(29) வயதென்ன?


கொட்டிய வெயிலில்
கும்மாளமாய்க் குளித்துவிட்டு வந்து
கவர்ச்சி காட்டி அசையும் பூமி மங்கைக்கு
பொன் மஞ்சள் தாவணியை
விரல்
பட்டும் படாமலும் மெல்ல உடுத்திவிட்டு
தன் கொல்லை வாசல் வழியே
செங்கை அசைத்த வண்ணம்
வெளியேறிக்கொண்டிருந்தான்
ஙஞணநமனமாய்த் தணிந்த
கசடதபறச் சூரியன்

அம் மதுர மாலையில்
ஓர் ஓடைக்கரையில் ஓடும் மீன்களை
ஒவ்வொன்றாய்க் குசலம் விசாரித்த வண்ணம்
குந்தியிருந்தான் கவியொருவன்

அவன் தலை முகட்டில் வெண்மையின் ஆட்சி
முகத் திரையில் சுருக்கத்தின் காட்சி
இதழ்களிலோ நல்ல
கொஞ்சுதமிழால் குழைத்தெடுத்த
ஓர் இளமைப் பாட்டு

ஆவலின் உந்துதலில் எழுந்த ஓர் கேள்வி
தொண்டைக்குழிதாண்டி
என் மொத்தக் கழுத்தையும்
கெளுத்தி முள்ளாய்க் குத்த
அருகே சென்றேன் அவனிடம் கேட்டேன்

"கவிஞனே... கவிஞனே... உன் வயதென்ன?"

நிமிடம் ஒன்று நடந்து நடந்து
என்னை மட்டுமே கடந்து போனது
அந்தக் கவிஞனோ தன் இதழ்களின் குறுக்கே
கெட்டியாய் ஒரு மௌனப் படுதாவையே
கட்டி வைத்திருந்தான்

காதில் விழவில்லையோ
என்ற கவலையில் கேட்டேன் மீண்டும்
என் குரல் மலரில்
சிறு முட்களையும் சேர்த்துக் கட்டி

"ஓ..... கவிஞனே... கவிஞனே....
உன் வயதென்ன....?"

மீன் மொழி கேட்டுக்கொண்டிருந்த
தன் செவிப்பாதை வழியே
ஒரு காண்டாமிருகம்
தறிகெட்டு ஓடுவதாய்த் திடுக்கிட்டான்

நீரில் பதிந்த விழிகளை நிமிர்த்தும் மனமின்றி
நிதானமாய்த் தன் கவியிதழ் விரித்தான்

ஓ.... நண்பனே
கவிஞனுக்கு ஏதடா வயது?

அவன்
பிறக்கும் போதே பெரியவன்
வாழும் போது இளையவன்

எழுதும் போதோ
அவன் வயது ஒன்றாகவும் இருக்கும்
ஒரு யுகமாகவும் இருக்கும்

எந்த வயதுக்குள் நுழைந்து எழுதினாலும்
எழுதி முடித்து மெல்ல வெளிவந்து விழும்போது
மீண்டும் அவன்
பெரியவனாய்த்தான் பிறக்கிறான்
நல்ல இளையவனாய்த்தான்
வாழ்கிறான் என்று கூறி

போ... போ....
உனக்கொன்றும் இது புரியாது என்று
என்னை விலக்கிவிட்டு
அந்த ஓடை மீன்களிடமே சென்று
தன் காதுகளைப் புதைத்துக்கொண்டான்

கவிஞனா இவன்
மகா திமிர் பிடித்த கிறுக்கன்
என்றெண்ணியவனாய்த்
தாளாச் சுடுமணலின்
தகிப்பில் நடப்பவன் போல் நான்
எட்டி எட்டி நடந்தோடினேன்

ஆனால்...
என்னை நிறுத்தி முத்தமிட்டன
அவன் நிறுத்தாமல் உதிர்த்த
தேவ சுகந்தம் பரப்பும் தேன் கவி வரிகள்

இப்போது என் காலுக்கடியில்
கடுஞ்சூட்டு மணல் இல்லை
எனக்கே எனக்கான
என் இனிய தமிழ்ச் சொந்தமண்
என் விரல்களை வேர்களாகக் கேட்டது

* (ஜூன் 2003)

6 comments:

சிவா said...

ஙஞணநமனமாய்த் தணிந்த
கசடதபறச் சூரியன்


:) அசத்தல்


ஓ.... நண்பனே
கவிஞனுக்கு ஏதடா வயது?


உண்மை தானே :)


எழுதும் போதோ
அவன் வயது ஒன்றாகவும் இருக்கும்
ஒரு யுகமாகவும் இருக்கும்


ஆமாம் :)

சீனா said...

