2 நான்தான் வேண்டும் எனக்கு

 அன்பே

நீ
கேட்டதைவிடக்
கூடுதலாய்த்தானே கொடுத்தேன்
நீ கேட்காததையும்
நானே கண்டுபிடித்துச் சேர்த்து

நீ
சொன்னதையெல்லாம்
சுத்த நெய்யினால்
சுடப்பட்ட நிஜங்கள்
என்றுதானே நம்பினேன்

காதல்
வெறும் வாய் வித்தையல்ல
செயல் என்று நான்
நிரூபிக்காத நாளுண்டா

நிறுத்தாத பேச்சும்
நிமிடத்திற்கொரு முத்தமுமென
சுவர்க்க மத்தியில்தானே
மனங்கள் மணக்க மணக்க
மல்லாந்து கிடந்தோம்

உன் கண்களுக்குள் புகுந்து
வண்ண வண்ணக் கனவுகளை
விசாரித்து விசாரித்து
அத்தனையையும் நான்
உண்மையாக்கித்தானே
நிமிர்ந்தேன்

என்னைப் பார்த்தேன்
என்று நான்
உன்னைப் பார்த்துத்தானே
சொன்னேன்

ஆழமும் அழுத்தமும்
காதலின் முத்திரைகள் என்று
உறங்காத கடலாய்க் கிடந்துதானே
உன்முன் அலைகள் தொடுத்தேன்

இன்று ஏன் என்னை
ஒன்றுமில்லாதவனாக்கிவிட்டாய்

நீயே வலியவந்து இழுத்த தேரை
ஏன் திராவகத் தீயில்
செலுத்தினாய்

உன்
இடறிய தேவைகள்
நம் காதலைக் கொன்றனவா

நீயும் நானும் காதலிக்க
ஒரு கோடி காரணங்கள் சொன்னாய்
பிரிவதற்கு மட்டும்
ஒரே ஒரு காரணம்தானே சொன்னாய்
அதுவும் உப்பு சப்பில்லாமல்

இறுதியாய்
என் உயர்காதல் விழிநோக்கும்
உரங்கெட்டுத் தலைதாழ்த்தி
நரக உதடுகள் நச்சு இழைகளாய்
ஒட்டி ஒட்டிப் பிரியஒப்புக்கு நீயோர்
மன்னிப்பு கேட்டதை
புரியாத மூடனல்ல நான்
இருந்தும் அழுது நிற்கிறேன்

நீயும் நானும் ஆடிய ஆட்டங்களில்
இதய அணுக்கள் தேயத் தேய
நிஜமாய் நின்றவனாயிற்றே நான்

மௌனங்கள் பூட்டி உதடுகள் ஒட்டி
உள்ளம் திரிந்து நிற்கும் உன்னிடம்
இனி நான் என்ன கேட்பது

உன்னை இழந்தேன் என்பதை நான்
நம்பமறுத்தாலும்
தொடர்ந்து என்னை என்னாலேயே
ஏமாற்றிக்கொள்ள இயலாததால்
இன்று நான்
ஊர்ஜிதப்படுத்திக் கொள்கிறேன்

கண்ணீர்க் கரைகளில்
மெல்ல மெல்ல என் எண்ணங்கள்
மேலே மேலே எழுகின்றன

என் பிரியமான பாவியே
நிலைக்கத் தெம்பில்லா
நெஞ்சம் கொண்ட
உன்னை மட்டுமா நான் இழந்தேன்
மென்மையும் உண்மையும்
குழைத்துக்கட்டிய
சிம்மாசனத்தில் வீற்றிருந்த
என்னையுமல்லவா இழந்துவிட்டேன்

ஆம்
நீ வேண்டாம் இன்றெனக்கு
மீண்டும்
நான்தான் வேண்டும் எனக்கு

தண்டவாளங்கள் நீளமானவை
அடுத்த ரயிலுக்கு இன்னும்
ஐந்து நிமிடங்கள் என்று
அறிவிப்புகளும் வருகின்றன

கடந்துவிட்ட ரயிலுக்கும்
கைவிட்ட காதலுக்கும்
வருந்தித் துருப்பிடித்துச் சாவது
ஒருக்காலும் உசிதமல்ல

நானும் போய்
காத்திருக்க வேண்டும்

எனவே
என் பிரியக் காதலியே
நீ வேண்டாம் இன்றெனக்கு
மீண்டும்
நான்தான் வேண்டும் எனக்கு

10 comments:

சீதாம்மா said...

காயம்பட்ட இதயம்
கரைந்து உருகுகின்றது
காலம்தான் பதில் கூறும்
பெற்றவரும் உண்டு
மற்றவரும் உண்டு
வடுவென்றால் வலியில்லை
ஆறாத புண்
பதில் இல்லை

சாந்தி said...

கண்ணீர்க் கரைகளில்
மெல்ல மெல்ல என் எண்ணங்கள்
மேலே மேலே எழுகின்றன
என் பிரியமான பாவியே
நிலைக்கத் தெம்பில்லா
நெஞ்சம் கொண்ட
உன்னை மட்டுமா நான் இழந்தேன்
மென்மையும் உண்மையும்
குழைத்துக்கட்டிய
சிம்மாசனத்தில் வீற்றிருந்த
என்னையுமல்லவா இழந்துவிட்டேன்

அற்புதம் ...ஒவ்வொரு தோல்வியுலுமே கற்க வேண்டியவை.

