பாராட்டுரை - பெருங்கவிக்கோ - சரணமென்றேன்

காதல் சிறகுகளால் காலத்தை வெல்லலாம்-பெருங்கவிக்கோ வ.மு.சேதுராமன்
மின்னல் கிழிக்கவோ மேல்வான் கிழியுமெனும்
கன்னல் உவமைபோல் காதலுக்குப் - பன்னல்
மீக்கூறும் வெல் உவமை விஞ்சும் உணர்வு அலை
தாக்கும் புகாரி தமிழ்!


என்றன் உலகளாவிய பன்னாட்டுப் பயணங்களில் பல அறிவும் செறிவும் நெறியும் கொண்ட நன்மக்களை நல்லறிஞர்களை வெல்லும் கவிஞர்களைச் சந்தித்திருக்கிறேன். இத்தகுதிவாய்ந்த பெருமக்களுள் உயிர்ப்பும் உண்மையும் அழகுணர்வும் கொண்ட ஆற்றல் வாய்ந்த கவிதைகளைப் படைக்கும் பெருமகன், மனித நேயம்கொண்ட மாமணி, இதயத்தோடு பழகித் தமிழ், தமிழர்க்குத் தொண்டாற்றும் உள்ளொளி உடையவர் புகாரி என்பதை 'புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாம் கிழமை தரும்' என்ற அய்யன் திருவள்ளுவர் வழி அறிந்தேன்.

இணையத்தில் நூல் வெளியிட்டு தமிழ் உலகம் தலை நிமிர்ந்து நிற்கும் அற்புதத்தை முதன்முதலில் உருவாக்கியவர் கவிஞர் புகாரி என்று நண்பர் மாலன் கூறுகிறார். மாட்சிமிகு மாலன் போன்றவர்கள் யாரையும் முகமனுக்காகப் புகழ்பவர்கள் அல்ல! மாலனே இவருக்கு மகுடம் சூட்டுகிறார் என்றால் புகாரியின் உன்னத கவிதை ஆற்றலும் தமிழ்ச் சமூகத்திற்கு எடுத்துக்காட்ட ஓங்கிய செயற்பாடுகளைச் செய்யவேண்டும் என்ற வேணவாவுமே புகாரியைத் தலை நிமிரச் செய்கிறது. முதன் முதலாக இணையத்தில் கணினித் தமிழில் முதல் புத்தகத்தைக் கொண்டுவந்தவர் நம் புகாரி என்பதை அறியும்போது அவர்தம் இலக்கை எய்தும் உழைப்பை, உத்தியை எண்ணி வியப்படைகிறேன்.

படைப்பாற்றல் மிகுந்த புகாரி அவர்களின் 'சரணமென்றேன்' என்ற காதல் கவிதைகளின் தொகுப்பைப் படித்தேன். படித்தேனாக இனிக்கும் காதல் தேன் குடமாகத் தித்திக்கிறது புகாரியின் காதல் கவிதைகள். தமிழில் காதல் கவிதைகளுக்குப் பஞ்சமில்லை. நம் சங்ககாலத்திலிருந்து இன்றைப் படத்துறைக் கவிஞர்கள் வரை உள்ள காதல் கவிதைகள் சமுதாயத்தின் விளைநீராகிப் பெருகி வருகின்றது. காதல் இல்லையே மாந்தரில்லை! மனிதம் இல்லை! உலகம் இல்லை. எனவேதான் மகாகவி பாரதியார்

"காதல் காதல் காதல்
காதல் போயின் காதல் போயின்
சாதல் சாதல் சாதல்"
என்று பாடினார்!

புகாரியின் சரணத்தில்

நிலைகுலைக்கும் நீள்விழியின்
ஒயிலாட்டம் - என்
நெஞ்சடுப்பில் எனைத்தள்ளும்
புயலாட்டம்


என்று அவளின் நீள்விழி இவனை நெஞ்சடுப்பில் புயலாகத் தள்ளுவதைச் சுவைக்க முடிகிறது. முகம்கண்டு வருங்காதல் மயக்கத்திற்கும் அகங்கண்டு இணைகின்ற உள்ளத்திற்கும் மூன்று நாள் அண்டவெளி ஈர்ப்பினை உவமை காட்டுவது காதல் வெறும் களவாக மட்டும் நின்றுவிடாது கற்புநிலைக் காதலாகக் காலம் வெல்லவேண்டும் என்ற நிலைத்த தமிழர்தம் வாழ்வியலை வகுக்கிறது.

