நான் இருட்டு
கொஞ்சம் ஊடுருவிப் பாருங்கள்
நானே நிஜம்
வெளிச்சம் விருந்தாளி
நானே நிரந்தரம்
புலன்கள் ஐந்து
அவற்றுள் ஒற்றைப்புலனே
வெளிச்சத்தின் அடிமை
அந்த விழிகளும் என்னில் மட்டுமே
கனவுகள் காண்கின்றன
கனவுகளே உங்களின்
சத்தியப் பண்புகளைச் சொல்கின்றன
உங்களின் சரியான முகவரி
உங்கள் கனவுகளில்தான்
பொறிக்கப் பட்டிருக்கிறது
வெளிச்சம் உங்களைப் பொய்யுடன்
பிணைத்துக் கட்டுகிறது
வெளிச்சம் பொய்களின் கூடாரம்
இருட்டே உண்மையின் தீர்மானத் தளம்
என்றாவது உங்களை
வெளிச்சத்தில் பார்த்திருக்கிறீர்களா
இருட்டில்தானே நீங்கள் தெரிவீர்கள்
வெளிச்சத்தில் உங்களுக்கு தினம் ஒரு முகம்
இருட்டில் உங்களுக்கு ஒரே முகம்
வெளிச்சத்தில் நாளும் நிறம்மாறுகிறீர்கள்
இருட்டில்தான் நீங்கள் நீங்களாகவே இருக்கிறீர்கள்
வெளிச்சம் பொய் இருட்டே நிஜம்
வெளிச்சம் துயரம் இருட்டே சந்தோஷம்
வெளிச்சம் அரக்கன் இருட்டே உங்கள் தாய்
நிறைய அழுகை மனிதனுக்குச் சொந்தம்
அவை அனைத்தும்
வெளிச்சம் உங்களுக்குத் தந்த விசங்கள்
அத்தனைக் கண்ணீரையும் கொட்டித்தீர்க்க
இருட்டே உங்களுக்கு மடி வார்க்கிறது
கரு எங்கே உதிக்கிறது
விதை எங்கே முளைக்கிறது
உயிர்கள் அத்தனைக்கும் மூலம் இருட்டுதானே
வெளிச்சம் வேசம்
வெளிச்சத்தில் சொல்லப்பட்ட
கதைகள்தாம் இருட்டை பயமென்று பிதற்றுகிறது
கருப்பையில் பயந்தீரா வெளிவந்து அழுதீரா
இருட்டா உங்களுக்குப் பயம் சொல்லித்தந்தது
வெளிச்சம் கவலைகளின் தொழிற்சாலை
இருட்டு உங்களின் சத்தியமான வாழ்க்கை
புறக்கண் என்றேனும் எவரின் நிஜத்தையும்
உங்களுக்குக் காட்டி இருக்கிறதா
சொல்லுங்களேன்
பாசமென்பது பெத்தவளின் முகமா
அவள் அரவணைப்பா
காதல் தந்தது காதலியின் வெளியழகா
அவள் உள்ளழகா
நிம்மதிச் சொத்து உருவங்களாலா
உள்ளங்களாலா
யோசித்துப் பாருங்கள்
இருட்டையே நீங்கள் காதலிக்கிறீர்கள்
வெளிச்சத்தை வெறுக்கிறீர்கள்
வெளிச்சம் இதயத்தை மதிப்பதில்லை
இருட்டு உருவத்தை மதிப்பதில்லை
தினம் தினம் வெளிச்சம் உங்களை
ஏமாற்றுகிறது
தவறாக எண்ணாதீர்கள்
இருட்டு வெளிச்சத்தைக் கண்டு
ஓடி ஒளிவதில்லை
வெளிச்சத்துக்கும் வாழ்க்கை தருகிறது
வெளிச்சம் இல்லாமல் இருட்டு இருக்கும்
இருட்டே இல்லாமல்
வெளிச்சம் எங்கே இருக்கும்
பூமி இருட்டு நிலா இருட்டு
கோள்களெல்லாம் இருட்டு பிரபஞ்சமே இருட்டு
உயிர்கள் அத்தனையும் இருட்டின் துகள்கள்
இருட்டே நிஜம் வெளிச்சம் பொய்
9 comments:
இணைய இணைப்பு சதி செய்கிறது. ஒரு மறு மொழி இட்டேன். பதிவாகியதா தெரியவில்லை. மறு மறுமொழி இடுகிறேன்.
