அறப்போரில் எழுவோம்

உச்சிச் சூரியன்மீது எறியப்படும்
பச்சையிலைப் பனித்துளிகளாய்
நிமிடங்கள்தோறும் உயிர்கள்
அழிந்ததும் அழியப்போவதும்
அழிந்துகொண்டிருப்பதும்
குருதி நிறைத்து மிதக்கும் கண்களில்
அப்பட்டமாய்த் தெரிந்தும்

செய்வதேதும் அறியாமல்
செய்வதற்கேதும் சிக்காமல்
ஈனக் கதறல்களை மட்டுமே
ஓங்கி உயிர்கிழித்துச்
செய்ய முடிந்தது

நரக எரிமலைக் குழம்புகளால்
பறித்துச் செல்லப்படும்
கால்களுமற்ற எறும்புகளாய்
அப்பாவி உயிர்களங்கே
எப்படியெல்லாம் எரிந்தெரிந்து
துடிதுடித்துச் செத்திருக்கும்

அப்பப்பா அக்கொடுமை
எவ்வொரு நொடிப்பொழுதும்
இனி எமக்கும் எவருக்கும்
வேண்டவே வேண்டாம்

திண்மை நெஞ்சோடும்
தொய்வழித்த நடையோடும்
உயிர்த்தீ உயர்த்திப் பிடித்துப்
போராடுவோம்

உரிமைகளை
உள்ளங்கைகளில் பெறுவோம்
உயிர்களைப்
பொத்திப்பொத்திக் காப்போம்

ஆயுதப்போரழிப்போம்
உயிர்களே
அறப்போரில் எழுவோம்

மனிதத்தையும்
மனித உயிர்களையும் தாண்டி
போற்றுதலுக்குரியதென்றோ
புனிதமானதென்றோ
பிரபஞ்சத்தில் வேறேதும்
இல்லை இல்லை இல்லவே இல்லை

4 comments:

சாந்தி said...

> வாழ்வோம்
> வாழ்வோம் நாம்
> எப்போதும் தப்பாமல்
> எவரையும் வாழவைப்போம்
>
> மனிதத்தையும்
> மனித உயிர்களையும் தாண்டி
> போற்றுதலுக்குரியதென்றோ
> புனிதமானதென்றோ
> பிரபஞ்சத்தில் வேறேதும்
> இல்லை இல்லை இல்லவே இல்லை


அதே...அடுத்த ஓர் உயிரினை வாழ இயலாமல் செய்வது மனிதம் என்பதற்கே லாயக்கில்லை..

அடுத்தவரை வாழ வைக்கும் எண்ணமே நம்மையும் வாழவிடும்..

நன்று

--
சாந்தி
தன்னைப்போல் பிறரையும் நேசி..

வேந்தன் அரசு said...

நம் கருத்தும் இதுவே.


கவிதை மிக நன்று கவிஞரே

--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
”உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே.”

ஹனீஃப் said...

//மனிதத்தையும்

மனித உயிர்களையும் தாண்டி
போற்றுதலுக்குரியதென்றோ
புனிதமானதென்றோ
பிரபஞ்சத்தில் வேறேதும்

இல்லை இல்லை இல்லவே இல்லை.//


ஆம் புகாரி!


சிறப்பான வரிகள்.


உலகில் சாதி, மத, இன பேதங்களிற்கு அப்பால் மனித உயிர்கள் குறித்த உங்கள் பார்வை அருமை.


நன்றி

பூங்குழலி said...

செய்வதேதும் அறியாமல்
செய்வதற்கேதும் சிக்காமல்
ஈனக் கதறல்களை மட்டுமே
ஓங்கி உயிர்கிழித்துச் செய்ய முடிந்தது


உண்மை சொல்லும் கவிதை புகாரி