
புலம்பெயர்ந்தாள் புலம்பெயர்ந்தாள்
புலம்பெயர்ந்தாள் தமிழ்த்தாய்
இளமையோடும் புதுமையோடும்
தலைநிமிர்ந்தாள் தமிழ்த்தாய்
ஓசைகளாய் இருந்தவள்தான்
ஓலைகளில் பெயர்ந்தாள்
ஓலைகளாய்ப் பெயர்ந்ததனால்
சங்ககாலம் கொண்டாள்
ஓலைகளில் வாழ்ந்தவள்தான்
தாள்களுக்குள் பெயர்ந்தாள்
தாள்களுக்குள் பெயர்ந்ததனால்
தரணியெங்கும் நிறைந்தாள்
காகிதத்தில் கனிந்தவள்தான்
கணினிக்குள் பெயர்ந்தாள்
கணினிக்குள் பெயர்ந்ததனால்
அண்டவெளி வென்றாள்
அழிந்திடுவாள் என்றோரின்
நரம்பறுத்து நின்றாள்
இணையமென்ற மேடைதனில்
மின்னடனம் கண்டாள்
அயல் மொழியைக் கலந்தோரை
வெட்கியோட வைத்தாள்
அழகு தமிழ் அமுதத் தமிழ்
ஆட்சிமீண்டும் பெற்றாள்
4 comments:
தமிழுக்கு ஒரு கீரீடம்....
அருமை ஆசான்...
அன்புள்ள புகாரி,
அருமையான கவிதை என்று ஏற்கனவே பின்னூட்டமிட்டு அழகுபடுத்தின சகோதரனோடு
இணைகிறது எனது ரசனையும்.
உண்மை அழகானதே!
தமிழ் மொழியின் பரிணாமங்கள் கண்ட வெற்றியை கவிதையாக்கியுள்ளீர்.
ஆங்கிலத்திற்கு பிறகு அதிகமாக கணினியில் பயன்படுத்தும் மொழி தமிழ் தான்
என்று எங்கோ வாசித்தேன், மகிழ்ந்தேன்.
ஆனால்....
தமிழர்கள் இலங்கையில் படும் அவஸ்தைகளை கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக
கேட்டுவரும் செய்திகள் ஏனோ, எனக்கு தமிழ் மொழியின் இந்த வளர்ச்சியில்
ஏற்பட்டுள்ள சந்தோஷத்தை உடைத்துப்போடுகிறது.
என்ன செய்வதென்று அறியாத, பேச இயலாத குழந்தையின் அழுகையோடு துடிக்கிறது
என் மனமும்.
வாழ்க தமிழர்கள், தமிழின் வளர்ச்சியைக் காண!
அன்புடன் மனம் திறந்து
என் சுரேஷ்
ஆசான்......
தமிழின் தோற்றம், நாகரீக வளர்ச்சி என்பவைகளை அழகாக எடுத்துக் கூறியுள்ளீர்கள் கவிதையில். உங்கள் தமிழ்ப் பற்று வியக்கவும், சிந்திக்கவும் வைக்கின்றது. பெருமைப்பட வேண்டிய விடயம்.
அன்புடன் ஆயிஷா
கடல்கடந்து கனடாவில் கவிமழையாய்ப் பொழிந்தாள்
உடனிருந்து நனைந்தவரின் உள்ளெமெலாம் நுழைந்தாள்
மடல்திறந்த கணமெல்லாம் மனம்சிலிர்க்க மணந்தாள்
குடமுருண்ட படித்துறையில் குமரியைப்போல் சிரித்தாள்!
இசைக்கவி ரமணன்
Post a Comment