இருட்டைப் பற்றி இப்படி ஒரு நீண்ட கவிதையா ?? சிந்தித்தேன். கவிஞர்கள் எப்பொழுதுமே மாறுபட்ட சிந்தனையில் தான் கவிதை எழுதுவார்கள். எதையுமே வெறுக்க மாட்டார்கள். அதனால் தான் இக்கவிதை. அருமை அருமை . இருட்டின் பேச்சு.
//தவறாக எண்ணாதீர்கள்
இருட்டு வெளிச்சத்தைக் கண்டு
ஓடி ஒளிவதில்லை
வெளிச்சத்துக்கும் வாழ்க்கை தருகிறது//
ஆக்க பூர்வமான சிந்தனை.
பாராட்டுகள்
வாழ்த்துகள்.
இந்தப் பிரபஞ்சத்தை நுணுக்கமாகப் பார்த்தால் இருட்டின் வெளிச்சம் தெரிகிறது சீனா. ஆகவேதான் பதிவு செய்தேன் இப்படி.
ஆகாயம் என்ற என் கவிதையை வாசித்துப் பாருங்கள்.
அதை வாசிக்க முன்வந்துவிட்டால் அப்படியே என் பஞ்சபூதக் கவிதைகள் ஐந்தினையும் ஒரு எட்டு பார்த்துவிடுங்கள்.
என் முன்நன்றிகள் அதற்காக !
கவிதை அருமை நண்பரே.
இருளைப் பற்றிய கவிதை இப்பொழுதுதான் பார்க்கிறேன்.ஆழமாக யோசித்து எளிமையான வரிகளால் எல்லோர்க்கும் புரியும் வண்ணம் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
எனக்கு மிகவும் பிடித்த வரிகளெனில்...
//கருப்பையில் பயந்தீரா
வெளிவந்து அழுதீரா
இருட்டா உங்களுக்குப்
பயம் சொல்லித்தந்தது //
மிக அழகு.
http://mrishanshareef.blogspot.com/2007/12/blog-post.html
இது எப்பொழுதோ நான் எழுதியது.இருளுக்குச் சம்பந்தமிருக்கிறதென்று எண்ணுவதால் உங்களிடம் காட்டவிரும்புகிறேன் நண்பரே.
அன்புக்கவிஞர் திரு.புகாரி அவர்களுக்கு
இருள் இவ்வளவு அழகானதா?
உங்கள் வரிகள்
ஒவ்வொன்றும்
பிக்காசோ புருசுகள்.
அந்த மகத்தான ஓவியன் தான்
ஒரு புள்ளியை பிரளயமாக்குவான்.
ஒரு கீற்றில்
மோனாலிசாவைக்கூட
உயிர்ப்பித்து விடுவான்.
இருட்டின் வலிமை விஞ்ஞானிகளுக்கு
மிகவும் தெரியும்.
அந்த "கருப்புத்துளை" தான்
பிரபஞ்சத்தின்
கர்ப்ப அறையும் கல்லறையும்.
வர்ணமே இல்லாத ஒரு
மூளிபிழம்புக்குள்
வெளிச்சத்தின் விரிசல்களாய்
வானவில் தோட்டத்து சிந்தனைகளை
அற்புதமாய்
விவசாயம் செய்திருக்கிறீர்கள்.
மண்ணை ஜனன மரணம்
அடைத்து வைத்திருக்கிறது.
உயிர் எனும் இருட்டு தான் ஜன்னல்.
வெளிச்சம் வெறும் கதவு மட்டுமே!
