* * *
#வெளிச்ச_அழைப்புகள் என்னும் என் முதல் கவிதைத் தொகுப்பில் வெளியான கவிதை இது.
2016-06-18
இந்த வாரம் நான் தீவிரவாதியா என்று கேட்டு என் முகநூல் பக்கம் ஒன்றை நிறைத்திருந்தேன். அதைப் பார்த்து எங்கே நான் மதவெறியனாய் ஆகிவிட்டேனோ என்ற கவலை வந்துவிட்டது என் ரசிகர்கள் சிலருக்கு.
எது உண்மை என்பதை நான் அவர்களுக்குச் சொல்லவேண்டும். அதை இந்த என் பழைய கவிதையோடு தொடங்களாம் என்றே இந்தக் கவிதையை மீண்டும் இப்போது இட்டேன்.
அமெரிக்கா பெட்ரோலைக் கொள்ளையடிக்க மதத்தை வைத்து அரசியல் செய்கிறது. செய்யட்டும்.
அமெரிக்கா எதிரிநாடுகளின் வேரறுக்கு ரகசியப் படை உருவாக்கிக் காரியம் முடிந்ததும் கலைத்துவிடுகிறது. செய்யட்டும்.
அதெல்லாம் செய்தால்தான் அதனால் வல்லரசாக இருக்க முடியும்.
ஆனால் என் பார்வையில் வல்லரசு என்பது உண்மையில் நல்லரசு மட்டுமே!
இப்படி அரசியல் சித்துவிளையாட்டு விளையாடும் அரசு வல்லரசு அல்ல வல்லூறு அரசு என்றே சொல்வேன்.
தன் வலிமையைக் கொண்டு ஊடகத்தை அடிமையாக்கி பொய்யைப் புறட்டை உண்மையாக்கி உலகிற்குக் காட்டினாலும், உலகம் நம்ப மறுக்கத் தொடங்கி ஆண்டுகள் பலவாகிவிட்டன. ஆனாலும் அமெரிக்கா தொடர்ந்து தன் வழியில் சென்றுகொண்டுதான் இருக்கிறது. இருக்கட்டும்.
தீவிரவாதி என்ற சொல்லைத் தொடர்ந்து 1.6 பில்லியன் மக்கள் மீது அலட்சியமாகச் சொல்லிச் செல்வதென்றால் என் அறம்கொண்ட மனம் கேள்வி கேட்கத் தொடங்குகிறது.
ஒரு பாபர் மசூதியை இடித்ததால், அரசியலில் மதம் தொடர்பான சில அட்டூலியங்களைச் செய்வதால் இந்துக்கள் எல்லோரும் தீவிரவாதிகள் என்பது சரியா?
0.000001 சதவிகிதத்தினர் பித்துப் பிடித்துக் கிடப்பதால் உலக முஸ்லிம் எல்லோரையும் தீவிரவாதிகள் என்று சொல்வது சரியா?
அவ்வளவுதான், மற்றபடி நான் மதம் பின்னால் செல்வதே அது என்னை ஈர்த்ததே இல்லை. உண்மையைச் சொல்லப்போனால் அதனால், அதனைச் சரியாகப் புரிந்துகொள்ளாத உறவுகளால், அவர்களின் அழிச்சாட்டியங்களால், நான் பட்டபாடும் படும்பாடும் கொஞ்சநஞ்சமல்ல.
மதம் என்னை எதுவும் செய்ததில்லை, அறிதலில்லாத மனிதர்களால்தான் என்னை உண்டு இல்லை என்று ஆக்கி இருக்கிறார்கள்.
நான் இறுதியாக முன்வைக்கும் ஒரு விடயம் இதுதான்.
ஒரு செயல், ஒரு கருத்து, ஒரு செய்தி அல்லது ஒரு ஒலிபரப்பு எதன் அடிப்படையில் வருகிறது என்று பாருங்கள். அதன் அடிப்படை ஆன்மிகமா? அல்லது அரசியலா? அதைப் பார்க்காமல் நீங்களும் அறிவிழந்து போகாதீர்கள். தூண்டுகிறவர்களுக்கு அது மிகவும் வசதியாகிவிடும் என்பதை மறவாதீர்கள்.
நான் தீவிரவாதியா? என்று கேட்டேன். நீங்கள் எல்லோரும் இல்லை இல்லை இல்லை என்றீர்கள்.
அப்படியானால்... முஸ்லிம்கள் எல்லோரும் தீவிரவாதிகள் இல்லை என்பது எத்தனை அபத்தமோ அத்தனை அபத்தம் எவரோ ஒருசிலர் தீவிரவாதிகள் என்றால் முஸ்லிம்கள் எல்லோரும் தீவிரவாதிகள் என்பது!
No comments:
Post a Comment