22 தமிழை மறப்பதோ தமிழா

தமிழை மறப்பதோ தமிழா
உன் தரமின்று தாழ்வதோ தமிழா

கற்கும் மொழிகள்
கணக்கற்றவையாயினும்
உன் உயிரின் மொழியென்பது
தமிழன்றி வேறோ

தமிழச்சியிடம்
தாய்ப்பால் பருகிப் பருகி
நிமிர்ந்த உன் முதுகெலும்பை
தாய்மொழிக்கன்றி
வேறெதற்கும் வளைக்கலாமோ

அடகுவைக்க
உன் உயிரை வேண்டுமானால் உரசிப்பார்
தன்மானத்தையா தொடுவாய்

தாய்மொழி இழந்தவன்
தன் முகம் இழந்தவன்

தமிழற்றுப் போனவனோ
தன் தலையற்றுப் போனவனன்றோ

கணினிக் கோட்டையிலும்
இணைய இடுக்குகளிலும்
இணைச்செங்கோல் ஏந்தி
ஏகமாய் ஒளிவீசும்
நம் செந்தமிழ் மறுப்பதோ தமிழா

நம்
மூச்சுக் காற்றிலும்
கன்னித் தமிழ் மணம்
என்றும் வீசுதல் வேண்டாமோ

நம்
இரத்தக் குழாய்களிலும்
சுத்தத் தமிழெழுத்துக்கள்
வற்றாது ஓடுதல் கூடாதோ

வா தமிழா
நல்ல தமிழில் நாம்
நாளெல்லாம் பேசுவோம்
வா

வார்த்தைகள் அவிழ்ந்து உதிரும்போது
சுற்றுப்புறமெங்கும் சுகந்தம் வீசுமே
அதற்காக

நாக்கு நர்த்தனங்களில்
நல்லோசை எழும்புமே
அதற்காக

உச்சரிப்பு ஒவ்வொன்றும்
சிற்பங்கள் செதுக்குமே
அதற்காக

எந்த இசையிலும் இயைந்து கலந்து
நெஞ்சின் மத்தியில்
கொஞ்சிக் கிசுகிசுக்குமே
அதற்காக

உள்ள உணர்வுகளை அள்ளிப் பொழிய
நல்ல வார்த்தைகள்
நயாகராவாய்ப் பொங்குமே
அதற்காக

வா தமிழா
நல்ல தமிழில் நாம்
நாளெல்லாம் பேசுவோம்
வா

7 comments:

பூங்குழலி said...

தாய்மொழி இழந்தவன்
தன் முகம் இழந்தவன்
தமிழற்றுப் போனவனோ
தன் தலையற்றுப் போனவனன்றோ

அருமையாக சொன்னீர்கள் புகாரி

ராம் கோபால் said...

தமிழ் பேசுபவர்கள் இல்லாமல் போனால்
உங்கள் பாட்டை படிக்கும் நபர்கள்
இல்லாமல் போயிடும்.
அதனால் உங்கள் கருத்தில்
conflict of interest உள்ளது.

ராம் கோபால்

Unknown said...

ராம் கோபால்,

பாட்டை எந்த மொழியிலும் மொழிபெயர்த்துவிடலாம். நம் பண்பாட்டையும் அடையாளத்தையும் விட்டுவிட்டு நாம் நாமாக இருக்கவே முடியாது.

வள்ளுவரின் குறள்கள் 80க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறதாம்.

தமிழ் மொழி பேசுவதாலும் தமிழ்மொழி கற்பதாலும் பிள்ளைகள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் தமிழ்ப்பண்பாடோடும் தமிழ் கலாச்சாரத்தோடும் தழில் அடையாளங்களோடும் வாழ்வதை வெளிநாட்டில் இருந்துகொண்டு நான் காண்கிறேன்.

அதே போலவெ ஆங்கிலம் மட்டுமே அறிந்த தமிழ்க் குழந்தைகள் எந்த மாதிரியாக வளர்ந்து எந்த முகம் காட்டி பெற்றோர்களைத் துயரத்தில் ஆழ்த்தி இருக்கிறார்கள் என்பதையும் அறிவேன்.

அன்புடன் புகாரி

செல்வன் said...