கதவு திறந்த போது
வெளிச்சமும் பாய்கிறது.
இருட்டும் பாய்கிறது.
ரெடினா எனும் விழித்திரையின்
சல்லடை அடைத்து விட்டவனுக்கு
இரண்டும் ஒன்று தான்.
இருட்டு பற்றி
உங்கள் ஒவ்வொரு வரியும்
ஒரு சம்மட்டி.
ஒரு ஆணி.
சமுதாயத்துக் குருட்டுத்தனம்
சவப்பெட்டிக்குள் கிடக்கட்டும்.
ஏனெனில்
நீங்கள் எழுதியது
குறுகிய மனங்களுக்கான
"முகாரி" அல்ல.
வெளிச்சப்பிரவாகத்தின்
"புகாரி" நீங்கள்.
இருட்டு என்ற சொல்லுக்கு
வெளிச்சம் என்றும்
வெளிச்சம் என்ற சொல்லுக்கு
இருட்டு என்றும்
அர்த்தப்படுத்திக்கொள்வதால்
இந்த அகராதிகள்
கிழிந்து போய்விடுவதில்லை.
அந்த "விடியலே" அழகு.
உங்கள் வார்த்தைப்படையல்கள்
மிக மிக அழகு !
என் மனமார்ந்த பாரட்டுகள்!
இப்படிக்கு
அன்புடன்
ருத்ரா
(இ.பரமசிவன்)
=================================================
இருளை அறியாமைக்கு ஒப்பிட்டுக் கொண்டு இருக்கும் இந்த உலகத்தில்,
இருளுக்கு உண்மையான புது விளக்கம் கொடுத்து எங்களின் அறியாமையை போக்கிவிட்டீர்கள்
இருட்டில் இத்துனை வெளிச்சம் பாய்ச்சுதல் எங்ஙனம் சாத்தியம் என எழுதியவர்க்கே சாத்தியம்.
முதன்முதலாக இருட்டைத் தெளிவாகப் பார்க்க வாய்த்தது, எனினும் எனக்கென்னவோ...
வெளிச்சமே இருப்பு எனவும்
இருட்டு இல்லையின் வறையரை எனவும் ஓர் அபிப்ராயம் உண்டு.
நேரம் வாய்க்கும்போது பதிலடி தருகிறேன்,,,வெளிச்சமே வெற்றி என்று.
க்ளாஸ் பீஸ் ஆஃப் ரைட்டிங், சகோ.
எதையும் தெளிவாய் சொல்ல கவிஞனால் மட்டுமே முடியும்
கருவுக்குள் இருளில் அமைதியாய் இருந்த குழந்தை வெளிச்சத்தை
கண்டு வீரிடுவதாக கூறும் கவி மனிதனுக்குள் திணிக்க படும்
முதல் விஷயம் வெளிச்சம் ...கவியின் ஆழம் கருத்து கடலின்
ஆழம் ..கவிஞர் சபீர் கருத்து மோதலுக்கு தயாராகிறார்.
நானோ கவிஞரின் கவியில் மயங்கி கருத்தில் ஆழ்ந்து
போனேன் இருளில் துவக்கமும் முடிவும் உள்ளதாகவே
நினைகிறேன் தூக்கத்திற்கும் இருள் தேவை ..இருளின் குணம்
அமைதி .கோழைக்குஇருள் பிடிக்காது பயம் பிடிக்கும்
இருள் ..மீது ஒரு காதலையே கொண்டு வந்து விட்டீர்கள்
கவிஞரால் எதையம் எப்படியும் கூறி மனதில் பதிய வைக்க
முடியும் என்பதற்கு இதுவே சான்று ..,
http://blogintamil.blogspot.in/2012/06/blog-post_24.html
இன்று தங்களின் பதிவு வலைச்சரத்தில் செல்வி நுண்மதி அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாழ்த்துகள்.
அருமையான கவிதை ! நன்றி சார் !
வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை !
இனி தொடர்வேன். நன்றி !
Post a Comment