***** காதல் தராசு

*காதல் தராசு*

சென்னையில் எழுத்தாளர் மாலன் பத்திரிகையாளர்களை அழைத்து என்னை அன்போடு அறிமுகம் செய்து வைத்தார். 


கவிப்பேரரசு வைரமுத்து சிறப்புச் சொற்பொழிவாற்றி என்னை வாழ்த்தினார் பாராட்டினார். அடுத்த நாள் நான் அவரை அவர் வீட்டில் சந்தித்தேன். அப்போது எனக்கு மிகவும் பிடித்த கவிதை சரணமென்றேன் என்ற இந்த நூலில் *காதல் தராசு* என்ற கவிதைதான் என்றார். 

நான் அவசரப்பட்டுத் தொகுத்த, எனக்குச் சற்றும் திருப்தி அளிக்காத அந்த நூலில் இப்படியான கவிதைகளாவது இருக்கின்றனவே என்று எண்ணி மகிழ்ந்தேன். இதோ கவிஞர் பாராட்டிய அந்தக் கவிதை:

*

ஓர் ஊரில்
ஒரு தங்கத் தராசு
இருந்ததாம்

அதன்
தட்டுகள் இரண்டும்
ஒன்றை ஒன்று
உயிருக்குயிராய்க்
காதலித்தனவாம்

இடத்தட்டை
இன்ப வானில் ஏற்றிப் பார்க்க
வலத்தட்டு தன் முதுகில்
வண்டி வண்டியாய்ப்
பாரம் ஏற்றிக்கொண்டதாம்

உல்லாச உயரம்
தனதானபோதும்
சுமையோடு வலத்தட்டு
வாடிக்கொண்டிருப்பதைக்
கண்ட இடத்தட்டு
கண்ணீர் விட்டதாம்

வலத்தட்டைவிட
வலுவான எடையை
எலும்பொடிய ஏற்றிக்கொண்டு
கனிவோடு இடத்தட்டு
கீழே இறங்கியதாம்

வசதியாய் மேலேறி
வண்ண நிலா தொட்ட
வலத்தட்டு
இடத்தட்டின் தியாகம் கண்டு
நெஞ்சு கரைந்து போனதாம்

அல்ல அல்ல அன்பே
இது ஏற்புடையதே அல்ல
உன்னை உயர்த்தத்தான்
நான் என்று
தங்கத் தட்டுகள் இரண்டும்
ஒற்றைக் குரலெடுத்து
காதல் சண்டை இட்டனவாம்

போதும் போதும்
இந்தப் போலிச்சண்டை
இனிமேல்
சுமப்பதில் சமமாவோம்
நாம் இருவருமே
என்ற முடிவுக்கு வந்து
உயர்ந்து நின்ற
வலத்தட்டு கொஞ்சம்
கனம் ஏற்றிக்கொண்டு
இடத்தட்டுக்கு இணையாய்
நேர்கோட்டில் நின்றதாம்

இருவரின் காதலும்
தங்களின்
உன்னதத் துடிப்புகளைத்
துணையின் துயருக்கு
ஒத்தடமாய்க் கொடுப்பதில்
உயர்வெற்றி கண்டு
ஒன்றுக்குள் ஒன்று
உயிராகிப் போகினவாம்

இங்கும் அங்குமாய்
ஆடி ஆடித் தவித்து
இப்போது ஒரு
நிலைக்கு வந்துவிட்டத்
தராசின் நடு முள்
மெல்ல உதிர்த்ததாம்
சிலச் சொல் முத்துக்களை

அளவில்லா
அன்புள்ளம் கொண்ட
ஆசைத் தட்டுகளே
உங்கள் காதலின் ஆழத்தை
நான் வான் உயரத்திற்கு
வாழ்த்திப் பாடுகிறேன்

ஆனால்
உங்களின் அதீத அன்போடு
கொஞ்சம்
அறிவையும் பயன்படுத்தினால்
என்ன

இருவரும்
போட்டி போட்டுக்கொண்டு
ஏன் இப்படிச்
சுமைதாங்கிகளாகிப்
போனீர்கள்

இருவரின்
தியாகங்களையும் முதலில்
இறக்கிவையுங்கள்

இருவரின்
பிரச்சினைகளையும் இழுத்து
வெளியே தள்ளுங்கள்

இருவரின்
குறைகளையும்
நிறைகளால்
கழித்துக்கட்டுங்கள்

இப்போது பாருங்கள்
உங்கள் மேல் ஏறிய
பாரத் துயரங்கள்
ஒட்டுமொத்தமாகவே
காலியாகிவிட்டன

இப்போதுதான்
நீங்கள் நிஜமான சமமாகி
நிம்மதியில் திளைக்கிறீர்கள்

இனி
உயிர் இழைகளில்
என்றென்றும்
சிதையாத காதல் கோத்துச்
சிறப்பாக வாழ்வீர்கள்

அன்புடன் புகாரி

2 comments:

Sanjai Gandhi said...

அற்புதமான கவிதை!
வழக்கம் போல ரொம்ப நல்லா இருக்கு ஆசான்! :-)

"அன்புடன்" சஞ்சய்.

Unknown said...

நன்றி சஞ்சய் :)