ரொறன்றோவில் இருப்பதால் தமிழ் அடையாளத்தையும்,பண்பாட்டையும் காண்கிறீர்கள்:-)

எங்கள் ஊரில் தமிழ் குழந்தைகள் யாருக்கும் தமிழ் தெரியாது.அப்பா தமிழில் பேசினால் குழந்தை ஆங்கிலத்தில் தான் பதில் சொல்லும்.அண்ணன் - தம்பிக்குள் ஆங்கிலத்தில் தான் பேசிகொள்வார்கள்.இங்கே சுமார் ஐம்பது தமிழ்குடும்பத்தில் பெரும்பாலும் இதுதான் நிலை.

நாங்கள் தமிழ்வகுப்பு வைத்து குழந்தைகளுக்கு தமிழ் கற்பிக்கிறோம்.ஆனால் வீட்டில் தமிழ் பேசிய குழந்தைகள் பள்ளி போய் வீடு திரும்பினால் ஆங்கிலத்தில் பதில் சொல்லவும், சிந்திக்கவும் பழகிவிடுகிறது.அதை தடுக்க பலருக்கும் மனம் வருவதில்லை.ஆங்கிலம் சரளமாக வந்தால் தான் இந்த ஊரில் வாழ்க்கை.தமிழை இரண்டாம் மொழியாக அறிந்தால் போதும்.

எங்கள் பேரன்,பேத்திக்கு தமிழ் தெரியுமா என்பதே சந்தேகம்.இங்கே சிலதலைமுறைகளுக்கு முன் செட்டிலானவ்ர்களின் குடும்பத்தில் தாத்தா,பாட்டியும் பேரன்,பேத்தியும் பேசிகொள்வதில் மொழிதடை நிறைய உள்ளது.


--
செல்வன்

Unknown said...

நான் டொராண்டோ வந்ததால் தமிழன் இல்லீங்க. சவுதியில் வாழ்ந்தபோதும் என் குடும்பம் தமிழ் அடையாளத்தோடுதான் இருந்தது.


///எங்கள் ஊரில் தமிழ் குழந்தைகள் யாருக்கும் தமிழ் தெரியாது.அப்பா தமிழில் பேசினால் குழந்தை ஆங்கிலத்தில் தான் பதில் சொல்லும்.அண்ணன் - தம்பிக்குள் ஆங்கிலத்தில் தான் பேசிகொள்வார்கள்.இங்கே சுமார் ஐம்பது தமிழ்குடும்பத்தில் பெரும்பாலும் இதுதான் நிலை.////

அது எங்கே இட்டுச்செல்லும் என்று நீங்கள் கண்ணாரக் காண ஒரு பத்து இருபது வருடம் ஆகிவிடும்.


////நாங்கள் தமிழ்வகுப்பு வைத்து குழந்தைகளுக்கு தமிழ் கற்பிக்கிறோம்.ஆனால் வீட்டில் தமிழ் பேசிய குழந்தைகள் பள்ளி போய் வீடு திரும்பினால் ஆங்கிலத்தில் பதில் சொல்லவும், சிந்திக்கவும் பழகிவிடுகிறது.அதை தடுக்க பலருக்கும் மனம் வருவதில்லை.ஆங்கிலம் சரளமாக வந்தால் தான் இந்த ஊரில் வாழ்க்கை.தமிழை இரண்டாம் மொழியாக அறிந்தால் போதும்.////

ஆரம்பத்தில் பிள்ளைகள் ஆங்கிலத்தில் பொளந்து கட்டுவதைப் பார்க்க ஆசையாகத்தான் இருக்கும். பிறகு தெரியும் அதன் பாதிப்பு. தாய்மொழி இல்லாமல் ஆங்கிலம் மட்டுமே பொளந்து கட்டினால் அவர்கள் பிளக்கப்போவதை உங்களால் பார்க்கவே முடியாது.


///எங்கள் பேரன்,பேத்திக்கு தமிழ் தெரியுமா என்பதே சந்தேகம்.இங்கே சிலதலைமுறைகளுக்கு முன் செட்டிலானவ்ர்களின் குடும்பத்தில் தாத்தா,பாட்டியும் பேரன்,பேத்தியும் பேசிகொள்வதில் மொழிதடை நிறைய உள்ளது.////

நீங்கள் எப்படி ஆகிவிடுவீர்கள் என்பதற்கு சரித்திரச் சான்று இப்போதே உண்டு. கயானிகளைத் தெரியுமா உங்களுக்கு?

அன்புடன் புகாரி

தமிழ்த்தோட்டம் said...

உண்மைத்தான் உங்கள் வேதனை வரிகளில் தெரிகிறது...

திண்டுக்கல் தனபாலன் said...

சரியாகச் சொன்னீர்கள்...

வாழ்த்துக்கள் ஐயா...