ஆம்
நீ வேண்டாம் இன்றெனக்கு
மீண்டும்
நான்தான் வேண்டும் எனக்கு
தண்டவாளங்கள் நீளமானவை
அடுத்த ரயிலுக்கு இன்னும்
ஐந்து நிமிடங்கள் என்று
அறிவிப்புகளும் வருகின்றன
கடந்துவிட்ட ரயிலுக்கும்
கைவிட்ட காதலுக்கும்
வருந்தித் துருப்பிடித்துச் சாவது
ஒருக்காலும் உசிதமல்ல

அருமை

நானும் போய்
காத்திருக்க வேண்டும்
எனவே
என் பிரியக் காதலியே
நீ வேண்டாம் இன்றெனக்கு
மீண்டும்
நான்தான் வேண்டும் எனக்கு


இதே போல் ஒரு சின்ன கவிதை 2 வருடம் முன் எழுதினேன்

விலகிவிடு
விரைவாய் என் நினைவினின்று...
வேகன்ஸி போர்டு போட வேண்டும்
காதலின்றி உயிர் வாழ்ந்திடுமா

என்பதாய் நகைச்சுவையாய் வரும்..

காதலில் தோல்வி பெற்ற ஒருவன் எழுதியதுபோல்..

மிக நன்றாயுள்ளது உங்க கவிதை..

துரை said...

இப்போதுதான் வெற்றியின் முதல் படியில் !

வாழ்த்துக்கள் :)

சுந்தர் said...

நல்ல தெளிவான முடிவு....வார்த்தை வர்ணஜாலம் நன்றாக இருந்தது....

பூங்குழலி said...

நீயும் நானும் காதலிக்க
ஒரு கோடி காரணங்கள் சொன்னாய்
பிரிவதற்கு மட்டும்
ஒரே ஒரு காரணம்தானே சொன்னாய்
அதுவும் உப்பு சப்பில்லாமல்

அருமை


எனவே
என் பிரியக் காதலியே
நீ வேண்டாம் இன்றெனக்கு
மீண்டும்
நான்தான் வேண்டும் எனக்கு

இந்த வரிகளில் ஏக்கம் ,கோபம் ,காதல் என எல்லாம் தெரிகின்றன புகாரி

சீனா said...

அன்பின் புகாரி

காதலை அலசி ஆராய்ந்து அனுபவித்து தோல்வியும் கண்டு ...........

நல்ல கவிதை

கேட்டதையும் கேட்காததையும் சேர்த்துக் கொடுத்து

சொனன்வை அத்தனையும் சுத்த நெய்யினால் சுடப்பட்ட நிஜமென நினைத்து

வாய் சாலமல்ல - அததனையும் நிசமென நிரூபித்து

நிமிடத்திற்கொரு முத்தம் - பேசிக்கொண்டே இருக்கும் வாய் என

சுவர்க்கத்தில் மல்லாந்து கிடந்த காதலர்கள் -

அவளின் இடறிய தேவைகள் காதலைக் கொல்ல

பேச மறந்தவளாகி ஒரே சொல்லில் காதலைக் கொல்ல

கடந்து சென்ற இரயிலுக்கும் கைவிட்ட காதலுக்கும்

நினைத்து வரு்ந்திச் சாவதை விட

இனி அவள் வேண்டாம் - இனி நாமே போதும் என

ந்மமில் நம்மைத் தேடும் முடிவு ஒரு நல்ல முடிவு

நல்வாழ்த்துகள் புகாரி

நட்புடன் ..... சீனா

விஷ்ணு said...

நல்ல கவிதை புகாரி ...
இறுதியில் எனக்கு என்னை வேண்டும் .. என உண்மை உணர்ந்த நிலை ..
அருமை அருமை ...

சக்தி said...

அன்பு நண்பரே புகாரி,

உங்கள் கவிதைகளை அருமை என்னும் முன்ற்றெழுத்துக்களில் அடக்கி விடுவது
அவற்றின் சிரபை உணர்த்தும் உண்மையான வரிகளாக இருக்க மாட்டா.

அருமை என்னும் சொல்லையும் அற்புதம் என்னும் சொல்லையும் அபாரம் என்னும்
சொல்லையும் இனிமை என்ற்ற சொல்லையும் புதமை என்ற சொல்லையும் கலந்தூ ஒரு
தமிழ்ச்சொல்லைக் கடைந்தெடுத்து அதைக்கொண்டு பாராட்ட வேண்டும்.

.. ஆழமும் அழுத்தமும்

காதலின் முத்திரைகள் என்று
உறங்காத கடலாய்க் கிடந்துதானே
உன்முன் அலைகள் தொடுத்தேன் >>>


அன்புடன்
சக்தி

Saboor Adem said...

என் பிரியமான பாவியே
நிலைக்கத் தெம்பில்லா
நெஞ்சம் கொண்ட
உன்னை மட்டுமா நான் இழந்தேன்

மென்மையும் உண்மையும்
குழைத்துக்கட்டிய
சிம்மாசனத்தில் வீற்றிருந்த
என்னையுமல்லவா இழந்துவிட்டேன்

Fantastic.........

Saboor Adem said...

என் பிரியமான பாவியே
நிலைக்கத் தெம்பில்லா
நெஞ்சம் கொண்ட
உன்னை மட்டுமா நான் இழந்தேன்

மென்மையும் உண்மையும்
குழைத்துக்கட்டிய
சிம்மாசனத்தில் வீற்றிருந்த
என்னையுமல்லவா இழந்துவிட்டேன்
its true...fantastic .....thinking.