அன்பின் புகாரி

கவிதை அருமை - ரசித்தேன் - மகிழ்ந்தேன்

சூடு தணிந்த - மெல்லினமாய் மாறிய மாலைச் சூரியன் செங்கை அசைத்துச் சொல்லிச் சென்றதோ

பூமி மங்கைக்கு தாவணி போடும் சூரியன்

ஓடையில் ஓடும் மீன்களை ரசிக்கும் கவிக்கிழவன்

வெண் தலையன் -முதுமை எட்டிப் பார்க்கும் முகம் - கொஞ்சு தமிழ் இளமை

வயதென்ன - கேள்வி - பதில் இல்லை - சற்றே சிறு முட்கள் சேர்த்துக் காண்டா மிருகத்தினை தறி கெட்டு ஓட விட்டால் - பதில் வருகிறது - முதிய இளையவன்.

சுடு மணலில் நடக்க இயலாது - எட்டி எட்டி ஓட வேண்டும் -

அத்தனையும் அருமை

கற்பனை வளம் - தமிழ்ச் சொல்லாட்சி -

நன்று நன்று நண்பா - நல்வாழ்த்துகள்

Unknown said...

//கொட்டிய வெயிலில்
கும்மாளமாய்க் குளித்துவிட்டு வந்து
கவர்ச்சி காட்டி அசையும் பூமி மங்கைக்கு
பொன் மஞ்சள் தாவணியை
விரல்
பட்டும் படாமலும் மெல்ல உடுத்திவிட்டு
தன் கொல்லை வாசல் வழியே
செங்கை அசைத்த வண்ணம்
வெளியேறிக்கொண்டிருந்தான்
ஙஞணநமனமாய்த் தணிந்த
கசடதபறச் சூரியன்//

ஹ்ம்ம்ம்ம் .... இயற்கை பற்றி கவிதையா... அற்புதமாய் ஆரம்பிச்சுருக்கீங்க...


//அம் மதுர மாலையில்
ஓர் ஓடைக்கரையில் ஓடும் மீன்களை
ஒவ்வொன்றாய்க் குசலம் விசாரித்த வண்ணம்
குந்தியிருந்தான் கவியொருவன்//

நல்ல கற்பனை... கவிஞன் எல்லா மீன்களையும் குசலம் விசாரிப்பது..!


//அவன் தலை முகட்டில் வெண்மையின் ஆட்சி
முகத் திரையில் சுருக்கத்தின் காட்சி
இதழ்களிலோ நல்ல
கொஞ்சுதமிழால் குழைத்தெடுத்த
ஓர் இளமைப் பாட்டு

ஆவலின் உந்துதலில் எழுந்த ஓர் கேள்வி
தொண்டைக்குழிதாண்டி
என் மொத்தக் கழுத்தையும்
கெளுத்தி முள்ளாய்க் குத்த
அருகே சென்றேன் அவனிடம் கேட்டேன்

"கவிஞனே... கவிஞனே... உன் வயதென்ன?"//


கேட்டதும் கேட்டீங்க... நல்லா கேட்டீங்க..!


//நிமிடம் ஒன்று நடந்து நடந்து
என்னை மட்டுமே கடந்து போனது
அந்தக் கவிஞனோ தன் இதழ்களின் குறுக்கே
கெட்டியாய் ஒரு மௌனப் படுதாவையே
கட்டி வைத்திருந்தான்

காதில் விழவில்லையோ
என்ற கவலையில் கேட்டேன் மீண்டும்
என் குரல் மலரில்
சிறு முட்களையும் சேர்த்துக் கட்டி

"ஓ..... கவிஞனே... கவிஞனே....
உன் வயதென்ன....?"

மீன் மொழி கேட்டுக்கொண்டிருந்த
தன் செவிப்பாதை வழியே
ஒரு காண்டாமிருகம்
தறிகெட்டு ஓடுவதாய்த் திடுக்கிட்டான்//

அட... உங்களைப்போய் இப்படி சொல்லிக்கிட்டீங்களே.... குயில் குரல் கேட்டு திடுக்கிட்டான் மாத்தி படிச்சுக்கலாமா?


//நீரில் பதிந்த விழிகளை நிமிர்த்தும் மனமின்றி
நிதானமாய்த் தன் கவியிதழ் விரித்தான்

ஓ.... நண்பனே
கவிஞனுக்கு ஏதடா வயது?

அவன்
பிறக்கும் போதே பெரியவன்
வாழும் போது இளையவன்


எழுதும் போதோ
அவன் வயது ஒன்றாகவும் இருக்கும்
ஒரு யுகமாகவும் இருக்கும்//


அட தத்துவம் புதுசா இருக்கு... அருமையா யோசிச்சுருக்கீங்க புகாரி சார்...


