புகாரி என்பது இஸ்லாமியப் பெயரே அல்ல

புகாரி என்று எழுதுவதைவிட புஹாரி என்று எழுதுவதுதான் அரபி மொழியின் உச்சரிப்பைச் சரியாகக் கொண்டதாகச் சொல்ல முடியும். நான் இலக்கணம் படித்தவனல்ல புஹாரி சார். ஆனால் வீம்புக்காக புகாரிதான் சரியென வாதிடுபவர்களை தமிழ் வெறியன் என்றுதான் நான் சொல்வேன். அவர்கள் தமிழை வளர்ப்பது போல பாவ்லா செய்யலாம். புஹாரி என்று கா வுக்கு பதிலாக ஹா போட்டு எழுதுவதால் தமிழ் அழிந்து விடும் என நினைப்பது பூனைக் கண்ணை மூடிக் கொண்டால் பூலோகம் இருண்டுவிடும் என்று நினைப்பது போல. இந்த தமிழ் அறிஞர்களின் பிரச்சனைக்குள்ளே நான் புக விருப்பமில்லை. என் கருத்தை வெளிப்படையாகத் தெரிவித்தேன் அவ்வளவுதான். கிரந்தம் என்கிறதெல்லாம் தெரியாமலேயே தமிழை என் உயிராக நேசிக்கிறேன்.. ஆனால் ஜ, ஷ, ஸ, ஹ எல்லாம் உயபோகிக்கும், அவற்றையும் தமிழாகச் சேர்த்துக் கொள்ளும் பொதுநோக்கு மனம் படைத்தவன், வெறியில்லாத தமிழன் அவ்வளவுதான். முதலில் அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் தமிழ் படிக்கிறார்களா, கான்வெண்டில் பாபா பிளாக் ஷீப் பாடுகிறார்களா என்று பார்க்கட்டும் புஹாரி சார். 

இது என் நண்பர் ஒருவர் எனக்கு எழுதியது. அவர் பெயர் இங்கே அவசியமில்லை. சொல்லப்போனால் அவர் பெயரையும் அவரையும் இன்றுநான் மறந்தும்விட்டேன். அவர் இதை வாசிக்க நேர்ந்தால், முகப்பெட்டியில் ஓர் அஞ்சலிடலாம் அல்லது இங்கே மறுமொழியாய்த் தரலாம்


முதலில் புஹாரி என்பது அரபு மொழியின் சரியான உச்சரிப்பு ஆகாது. Bukhari بخاری என்பதுதான் இமாம் புகாரியின் பெயர். இது புஹாரி என்பதைவிட புகாரி என்பதற்குத்தான் அதிக நெருக்கமானது.

காண்க: http://en.wikipedia.org/wiki/Muhammad_al-Bukhari

இதைவிட சுவாரியமான ஒரு தகவல் என்னவென்றால். என் பெயர் இஸ்லாமியப் பெயரே அல்ல. புகாரா என்ற ஊரிலிருந்து வந்தவர் என்ற பொருளைக்கொண்டதுதான் புகாரி.

அதைவிட சுவாரசியம் என்பதெல்லாம் தமிழரசன், பூங்குழலி, இறைநேசன், கருணைநேசன், அன்புநேசன், அருள்நேசன், முத்தழகு, பொன்னழகு, பூவழகு என்பதெல்லாம் இஸ்லாமியப் பெயர்கள்தாம். ஆனால் அதை ஏற்பதற்கு பலருக்கு மனம் வராது ஏனெனில், இந்து என்றால் சமஸ்கிருதப் பெயர், கிருத்தவன் என்றால் ஹிப்ரூ, வெள்ளைக்காரன் பெயர், இஸ்லாமியன் என்றால் அரபிமொழிப் பெயர் என்று இவர்களே வகுத்துக்கொண்டார்கள். பெயரைக் கேட்டதுமே மதம் தெரிந்துகொள்ளலாம் இல்லையா? சாதியைத் தெரிந்துகொள்ளலாம் இல்லையா?

ஆனால் மற்றமதங்களில் எப்படியோ எனக்குத் தெரியாது, நானறிந்தவரை இஸ்லாமிய மதம் மொழிகடந்தது. அது எந்த மொழியையும் இழிவாகக் காணாதது. ஆகவே அதன் அடிப்படையில் அறநாசன், இறைமறுப்பான் என்பதுபோன்ற பெயர்களாய் இல்லாவிட்டால் எல்லா மொழிப் பெயர்களும் இஸ்லாம் பெயர்கள்தாம்.

