அணிந்துரை - மாலன் - சரணமென்றேன்


ஆதலினால் கவிதை செய்வீர். . .
-மாலன்


காதலுக்கும் கவிதைக்கும் ஒரு மனது வேண்டும்

ஒரு மனது அல்ல, ஒரே மாதிரியான மனது. நுட்பமான ரசனை, கரைந்து போகிற பிரியம், தன்னையிழக்கும் ருசி, மிகையான கற்பனை, அழகின் மீது ஒரூ உபாசனை இவை ததும்பும் மனது. இது இல்லாதவர்கள் காதலிக்கவும் முடியாது. கவிதை எழுதவும் முடியாது. இவையற்ற கவிதையும் சரி, காதலும் சரி பொய்யானதாக இருக்கும். அவை காமமாகத் திரியும். அல்லது வார்த்தைகளாகச் சரியும்.

இந்த மனது புகாரிக்கு இருக்கிறது. அதற்கு சான்று இந்தக் கவிதைகள்.

இங்கு இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும்.

அறிவின் வசம் முற்றிலுமாகத் தன்னை ஒப்படைத்தவன் துறவியாகிறான். உணர்ச்சிகளின் வசம் முற்றிலுமாகத் தன்னை ஒப்படைத்தவன் காதல் கொள்கிறான். அதனால்தான் துறவி முற்றிலுமாக உலர்ந்து இருக்கிறான். காதலன் முழுதுமாகக் கரைந்து போகிறான். என்றாலும் அறிவும் உணர்ச்சியும் எதிர் எதிர் துருவங்கள் அல்ல, அடுத்தடுத்த வீடு

ஆனால் கவிதை என்பது காய்ந்த சருகாகவோ, கரை மீறிய கடலாகவோ இருந்து விட முடியாது. சருகில் விழுந்த பனித் துளியாக, கடலுக்குள் பூத்த முத்துச் சுடராக, அது இருக்கும். துறவியின் ஒழுங்கையும், காதலின் நெகிழ்வையும் அது தனக்குள்ளே கொண்டிருக்கும். அறிவையும் உணர்ச்சியையும் ஊடும் பாவுமாக நெய்தால் கவிதைகள் கிடைக்கும். .

இதற்கும் சான்று புகாரியின் இந்தக் கவிதைகள்.

உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் காதல்தான் கவிதைக்கு வித்தாக இருந்திருக்கிறது. கவிதைதான் காதலின் மணமாக இருந்திருக்கிறது. இன்று நேற்று அல்ல, அநாதி காலம் தொட்டு இதுதான் கதை. காதல் கவிதை எழுதப்படாத மொழியே உலகில் இல்லை. கவிதையைப் பரிமாறிக் கொள்ளாத காதலர்களும் அபூர்வம்.

தமிழ் இதற்கு விதி விலக்கு அல்ல. முன்னோடி. உலகில் உள்ள பல மொழிகள் தோன்றுவதற்கு முன்பே தமிழில் காதல் கவிதைகள் தோன்றிவிட்டன. மொழிக்கும் மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்த தொல்காப்பியன், கவிதைகளை அகம் புறம் எனத் திணைகள் வகுத்தான்.

எனவே தமிழில் காதல் கவிதைகள் எழுதுபவர்கள் முன் ஒரு சவால் இருக்கிறது. இங்கு காதலும் பழசு. கவிதையும் பழசு. ஆனால் எழுதப்படுகிற காதல் கவிதை மட்டும் புதுசாக இருக்க வேண்டும்!

ஆனால் இது சந்திக்க முடியாத சவால் அல்ல. பழைய மரம் தினம் புதிதாய்ப் பூப்பதைப் போல இங்கு காதல் கவிதை பூக்க வேண்டும். காதல் கவிதையை 'செய்ய' முயன்றால். பழைய வாசனை, பழைய சாயல், பழைய பாணி வந்து விடும்.

புகாரியிடம் கவிதைகள் பூக்கின்றன. அவை செய்யப்படுவதில்லை. அதற்கு சான்று இந்தத் தொகுதியில் உள்ள கவிதைகள்.

நெடுக அளந்து கொண்டே போகிறீர்களே, அப்படி என்ன இந்தத் தொகுதியில் இருக்கிறது என்று கேட்கிறீர்களா?

