ஒரு கனவு
வளைந்த எழில்
வானப் பெண்ணின்
நீல முகத்தில்
வைர மூக்குத்தியாய்
கதிரோன் ஒளிர
அவள்
கழுத்து ஆரமாய்
கோள்கள் அத்தனையும்
கோத்துக்கிடக்க
ஓரமாய்
அந்த நிலவும் வந்து
ஓர் மச்சமாய்
மோவாயில் மிளிர
செவ்வாய் மட்டும்
கொஞ்சம் மேலெழும்பி
பனிமேடு பிளந்த உதடுகளால்
கவிதைகள் சொல்ல
அந்தக்
கவிதைகளெல்லாம்
தமிழ் தமிழ் என்று
தங்கத் தாம்பூலச்
சொற்களேந்த
பேரண்ட வெளிகளெங்கும்
தமிழனின் ஆட்சி
பால்வீதி ஒளிச்சுழல்
பலவண்ணத் தலைப்பாகை
சூடிக் கிடக்க
அட
இதையெல்லாம்விட
அதிசயமாய்
அண்டசராசரப்
பேரதிசயமாய்
ஆரும் கண்டிராத
தேவ அதிசயமாய்
தமிழன்
தமிழில் மட்டுமே
உரையாடுவான்
2 comments:
அடடா வர்ணனையோடு தமிழனை வாரியதும் அருமை..
தமிழன்மட்டும் தான் தமிழன் என சொல்வதிலும் தமிழில் பேசுவதையும் ஏனோ சற்று குறைத்தே செய்கிறான்.. [சிலரைதவிர]
தமிழ் பேசாத வேறு நாட்டில் பிறந்து வளர்ந்த தமிழன் தமிழில் மட்டுமே உரையாடுவான் அதிர்ச்சியான செய்தி (தாய் மறைந்த செய்தி கேட்க 'O' 'mammi'என்று கத்தாமல் 'அம்மா' என்று அலறுவான்.இது இயற்கை. 'தான் ஆடாவிட்டாலும் தன சதை ஆடும்'.
கவிஞன் கண்டால் கவிதை ,
கவிஞன் காண்பதெல்லாம் கற்பனையாய் போய்விடும்.
Post a Comment