ஏனெனில் இஸ்லாமியன் என்பவன் அதை ஏற்றுக்கொண்டு தன் கண்ணிய நடட்த்தை வழி காண்பிப்பவனே அன்றி உடல், உடை போன்ற புற அழகால் காட்டுபவன் அல்ல.

ஆகவே தலைப்பில் புகாரி என்பது இஸ்லாமியப் பெயரே என்பது பிழை. அது தாராளமாக இஸ்லாமியப் பெயராய் இருக்கலாம். ஓர் இந்து விரும்பினால் இந்துப் பெயராய் ஆகலாம், ஒரு கிருத்துவர் விரும்பினால் கிருத்துவப் பெயராய் ஆகலாம்.

இந்தியாவிலிருந்து வந்தவர் இந்தியர், பாகிஸ்தானிலிருந்து வந்தவர் பாகிஸ்தானி, குஜராத்திலிருந்து வந்தவர் குஜராத்தி என்பதுபோல புகாரா என்ற உஸ்பெகிஸ்தானின் ஓர் ஊரிலிருந்து வந்தவர் என்பதன் பொருள்தான் புகாரி. இமாம் புகாரியின் பெயர் முகம்மது. அவரின் குடும்பப்பெயர்தான் புகாரி. இரண்டையும் சேர்த்து முகம்மது புகாரி என்பது அவர் பெயர் ஆனது.

என் தந்தையை அசன்பாவா ராவுத்தர் என்று அழைப்பார்கள். ராவுத்தர் என்பது குடும்பப்பெயர். இஸ்லாமியப் பெயர் அல்ல. இப்போது யாரும் அந்த ராவுத்தர் என்ற குடும்பப்பெயரைப் பயன்படுத்துவதில்லை. அது அவர் காலத்திலேயே வழக்கொழிந்துவிட்டது. ஒருவகையில் அது முஸ்லிம்களுக்கிடையில் சாதியை உருவாக்குவதுபோல் இருக்கிறது என்பதால் அதன் பயன்பாடு குறைந்துவிட்டது. அப்படிக்குறைவதையே நானும் விரும்புகிறேன்.

சென்னையிலும் இலங்கையிலும் இன்னும் சில நாடுகளிலும் Bukhari என்பதை Buhari என்று எழுதும் வழக்கம் உள்ளது. இது அவர்கள் துவக்கத்தில் செய்த தவறு என்றாலும் பழக்கத்தில் வந்துவிட்ட ஒன்று. எப்படியோ வைத்து அழைக்கப்படுவதுதான் பெயர். அந்த வகையில் என் பெயர் Buhari தான். வேறு எப்படி அழைத்தாலும் என் செவிகள் ஏற்பதில்லை. என் நண்பர்கள் அனைவரும் என் பெயரை Buhari என்று உச்சரிக்க மிகவும் விரும்புவார்கள். அதனுள் ஓர் இசை ஊஞ்சலாடிக்கொண்டிருப்பதை அவர்கள் உணர்ந்திருக்கலாம். சொல்லச் சொல்ல இனிக்குதடா புகாரி என்று சொன்ன நண்பரும் உண்டு.

ஆகவே, Buhari என்பதை புஹாரி என்று எழுதினால்தான் சரி என்று நினைத்து புஹாரி என்றே எழுதிவந்தேன். அப்போது என் கவிதைகள் வெளியான பத்திரிகைகளிலும் ஏ. புஹாரி என்றுதான் எழுதப்பட்டிருக்கும். பின் தமிழை மேலும் கற்றபின், தமிழில் எழுதப்படாத எழுத்துக்களின் அறிமுகங்கள் எனக்குக் கிடைத்தன. அதன்பின் என் பெயரை நான் புகாரி என்று எழுதத் தொடங்கிவிட்டேன்.

முகம் அகம் என்ற சொற்களை எடுத்துக்கொள்ளுங்கள். இதன் க என்ற எழுத்து எந்த உச்சரிப்பைக் கொடுக்கிறது. முஹம் அஹம் என்றுதானே?

காகம் என்ற சொல்லை எடுத்துக்கொள்ளுங்கள். முதல் எழுத்து கா வாகவும் இரண்டாம் எழுத்து ஹ வாகவும் ஒலிப்பதைக் காணமுடிகிறதல்லவா?

கா முதல் எழுத்தாய் வரும்போது கா என்றும் அதுவே இடை எழுத்தாய் வரும்போது ஹா என்றும் ஒலிக்கப்படும். இதுதான் தமிழில் எழுதப்படாத எழுத்துக்கள். இப்படி எழுதப்படாத எழுத்துக்கள் தமிழில் ஏராளமாய் இருக்கின்றன.