கயிறிழுக்கும் போட்டியுள்ளே நடக்குதடி - என்
கர்வமெல்லாம் பெண்மையிடம் தோற்குதடி

தவிப்பின் தவங்கள் வரமாய் மலர
உணர்வைத் திறப்பாளா - அதில்
உயிரைக் கரைப்பாளா

சின்னச்சின்னக் கன்னப்பாளம்
கிள்ளக்கிள்ள நாடித்தாளம்

சின்னஞ்சிறு கன்னிவாழை
தங்கப்பேழை புதுத்தாழை - எந்தன்
அந்தப்புரம் வரும் நாளை


வாசகர்கள் அக அந்தப்புறத்திற்கு விருந்து வைக்கின்றார் புகாரி! வெறும் உடலோடும் உள்ளத்தோடும் மட்டுமல்ல ஆன்மாவோடும் கவிஞர் காதல் கொள்கிறார்.

"புனிதமானதெனினும்
கற்பூரப் பிறப்பெடுத்தால்
ஒருநாள் தீயில் கரையத்தானே" என்றும்

"என் காதல் விழிகளே இன்று
கோடிச் சூரியன்கள்"
என்றும் ஆன்ம உயிர்க் காதலைத் தரிசிக்கிறார்

கிளைகள் வேண்டாம்
கிளைகள் வேண்டாம்
சிறகுகள்தான் வேண்டும்


இந்தக் காதல் சிறகுகளால், பாறைக்குள் ஈரம் தேடுகிறார், நேசமற்ற நெஞ்சில் பாசம் தேடுகிறார். சுயநல மனத்துக்குள் நியாய ஒளி தேடுகிறார். கவிஞரின் கனவுகள் காதல் தேர்வில் விரிவான விடைகளைத் தேடுகிறது.

அந்தரங்கமாய் விழும்
உன் விழிகளை அடைகாத்த
என் இதயப் புறா
ஆர்ப்பரிக்கும் நினைவுக் குஞ்சுகளாய்
முடிவில்லாமல்
பொறிந்துகொண்டே
போகும்

காதல் நினைவுகளில் கவிஞர் சரணமடையும் காட்சிகள் இந்த நூலிக் சுவைக்கும் சுவை நல்குகின்றன

மின்னல் கிழிக்க வானம் கிழியுமோ
இன்னல் கிழிக்க காதல் கிழியுமோ


என்பது போன்ற எளிய இனிய உவமைகள் படிப்போர் செஞ்சில் கொஞ்சி விளையாடுகின்றன.

பன்முறை யான் கனடா வந்திருந்தாலும் இந்தப் பயணத்தில் கவிஞர் புகாரியின் அறிமுகம் நெஞ்சத்திற்கு ஆறுதல் தரும் உவகை தந்தது. அமெரிக்கா சென்றபோது அறிவியல் அறிஞர் நாசா கணேசன் இல்லம் தங்கியிருந்தேன். அப்போது தாங்கள் கனடா சென்றால் புகாரி என்ற அற்புதமான கவிஞரைச் சந்தியுங்கள் என்று கவிஞரை அறிமுகப்படுத்தினார் கணேசன். உண்மையிலேயே அற்புதம் வாய்ந்த கவித்திறம் படைத்த கவிஞர் புகாரியின் கவிதைப் பணி வாழ்க வெல்க.

காதல் சிறகுகளால் காலத்தை வெல்லலாம்
காதல் உறவொன்றே கண்களாம் - காதலே
காதலைக் காக்கும்களம் அமைக்கும்! காதலோ
காதல் உலகுயர்வுக் காற்று


அன்பன்
வ.மு.சேதுராமன்

பிப்ரவரி 28, 2004

No comments: