கல்லெறிதல்

காய்த்த மரம்தான்
கல்லடிபடும்

கற்களுக்கு
வலிப்பதும் இல்லை
ஆனால்
அடிபட்டும்
புன்னகைப்பதேன்
கனிகள்

என்னை
உண்டாவது
அறிவு பெற்றுக்கொள்
என்ற ஞானத்தாலா

அல்லது
என் காயங்களில்
இருப்பவை
உன் முகவரிகள்தான்
என்ற ஏளனத்தாலா

எது
எப்படியாயினும்
காலைத்தூக்கும் நாய்க்கு
முட்டிக்கொண்டு நிற்கும்
உபாதைதான் முக்கியமாகிறது

மைல் கல்லா
மையல் சிற்பமா
என்பதல்ல

காலம்
நிதானமாய்ப் பொழியும்
நியாய மழைத் துளிகளால்
சிற்பம் கழுவப்படும்தான்

ஆனாலும்
அந்தக் கவலையெல்லாம்
இல்லையே நாய்களுக்கு

2 comments:

சக்தி said...

அன்பின் புகாரி,

அருமையான கருத்துக்களைத் தன்னுள் அழகாய்த் தாங்கி நிற்கும் இக்கவிதையைக்
கண்டு முத்தைச் சுமக்கும் சிப்பிக்குக் கூட பொறாமை, இந்தக் கவிதையைச்
சுமக்கும் அதிர்ஷ்டம் தனக்கில்லையே என்று.

அன்புடன்
சக்தி

சீனா said...

அன்பின் புகாரி


நல்ல கவிதை - எளிய சொற்கள் - ஆழ்ந்த கருத்து

மைல் கல்லா மையல் சிற்பமா - முட்டும் உபாதையினைத் தீர்க்கும் நாயின் நோக்கம் கெட்ட நோக்கமல்ல - மையல் சிறபத்தினை மாசுபடுத்துவதல்ல - உபாதை தீர்ப்பதே ! அவ்வளவே ! அதற்குத் தெரிந்தது அவ்வளவுதான். நாய்க்குப் புத்தி கூறி அறிவு புகட்ட இயலுமா ?

காய்த்த மரங்கள் கல்லடி படுவதும் - பழம் பறித்துத் தின்னும் ஆசையினால் தான்.

இவற்றை எல்லாம் - புறந்தள்ளுதல் நன்று - கல்லடிகளைப் பற்றிக் கவலைப் படாமல் மலர் மாலைகளைப் பற்றி மகிழ்வோமே !

நட்புடன் ..... சீனா