காகம் என்பதை காக்கா என்று எழுதினால் இதில் ஹா என்ற உச்சரிப்பு வரவே வராது. ஏனெனில் ஒரு ஒற்றுக்குப்பின் வரும் க ஒலிப்பில் மாறிவராது என்பதுதான் காரணம். ஒற்றுக்கு அத்தனை அழுத்தம் உண்டு.

ஹரி என்ற பெயரை கரி என்று எழுதமுடியுமா? முடியாது ஏனெனில் அதில் க முதல் எழுத்தாய் வருகிறது. அப்படி வரும்போது அதை ஹரி என்று உச்சரிக்க இயலாது கரி என்றுதான் உச்சரிக்க முடியும். எனவே சில தமிழ்ப்பிரியர்கள் அரி என்று எழுதுவார்கள். என் தந்தையின் பெயரான ஹசன்பாவா அப்படித்தான் அசன்பாவா ஆனது.

இப்படியே புகாரி என்று எழுதி உச்சரித்துப்பாருங்கள் அது புஹாரி என்று சரியாக ஒலிக்கப்படும். புகாரி என்பது புஹாரி என்று சரியாக ஒலிக்கப்பட்டால் நான் தமிழ் எழுத்தைத் தானே பயன்படுத்த வேண்டும்? ஏன் கிரந்தத்தைப் பயன்படுத்த வேண்டும்? அது எப்படிப் பார்த்தாலும் கடன்வாங்கிய எழுத்துதானே?

4 comments:

mohamedali jinnah said...

"என் பெயர் இஸ்லாமியப் பெயரே அல்ல." என்பது தவறு . அணைத்து மொழிகளும் இறைவனால் அருளப்பெற்றதுதான் .
எந்த மொழியில் பெயர் வைத்தாலும் அது இறைவன் தந்த பெயர்தான் அது வாழ்வின் முறையினால் அது இஸ்லாமிய பெயர்தான்
அல்-குர்ஆன் அரபி மொழியில் இறைவனால் அருளப்பெற்றது .இஸ்லாம் அரபியர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல
பெயர் வைப்பது ஒருவரை அடையாளம் காட்டவே . இஸ்லாம் ஒரு எளிமையான மார்க்கம் அது வாழ்வின் வழி . அது ஒருவருக்கு இப்பெயர்தான் வைக்க வேண்டும் என்று சொல்லவில்லை .
`முஸ்லிம் பெயர்` இருக்கும் ஆனால் இஸ்லாம் காட்டிய வழியில் அவர் நடப்பதில்லை .இதில் ஒரு பயனும் இல்லை .
இஸ்லாம் காட்டிய வழியில் வாழ்ந்து இறைவனது அருளை பெறுவதுதான் முக்கியம் .

சத்ரியன் said...

அன்பா,

பெயர் விளக்கமும், பெயர்க்காரணங்களும் ஆராயப்பட்டால், ”தமிழர்களாகிய நாம்” நம் மொழிக்கு சற்றும் பொருத்தமில்லா பெயர்களையே அதிகம் காண முடியும்.

இப்போது நம்மிடையில் கொஞ்சம் விழிப்புணர்வு தோன்றியிருக்கிறது. அது ஒரு மாற்றத்தைக் கொண்டு வரும். உதாரணமாக, குழந்தைகளுக்குத் தமிழ்ப்பெயர் சூட்டவென்று இணையத்தில் தமிழ்ப்பெயர் தேடும் இளைய தலைமுறையினரை காணும் போது அந்த நம்பிக்கை வருகிறது.

கடந்தக்கால பிழைகளை சரி செய்துக் கொண்டிருப்பதை விடவும், புதியனவற்றை பிழையின்றி செய்வது மிகுந்த மாற்றத்தைக் கொண்டு வரும் என்பது என் தாழ்மையான கருத்து.

நம்மில் தமிழ்ப்பெயர் சூட்டும் பழக்கத்தை ஏற்படுத்தி விட்டோமானால், ஹிந்து பெயரா, இஸ்லாமிய பெயரா என்ற விவாதத்திற்கான நேர விரயத்தைத் தவிர்த்து விடலாம்.

cheena (சீனா) said...

அன்பின் புகாரி - கிரந்த எழுத்தா தமிழ் எழுத்தா - பிரச்னை இல்லை - ஒருவர் எந்தப் பெயரில் அறிமுகமாகி இருக்கிறாரோ - அவரை அப்பெயரைச் சொல்லி அழைத்தலே சாலச் சிறந்த செயலாகும்.

மஜீத் said...

கரீட்டு சீனா.

அதைவிட முக்கியம் அந்தப்பெயர் நம்ம பெயர்தான்னு "பெயர் ஓனர்"க்குத் தெரியணும்!