சின்ன இதழ்களோ
மின் மடல்கள் - சுற்றும் இரு
வண்ண விழிகளோ
வலைத்தளங்கள்

இப்படி ஒரு வரியை இருபதாம் நூற்றாண்டுக்கு முன் வாழந்த பெருங்கவிஞர்கள் யாரும் எழுதியிருக்க முடியாது. இணைய உலகில் வாழ்கிற பேறு பெற்றவர்களுக்குத்தான் இந்த வரிகள் வாய்க்கும்.

இது ஏதோ தற்செயல் அல்ல. இன்னொரு மாதிரி பார்க்கிறீர்களா?

தடதடக்கும் தட்டச்சுப் பலகை - அதன்
தாளலயம் வெல்லுமிந்த உலகை

இணையம், கணினி, விசைப்பலகை என்று இயந்தரத்தனமாக இருக்கிறதோ கவிதைகள் என்று உங்களுக்கு சந்தேகங்கள் வரலாம். ஆனால் தொழில் நுட்பங்கள் வாழ்க்கை ஆகி விடாது என்று அறிந்தவர் புகாரி. வாழ்க்கை மனதால் வாழப்படுவது. மனதால் ஆளப்படுவது. மனதால் பேணப்படுவது. அது முற்றிலும் மனம் சார்ந்த விஷயம். ஆனால் மன உலக வாழ்க்கைக்கும் மண்ணுலக வாழ்க்கைக்கும் இடையில் பொருளாதாரம் என்ற பாலம் இருக்கிறது. அது எல்லா நேரமும் பாலமாகவே இருப்பதில்லை. சில நேரங்களில் கதவாகவும் ஆகி விடுகிறது. நீங்காத் தாழ் கொண்ட நெடுங்கதவு.

அப்படி ஒரு கதவின் இரு புறமும் அகப்பட்டுக் கொண்ட ஒரு இளம் ஜோடியைப் பற்றி எழுதுகிறார் புகாரி. அவர்கள் இணையத்தாலே இணைக்கப்பட இயலாதவர்கள். தட்டச்சுப்பலகைகள் கொண்டுத் தங்களுக்குள் பாலங்கள் அமைக்கும் பொறியியல் அறியாதவர்கள். திருமணமாகி ஒரு திங்களுக்குள் அவர்கள் பிரிய நேர்கிறது. பொருள் வயிற் பிரிவு. கணவன் அவன் பணி புரியும் அயலகத்திற்குக் கிளம்பிப் போகிறான் அந்த ஒரு மாத உறவில் கருவுற்று விட்ட மனைவி கடிதம் எழுதுகிறாள், காதலும் தாபமும் கலந்த கவிதையாக.

மனத்தை உருக்குகிறது கவிதை. கவிதைக்குள் பெண் குரல். பெண் மொழி, பெண் விழி, பெண் மனம். புகாரியும் ஒரு பெண்ணாக மாறி இருந்தால்தான் இப்படி எழுதுவது சாத்தியம். ஆணைப் பெண்ணாக மாற்றும் அதிசயத்தைக் கவிதை செய்யும். ஆழ்ந்து பார்த்தால் அதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. மனம் ஆணா? பெண்ணா?

மனம்தான் கவிதையாகிறது.

அண்மையில் இலங்கை போயிருந்த போது வட்டிலப்பம் என்று ஒரு இனிப்புப் பரிமாறினார்கள். நுங்குத் துண்டம் போல் தளதளவென்று ஆனால் கரு நிறத்தில் காட்சி தந்தது அது. பனங்கருப்பட்டியும், முட்டையும் சேர்த்துச் செய்தது, கிழக்கிலங்கையில் இது பிரசித்தம், அதிலும் அங்குள்ள இஸ்லாமியர்கள் பெருநாள் பண்டிகையின் போது இந்த இனிப்பை நண்பர்களோடு பகிர்ந்து கொள்வார்கள். என்று சொன்னார்கள். இதை நான் எழுதிய போது ஒரு இலங்கை நண்பர் அது இலங்யை஢ல் மட்டுமல்ல இந்தியாவிலும் செய்யப்படுவதுண்டு என்று எழுதியிருந்தார்.

இப்போது அதைக் கனடாவில் புகாரி செய்திருக்கிறார். பல கருக்களைச் சுமந்த மனதைத் தமிழ் என்னும் கருப்பட்டியில் கலந்து இந்த இனிப்பை கவிதை நூலாகத் தந்திருக்கிறார். அதன் இனிப்பு நம் அடிமனதில் நெடுநாள் சுரந்து கொண்டே இருக்கும்.

வாழ்த்துக்கள்

அன்புடன்
மாலன்

சித்திரை 1, தாரண
13.1.04

No comments: