இணையப் பேரரசு

அகிலத்தை
அள்ளியெறிந்து விளையாடும்
கூடைப்பந்தாட்ட வீரனாக

அண்டவெளியெங்கும்
தகவல் ரத்தம் பாய்ச்சும்
பைனரி
நரம்பு மண்டலமாக

ஆகாய உள்ளங்கையின்
அடையாள
ரேகை ஓட்டமாக

விசும்பும் ஏகாந்த உயிரை
விரும்பிய திசையில்
விருப்பம்போல் செலுத்த
நாநோ நொடிதோறும்
திறந்தே கிடக்கும்
மந்திர வாசலாக

பள்ளிகளும் தள்ளி நிறுத்த
அனாதையாய் அழுத தமிழைக்
கெட்டிப் பாலூட்டி
தட்டச்சு மடிகளில்
தட்டிக் கொடுத்து வளர்க்கும்
கணிவலைத்தாயாக

வணிகமொழி
களவாடிக்கொண்ட
இதயமொழி எழுத்தாளர்களை
இழுத்துவந்து
ஈர்ப்பேற்றி
இலக்கியமழை பொழியவைக்கும்
நிலவான சூரியனாக

உருப்படாத ஊடகங்கள்
உதறியெறிந்து
முடக்கிய அருங்கலைகள்
அனைத்தையும்
உச்சிமோந்து உயர்த்திப் பிடிக்கும்
வலைப்பூக் கரங்களாக

வேற்றுக்கோள் தமிழனோடும்
ஊற்றெடுக்கும் பசியோடு
ஒன்றாய்த் தமிழுண்ண
மின்னிலையிட்ட வலைப்பந்தியாக

நாதோன்றும் முன்னரே
சொல் தோன்றி
வளர்ந்த தமிழை
மின்கலை ஊற்றி வளர்க்கும்
நவீன தமிழ்ச்சங்கமாக

இணையம்
என்ற பேரரசு

Comments

வேந்தன் அரசு said…
நாதோன்றும் முன்னரே சொல் தோன்றி
வளர்ந்த தமிழை மின்கலை ஊற்றி வளர்க்கும்
நவீன தமிழ்ச்சங்கமாக இணையம்
இணையம் என்ற பேரரசு

அன்புடன் புகாரி
அதில் கூகுள் குழுமம் என்ற நாட்டுக்கு நிங்கதான் முதல் முத்தரையன் .

--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
”உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே.”
சக்திதாசன் said…
அன்பின் புகாரி,

இணையத்தின் பெருமைகளை இத்தனை அழகாக இணையத்தில் அன்புடன் குழுமத்தை
விதைத்த உங்களைத்தவிர யாரால் கவிதை வடிக்க முடியும்?

அருமை ! அருமை 1

அன்புடன்
சக்தி
சீனா said…
அன்பின் புகாரி


இணையப் பேரரசு - உண்மை உண்மை

நல்ல கற்பனை - தேர்ந்தெடுத்த சொற்கள் - கவிதை அருமை

தகவல் ரத்தம் பாய்ச்சும் பைனரி நரம்பு மண்டலம்
எங்கும் செல்ல நானோ நொடிதோறும் திறந்திருக்கும் வாசல்
கெட்டிப்பாலினை தட்டச்சின் மடியினில் கொடுக்கும் கணிவலைத்தாய்
நிலவான சூரியன்
அருங்கலைகளை உச்சி மோறும் வலைப்பூங்கரங்கள்
வலைப்பந்தியில் - மின்னிலையில் -ஒன்றாய்த் தமிழுண்ண வசதி

அடடா அடடா என்ன கற்ப்னை வளம் - தமிழாட்சி

வாழ்க வாழ்க புகாரி - நல்வாழ்த்துகள்

நட்புடன் ..... சீனா
-------------------------------

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சென்னை விழா நன்றியுரை

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

காணி நிலம் வேண்டும் பராசக்தி

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