிறுத்து யுத்தத்தை' என்று பொங்கியெழும் இடங்களிலும், கொலம்பியா விண்கல விபத்துக்குறித்து கவலைப்படுகையிலும் புகலிடத்துக்கு நன்றி கூறுகையிலும் அன்பின் பலவிதமான பரிமாணங்களைத் தரிசிக்கின்றோம்.

பல சமகால நிகழ்வுகள் பக்குவமான கவிதைகளாகியுள்ளன. வான்கூவர் பயணம், பன்னிரண்டாம் குடியரசுத் தலைவா, தமிழ் இணையம் 2002, திரும்பிய பயணத்தில் திரும்பாத பட்டங்கள் நல்ல உதாரணங்கள்; காலத்தின் கண்ணாடிகள்.

பஞ்சபூதங்கள் பற்றிய கவிதைகள் உலகத்து உயர்ந்த கவிதைகளோடு வைத்துப் போற்றப்பட வேண்டியவை.

'தோழியரே தோழியரே' என்னும் கவிதை உத்தி பாரதியாரின் 'மங்கியதோர் நிலவினிலே...' என்ற பாடலின் உத்திமுறையைப் போன்று மிகவே உயர்ந்தது.

'கல்யாணமாம் கல்யாணம்' நல்ல பதிவு. அன்று கண்ணகியை வைத்துக்கொண்டு தமிழர் திருமண முறையை இலக்கியமாக்கினார் இளங்கோ . இன்று பொதுவான திருமண வழக்குக்குப் பேச்சுத் தமிழிற் பூச்சூடியிருக்கின்றார் புகாரி.

கவிஞரின் சொல்வளம் சொல்லுந்தரமன்று. தமிழுக்கு ஓசைத் தமிழ் என்று ஒரு பெயர். அந்த ஓசைத் தமிழோடு அவர் கொஞ்சி விளையாடி எம்மையும் குதூகலிக்கச் செய்கின்றார். இதற்கு

கைகளைக் கட்டிக் கொண்டு
கதவோரம் ஒட்டிக் கொண்டு
கண்ணீரை விட்டுக் கொண்டு
கனலுக்குள் வேகாதேடா - தோழா
கவலைக்குள் சாகாதேடா

விழியோர நீரைத் தட்டும்
வேரோடு கவலை வெட்டும்
வார்த்தைகள் சேர்த்துக் கட்டும்
கவியோடு வந்தேனடா - தோழா
செவியோடு செந்தேனடா


எனத் தொடங்கும் 'கண்களின் அருவியை நிறுத்து' என்ற கவிதை நல்ல உதாரணம்.

ஓசையோடு ஆங்காங்கே பாசத்தோடு தலைகாட்டும் அங்கதச் சுவையையும் பல கவிதைகளில் வாசகர்கள் அனுபவிக்கலாம். ஓசை செவிக்கு இன்பம். அங்கதம் சிந்தனைக்கு இன்பம். 'கைகள் ஏந்தி', 'ஒரு வாரிசு உருவாகிறது', 'என் குடும்பம்' ஆகிய கவிதைகளிலும் இன்னும் பலவற்றிலும் பொருளை அங்கதத்தால் அள்ளித் தருகின்றார்.

கோலெடுத்துக் கொடுத்துவிடு
சாதிச் சண்டைக்கு
கொடுத்தவனைத் தெரியவேணாம்
மக்கள் கண்ணுக்கு

ஆளுக்குஆள் சாதிவெறியில்
அடிக்க வெச்சுக்க
ஆதாயம் வரும்பக்கம்
நின்னு மறைஞ்சிக்க (ஒரு வாரிசு உருவாகிறது)


இவ்விதம் பல பொருள்களைப் பல சுவைகளில் வழங்கும் இத்தொகுதிக் கவிதைகள் தமிழை மட்டும் வளர்க்கவில்லை, மனித நேயத்தையும் மனிதாபிமானத்தையும் வாசகருக்கு நேரடியாகவே எடுத்து செல்லும் சக்திவாய்ந்த வெண்புறாக்களாகவும் சிறகடிக்கின்றன.

நிறைவுக் கவிதையே நூலின் தலைப்பும். இன்று உலகத்திலே மிகவும் தட்டுப்பாடாக இருப்பது அன்புதான். அது அருகிவிட்டதாலேதான் திரும்பும் திசைகள் எல்லாம் சண்டைகளும் சச்சரவுகளும் - சாதியின் பெயரால், சமயத்தின் பெயரால்... அழுக்காறும் அவாவும் வெகுளியும் செய்யும் அட்டூழியங்களுக்குப் பாடை கட்டி, அமைதியைக் கொலுவில் ஏற்ற அன்புக்கு அழைப்பு விடுகிறது கவிஞரின் இதயம்:

சுக்கல் சுக்கலாய்
மனம்
நொறுங்கிக் கிடக்கும்
இருள் பொழுதுகளில்
நான் மறைத்தாலும்
என் கவலைகள் மோப்பமிட்டு
கருணைக் கரம் நீட்டி
இடர்முள் களைய
அன்பே நீயென்
உடன் வருவாயா


இப்படி விடியல் கீற்றுகளாய் தனது கவிதைகள் விளங்க வேண்டும் என்னும் உயர்த்துடிப்போடு வார்த்தைகளை உருக்கி உருக்கி வார்க்கின்றார் கவிஞர்.

அன்போடு உறவாடும் தமிழோடு தொடங்கி, அன்புக்கு ஆதாரமான இதயத்தோடு இவ்வரிய தொகுதி நிறைவு பெறுகின்றது.

இத்தொகுதி புகாரி அவர்களை 'அன்புக்கவிஞர்' ஆக்குகின்றது. வாசகர்களையும் அன்பர்களாக்குகின்றது.

வாழ்க அன்புக் கவிஞர்!