//எந்த வயதுக்குள் நுழைந்து எழுதினாலும்
எழுதி முடித்து மெல்ல வெளிவந்து விழும்போது
மீண்டும் அவன்
பெரியவனாய்த்தான் பிறக்கிறான்
நல்ல இளையவனாய்த்தான்
வாழ்கிறான் என்று கூறி

போ... போ....
உனக்கொன்றும் இது புரியாது என்று
என்னை விலக்கிவிட்டு
அந்த ஓடை மீன்களிடமே சென்று
தன் காதுகளைப் புதைத்துக்கொண்டான்//

அவனுக்கு இயற்கையின் மீது பொல்லாத காதல் போலும்..!


//கவிஞனா இவன்
மகா திமிர் பிடித்த கிறுக்கன்
என்றெண்ணியவனாய்த்
தாளாச் சுடுமணலின்
தகிப்பில் நடப்பவன் போல் நான்
எட்டி எட்டி நடந்தோடினேன்

ஆனால்...
என்னை நிறுத்தி முத்தமிட்டன
அவன் நிறுத்தாமல் உதிர்த்த
தேவ சுகந்தம் பரப்பும் தேன் கவி வரிகள்

இப்போது என் காலுக்கடியில்
கடுஞ்சூட்டு மணல் இல்லை
எனக்கே எனக்கான
என் இனிய தமிழ்ச் சொந்தமண்
என் விரல்களை வேர்களாகக் கேட்டது//


ஹ்ம்ம்ம்ம் அருமையா முடிச்சுருக்கீங்க... உங்களுக்கு அந்த கவிஞனின் பொல்லாத காதல் வந்துடுச்சு போல... தமிழ் மீது இன்னும் நிறைய கவிதை வரும்... வரட்டும். வாழ்த்துக்கள் புகாரி சார்... :)

பூங்குழலி said...

//கொட்டிய வெயிலில்
கும்மாளமாய்க் குளித்துவிட்டு வந்து
கவர்ச்சி காட்டி அசையும் பூமி மங்கைக்கு
பொன் மஞ்சள் தாவணியை
விரல்
பட்டும் படாமலும் மெல்ல உடுத்திவிட்டு
தன் கொல்லை வாசல் வழியே
செங்கை அசைத்த வண்ணம்
வெளியேறிக்கொண்டிருந்தான்
ஙஞணநமனமாய்த் தணிந்த
கசடதபறச் சூரியன்//


அழகான வர்ணனை


//
காதில் விழவில்லையோ
என்ற கவலையில் கேட்டேன் மீண்டும்
என் குரல் மலரில்
சிறு முட்களையும் சேர்த்துக் கட்டி//

நல்லா இருக்கு ...குரல் மலரில் சிறு முட்களை....

//தன் செவிப்பாதை வழியே
ஒரு காண்டாமிருகம்
தறிகெட்டு ஓடுவதாய்த் திடுக்கிட்டான்//

ஹா ஹா


//அவன்
பிறக்கும் போதே பெரியவன்
வாழும் போது இளையவன்

எழுதும் போதோ
அவன் வயது ஒன்றாகவும் இருக்கும்
ஒரு யுகமாகவும் இருக்கும்//

அருமை

//கவிஞனா இவன்
மகா திமிர் பிடித்த கிறுக்கன்//

நிறைய கவிஞர்கள் நிஜத்தில் இப்படித்தான் என்று ஒரு கருத்து இருக்கிறது

//இப்போது என் காலுக்கடியில்
கடுஞ்சூட்டு மணல் இல்லை
எனக்கே எனக்கான
என் இனிய தமிழ்ச் சொந்தமண்
என் விரல்களை வேர்களாகக் கேட்டது//

விரல்களை வேராக கேட்டது ..அருமை

சாதிக் அலி said...

அருமை புஹாரி சார்... எந்த வரிகளைப் பாராட்டுவது என்று தெரியவில்லை. எங்களுக்கு அவன் கவிஞனாகத் தெரியவில்லை. இவன் (புஹாரி) தான் கவிஞனாகத் தெரிகிறார்.


கவிஞர் மட்டுமல்ல அதை ரசிக்கத் தெரிந்த எங்களுக்கும் எங்கள் வயதென்ன(? !!!!) என்று தெரியவில்லை.


----------- அ. சாதிக் அலி ----------------
நல் சிந்தனைக் கொள் மனிதா..!

ஆயிஷா said...

நல்லதொரு கவிதை. மீண்டும் மீண்டும் படிக்கவும் ரசிக்கவும் தோண்றியது.
அன்புடன் ஆயிஷா